பள்ளிகளுக்கருகே மதுக்கடைகள் கூடாது, மாநகராட்சிகளின் நடவடிக்கை

0

தேமொழி

தமிழ் நாட்டில் பள்ளிகளுக்கு அருகே உள்ள மதுக்கடைகளை அகற்றக்கோரி பல்வேறு இடங்களில் பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் மாவட்ட ஆட்சியாளர்களிடம் சென்று கோரிக்கை மனு கொடுத்து முறையிடுவதாகவும், போராட்டங்கள் நடத்துவதாகவும் அங்கொன்றும் இங்கொன்றுமாக தினசரிகளில் வரும் செய்திகளைப் படித்து நாட்டின் எதிர்காலத்தைப் பற்றிக் கவலை எழுவது இயற்கை.

ஈரோடு அருகே பள்ளி இறுதி ஆண்டில் பயிலும் மாணவிகள் டாஸ்மாக் கடையில் மது அருந்தியதாகக் கிடைத்த செய்தியினால் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எண்ணி கவலை அடைவதாக ம.தி.மு.க.,பொதுச்செயலாளர் வைகோ சென்ற மாதம் (டிசம்பர் 5, 2003) ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தார். இது போன்ற செய்திகளால் வருத்தமடைந்தவர்கள் இக்கட்டுரையின் தலைப்பினைப் படித்து இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்று ஆனந்தப் பள்ளு பாடவேண்டாம். இங்கு குறிப்பிடப் போகும் செய்திகள் நம் தமிழக மாநகராட்சிகளின் நடவடிக்கைகளைக் குறித்தல்ல.

 

அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாநிலத்தில் உள்ள சாண்டா ஃபே மாநகராட்சி தங்கள் நகரில் பள்ளிக்கு அருகாமையில் உள்ள மதுக்கடையை எதிர்த்து நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளது. முதலில் மாநகராட்சியின் அனுமதியையும் மீறி அங்கு மதுக்கடை அமைந்ததே சட்டக் குளறுபடிகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு. பல கடைகள் வைத்திருக்கும் பலசரக்கு விற்பனை நிறுவனம் ஒன்று, தனது ஒரு கடையின் மது விற்கும் உரிமத்தை மற்றொரு கடைக்கு மாற்றிக் கொடுத்தது. இதில் சட்டப்படி எந்தத் தவறும் இல்லை. ஆனால் புது உரிமம் பெற்ற மதுக்கடைக்கருகே பள்ளி இருப்பதால் அந்த மாநகராட்சி சட்டப்படி தங்களிடம் அனுமதி இல்லாமல் பள்ளிக்கருகில் மது விற்பனை கூடாது என்று அதனை எதிர்த்தது. விற்பனையாளர் இது தவறு என்று நீதிமன்றத்தில் முறையிட்டார். விற்பனை உரிமம் வழங்கும் மாநில அரசும் மது விற்பனைக்கு அனுமதி அளித்ததில் சட்டமீறல் இல்லை என்றது. எனினும் நீதிமன்றம் மாநகராட்சிக்கு ஆதரவாக மது விற்பனையை நிறுத்த ஆணையிட்டது.

மதுவிற்பனையாளர் உயர்நீதி மன்றத்தில் முறையிட்டார். மாநகராட்சியோ பள்ளிக்கு 300 அடிகளுக்குள் மதுக்கடை இருக்கிறது, சட்டப்படித் இது தவறு என்று வாதிட்டது. நீதிமன்றம் பள்ளிக்கும் கடைக்கும் இடையே உள்ள தொலைவை அளந்ததில்தான் தவறு. பள்ளியிலிருந்து 300 அடிகளுக்குள் கடையின் வண்டிகள் நிறுத்தும் இடம்தான் இருக்கிறது. விற்பனை செய்யும் கடை 300 அடிகளுக்குள் இல்லை. வழக்கமாக அளவிடும் முறையில் கட்டிடங்களுக்கிடையேயான தொலைவை அளந்தால் மாநகராட்சியின் வாதம் சரியல்ல என்று கூறி மது விற்பனைக்கு அனுமதி அளித்துவிட்டது.

வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தின் “எண்ணிக்கை தெரியாத குற்றம்” என்ற வசனம் போன்று “உனக்கு அளக்கத் தெரியவில்லை” என்று உயர்நீதி மன்றம் சொல்லி அவர்கள் வழக்கைத் தள்ளுபடி செய்த பின்னர், இப்பொழுது மாநகராட்சி உறுப்பினர்கள் உச்ச நீதி மன்றத்திற்கு வழக்கை கொண்டு செல்ல ஆயத்தமாகிறார்கள். இனியாவது மாநகராட்சியின் நல்லெண்ணத்திற்கு வெற்றி கிட்டட்டும்.

 

மற்றொரு நிகழ்ச்சியில், நியூ யார்க் மாநிலத்தின் குயின்ஸ் மாநகராட்சி உறுப்பினரான டானவான் ரிச்சர்ட்ஸ் (Donovan Richards) என்பவர் மேற்கொண்ட நடவடிக்கையினால் பள்ளிக்கருகே மது விற்பனை நிகழாமல் போனது. பள்ளிகருகில் மது விற்பனை செய்ய வணிகர் ஒருவர் மாநகராட்சிக்கு விண்ணப்பம் அளித்தார். டானவான் ரிச்சர்ட்ஸ் அதற்கு உடன்பட்டு அனுமதி அளிக்கவில்லை. விண்ணப்பித்த வணிகரும் அவரது தோழர்களும் டானவான் ரிச்சர்ட்ஸ்க்கு கையூட்டு அளித்து அனுமதி பெற முயற்சித்தனர்.

எச்சரிக்கை அடைந்த டானவான் ரிச்சர்ட்ஸ் உடனே அவர்களைப்பற்றி காவல்துறையின் துப்பறியும் பிரிவினரிடம் புகார் அளித்தார். அவர்களைக் கைது செய்ய டானவான் ரிச்சர்ட்ஸ் காவலருடன் ஒத்துழைக்க முன்வந்தார். துப்பறியும் பிரிவினர் டானவான் ரிச்சர்ட்ஸ்ஸின் பிரதிநிதி என்று ஒருவரை நியமித்து, வணிகருடன் உணவுவிடுதி ஒன்றில் சந்திக்க ஏற்பாடு செய்தனர். அங்கு வந்த வணிகரும் அவரது நண்பர்களும் அந்த நபரிடம் கையூட்டு கொடுக்க முயன்றபொழுது கையும் களவுமாகக் கைது செய்யப்பட்டனர்.

 

பள்ளி அருகில் மதுக்கடை வைக்க விரும்பி கையூட்டு வழங்க முயன்ற வணிகர் மற்றும் அவரது நண்பர்களின் பெயர்கள் டார்செம் சிங், தேவேந்தர் சிங் மற்றும் ராஜேந்தர் சிங். இவை நம்நாட்டு மக்களின் பெயராக இருப்பதால் பாரதத்தின் ஊழல் பண்பாட்டை மற்ற நாடுகளுக்கும் பரப்ப எத்தனிக்கிறார்கள் நம் இந்தியர்கள் என எண்ணத் தோன்றுகிறது. இந்தியாவில் பள்ளிக்கருகில் மது விற்பனை என்னும் முயற்சிகள், மதுவை தங்கள் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக கருதும் மேலை நாட்டினரைவிடவும்  மோசமாக இருப்பது இந்த நிகழ்சிகளால் தெரிய வருகிறது.

 

 

 

சான்றுகள்:
மதுக்கடையில் மாணவிகள்: வைகோ கவலை..! டிசம்பர் 05,2013, தினமலர்

மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும். டிசம்பர் 06,2013, தினமணி‎

Plea to relocate TASMAC shops away from schools. August 6, 2013, The Hindu
http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/plea-to-relocate-tasmac-shops-away-from-schools/article4994582.ece

Waves of protests over location of Tasmac shops. November 17, 2013, The Hindu
http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/waves-of-protests-over-location-of-tasmac-shops/article5359727.ece

Court upholds decision to allow liquor sales near school, December 3, 2013, The Santa Fe New Mexican
http://www.santafenewmexican.com/news/local_news/court-upholds-decision-to-allow-liquor-sales-near-school/article_d0248c07-da5e-5b89-ae22-14a1e3cbdb73.html

Queens Councilman Refuses Bribes To Put Liquor Store Near School. Sep 14, 2013, Gothamist
http://gothamist.com/2013/09/14/queens_councilman_refuses_bribes_to.php

DOI FINDS THREE QUEENS BUSINESSMEN UNSUCCESSFULLY OFFERED CASH PAYOFFS TO CITY COUNCILMAN TO SUPPORT LIQUOR STORE LICENSE, ROSE GILL HEARN, COMMISSIONER , FRIDAY, SEPTEMBER 13, 2013
http://www.nyc.gov/html/doi/downloads/pdf/2013/sept13/29bribe09-13-2013.pdf

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *