செண்பக ஜெகதீசன்fireimages

அகலா தணுகாது தீக்காய்வார் போல்க

விகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.

-திருக்குறள்- 691 (மன்னரைச் சேர்ந்தொழுகல்)

 

புதுக் கவிதையில்…

 

அருகில் நெருங்கிச் சென்றால்

சுடும்,

அகன்றாலே அதிகமாய்,

அணுகாது வெப்பம்..

 

அதுதான் தீயின் குணம்,

ஆட்சியாளரின் குணமும் அதுதான்..

 

அதனால்தான் அவரை

அதிகம் நெருங்காமலும், விலகாமலும்

அடுத்திருக்கக் கற்றிடு,

அதுதான் நல்லது…!

 

குறும்பாவில்…

 

தீக்காய்வதுபோல் பழகிடு

அதிகம் அகலாமலும் நெருங்காமலும்,

ஆட்சியாளர் உறவு நிலைத்திட…!

 

     மரபுக் கவிதையில்…

 

அருகினில் சென்றால் சுட்டிடும்தீ,

அகன்றே அதிகம் சென்றிட்டால்

வருவ தில்லை வெப்பமென்பதால்

வேண்டும் நடுநிலை தீக்காய்ந்திட,

அரசியல் களமதில் ஆட்சியாளர்

அருகினில் அதிகம் நெருங்காமல்

பெரிதும் விலகிச் செல்லாமலே

பார்த்திடு பயனெலாம் பெற்றிடவே… !

 

லிமரைக்கூ…

 

அருகிலும் எட்டியுமின்றிக் காய்ந்திடு தீ,

அதுபோல் ஆட்சியாளரிடம் மிக

அணுகாமலும் விலகாமலும் பழகிடு நீ…!

 

கிராமியப் பாணியில்…

 

குளுர்காயி குளுர்காயி

தீயிலத்தான் குளுர்காயி,

கிட்டப்போனா சுட்டுப்புடும்

எட்டிப்போனா சூடுயில்ல..

 

அதால,

மெதமான சூட்டுலத்தான்

எதமாநீ குளுர்காயி..

 

ராசாங்கக் கதயிதுதான்,

ரெம்ப சூச்சிப்பா நடந்துக்கணும்..

 

ராச்சியத்த ஆளுகிற

ராசாங்க மனுசர்கிட்ட

நெருங்காம வெலகாம

நேர்த்தியாத்தான் பழகிடணும்..

 

தீப்போல சுட்டுப்புடும்

தெரியாம நெருங்கிட்டா,

தெரியாம எதுத்திட்டா..

 

எல்லாம்

தெரிஞ்சி நடந்துக்கோ,

நல்லாப்

புரிஞ்சி நடந்துக்கோ…!

 

படத்துக்கு நன்றி

http://www.datacenterjournal.com/it/flame-malware-big-story-or-old-news/

        

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *