சக்தி சக்திதாசன்

 

அன்பினியவர்களே !

அன்பான வணக்கங்களுடன் உங்கள் முன்னே அடுத்த மடலுடன் .

“எதிர்பார்ப்புகள்” மிகவும் இலகுவான, சுலமாகப் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு வார்த்தை. ஆனால் அதனுள் அடங்கி இருக்கும் அர்த்தங்களோ ஆயிரமாயிரம் !

ஒரு வார்த்தையாக அதனுள் அடங்கி இருக்கும் அர்த்தங்களின் வாயிலாக அந்தச் சொல் காலத்துக்கு காலம் ஒரே தொனியில் அதை உச்சரிப்போரின் உதடுகளில் இருந்து ஒலித்தாலும் காலத்தின் மாற்றத்தின் வடுக்கள் அந்த வார்த்தையில் ஒட்டிக் கொள்ளாமல் இருந்து விடவில்லை.

ஆமாம் காலத்தின் மாற்றத்தினோடு எதிர்பார்ப்புகளின் அர்த்தமும் அதன் ஆழமும் மாறிக்கொண்டேதான் போகின்றது.

இந்த மாற்றம் எமது சமுதாயத்தின் எதிர்கால வளர்ச்சிகளை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லப் போகின்றதா? இல்லை கலாச்சார சீரழிவுக்குள் எம்மை இட்டுச் செல்லப் போகின்றதா? என்பது ஒரு கேள்விக்குறியே !

இல்லை இதுவெல்லாம் ஒவ்வொரு காலகட்டத்திலும் அத்தகைய காலத்தின் தேவைகளுக்கேற்ப அந்தந்த இளம் தலைமுறைகளினால் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் இதை ஒரு பெரிய விடயமாகத் தூக்கிப் பிடிப்பதே தவறு எனும் வாதமும் ஓரங்களில் ஒலிக்கத்தான் செய்கிறது.

எது எப்படி இருப்பினும் வாழும் காலத்தில் எமது வாழ்க்கையில் மாற்றத்தை இவ்விளம் தலைமுறைகளின் எதிர்பார்ப்புகள் ஏற்படுத்துமாகின் அதனைப் பற்றிய ஒரு அலசல் தேவைப்படுவது யதார்த்தமே !

அரசாங்களின் கடன்கள், அவ்வரசாங்கங்கள் தங்கள் நாட்டு மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பல வடிவங்களில் முதன்நிலைப்படுத்தப்ப்பட்டு அந்நாட்டு நிதிநிலைமைகளை நிர்ணயிக்கின்றன.

சிலநாட்களின் முன்னால் நான் எனது ஆபிஸிக்கு காலையில் சென்று கொண்டிருக்கும் போது அக்கார் வானொலியில் வந்த ஒரு விளம்பரத்தை செவிமடுக்கும் போது உள்ளத்தில் ஏற்படுத்திய அதிர்வலைகளின் வழியாகவே இம்மடல் வந்து விழுகிறது.

ஆமாம் மக்களின் தேவைக்காக உடனடியாக கடன் கொடுப்போம். அக்கடனைப் பெறுவது எவ்வளவு இலகுவானது என்பதைப் பற்றி அனைவரையும் கவரும் வண்ணம் அழகாக ஒரு விளம்பரம் அவ்வானொலியில் அந்நிறுவனத்தினால் நிகழ்த்தப்பட்டது.

அப்போதுதான் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்கையில் இது எத்த்ஹ்ஹ்ஹ்ஹ்ஹனை பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது என்பது புரிந்தது.

வாழ்க்கையின் அத்தியாவசிய தேவைகளுக்காக கடன் பெறுவதை ஓரளவு ஏற்றுக் கொள்கிறோம் என்றாலும் கூட அலங்காரமான் பொருட்களுக்காக நவீன வசதிகளுக்காக இன்றைய சந்தையில் இளம் தலைமுறையைக் கவரும் வகையில் காணப்படும் பொருட்களுக்காக இக் கடனைப் பெற்றுத் தம்மை மீளா வறுமையில் ஆழ்த்தும் பலரைப் பற்றிய செய்திகளை அன்றாடம் ஊடகங்களின் வாயிலாகக் கேள்வியுறுகிறோம்.

தெருவிலே காணும் பல இளய தலைமுறையின் கைகளிலே கைக்கணணி, நவீன கைத்தொலைபேசி, நவீன ஒலிபரப்பு சாதனங்கள் என பலதரப்பட்ட சாதனக்களைக் கண்ணுறுகிறோம்.

இவைகள் ஏதோ மிகவும் மலிவு விலையில் விற்கப்படுபவை அல்ல அதைக் கையாளும் இளைஞர்கள் அனைவரும் அதனை வாங்கக்கூடிய அளவிற்கு செல்வத்தில் திளைப்பவர்களும் இல்லை.

பின் எவ்வாறு இவ்வளவு இலகுவாக இவை அவர்களின் கைகளை வந்தடைகின்றன. ஒன்று அவர்களது பெற்றோர் அவர்களின் ஆசைகளைப் பூர்த்தி செய்வதற்காக தமது தகுதிக்கு மீறிய வகையில் கடன்களைப் பெற்று அவர்களது ஆசைகளை நிறைவேற்றுகிறார்கள் அன்றி அவ்விளைஞர்கள் சட்டத்திற்கு முரணான வகையில் இப்பொருள்களை அடைந்து கொள்கிறார்கள்.

அவர்களின் கைகளில் இத்தகைய நவீன பொருட்கள் தவழ் வேண்டும் என்பது அவர்களுடௌய வட்டத்தின் எதிர்பார்ப்பாக இன்றைய காலகட்டத்தில் இருப்பதே மிகவும் கவலைக்குரிய விடயமாகிறது.

அது மட்டுமின்றி அதைப் பெற்றுக் கொடுப்பதற்கான வசதியற்றவர்களுக்கு அவர்களின் தகுதியைக் கூட ஆராயாமல் அளவிற்கு அதிகமான வட்டியுடன் கடன் கொடுப்பதற்கு அவ்வானொலி விளம்பரதாரர்களைப் போன்ற நிறுவனங்கள் தயாராக இருப்பது அதைவிடக் கொடுமையான செயல்.

அன்றைய காலங்களிலும் மக்களிடம் எதிர்பார்ப்புகள் இருக்கத்தான் செய்தன ஆனால் அவ்வெதிர்பார்ப்புகளை அடைவதற்கு அவர்கள் திட்டம் தீட்டி அதற்கான வசதியைப் பெற்றுக் கொள்வதற்காக நியாயமாக உழைத்தார்கள். அதனால் தமது எதிர்பார்ப்புகளை அடைந்ததும் அதற்கான உரிய மதிப்பை அளித்தார்கள்.

ஆனால் இன்றைய நிலை . . . . .

எதிர்பார்ப்பவைகளை எதுவித பிரயத்தனமும் இல்லாமல் நினைத்த மாத்திரத்தில் அடைந்து விட வேண்டுமென்னும் பேராசையால் உந்தப்பட்டு இருக்கும் ஒரு தலைமுறையாக காலத்தின் மாற்றம் இன்றைய இளம்தலைமுறையை உருவாக்கி விட்டதோ என்று அச்சப்பட வேண்டி உள்ளது.?

தேவைகளின் வித்தியாசங்கள், புரியப்படாமலே ஒரு சந்ததி உருவாகிறதோ? எதற்கும் விதிவிலக்குகள் உண்டு அதேபோல தமது தேவைகளுக்காக நியாய எல்லைகளுக்குள் உழைக்கும் உத்தமான இளம் தலைமுறைகளும் உள்ளனர் எனபதும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒன்றே .

மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *