திவாகர்

சென்ற வாரம் உலகெங்கும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு மகிழப்பட்டது. சந்தோஷம்தான். காதலை வாழ்த்திப் போற்றுவோம்.

இதன் மத்தியில் திருக்குறளைப் பற்றிய விவரணை புத்தகம் ஒன்று எனக்குப் பரிசாக அளிக்கப்பட்டது. இதனை எழுதியவர் திரு சி. ராஜேந்திரன் அவர்கள். இந்திய கலால், சுங்கத்துறை ஆணையர்.

rajendranதிரு ராஜேந்திரனுக்கு உயிர்மூச்சு என்பது திருக்குறள்தான். வாழ்நாளில் அதன் உள்ளார்ந்த தத்துவத்தை அப்படியே மனிதர்கள் கடைபிடித்தால் சண்டை சச்சரவு, நிம்மதியின்மை, கொடுமை, எல்லாமே தீரும் என்பதை தம்மை சந்திக்கும் அத்தனை பேரிடமும் சொல்லி வருகின்றார். திருக்குறள் கருத்துகள் வாழ்க்கையின் முடிவல்ல, அவை வாழ்க்கையின் அடித்தளம், திருக்குறளை வாழ்வின் ஆணிவேராகக் கொண்டு வானுயர வளர்வோம்’ என்பார்.

இவரது ‘திருக்குறள் உவமைநயம்’ எனும் புத்தகம் ஒவ்வொரு பள்ளியிலும் ஆரம்பப்பாடமாக வைத்துப் பயிற்றுவித்தால் மாணவர்கள் நிச்சயமாக பலனடைவார்கள் என்பது என் எண்ணம். திருக்குறளுக்கு வாழ்வியல் பாடம் போல எளிய விதத்தில் விளக்கமாக எடுத்துரைக்கும் விதம் எல்லோருக்கும் மனதில் சடக்கென் புகுந்து விடும்.

காதலர் தினம் என்று சொன்னேன் அல்லவா.. காதலைப் பற்றிய வள்ளுவரின் குறட்பாக்கள் ஏராள்மாக இருக்கின்றன. அதில் ஒன்றை எடுத்து திரு ராஜேந்திரனின் எழுத்து மூலமாக கீழே கொடுத்துள்ளேன்.

ஒருதலையான் இன்னாது காமம்காப் போல
இருதலையானும் இனிது.

ஒருதலைக் காதல் துன்பமானது. காதல் காவடியைப் போல இருபுறத்தில் இருந்தால்தான் இன்பம்.

இன்று நேற்றல்ல, தொன்றுதொட்டே இருந்து வந்திருக்கிறது இந்த சிக்கல். காதல் என்பது ஒருதலையாக இருந்தால்தான் துன்பம்தான் வரும். இந்தக் காதல் என்பதை களவு மற்றும் கற்பு என்ற இருநிலையிலும் வைத்துப் பார்க்கவேண்டும்.

காவடியின் எடை இருபுறமும் சரியாக இருந்தால்தான் காவடியை சுமக்கும்போது பாரமில்லாமல் இருக்கும், காவடி நிலையாக இருக்கும், சுமப்பதற்கு எளிதாக இருக்கும். அதே போல வாழ்க்கை எனும் காவடி எப்போதும் நிலையாக இருக்கவேண்டும். குடும்பம் எனும் காவடி அதன் இலக்கைச் சென்று சேரவேண்டுமெனில் கணவன் மீது மனைவியும், மனைவி மீது கணவனும் ஒத்த அன்பைக் கொண்டிருக்க வேண்டும். இந்த உண்மை தத்துவத்தைப் புரிந்து கொண்டால் மணவாழ்க்கையில் கசப்பு ஏது, குழப்பம் ஏது?

மேலும் நாம் இன்று பயன்படுத்தும் காமம் என்ற சொல்லின் பொருளுக்கும் வள்ளுவர் பயன்படுத்தும் காமம் என்ற சொல்லுக்கும் மலைக்கும் மடுவுக்குமான இடைவெளி உண்டு. இன்று காமம் மிகவும் கீழ்த்தரமான செயலைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.காதல் என்பது மென்மையான உணர்வு தொடர்பான சொல்லாகக் கருதப்படுகிறது.

வள்ளுவரோ காமம் எனக் குறிப்பிடும்போது மென்மையான உணர்வு என்று குறிப்பிடுகிறார். காமக்கலன் (அதி.61) என்றால் விரும்பி ஏறும் படகு என்கிறார்.. உடல் சேர்ந்த இன்பத்தைப் ‘புணர்ச்சி’ ‘முயக்கம்’ என்று சொற்களைப் பயன்படுத்தி விளக்குகிறார்.

மேலும் காமம் – காதல், திருமணத்துக்கு முன்னும் பின்னும் தொடர்ந்து வரக்கூடியது. திருமணத்துக்கு முந்தைய வாழ்க்கை மறைந்து காதலிக்கும் களவு வாழ்க்கை. கற்பு – இல்வாச்ழ்க்கை என்பது ஊரறிய உறவறிய திருமணம் முடிந்து அதன் பின் தொடரும் காதல் வாழ்க்கை. எனவே காமம் என்பது உடல் சார்ந்த சொல் இல்லை.
(பக்கம் 288, ’திருக்குறள் உவமை நயம்’, எழுதியவர் திரு சி. ராஜேந்திரன், கவிதா பப்ளிகேஷன், தி. நகர், சென்னை, விலை ரூ 125/-)

உண்மைதானே.. இன்று காதல் என்பது காமநோக்கில் பார்க்கப்படுகிறது. அன்று காமம் என்பது காதல் நோக்கில் பார்க்கப்பட்டது. எளிமையான விளக்கம் தந்த திரு ராஜேந்திரன் அவர்களை இந்த வார வல்லமையாளராக வல்லமை குழு தேர்வு செய்கிறது.. குறட்பாக்களைப் பரப்பும் வலைத்தளம் ஒன்றை www.voiceofvalluvar.org என்ற பெயரில் உருவாக்கி அனைவருக்கும் சமுதாய சேவை செய்து வரும் திரு ராஜேந்திரன் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்.

இந்த தளத்தை ஒருமுறை அனைவரும் பார்க்கவும். திருக்குறள் எப்படியெல்லாம் ஒவ்வொருவர் வாழ்வில் பயன் தருகிறது என்று புரியும். அத்துடன் நீங்களும் இந்தத் தளத்தில் கருத்துக்க்களையும் திருக்குறள் சம்பந்தப்பட்ட விவரங்களையும் பதிவு செய்யலாம். வாழ்க அவரது பணி!!

கடைசி பாரா: மேகலா ராமமூர்த்தியின் கவிதை:

ஆதியும் அந்தமும் இல்லாத – அந்த

ஆண்டவன் போலவே எந்நாளும்

காதலும் காலத்தை வென்றதடி – வளைக்

கைகொட்டிக் கும்மி கொட்டுங்கடி!

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “இந்த வார வல்லமையாளர்!

  1. வல்லமையாளர் திரு.  திரு சி. ராஜேந்திரன் அவர்களுக்கும்.. கடைசி பாரா கவிதை வரிகளுக்குச் சொந்தக்காரர் திருமதி.மேகலா இராமமூர்த்தி அவர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!!!!

  2. திருக்குறளின் கருத்துக்களைப் பின்பற்றி வாழ்வதால் விளையும் பலன்களை வலியுறுத்தும் அரும்பணியைச் செய்துவரும் இந்தவார வல்லமையாளர் திரு.சி.இராஜேந்திரன் அவர்களுக்கு என் வணக்கங்களும், மனமார்ந்த வாழ்த்துக்களும்.

    “காதல் கும்மி” வழங்கி, கடைசி பாரா வில் பாராட்டைப் பெற்றுள்ள சகோதரி திருமதி.மேகலா இராமமூர்த்தி அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

  3. இவ்வார வல்லமையாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள திரு. சி. ராஜேந்திரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    என் கவிதையைக் ’கடைசி பாரா’வாகத் தேர்வு செய்ததற்கு வல்லமை ஆசிரியர் குழுவிற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    வாழ்த்துத் தெரிவித்திருக்கும் தோழி பார்வதிக்கும் என் நன்றி.

    அன்புடன்,
    மேகலா

  4. வாழ்த்துத் தெரிவித்துள்ள சகோதரர் திரு. சச்சிதானந்தம் அவர்களுக்கு நன்றி!

    அன்புடன்,
    மேகலா

  5. வள்ளுவர் புகழ் பாடும் வல்லமையாளருக்கும், காலத்தை வெல்லும் காதலைப் போற்றிப் பாடி கும்மியடித்த தோழி மேகலாவிற்கும் பாராட்டுகள்.

  6. தங்கள் பாராட்டுக்கு நன்றி தேமொழி.

    அன்புடன்,
    மேகலா

Leave a Reply to மேகலா இராமமூர்த்தி

Your email address will not be published. Required fields are marked *