மதிப்புரை: மேகலா இராமமூர்த்தி

நூலின் பெயர்: கொய்த நன்மலர்கள்

நூலாசிரியர்: முனைவர் இராம. இராமமூர்த்தி

நூலின் தன்மை: இலக்கியக் கட்டுரைகள்

பதிப்பகம்: முத்துப் பதிப்பகம்

நெ.27, வில்லியம் லே-அவுட்

இரண்டாவது தெரு, கே.கே. ரோடு

விழுப்புரம் – 605 602.

முதற் பதிப்பு: திசம்பர் 2010

பக்கங்கள்: 160

விலை: ரூ. 110

Picture1

ஆசிரியர் குறிப்பு: தமிழ் இலக்கண இலக்கியங்களில் பெரும்புலமையும், பயிற்சியுமுடைய இந்நூலாசிரியர் முனைவர் இராம. இராமமூர்த்தி அவர்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் தமிழாசிரியராகவும், தமிழ்ப் பேராசிரியராகவும் பல்லாண்டு காலம் பணியாற்றிய சான்றோராவார். தமிழில் வித்துவான், முதுகலை, முனைவர் என்று பல பட்டங்கள் பெற்ற இவர் ஆற்றிவரும் சீர்மிகு பணிகள் தமிழன்னைக்குப் பொலிவும், அணியும், அழகும் சேர்த்துவருகின்றன. ’வீரசோழியம்’ எனும் சிறந்த இலக்கண நூலை இயற்றிய புலவர் ’புத்தமித்திரனார்’ பிறந்த ’பொன்பற்றி’ எனும் வளங்கொழிக்கும் சிற்றூரில் பிறந்தவர் இந்நூலாசிரியர்.

சிறந்த சொற்பொழிவாளர், கவிஞர், எழுத்தாளர் என்று பன்முகங்கள் கொண்ட இந்நூலாசிரியர் தமிழ்ப்பணியொன்றே தம்வாழ்க்கையின் இலக்கென வாழும் தகைசால் கொள்கையர்.

————————————————————————————————————————————————

கொய்த நன்மலர்களாய் மணம் பரப்புபவை: இந்நூல் இருபத்துமூன்று (23) இலக்கியக் கட்டுரைகளின் தொகுப்பாகும். ஓரிரு கட்டுரைகள் நீங்கலாக எஞ்சிய கட்டுரைகள் அனைத்துமே தமிழர்களின் பொற்காலம் என்று போற்றப்படும் சங்ககால நூல்களின் சிறப்பினைச் சுவைபடப் பேசுபவையே. இனி அவற்றை நோக்குவோம்.

அறத்தொடு நிலையும் தமிழ் நாகரிகமும்’ என்ற தலைப்பிலானது முதற் கட்டுரை. குறிஞ்சித் திணையின் முக்கியக் கூறுகளில் ஒன்றான ’அறத்தொடு நிலை’ என்ன என்பது பற்றியும், அறத்தொடு நிற்பதற்குரிய மாந்தர் யார் என்பதனையும், அதற்கான சூழ்நிலையையும், அதன் பயனையும் சங்க இலக்கியத்தின் சுவை மிகுந்த பல்வேறு பாடல்கள் வாயிலாக அழகாக விளக்குகின்றது இக்கட்டுரை. நம் பண்டை மகளிர் களவு நெறி நின்று, கற்பு நெறி புகுந்து சிறக்க இவ்வறத்தொடு நிலை ஒரு பெரும் வாயிலாய் விளங்கியமையை இலக்கண இலக்கிய நூல்கள் நன்குணர்த்துகின்றன என்கிறார் ஆசிரியர். ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் நாகரிகத்தையும், அறத்தொடு நிலையின் தன்மையையும் உணர்த்தவேண்டியே குறிஞ்சி பாடுவதில் வல்லவராய்த் திகழ்ந்த கபிலர்பெருமான் ‘குறிஞ்சிப் பாட்டு’ என்ற நூலையே எழுதினார் என்ற அரிய செய்தியும் இக்கட்டுரையில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

இறைச்சியில் பிறக்கும் இலக்கிய இன்பம்’ என்பது இரண்டாவது கட்டுரையாகும். அகத்திணைப் பாடல்களில் கருப்பொருளின் துணைகொண்டு அகப்பொருட் செய்திகளைக் குறிப்பால் சுட்டுவது இறைச்சி எனப்படும். இவ்விறைச்சிப் பொருள் பெரும்பாலும் இயற்கை வருணனைகளாக அமைவது வழக்கம். கருத்துச் செறிவு மிகுந்த இறைச்சியில் தோன்றும் பொருட்சிறப்பு, இறைச்சிப் பொருள் சுட்டப்பெறும் இடங்கள், இறைச்சியின் தன்மையை விளக்கும் தொல்காப்பிய நூற்பாக்கள் முதலியவை இக்கட்டுரையில் எழிலுற எடுத்தாளப்பட்டுள்ளன. இத்துணைச் சிறப்புமிகு இறைச்சிப் பொருளின்பத்தைச் சங்கப் பாடல்களேயன்றி வேறு பாடல்களில் காணவியலாது என்று கூறும் ஆசிரியர், அதற்காகவேனும் தமிழ்மக்கள் சங்கப்பாடல்களைக் கற்றின்புற வேண்டும் என்ற தன் உள்ளக்கிடக்கையையும் இங்கு வெளிப்படுத்தியுள்ளார்.

குறள் காட்டும் குறிப்பு என்பது மூன்றாவது கட்டுரை. முப்பாலுள், காமத்துப்பாலே வள்ளுவரின் கவியுள்ளத்தைத் தெற்றென உலகுக்குப் புலப்படுத்துவது; திட்பமும் நுட்பமும் வாய்ந்தது. அதிலுள்ள ‘குறிப்பறிவுறுத்தல்’ என்ற அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள உடன்போக்குத் துறையைப் பற்றிப் பேசுகின்றது இக்கட்டுரை. உடன்போக்கு என்பது காதல் கொண்ட தலைவனும் தலைவியும் மணந்துகொள்ளும்பொருட்டுப் பிறரறியாமல் ஊரைவிட்டுச் செல்வதாகும். தலைவி உடன்போக்குக் குறிப்புணர்த்தும் பாங்கை நனி நாகரிகத்துடன்  குறிப்பறிவுறுத்தல் அதிகாரத்திலுள்ள ஓர் குறள் நமக்குக் காட்டுவதை இந்நூலாசிரியர் மிக அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளார். வாமன வடிவிலுள்ள குறளின் பொருளை விரித்தால் அஃது நெடுமாலின் நீள்நிலமளந்த தோற்றத்தை ஒக்கும் என்பர் தமிழ்ச்சான்றோர். அத்தகைய திருக்குறளின் சிறப்பை, பொருளாழத்தைத் தமிழர் அறிந்துகொள்ள இக்கட்டுரை பேருதவி செய்யும் என்பது தெளிவு.

அடுத்து இடம்பெற்றுள்ள கட்டுரை, பத்துப்பாட்டில் அடிகள் குறைந்ததும், அழகு மிகுந்ததுமாகிய ‘முல்லைப்பாட்டு. முல்லை நிலத்துக்குரிய மாண்பும், இல்லிருந்து ஆற்றியிருத்தலாகிய அகவொழுக்கமும், தலைவனைப் பிரிந்த தலைவியின் பிரிவுத் துயரும், போர் மேற்சென்ற அரசன், தான்தங்கியிருக்கும் பாசறையின்கண் செய்கின்ற செயல்களும் இக்கட்டுரையில் விரிவாகப் பேசப்படுகின்றன. முல்லை நிலத்தைக் களமாகக் கொண்டு தீட்டப்பட்டுள்ள அற்புதமான சொல்லோவியமே புலவர் நப்பூதனாரின் முல்லைப்பாட்டு என்று கட்டுரையாசிரியர் உரைப்பது மிகவும் பொருத்தமே. முல்லை மலர் அளவிற்சிறியதாயினும் மணத்தில் சிறந்தது. அஃதொப்ப முல்லைப்பாட்டும் அளவிற்சிறிய நூலாயினும் சுவையில் சிறந்தது என்பதை ஆசிரியர் தெற்றெனப் புலப்படுத்தியுள்ளார்.

ஐந்தாவதாக இடம்பெற்றுள்ள கட்டுரை குறிஞ்சிப்பாட்டு. செறுத்த செய்யுள் செய்செந்நாவின் வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்’ என்று புலவர் பெருமக்களால் போற்றிப் பாராட்டப்படும் கபிலர் எழுதிய நூல் இது. குறிஞ்சிப்பாட்டு நுவலும் பொருளும், இறைச்சி மற்றும் உள்ளுறையுவமங்களும் இக்கட்டுரையில் அழகுற எடுத்துக்காட்டப்பெறுகின்றன. இந்நூலில் ’ஒண்செங்காந்தள் முதல் பரேரம் புழகு’ ஈறாகத் தொண்ணூற்றொன்பது (99) வகையான மலர்களின் பெயர்களையும் குறிஞ்சிக் கபிலர் பட்டியலிட்டு நம்மை வியப்பிலாழ்த்தும் பாங்கைப் பாராட்ட வார்த்தைகள் ஏது? தமிழர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வினர் என்பதற்குக் குறிஞ்சிப்பாட்டினும் விஞ்சிய சான்று வேண்டுமா என்பது தமிழர்களாகிய நாம் நம்மையே கேட்டுக்கொள்ளவேண்டிய வினாவாகும். குறிஞ்சிப்பாட்டின் சிறப்பைச் சுருங்கக்கூறி விளங்கவைத்துள்ள நூலாசிரியரும் நம் பாராட்டுக்குரியவரே!

அடுத்த கட்டுரை பத்துப்பாட்டினுள் ஒன்றான ’நெடுநல்வாடை’ பற்றியது. இந்நூல் ’கோல நெடுநல்வாடை’ என்று புகழப்படுகின்றது. நக்கீரர் புனைந்த நன்னூல் இது. போர் மேற்சென்ற தலைவனைப் பிரிந்த தலைமகட்கு நெடு(நீண்ட) வாடையாகவும், போரில் வெற்றி பெற்றுப் பாசறையில் பெருமிதத்தோடு தங்கியிருக்கும் வேந்தனுக்கு நல்வாடையாகவும் அமைதலினால் இந்நூல் நெடுநல்வாடையாயிற்று. இவ்வினிய நூலில் கோப்பெருந்தேவி தங்கியுள்ள அரண்மனையின் அமைப்பு, அவள் படுத்திருக்கும் கட்டிலின் அழகிய வேலைப்பாடுகள் ஆகியவை பண்டைத் தமிழர்தம் கட்டடக்கலைநூல் அறிவைப் பெரிதும் புலப்படுத்துவதாய் அமைந்துள்ளது. இந்நூல் அகத்திணையைச் சார்ந்ததா? புறத்திணையைச் சார்ந்ததா? என்ற இலக்கிய விவாதம் இன்றுவரைத் தமிழறிஞர் பெருமக்களிடையே முற்றுப்பெறாமல் நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்க ஓர் சுவையான செய்தியாகும். பண்டைத் தமிழ்மக்களின் பல்வேறு திறன்கள் குறித்து அறிந்துகொள்ள இக்கட்டுரைப் பேருதவி புரியும்.

கடியலூர் உருத்திரங்கண்ணனார் எனும் பெரும்புலவர் திருமாவளவன் மீது பாடிய ’பட்டினப்பாலை’ எனும் நூல்பற்றிய செய்திகள் அடுத்த கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. இந்நூலை இயற்றியமைக்காக அவர் பெற்ற பரிசில் ’பதினாறு இலட்சம் பொற்காசுகள்’ என்ற செய்தி நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றது. புகார் நகரச் சிறப்பும், வளமையும் இந்நூலில் நன்கு எடுத்தியம்பப்பட்டுள்ளது.  பரதவர், வணிகர், வேளாளர் போன்ற பல்வேறு மக்களின் பண்புநலன்களும், சிறப்பும் அழகாய்ப் பேசப்பட்டுள்ளது. மேலும், திருமாவளவன் என்ற பெயரான் அழைக்கப்படும் கரிகாற்சோழனின் போர்ச் சிறப்பும், அவனால் பகைவர் நாடு பாழாயினமையும் கவினுறக் காட்டப்பட்டுள்ளது. பட்டினம் என்று போற்றப்பட்டக் காவிரிப்பூம்பட்டினம் குறித்த செய்திகள் பாலைத் திணையை உரிப்பொருளாகக் கொண்டு கூறப்பட்டிருப்பதனாலேயே இந்நூலுக்குப் பட்டினப்பாலை என்ற பெயர் வந்தது என்று இந்நூலின் சிறப்பினைச் சுவைபடவும், நேர்த்தியாகவும் மொழிந்துள்ளார் கட்டுரையாசிரியர்.

நெடுந்தொகை’ என்னும் பெயரால் அமைந்துள்ளது அடுத்த கட்டுரை. அகநானூற்றின் பிறிதொரு பெயரே நெடுந்தொகை என்பது. எட்டுத்தொகையிலுள்ள மற்ற நூல்களினும் அடிகளின் அளவால் (13-31 அடிகள்) இந்நூல் நெடியதாகலின் இதற்கு நெடுந்தொகை எனும் பெயர் வந்தது. இக்கட்டுரையில் அகநானூற்றுப் பாடல்களின் தனித்தன்மை, அதில் இடம்பெற்றுள்ள வரலாற்றுச் செய்திகள் ஆகியவை அலசப்பட்டுள்ளன. அகநானூற்றுப் பாடல்களின் எண்களே அப்பாடல்களின் திணையினைச் சுட்டும் பாங்கு ஈண்டுக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நூலைக் களிற்றியானைநிரை, மணிமிடைபவளம், நித்திலக்கோவை என்று மூன்றாகப் பகுத்துள்ளனர் புலவர் பெருமக்கள். உள்ளுறையுவமம், இறைச்சி எனப் பாடலுக்கு அணி சேர்க்கும் அனைத்து அம்சங்களும் மிகுந்திருப்பது அகநானூற்றின் அழகை அதிகப்படுத்துகின்றது என்கிறார் கட்டுரையாசிரியர்.

ஒன்பதாவது கட்டுரையாகச் சிவகாமி சரிதை இடம்பெற்றுள்ளது. பேராசிரியர் சுந்தரம் பிள்ளையின் மிகச்சிறந்த படைப்பான ‘மனோன்மணீயம்’ என்ற நூலின் இடையில் வருவதே இச்சரிதை.  மனோன்மணீயம், லிட்டன் பிரபு எழுதிய, ‘The Secret Way’ என்ற நூலின் மொழிபெயர்ப்பானதுபோல, இச்சிவகாமி சரிதை ஆலிவர் கோல்ட்ஸ்மித் (Oliver Goldsmith) என்ற ஆங்கிலப் புலவர் யாத்த ‘The Vicar Of Wakefield’ என்ற நூலின் இடையில் இடம்பெற்றுள்ள ’Edwin and Angelina’ என்ற கதையின் தழுவலாகும். கதையின் தலைவி மனோன்மணியின் தோழியாக வரும் வாணி இக்கதைப் பாடலை, மனோன்மணியின் துயர்நீக்கப் பாடுவதாக இப்பகுதி அமைந்துள்ளது. இப்பாடலில் சித்தாந்த நுண்பொருளும் இலைமறைகாயாய் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ் மக்கள் அதிகம் அறிந்திராத இச்செய்திகளைத் தன் கட்டுரையில் வெளிப்படுத்தியுள்ள ஆசிரியரின் நுண்மாண் நுழைபுலம் போற்றுதலுக்குரியது.

இக்கட்டுரையின் தொடர்ச்சியாகவே கருதும் வகையில் இடம்பெற்றுள்ளது ’மூலமும் மொழிபெயர்ப்பும்என்ற தலைப்பிலான பதினான்காவது கட்டுரை. இக்கட்டுரையில் மொழிபெயர்ப்புக் கலையின் சிறப்புக் குறித்துப் பேசப்பட்டுள்ளது. மூலநூல் ஆசிரியனினும் விஞ்சிய புலமைமிக்கோனே மொழிபெயர்ப்பு நூலைச் செம்மையாகச் செய்ய இயலும் எனும் உண்மையை ‘சிவகாமி சரிதை’ வாயிலாகவே நிறுவியுள்ளார் கட்டுரையாசிரியர். மனோன்மணீய ஆசிரியர் சுந்தரம் பிள்ளை போலவே இக்கட்டுரையாசிரியரும் தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறந்த புலமை பெற்றவர் என்பதற்கு இக்கட்டுரைத் தக்கதோர் சான்றாய்த் திகழ்கின்றது.

அடுத்து வருவது புலவர் போற்றிய வாழ்வியல் நெறிகள்என்ற தலைப்பிலான கட்டுரை. இதில், சங்கப் புலவர்கள் அழகுணர்ச்சி மிக்கவர்களென்பதும், காதலன்பும், பிறவுயிர்கள்மாட்டு இரக்கவுணர்வும் நிறைந்தவர்கள் என்பதும் தக்க சான்றுகளுடன் விளக்கப்பட்டுள்ளது. மன்னர்களேயாயினும் தவறு செய்தவிடத்து, ஒழுக்கம் தவறுகின்றவிடத்து அத்தவறுகளைச் சுட்டிக்காட்டி இடித்துரைக்கவல்ல அஞ்சாநெஞ்சர்கள் புலவர் பெருமக்கள் என்பது கடையெழு வள்ளல்களில் ஒருவனான பேகனின் இல்லறவாழ்வை மையப்படுத்திச் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. புலவர்களில் பலர் வறுமையுடையவர்களாய் இருந்தபோதிலும், பொருள்பெற்றுத் தம் வாழ்வை வளப்படுத்திக் கொள்வதையே வாழ்வின் குறிக்கோளாய்க் கொள்ளாமல் பிறரின் நல்வாழ்விலும் மிகுந்த அக்கறை செலுத்தியுள்ளனர் என்பதனை இக்கட்டுரை அங்கை நெல்லிக்கனியெனப் புலப்படுத்துகின்றது.

பத்துப்பாட்டில் அகக் கோட்பாடுகள்என்பது கட்டுரைகளின் அழகிய அணிவகுப்பாய் விளங்கும் இந்நூலில் அடுத்து இடம்பெற்றுள்ள கட்டுரை. தொல்காப்பிய நெறியினின்றும் பிறழாமல், பண்டை நாளைப் புலவர்கள் அகத்திணைப் பாடல்களைப் புனைந்துள்ளனர் என்ற கருத்தினை இக்கட்டுரை தக்காங்கு நிறுவியுள்ளது. முதல், கரு, உரிப்பொருள்கள் பாடல்களில் அமைந்துள்ள இயல்பும், ஓர் அகப்பாடல் எவ்வாறு திணைக்குரியதாய் வகுக்கப்படுகின்றது என்ற கருத்தும் கட்டுரையில் நன்கு விளக்கப்பட்டுள்ளது. நெடுநல்வாடையின் திணையமைதி குறித்து விரிவாகவும், விளக்கமாகவும் ஆராயப்பட்டுள்ளது. பத்துப்பாட்டில் இடம்பெற்றுள்ள பிற அகப்பாடல்களின் அமைப்பும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. எனவே இக்கட்டுரை இலக்கியங்களை இலக்கணக் கண்களால் நோக்கி எடைபோட்டுள்ளது என்று கொள்வது சாலப் பொருந்தும்.

மாட மதுரையில் ஓர் இரவு என்னும் கட்டுரை பன்னிரண்டாம் எண்ணுமுறையில் அமைந்துள்ளது. இஃது ஓங்கிய சிறப்பும், உயர்ந்த கேள்வியும் உடைய மாங்குடி மருதனார் எனும் புலவர் இயற்றிய பெருகு வளமதுரைக் காஞ்சியில் கூறப்பட்டுள்ள செய்திகளை விவரிக்கின்றது. மாட மதுரையில் ஞாயிறு மறைவது தொடங்கி, மீண்டும் அது குணதிசையில் தோன்றுவது வரையில், ஓரிரவில் நிகழும் நிகழ்ச்சிகளைத் தொகுத்தளிக்கும் அற்புதச் சொல்லோவியமாம் மதுரைக் காஞ்சி, கற்பார் மனத்தைப் பெரிதும் கவரும் தன்மையுடையது எனில் மிகையில்லை. இரவின் நான்கு யாமங்களிலும் நிகழும் நிகழ்ச்சிகளைச் சுட்டுவதன் வாயிலாக, மதுரை மாநகரின் அமைப்பும், மன்னன் நெடுஞ்செழியனின் ஆட்சிச் சிறப்பும், வணிகப் பெருக்கும் விளங்கக் கூறப்பட்டுள்ளது. புலியைப் போன்ற வீரர்கள் இரவில் கண் துஞ்சாது காவல்தொழிலில் சிறிதும் பிழையேற்படாவண்ணம் மதுரையைக் காத்து நிற்கின்றனர் என்ற செய்தி நமக்கு வியப்பையும், அவ்வீரர்கள்பால் பெருமதிப்பையும் ஒருங்கே ஏற்படுத்துவதாய் உள்ளது. ஈராயிரம் ஆண்டுகளாகவே மதுரை உறங்கா நகராகத்தான் திகழ்ந்துவருகின்றது என்பதனை இக்கட்டுரையும் உறுதிசெய்கிறது.

அடுத்த கட்டுரை ‘சிலம்பு கழீஇ விழா என்பதாகும். பண்டைய தமிழகத்தில் இளமகளிர் சிலம்பு அணிதல் பெருவழக்காக அமைந்திருந்தது. இம்மகளிர் திருமணம் செய்துகொள்ளும் காலத்தில் முன்னரணிந்திருந்த சிலம்புகளைக் களைந்துவிட்டுப் புதிய சிலம்புகளை அணிவர். இவ்வாறு சிலம்பணியும் நிகழ்ச்சிகளை விழாவாக எடுத்துள்ளனர். இவ்விழா, பொதுவாகத் தலைவியின் பிறந்தவீட்டில் நடைபெறும். உடன்போக்கு நிகழ்ந்து வரைதல்(திருமணம்) நிகழுமாயின் கணவன் வீட்டிலும் சிலம்பணி விழா நிகழ்தலுண்டு. பழைய சிலம்பினைக் கழற்றுதலையே ’சிலம்பு கழீஇ விழா’ என்பர். இச்செய்திகள், அகநானூறு, நற்றிணை, ஐங்குறுநூறு போன்ற இலக்கியங்களில் பேசப்பட்டுள்ளன. நம் சங்கத் தமிழர் போற்றிய பல்வேறு நிகழ்ச்சிகளை, விழாக்களை நமக்கு அறிமுகப்படுத்தி நம் நனிநாகரிகத்தை நாம் உணர்ந்துகொள்ள – அறிந்துகொள்ள இக்கட்டுரை ஓர் வாய்ப்பாய் அமைந்துள்ளது.

களவியல் உரையில் உவமை நலம் என்பது அடுத்துவரும் கட்டுரை. இலக்கணவுலகில் இன்றும் வாழ்கின்ற நூல்கள் சிலவற்றுள் ’களவியல்’ என்று அழைக்கப்படும் ’இறையனார் அகப்பொருள்’ என்ற நூலும் ஒன்று. இந்நூல் இறைவனால் அருளப்பெற்றது என்றும், இந்நூற்கு நக்கீரர் உரைகண்டார் என்றும் கூறப்படுகின்றது. இவ்வுரை செம்மாந்த நடையுடையது. சிறந்த உவமைகள், மதிநுட்பம் வாய்ந்த தொடர்கள், தருக்க நடை போல்வன இவ்வுரையில் மிகுந்திருப்பது கற்பார்க்குக் கழிபேரின்பம் நல்குவதாய் உள்ளது. ’கொழுச்சென்ற வழித் துன்னூசி செல்லுமாறு போல’, ’வடகடலிட்ட ஒருதுளை ஒருநுகம், தென்கடலிட்ட ஒருகழி சென்று கோத்தாற் போல’ வேலேறுபடத் தேளேறு மாய்ந்தாற்போல’ போன்ற அருமையான உவமைகள் பலவற்றை அதன் பொருளோடும், பயன்பாட்டோடும் விளக்குகின்றது இக்கட்டுரை. நம் முன்னோர்களின் மொழிப் புலமையையும், கூர்த்த மதியையும் அறிந்துகொள்ள இக்களவியல் உரையிலுள்ள உவமைகள் உறுதுணை செய்யும்.

அடுத்து இடம்பெற்றிருக்கும் இலக்கியக் கட்டுரை ‘கலித்தொகைக் கடவுள் வாழ்த்தும் சிவபெருமான் திருநடனமும் ஆகும். கற்றறிந்தார் ஏத்தும் கலித்தொகையானது நூற்றைம்பது கலிப்பாக்களால் அமைந்தது. இதன் கடவுள் வாழ்த்தைப் பாடியவர் நல்லந்துவனார் எனும் சீர்மிகு புலவர்பெருந்தகையாவார். இக்கடவுள் வாழ்த்து ’ஆறறி யந்தணர்க்கு அருமறை பல பகர்ந்து’ எனத் தொடங்கி ’அமர்ந்தானையாடி’ என நிறைவு பெறுகின்றது. இச்செய்யுள் சிவபெருமான் ஆடிய கொடுகொட்டி, பாண்டரங்கம், காபாலம் ஆகிய கூத்துக்களையும், உமாதேவியார் உடனிருந்தருளிய பாணியும், தூக்கும், சீருமாகிய தாள அறுதிகளையும் கூறுகின்றது. சிவபெருமான் கங்கை நீரைக் கரந்து அடக்கியவன், திரிபுரம் எரித்தவன், நஞ்சுண்டு கறுத்த நீலமணி போலும் மிடற்றினையும், எட்டுக் கைகளையும் உடைய ’எண்தோளீசன்’ எனப் பெருமானின் அருட்செயல்களை விதந்தோதுகின்றது இக்கடவுள் வாழ்த்து. தமிழரின் இறையுணர்வும் கலையுணர்வும் கைகோத்துக் காட்சியளிக்கின்றது இக்கட்டுரையில்.

விலங்கும் வேண்டாக் கைம்மை வாழ்க்கைஎனும் கட்டுரைச் சங்க இலக்கியக் கட்டுரைகளின் வரிசையில் இறுதியாக இடம்பெற்றிருக்கின்றது. உலகில் தோன்றிய உயிரினங்களில் மிகப்பல இணையாகத் துணையோடு வாழவே விரும்புகின்றன. புள்ளினங்களில் சில, தம் துணையைப் பிரிய நேரிட்டால் உடனுயிர் துறக்குமென இலக்கியங்கள் கூறுகின்றன. இத்தகைய அரிய விலங்கினக் காதலை – கைம்மை வேண்டாது உடனுயிர் நீக்கும் பேரன்பினை எட்டுத்தொகையுள் ஒன்றான நல்ல குறுந்தொகை நயனுற நவில்கின்றது. தன் காதல் தலைவனான ஆண்குரங்கு இறந்துபட்டதால் பெண்குரங்கு தன் குட்டியைச் சுற்றத்தாரிடம் சேர்ப்பித்துவிட்டுக் கைம்மை வாழ்வை விரும்பாமல் உயிர்நீக்கும் எனும் செய்தியைக் குறுந்தொகைப் பாடலொன்றில் அதன் ஆசிரியரான கடுந்தோட் கரவீரனார் கூறி நம்மை அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் மூழ்கவைக்கிறார். அதன்வாயிலாய் அவர் (மனிதர்களுக்கு) உணர்த்தும் உள்ளுறை என்ன என்பதைக் கட்டுரையாசிரியர் மிகச் சிறப்பாக இக்கட்டுரையில் விளக்கியுள்ளார்.

அடுத்து, சங்க இலக்கியம்சாராக் கட்டுரைகள் சிலவும் கொய்த நன்மலர்களாய் மணம் பரப்புகின்றன. அவற்றையும் சுருங்கக் காண்போம்.

மாணவர் போற்றிய ஆசான் என்ற கட்டுரை ’தமிழ்த்தாத்தா’ என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் உ.வே.சாமிநாதைய்யர் அவர்களுக்கும் அவருடைய தலைசிறந்த மாணாக்கருள் ஒருவராய்த் திகழ்ந்த கி.வா. ஜகந்நாதன் அவர்களுக்கும் இருந்த குரு-சிஷ்ய பக்தியை நன்கு புலப்படுத்துகின்றது. கி.வா.ஜ அவர்கள் உ.வே.சாவிடம் குருகுல முறையில் கல்வி பயின்றவர். 1927-ஆம் ஆண்டு முதல் தம் குருநாதரின் இறுதிநாட்கள் வரையில் உடனிருந்தவர். பல்வேறு பணிகளிலும் துணைநின்றவர். நாடு போற்றும் நல்ல சொற்பொழிவாளராய்த் திகழ்ந்த கி.வா.ஜ அவர்கள் தம் ஆசானைப் போற்றித் ’தமிழ்த்தாத்தா’ என்ற நூலைச் செய்துள்ளார். அதில் தமிழ்த்தாத்தாவின் தன்னிகரில்லாப் பண்புநலன்கள் பலவற்றைப் பட்டியலிட்டுத் தம் குருவிடத்துத் தாம்கொண்ட அளவிறந்த காதலையும், அன்பையும் புலப்படுத்தியுள்ளார் என்பது இக்கட்டுரை நமக்கு அறியத்தரும் அற்புதத் தகவலாகும்.

அம்மையார் பாடல்களும் யாப்பமைதியும் என்ற கட்டுரையும் அதனோடு நெருங்கிய தொடர்புடைய அம்மையார் பாடல்களில் ஆடவல்லானின் திருநடனக் காட்சிகள்என்ற மற்றொரு கட்டுரையும், காரைக்காலில் பிறந்து மூத்த நாயன்மார்களுள் ஒருவராய்ப் புகழ்பெற்ற காரைக்காலம்மையார் என்று அழைக்கப்படும் புனிதவதியாரின் பனுவல்களான திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், திருவிரட்டை மணிமாலை, அற்புதத் திருவந்தாதி ஆகியவற்றில் பயின்றுவந்துள்ள யாப்பின் வகைகளை விரிவாய் ஆராய்கின்றன. அம்மையார் பயன்படுத்தியுள்ள யாப்பு வகைகளாகக் கட்டுரையாசிரியர் சுட்டுவன பதிகம், கட்டளைக் கலித்துறை, வெண்பா முதலியன. அதுபோலவே அம்மையாரின் பனுவல்கள் அனைத்தும் சிவனார் ஆடிய பல்வேறு வகையான தாண்டவங்களையும், ஆடல்களையும் தவறாது சுட்டுகின்றன என்ற தகவலையும் நமக்குத் தருகின்றார் ஆசிரியர். அம்மையார் பாடல்களை ஆழமாக ஆராய்ந்துள்ளார் நூலாசிரியர் என்பதையே இக்கட்டுரை உறுதி செய்கின்றது.

இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள பிறிதோர் கட்டுரை ‘அருட்பிரகாசரின் அன்பு நெறி எனும் தலைப்பிலானது. இஃது வள்ளலார் வகுத்த நெறிகளையும், வாழ்க்கைமுறைகளையும் பாங்குற விளக்கிச் செல்கின்றது. வள்ளலாரின் முக்கியக் கோட்பாடுகளான சீவகாருண்ய ஒழுக்கம், புலால் மறுத்தல், பலியிடுதலைத் தவிர்த்தல், உண்மை அன்பால் இறைவனைக் காணுதல் முதலியன, அவர் மக்களுக்கு வலியுறுத்தும் நெறி அன்பு நெறியே என்பதனைத் தெள்ளத்தெளிவாக விளக்குவதாக இந்நூலாசிரியர் குறிப்பிடுகின்றார். ’ஆருயிர்கட்கெல்லாம் நான் அன்புசெய்தல் வேண்டும்’ என்று வள்ளலார் இறைவனிடம் வேண்டுவதும் ‘அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே’ என்று இறைவனை அவர் விளிப்பதும் அருட்பிரகாசருள் ஆழப்பதிந்திருப்பது அன்பு நெறியே என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றது என்று ஆசிரியர் நிறுவுவது மிகவும் ஏற்புடைத்தே.

இக்கட்டுரைத் தொகுப்பில் இறுதியாக நாம் காணவிருப்பது பாரதியின் சீட்டுக்கவி எனும் கட்டுரை. மாந்தன் தோன்றிய காலந்தொட்டே தன் எண்ணங்களை மற்றவரோடு பகிர்ந்துகொள்ள விழைந்தான். அதன் வெளிப்பாடே பல்வேறு ஒலிக்குறிகள், சைகைகள் போல்வன. நீண்ட காலத்திற்குப்பின் நாகரிக வளர்ச்சியின் ஒரு கூறாகக் கடித இலக்கியங்கள் தோன்றின எனலாம். முறையான திருமுகப் பாசுரமாக – வேண்டுகோள் மடலாகக் காணப்பெறுவது பதினோராம் திருமுறையில் இடம்பெற்றுள்ள திருமுகப்பாசுரப் பாடலாகும். இது மதுரை சொக்கநாதப் பெருமான் பாணபத்திரருக்கு உதவி புரியவேண்டிச் சேரமான் பெருமாள் நாயனாருக்கு எழுதியதாகச் சுட்டப்படுகின்றது. இத்திருமுகச் செய்யுள்கள் பின்னாளில் ‘சீட்டுக் கவிகள்’ என்ற புதுப்பெயரைச் சூட்டிக்கொண்டன. அவ்வகையில் மகாகவி பாரதியார் எட்டையபுர சமஸ்தான மன்னனைப் புகழ்ந்து எழுதிய ’சீட்டுக் கவியும் ஓலைத் தூக்கும்’ எனும் தலைப்பில் அமைந்த கவிதைகளை நயம்பட ஆராய்ந்துள்ளது இக்கட்டுரை. யாருக்கும் தலைவணங்காத பாரதி ஓர் குறுநில மன்னனைப் புகழ்ந்து பாடியிருப்பது அவன் வறுமை காரணமாக நிகழ்ந்த ஒன்றே என்ற தன்திடமான நம்பிக்கையை இக்கட்டுரையில் வெளிப்படுத்தியுள்ளார் ஆசிரியர்.

இவ்வாறு இலக்கிய மணமும், சுவையும் நிறைந்த பல்வேறு கட்டுரைகளைக் ’கொய்த நன் மலர்களாய்’ நம் கைகளில் நூல்வடிவில் தவழச் செய்துள்ளார் பெரும்புலவர், முனைவர். இராம. இராமமூர்த்தி அவர்கள். இம்மலர்களின் அற்புத மணத்தை அறிந்துகொள்ள – தெரிந்துகொள்ளத் தமிழ்கூறு நல்லுலகம் இந்நூலை அவசியம் வாங்கிப் படிக்கவேண்டும். அதுமட்டுமல்ல…வருங்காலச் சந்ததியினருக்கு நம் நனிநாகரிகத்தை, பண்பாட்டை உணர்த்துதற்கு இந்நூலைப் பொன்னேபோல் போற்றிப் பாதுக்காத்திடவேண்டும் என்பதே என் வேண்டுகோள்.

பதிவாசிரியரைப் பற்றி

7 thoughts on “கொய்த நன்மலர்கள் – நூல் மதிப்புரை

  1. விரிவான, அதேசமயத்தில், நூலை வாங்கிப்படிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டும் வகையில் எழுதப்பட்ட
    மதிப்பீடு. வல்லமையின் இந்த புதிய பக்கத்தை ஆனந்தமாக வரவேற்கிறேன். இனி செக்யூரிட்டி வினாவுடன் மன்றாட வேண்டும்.

  2. தந்தையால் மகளுக்குப் புகழா ?  இல்லை மகளால் தந்தையாருக்குப் புகழா ?  குல வித்தை கல்லாமல் பாகம் பெறும் என்பதற்கு அரிய ஓர் எடுத்துக் காட்டு.

    தந்தை குலத் தொழிலைப் பிள்ளைகள் பின்பற்றக் கூடாது என்னும் கூச்சல் இங்கே தவறாகத் தெரிகிறது !!! 

    பாராட்டுகள் மேகலா. 

    சி. ஜெயபாரதன்

  3. ரொம்ப அற்புதமாக எழுதியளித்திருக்கிறீர்கள் மேகலா!.. பாராட்ட வார்த்தைகளைத் தேடத்தான் வேண்டும்!.. 

    தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
    முந்தி இருப்பச் செயல்                        

    மகன்  தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
    என்நோற்றான் கொல்எனும் சொல்.
    (இங்கு மகன் என்பது மகளையும் சேர்த்து தான் அல்லவா!)
    இவ்விரு குறட்பாக்களும் தங்கள் விஷயத்தில் நூறு சதவீதம் பொருந்துவதைக் காண்கிறேன்!.. மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.. மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!… விரைவில் தங்கள் நூலோன்றும் இது போல் போற்றத்தகுந்த வகையில் வெளிவர வேண்டுமென இறைவனை வேண்டுகிறேன்.. 

  4. பாராட்டுக்களைப் பதிவு செய்துள்ள இன்னம்பூரான் ஐயா, ஜெயபாரதன் ஐயா இருவருக்கும் என் மனமார்ந்த நன்றி மலர்களைக் காணிக்கையாக்குகின்றேன். பரிசு பெற்ற மகிழ்ச்சியை உங்கள் இருவரின் பாராட்டு மொழிகள் எனக்கு வழங்கிவிட்டன!

    அன்புடன்,
    மேகலா

  5. தங்கள் பாராட்டுக்கும், என்மீது பொழியும் அன்பு மழைக்கும் எவ்வாறு நன்றிசொல்வது எனத் தெரியாமல் தடுமாறுகிறேன் பார்வதி. அருமையான தங்கள் நட்பை எனக்களித்த வல்லமைக்கு நன்றிகூறக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

    நன்றியுடன்,
    மேகலா

  6. “கொய்த நன்மலர்கள்” என்ற தலைப்பே நூலுக்கான சிறந்த மதிப்புரையாக விளங்குகிறது. அதற்கு மேலும் சிறப்பூட்டும் வகையில் அமைந்துள்ளது தங்களின் மதிப்புரை. நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகளின் தலைப்பைப் படிக்கும் பொழுதே, உடனே முழு நூலையும் படிக்கும் ஆவல் மேலிடுகிறது. வாழ்த்துக்கள் சகோதரி.

    பெங்களூரில் இந்நூல் எங்கு கிடைக்கும் என்பதை தெரியப்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும். நன்றி.

  7. நூலின் தலைப்பையும், மதிப்புரையையும் சேர்த்தே பாராட்டியுள்ள தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் சகோதரரே.

    பெங்களூரில் இந்நூல் தற்சமயம் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை…sorry. ஆனால் கீழ்க்கண்ட முகவரியில் அல்லது தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு நீங்கள் ’கொய்த நன்மலர்களை’ப் பெற்றுக்கொள்ளலாம்.

    ADDRESS:
    Dr. R.RAMAMURTHI
    97 M.M.G. NAGAR
    KOILPATHU
    KARAIKAL – 609 602
    HOME: 04368 – 226263
    CELL: 9942071185

    PRICE OF THE BOOK: Rs. 110/

    அன்புடன்,
    மேகலா

Leave a Reply to மேகலா இராமமூர்த்தி

Your email address will not be published. Required fields are marked *