நிர்மலா ராகவன்

தந்தை இறந்துவிட்டார் என்று தந்தி வந்திருக்கிறது. அதைப் பொருட்படுத்தாது, கிடாரில் ஸ்ருதி சேர்த்துக்கொண்டு இருந்த நடராஜனைப் பார்த்தான் மனோகர்.

“புறப்படலே?” என்று கேட்டான், அவன் போய் கொள்ளி போட வேண்டிய அவசியத்தை உணர்த்த விரும்பியவனாக.

நடராஜன் சூள் கொட்டினான். “உசிரோட இருந்தப்போ பிள்ளைங்கமேல அவர் பாசத்தைக் கொட்டினது பாழாப் போச்சு! இப்ப என் கையால கொள்ளி வாங்கத்தான் அந்த மனுஷனோட ஆத்மா காத்துக்கிட்டு இருக்காக்கும்! அது சாந்தி அடைஞ்சா என்ன, இல்லாட்டி, பேயா..!”

ஹாஸ்டல் நண்பன் குறுக்கிட்டுப் பேசினான், உரிமையோடு. “செத்தவங்கமேல நீ இப்படி வன்மம் பாராட்டறநு நல்லாவே இல்லே, நடா. அவருக்காக இல்லாட்டியும், ஒங்க அம்மாவுக்காக..!”

நடராஜன் உடனே இளகினான். “பாவம், அம்மா! நாலு குழந்தைகளைப் பெத்ததுக்கு அப்புறமும், மத்த பொண்ணுங்ககிட்டே எங்கப்பா விட்ட ஜொள்ளு இருக்கே! ஒங்கிட்டதான் சொல்லி இருக்கேனே!”

நண்பன் தலையை ஆட்டினான், ஒரு உணர்ச்சியையும் வெளிக்காட்டாது.

“எங்க அக்காங்களோட ஃப்ரெண்ட்ஸ் ரெண்டு பேரைக் கூட்டிக்குவார். சினிமா, பீச்சுனு போவோம். அப்போ..,” ஐந்து வருடங்களுக்குமுன் நடந்ததுதான். ஆனால், சிறு குழந்தைகளுடன் விளையாடுவதுபோல அப்பருவப் பெண்களின் கன்னத்தைத் தடவியும், இடுப்பில் கையைப் போட்டும் அப்பா ஆட்டம் போட்டது இந்த ஜன்மத்தில் மறக்குமா!

முதலில் அவனும் விளையாட்டு என்று நினைத்துச் சிரித்தாலும், மீசை முளைத்ததும், பிறர் எதிரிலேயே இப்படி நடந்துகொள்பவர் அவர்களில் யாராவது ஒருவருடன் உலாவப் போகையில், செய்யக் கூடாத என்னென்னவோ செய்வார் என்பது சந்தேகமறப் புரிந்து போயிற்று.

அக்கம்பக்கத்தில் இருந்தவர்களைவிட அப்பா நிறையப் படித்து, பெரிய வேலையில் இருந்தது பிறரை அவர்மேல் நம்பிக்கை கொள்ள வைத்தது.

ஒல்லியும் குள்ளமுமான உடல்வாகு. அலாதிச் சுறுசுறுப்பு. தானாகப் போய் பிறருக்கு உதவுவார். எல்லாரிடமும் சிரிக்கச் சிரிக்கப் பேசுவார் — மனைவியையும், குழந்தைகளையும் தவிர. வீட்டுக்கு வந்துவிட்டால், பேசவே மாட்டார். தன் அறையிலேயே அடைந்து கிடப்பார். அப்பாவும் அம்மாவும் சுமுகமாக நாலு வார்த்தைகள் பேசிக்கொண்டதாக அவனுக்கு ஞாபகமே இல்லை.

அம்மா! அப்பாவுக்கு நேர் எதிரிடை உருவத்திலும், குணத்திலும். அப்பாவுடைய பராமுகத்தால்தான் அப்படி ஆனாள் என்பதில் அவனுக்குச் சந்தேகமே கிடையாது.

நினைத்து நினைத்து அழுவாள். காரணம் எதுவும் இருக்காது. நாள் தவறாது குளிப்பது, தலையை வாரிக் கொள்வது இதெல்லாம் கிடையாது. எங்கோ வெறித்துப் பார்த்தபடி, தரையில் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பாள். எப்போதாவது தமிழ் பத்திரிகைகள் படிப்பாள். அனாவசியமாக நடக்காமல், உட்கார்ந்த நிலையிலேயே அளவுக்கு மீறி சாப்பிட்டதில், உடல் பருத்தது. உபாதைகள் அதிகரித்தன.

மனோதத்துவம் சற்று புரிய ஆரம்பித்தபின், எதையோ விழுங்கவோ, அல்லது சீரணிக்கவோ முடியாது, அதற்குப் பதிலாக உணவையாவது ஓயாது விழுங்குகிறாள் என்று நடராஜனுக்குத் தோன்றியது.

அம்மாவைப்பற்றி நல்ல விதமாக ஏதாவது சொல்ல வேண்டுமென்றால், தான் பெற்ற பிள்ளைகள்மேல் அவள் வைத்திருந்த அபார பாசத்தைத்தான் குறிப்பிட வேண்டும். அவர்களைப் பக்கத்தில் உட்காரச் செய்து, தடவித் தடவிக் கொடுப்பாள், பசு தன் கன்றை நாவால் நக்குவதுபோல்.

என்றாவது மற்ற அம்மாக்களைப்போல் அம்மாவும் அழகாகச் சிங்காரித்துக் கொண்டு, அப்பாவுடனேயோ, அல்லது தனியாகவோ தங்களை வெளியே அழைத்துப் போயிருக்கிறாளா என்று நடராஜன் யோசித்துப் பார்த்தான்.

அட, அதெல்லாம் வேண்டாம். தான் பெற்ற குழந்தைகளுக்காக ஏன் தானே வகைவகையாகச் சமைத்து, பரிமாறக்கூட இல்லை? நடக்கக்கூட அவள் கஷ்டப்பட்டதில், பாவம், பெரியக்காதான் பதின்மூன்று வயதிலேயே கரண்டி பிடிக்க வேண்டியதாயிற்று.

அவர்கள் வீட்டில் ஒரு போட்டோ இருந்தது. சித்தப்பா எடுத்ததாம். மூன்று பெண்களுக்குப்பின் பிறந்த அருமை மகனாகிய அவன் நாற்காலியில் உட்கார்ந்திருந்தான் — அம்மா மடியில். பக்கத்தில் அப்பா விறைப்பாக உட்கார்ந்திருந்தார், முகத்தைக் கடு கடுவென வைத்துக்கொண்டு. பெற்றோரின் காலடியில் மூன்று அக்காமார்களும் உட்கார்ந்திருந்தார்கள், ஒரேயடியாக இளித்தபடி.

`ஏண்டா, நம்ப அப்பா எல்லா அப்பாவையும்போல நம்பகிட்ட ஆசையா இல்ல?’ என்று, இவனைவிட இரண்டே வயது பெரியவளான நளினி இவனிடம் எத்தனை முறை கேட்டிருப்பாள்!

இவனும், `எனக்கும் இந்த அப்பாவைக் கண்டாலே பிடிக்கலே,’ என்று ஒத்துப் பாடுவான்.

பெற்றோர் இருவருமே உருப்படியாக இல்லாததால், அண்ணன் குழந்தைகள் ரொம்பத் தவிக்கிறார்களே என்றோ, என்னவோ, பாலு சித்தப்பா வருடம் தப்பாது அமெரிக்காவிலிருந்து வருவார். அவர்கள் வயதுக்கும், திறமைக்கும் ஏற்றபடி, பெரிய பெட்டி நிறைய விளையாட்டுச் சாமான்கள் வாங்கி வருவார். ஆசை ஆசையாய், எல்லா இடங்களுக்கும் அழைத்துப் போவார், வாடகைக்குக் கார் எடுத்து. ஓரிரு வாரங்களே ஆனாலும், அப்போது அனுபவிக்கும் மகிழ்ச்சி அந்தக் குழந்தைகளின் நெஞ்சில் நெடுநாட்கள் நிலைத்திருக்கும்.

ஆனாலும், குடும்பத்தின் தலைவர் சரியாக இல்லாததால், எல்லாமே கோணலாகப் போயிற்று.

மூத்த அக்கா, `மலடி’ என்று கணவரிடமும், மாமியாரிடமும் அடிபட்டுச் சாகிறாள். அவளைப் பொறுத்தவரை, `கல்யாணம்’ என்ற ஒன்று செய்துகொள்வது துன்பம் அனுபவிக்க. இது அம்மாவிடமிருந்து கற்ற பாடம்.

இரண்டாவது அக்காவின் ஒரே பிள்ளைக்கும் மூளைக்கோளாறு. மூன்றாவதான நளினிதான் அம்மாவைப் பார்த்துக்கொள்கிறாள். `கல்யாணத்தைப்பத்தி நினைக்கவே பயமா இருக்குடா!’ என்று அவனிடம் பல முறை சொல்லி இருக்கிறாள்.

யாரோ அவர்கள் குடும்பத்தைச் சபித்து விட்டார்கள் என்று அவனுக்குத் தோன்றும்.

வேறு யார், அப்பாவால் கசக்கப்பட்ட பெண்கள், அல்லது அவர்களுடைய பெற்றோராகத்தான் இருக்கும் என்ற கசப்பு எழும். அப்படி ஒரு பெண்ணின் கணவர், `இவர் ஒருத்தரோட சுத்தினாளாமே!’என்று அவளை வீட்டுக்கே அனுப்பவில்லை?

இப்போது, அந்தக் குடும்பத்தின் மகிழ்ச்சியை அறவே குலைத்த அப்பா ஒருவழியாகச் செத்திருக்கிறார். அப்பா இல்லாத வீட்டுக்குப் போகப்போகிறோம் என்ற நினைவே நடராஜனுக்குச் சற்று நிம்மதியை அளித்தது.

எப்போதும், நடராஜன் நளினிக்காக துணிமணிகள் வாங்கிப்போவது வழக்கம். அப்போது அதிசயமாக அவள் முகம் மலர்வதைப் பார்ப்பதில் அவனுக்கு ஒரு மகிழ்ச்சி. இம்முறையும் அப்படிப் போவது நன்றாக இராது என்று அடக்கிக் கொண்டான். மீண்டும் அப்பாவின்மேல் கோபம் எழுந்தது. `இருந்தும் கெடுத்தார், செத்தும் கெடுத்தார்!’ என்று மனதுக்குள் வைதான்.

இப்போது அம்மா எப்படி இருப்பாள்? உலகத்திற்காக, ஒப்புக்கு அழுது வைப்பாளா, இல்லை, நிம்மதியாக இருப்பாளா? இந்தமாதிரி புருஷன் போனால், அம்மா எதற்காக துக்கம் அனுஷ்டிக்க வேண்டுமாம்? `தொலைந்தான்’ என்று, இனியாவது எல்லாரும் ஒரு நல்ல வாழ்க்கையைத் தேடிக்கொள்ளச் சொல்ல வேண்டும்.

சற்று தயக்கத்துடனேயே இழவு வீட்டுக்குள் நுழைந்தான் நடராஜன். தீப்பெட்டிபோல் வரிசை வரிசையாக கட்டப்பட்டிருந்த இரண்டடுக்கு வீடுகளில் கோடி வீடு. காம்பவுண்டு சுவர்வரை தோட்டம் போட நிறைய இடம் இருந்தது. நளினி எல்லா நேரத்தையும் அங்குதான் கழிப்பாள்.

இனியும் அவள் தனிமையில் வாட வேண்டியதில்லை. `நீ பக்கத்தில் இருப்பதால் அம்மாவுக்கு எவ்வளவு ஆதரவு! உனக்கு வயதான காலத்தில் அப்படி ஒருத்தர் வேண்டாமா?’ என்று வாதாடி, அக்குடும்பத்தின் ஒரே ஆண்பிள்ளையாய் லட்சணமாய், அவளுக்கு ஒரு நல்ல வரனைத் தேடி முடிக்க வேண்டும். நினைக்கும்போதே பெருமையாக இருந்தது.

வானம் இருட்டியிருந்தது. நாளைவரை எந்தக் காரியத்தையும் செய்ய முடியாது. கைக்கடிகாரத்தில் அவன் கண்கள் பதிந்தன. அவன் கல்லூரியில் சேர்ந்தபோது, சித்தப்பா வாங்கி வந்த பரிசு. மணி, தேதியுடன், குறிப்பிட்ட நாடுகளில் என்ன நேரம் என்பதையும் காட்டும்.

அந்த மாதிரி அப்பா அவனுக்காக என்ன செய்திருக்கிறார் என்று எழுந்த நினைப்பை ஒதுக்கினான். சின்னப் பையனாக இருந்தபோது, தலைமுடி வெட்டிக்கொள்ளக்கூட பெரியக்காதானே அழைத்துப் போவாள்!

வீட்டு வாசலிலேயே நளினி நின்றிருந்தாள். கண்கள் சிவந்திருந்தன. மூக்கை உறிஞ்சிக் கொண்டவளை ஆச்சரியத்துடன் பார்த்தான் நடராஜன்.

`அம்மா?’ என்று உதடுகளை மட்டும் அசைத்து, ஓசையெழுப்பாமல் கேட்டவனிடம், மாடியறையைச் சமிக்ஞையால் காட்டினாள். “இன்னும் யாருக்கும் சொல்லி விடல. நீ வரவரைக்கும் காத்திட்டு இருக்கணும்னு அம்மா சொல்லிட்டாங்க!” என்று ரகசியக் குரலில் தெரிவித்தாள்.

குழப்பத்துடன் படியேறிப் போனான்.

அது அப்பாவின் படுக்கையறை. அப்பா கட்டிலில் படுத்திருந்தார். அவரது நெற்றியில் ஒரு நரம்பு புடைத்திருந்தது — அந்த ஆத்மா நிம்மதியைத் தேடி அலைகிறது என்பதை உணர்த்துவதுபோல.

கட்டிலில் அவர் அருகே — மிக அருகே — அம்மா உட்கார்ந்திருந்தாள்.  அப்படி அவர்கள் இருவரையும் அருகருகே பார்த்தது அவனுக்கு என்னமோபோல் இருந்தது. தன்னிடம் அணுக்கமாக இருந்த அம்மா இப்போது இன்னொரு ஆண்மகனுடன், அது அப்பாவாகவே இருந்தாலும், நெருக்கமாக அமர்ந்திருந்ததை அவன் மனம் ஏற்கவில்லை. செத்தால் எல்லாம் சரியாகப் போயிற்றா? இல்லை, ஊருக்காக வேஷமா? அவனுடைய கோபம் அம்மாவின்மேல் திரும்பியது.

அவனைப் பார்த்ததும், “அப்பா நம்பளையெல்லாம் விட்டுட்டுப் போயிட்டாருடா!” என்று அலறினாள் அம்மா.

அவனுக்கு வெறி பிறந்தது. “நீங்க ரெண்டு பேரும் வாழ்ந்த லட்சணம் தெரியாதா? இந்தக் கேடுகெட்ட மனுசனுக்காக எதுக்கு துக்கம் கொண்டாடணும்?” என்று கத்தினான்.

அம்மா சட்டேன ஒரு நிலைக்கு வந்தாள். “கிட்ட வா. ஒங்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்!” அவள் குரலிலிருந்த அலாதி அமைதி அவனுக்கு அச்சசத்தை விளைவித்தது.

என்று இப்படிப் பேசி இருக்கிறாள்?

என்ன சொல்லப் போகிறாள்?

“நீ ஆத்திரப்பட வேண்டியது என்மேலதான்!” மூச்சை உள்ளுக்கிழுத்துக் கொண்டாள். அப்பாவை ஒரு பார்வை பார்த்துக் கொண்டாள். “தப்பு பண்ணினது இவரில்ல, நான்தான்!”

அதிர்ச்சி தாங்காது, அப்படியே தரையில் விழாதகுறையாக உட்கார்ந்தான் நடராஜன்.

“அவருக்குத் துரோகம் பண்ணின என்னையும், நான் பெத்த பிள்ளைங்களையும் தெருவில அலைய விடாம..!” விம்மலோடு பேசிய அம்மாவின் குரல் கம்மிக்கொண்டே போனதில், அவள் பேசியது அவனுக்குச் சரியாக விளங்கவில்லை.

ஆனால், ஒன்று மட்டும் தெளிவாகியது. அப்பாவென்று நம்பி, தான் அடியோடு வெறுத்தவர் தன் அப்பா இல்லை.

அப்படியானால், தன் அப்பா யார்?

சித்தப்பா?

`அவரேதான்!’ வீட்டுக்கு வரும்போதெல்லாம் சித்தப்பாவும், அம்மாவும் ஒருவரை ஒருவர் அறியாதவர்கள்போல் நடந்து கொண்டதற்கு இப்போது ஒரு புதிய அர்த்தம் கிடைத்தது.

அண்ணாவுக்குத் தான் இழைத்த கொடுமைக்கு விமோசனமாகத்தான் அவர் அண்ணாவின் குழந்தைகளிடம் அவ்வளவு ஈடுபாடு காட்டினாரா! கல்யாணமே செய்து கொள்ளவும் இல்லை!

கட்டிலில் படுத்திருந்தவரின் இறுகிய முகத்தை ஒரு கணம் பார்த்தான். இந்த அப்பாவி மனிதரிடம் காலமெல்லாம் பகைமை பாராட்டினோமே! யாருக்கோ பிறந்த தன்னை வளர்த்து, படிக்க வைத்து..! நடராஜனுக்கு அழுகை வந்தது.

அவருடைய போக்கிற்கு அர்த்தமும் புரிந்தது.

மாற்றான் ஒருவனிடம் மனைவிக்குத் தொடர்பு இருக்கிறது  என்பது சந்தேகமறப் புரிந்து போக, தனது ஆண்மை தனக்கே சந்தேகக் குறி ஆகிவிட, `நானும் ஆண்பிள்ளைதான்!’ என்று தனக்கே உணர்த்திக்கொள்ள எந்த ஆணுக்குத்தான் தோன்றாது!

மனைவியைப்போல் இல்லாது, கள்ளங்கபடமற்ற சின்னப் பெண்களின் அன்பு அவருக்கு அருமருந்தாகத் தேவைப்பட்டு இருக்கிறது!

நடராஜனின் கண்கள் சடலத்தின் பக்கம் போயின. அவர் முகத்தருகே குனிந்து, `என்னை மன்னிச்சுடுங்கப்பா. இப்பவாவது ஒங்களுக்கு நிம்மதி கிடைக்கட்டும்!’ என்று மனதுக்குள் திரும்பத் திரும்ப வேண்டினான். அவன் உதடுகள் விம்மின.

“மணி என்ன ஆச்சுப்பா?” அம்மாவின் குரல் அவனை உசுப்பியது.

அவன் கண்கள் இடது மணிக்கட்டில் பதிந்தன. சித்தப்பா அளித்த பரிசு! அந்த எண்ணமே கசப்பை விளைவிக்க, விலையுயர்ந்த கடிகாரத்தைக் கழற்றி, பக்கத்திலிருந்த மேசைமேல் வீசி எறிந்தான்.

திரும்பியபோது, அப்பாவின் நெற்றி நரம்பு சமனாகி, இந்த மானுட உலகத்துடன் அவருக்கு இருந்த எல்லாத் தொடர்பையும் துண்டித்துக்கொண்டதுபோல் முகத்தில் சவக்களை வந்திருந்தது தெரிந்தது.

பக்கத்தில் உடம்பைக் குறுக்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள் அம்மா. சற்றுமுன் அசாதாரணமாகப் பேசியவளின் பார்வை இப்போது வெறித்திருந்தது.

அம்மா மனநோயாளியாக ஆனது அப்பாவின் நடத்தையால் அல்ல. தன்மேலேயே அவளுக்கு எழுந்த வெறுப்பால்.

அவள் பட்டதெல்லாம் போதும், தான் வேறு தண்டிக்க வேண்டுமா என்ன்று தோன்றிப்போக, “அப்பாவுக்கு மொதல்ல என்ன செய்யணும்மா?” என்று கனிவுடன் கேட்டான்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *