கீதா மதிவாணன்

என் வாழ்வை அணிசெய்யும் மணிமொழியாம் தமிழுக்கு,

என் வந்தனம். இன்று நீ இருக்கும் நிலைமையை நன்கறிந்தபின்னும் நான் உன்னை நலமா என்று உசாவுவது பொருளற்றது. ஆயினும் உன்னால் நானிங்கே நலமென்று உரைப்பதில்தான் எனக்கெவ்வளவு இறும்பூது!

பொருளீட்டும் பொருட்டு கடல்கடந்துவந்து அந்நிய மண்ணை மிதித்தபோது அகம் கொண்ட ஆற்றாமையோடு அலைபாய்ந்த என் மனத்தைத் தேற்றியது நீதான். மனத்தின் பாரமிறக்க உன் தோள்களைத் தந்து உற்ற தோழனானாய். உற்றார் உறவுகளின் பிரிவை எண்ணிக் கலங்கும்போதெல்லாம் தாயாய் மடி தந்து தயை புரிந்தாய். கதைகளாய், கவிதைகளாய், தேன்சுவைப் பாடல்களாய், அலமாரிப் புத்தகங்களாய், பேச்சாய், மூச்சாய் என்னைச் சூழ்ந்து, என்னுள் இறங்கி, கரைந்து என்னை நானாக வாழவைத்துக்கொண்டிருக்கும் தண்டமிழே, உன் தாள்பணிந்து வணங்குகிறேன்.

பிறந்தமண்ணில் இருந்தபோது உன்மேல் எனக்குதான் எவ்வளவு உதாசீனம்! ஒருவரிக் கடிதம் எழுதவும் சோம்பிக்கிடந்த நான் இன்று பக்கம் பக்கமாய் எழுதிக்கொண்டிருக்கிறேன். நிழலின் அருமை போல தமிழே.. உன் அருமையும் தாமதமாகத்தான் புரிகிறது.

தாய்மண்ணைவிட்டு என் கால்கள் பலகாத தூரம் விலகி நடந்தாலும், தாய்மொழியே, செல்லுமிடமெல்லாம் உன்னை என் நாவில் சுமந்தே செல்கிறேன். எத்தனை மொழிகளைக் கற்றாலும் ஏற்றாலும் எப்போதும் மனம் ஏங்குவதென்னவோ உன்னைப் பார்க்கவும் கேட்கவுமே.

செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்

தேன்வந்து பாயுது காதினிலே

என்று அன்று பாடிய முண்டாசுக்கவிஞனின் பாடலை முழுவதுமாய் அனுபவிக்கிறேன் இன்று. எங்காவது பொது இடத்தில் “நீங்க தமிழா?” என்று கேட்பதிலும் கேட்கப்படுவதிலும் உள்ள சுகம்… அதை அனுபவிப்பதுதான் இதம். கன்னற்தமிழே, உன் சுவையைக் காதுகுளிரக் கேட்கும்போது என்னை மறந்துபோகிறேன். என் காதல்மனைவியின் பிரிவையும் மறந்துபோகிறேன்.

பயிலுறும் அண்ணன் தம்பி — அக்கம்

பக்கத்துறவின் முறையார்

தயைமிக உடையாள் அன்னை — என்னைச்

சந்ததம் மறவாத் தந்தை

குயில்போல் பேசிடும் மனையாள் — அன்பைப்

கொட்டி வளர்க்கும் பிள்ளை

அயலவராகும் வண்ணம் — தமிழ் என்

அறிவினில் உறைதல் கண்டீர் !

என்னும் பாவேந்தரின் பாடலை இன்று அனுபவத்தால் உணர்கிறேன். தாய் தந்தையை இழந்த எனக்கு ஒற்றைச் சொந்தமான, என் மனையாளின் பிரிவையும் தாங்கும் மனத்திடத்தைத் தந்த மகோன்னதத் தமிழே நீ வாழி!

என்றுமில்லாத வழக்கமாய் எதற்கித்தனை பீடிகையென்று உனக்குள் ஐயம் தோன்றியிருப்பதில் வியப்பில்லை. விவரமாய்ச் சொல்கிறேன். என்னை வாழவைக்கும் நீ, என் மனையாளையும் வாழ்விப்பாயென்ற நம்பிக்கையோடு வரையப்படுகிறது இம்மடல்.

நாராய் நாராய் செங்கால் நாராய்

பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன

பவளக் கூர்வார்ச் செங்கால் நாராய்

நீயுநின் மனைவியும் தென்றிசைக் குமரியாடி

வடதிசைக்கேகுவீராயின்

எம்மூர்ச் சத்திமுத்த வாவியுள் தங்கி

நனைசுவர்க் கூரைக் கனைகுரற் பல்லி

பாடு பார்த்திருக்குமென் மனைவியைக் கண்டு

“எங்கோன் மாறன்வழுதி கூடலில்

ஆடையின்றி வாடையின் மெலிந்து

கையது கொண்டு மெய்யது பொத்திக்

காலது கொண்டு மேலது தழீஇப்

பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்

ஏழையாளனைக் கண்டனம் எனுமே”

என்று தன் வறுமை நிலையைப்பாடி, வடதிசையில் வாடிக்கிடக்கும் தன் மனைவியிடம் நாரையைத் தூதனுப்பிய சத்திமுத்தப் புலவரைப் போன்று, இன்றுன்னை நான் தென்திசைக்குத் தூதனுப்புகிறேன். காதற்தலைவனின் பிரிவால் நலிந்து, தனிமைத் துயருற்றுத் தவித்திருக்கும் என் தலைவியிடம் செல்வாய் செந்தமிழே! பிரிவாற்றாமையால் தவிக்கும் பேதை நெஞ்சம் அமைதிகொள்ளும் வண்ணம் அவள் மனத்துயரைப் போக்குவாய் பைந்தமிழே! என்னை மடியிருத்தி தாலாட்டி மனத்துயர் ஆற்றினாற்போல் அவளையும் ஆற்றுப்படுத்துவாய் என் அன்னைத்தமிழே!

அலம்பலும் சலம்பலுமாய் அக்கறையற்று வாழ்க்கை நதியின் போக்கில் போகவிருந்த என்னை அக்கறையாய் கரை சேர்த்தவள் என் அன்புக் காதற்கிழத்தி. இன்று அக்கரையில் புலம்பலுடன் கழிகிறது என் வாழ்க்கை, அவளை என் நெஞ்சகத்தில் இருத்தி. காற்றும் புகமுடியாவண்ணம் காதலுடன் வாழ்ந்திருந்த எங்கள் இருவருக்கிடையில் கடல் புகுந்த கதையைக் கேட்கவிரும்புவாயாயின் சொல்கிறேன், கேள்!

வீசு கமழ் நீ யெனக்கு, விரியுமலர் நானுனக்கு;

பேசுபொருள் நீ யெனக்குப் பேணுமொழி நானுனக்கு;

நேசமுள்ள வான்சுடரே; நின்னழகை யேதுரைப்பேன்?

ஆசை மதுவே, கனியே, அள்ளு சுவையே கண்ணம்மா!

என்று நானும் அவளும் காதலால் கலந்து களித்துக்கிடந்த உன்மத்த வேளையொன்றில் தன் உள்ளக்கிடக்கையொன்றைத் தெரிவித்தாள். என் கண்மணியின் விருப்பத்தை நிறைவேற்றும்பொருட்டு, அவள்வழி உறவொன்றின் விழாவுக்காக, அழையாத வாயிலை மிதித்தோம். அவமானமுற்றுத் திரும்பினோம்.

இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை

எல்லாரும் செய்வர் சிறப்பு

என்னும் குறளுக்கேற்ப பொருள் இல்லாதவர்களை ஏளனம் செய்வதும் இருப்பவர்களைப் போற்றுவதும்தான் உலக இயல்பு என்பதை அறிந்திருந்தும் ‘மதியாதார் தலைவாசல் மிதியாதே’ என்னும் ஒளவையின் வாக்கை மதியாது சென்ற காரணத்தால் மனமுடைந்துபோனோம்.

காதற்பித்து தலைக்கேறி, கால்காசுக்கு வழியில்லாதவனைக் கட்டிக்கொண்டுவிட்டாளென்று தூற்றும் ஊரின் வாயை அடைக்க ஒரு உபாயம் சொன்னேன். ஆறாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்தொரு அருமையான வாய்ப்பு அழைப்பு விடுத்திருக்கிறது, ஒப்பந்தத்தில் கையொப்பமிட, உன்னிடம் அனுமதி கேட்கும் துணிவின்றி அவதியோடு காத்திருக்கிறேன் கண்ணாட்டி என்றேன். என் வெற்று மார்பைச் சுட்டன அவளது பெருமூச்சும், சில கண்ணீர்த்துளிகளும். நெடிய மெளனத்திற்குப் பின் ‘உம்’மென்றாள் உம்மென்ற முகத்தினளாய்.

இதோ, சொடக்குப் போட்டாற்போல் ஓடிவிடும் மூன்றுவருடங்கள் என்று பொய் சொல்லிப் புறப்பட்டுவிட்டேன். என்  பொருளிலா வாழ்க்கையின் இன்னல் களைய கடல் கடந்து கண்காணா தேசம் புகுந்துவிட்டேன். அலைபேசியின் நல விசாரிப்புகளிடையே அவ்வப்போது எழும் அவளது விசும்பல்களும் அவற்றை அடக்க அவள் படும் பாடும் என் உள்ளத்தை உருக்கி கண்ணீரை உகுக்கவைக்கின்றன. எவ்வளவு தேறுதல் சொன்னாலும் பேதையவள் நெஞ்சம், பிரிவாற்றாமையினின்று விடுபடும் வழியறியாது பித்தாய்க் கரைகிறது. என்னை அயல்தேசம் செல்ல அனுமதித்ததன் மூலம் தான் தவறிழைத்தாற்போன்று குமுறிக் குறுகும் அவள் நெஞ்சுக்கு நான் எங்ஙனம் ஆறுதலளிப்பேன்? ஆதலால்தான் உன்னைத் துணைக்கழைக்கிறேன் தீந்தமிழே!

பொருள்வயின் பிரிதல் பற்றி நீ அறியாததா? பரத்தையிற் பிரிவு, ஓதல் பிரிவு, காவல் பிரிவு, தூதிற் பிரிவு, துணைவயின் பிரிவு, பொருள்வயின் பிரிவு என கற்பு வாழ்க்கையில் கணவன் மனைவியருக்கிடையே ஆறுவகையான பிரிவுகளை சங்க இலக்கியம் பகர்வதைச் சொல்லி பொருள்வயிற்பிரிதலொன்றும் ஆடவர்க்குப் புதிதல்ல என்று அவளிடம் எடுத்துரைப்பாய் தங்கத்தமிழே!

‘நன்று” எனப் புரிந்தோய்; நன்று செய்தனையே;

செயல்படு மனத்தர் செய்பொருட்கு

அகல்வர், ஆடவர்; அது அதன் பண்பே.

என்னும் சங்கத் தோழி போன்று, ‘உன் கணவன் பொருளீட்டச் செல்லும்போது அதைத் தடுக்காமல், சென்றுவாருங்கள் என்று மலர்ந்த முகத்தினளாய் வழியனுப்பிவைத்தாய்… தலைவி, நீ செய்தது சரிதான்’ என்று அவளுக்கு ஆறுதல் மொழி சொல்லத் தக்க அருந்தோழியரும் அருகில் இலர். ஆகவே என் வாழ்வை அணிசெய்யும் மணிமொழியாம் அழகுத்தமிழே, உன்னையே அவளுக்கு உற்ற துணையாக தூதனுப்ப விழைகிறேன். அதற்கு அச்சாரமாகவே இக்கடிதத்தை உனக்கு எழுதுகிறேன் அருந்தமிழே!

என் காதல் கனிமொழியாளைப் பிரிந்துவந்து ஆறு திங்கள் ஆகின்றன. புதிய பணியும், சூழலும், புதிய நண்பர்களோடு முத்தமிழே நீயும், காலத்தைக் கடத்தும் முயற்சியில் எனக்குத் துணைபுரியும் இவ்வேளையில் அங்கு அவளது ஒவ்வொரு நாளையும் நெட்டித்தள்ள அவள் படும் பிரயத்தனங்கள் மனக்கண்ணில் விரிந்து வேதனை தருகின்றன.

இன்பத்தை விடவும் கடமையே கரம்பற்றியவனுக்கு அழகென்று காட்டுதற்கு ஆயிரம் ஆதாரங்கள் உன்னிடம் உண்டல்லவா? ஆயினும் இந்தக் குறுந்தொகைப் பாடலைக் கோடிட்டுக் காட்டினால் அவள் கொஞ்சம் ஆசுவாசங்கொள்ளலாம்.

வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சிற்  

குளவி மொய்த்த வழுகற் சின்னீர்  

வளையுடைக் கைய ளெம்மொ டுணீஇயர்  

வருகதில் லம்ம தானே  

அளியளோ வளியளெந் நெஞ்சமர்ந் தோளே.

பாலைவழிச்செல்லும்போது குடிக்க நீர் கிடைக்காது. வேட்டையாடிக் களைத்த செந்நாயொன்று காலால் மண்ணில் தோன்றிய சிறுபள்ளத்தில் ஊறும் நீரைக் குடிக்கும். நாய் குடித்தது போக மீந்திருக்கும் குறையளவு நீரில் அருகிலிருக்கும் மரத்தின் காட்டுப்பூக்கள் விழுந்து அழுகி நாறிக்கிடக்கும். என்னுடைய தாகத்துக்கு அந்த நீரை நான் பருகலாம். ஆனால் அழகிய வளைக்கரத்தால் நீ அந்நீரைப் பருகிட என் மனம் எப்படி இசையும்? எண்ணிப்பார்க்கவே வேதனை மிகுகிறதே என்று அரற்றுகிறான் பொருட்வயிற்பிரிதலின்போது தானும் அவனுடன் வருவதாய் சொன்ன தலைவியிடம். தனக்காக தன் உற்றார் உறவுகளை விட்டுவந்த காதல் மனைவியை இன்பமுற வைத்திருப்பதுதானே முறை? அதைச் செய்யத்தவறுதல் அன்றோ குறை? என்று எடுத்துரைப்பாய் சங்கத்தமிழே!

பிரிவுழிக் கலங்கல் வேண்டாம் கண்ணே… வந்துழி மகிழ்ச்சிக்கான காலம் விரைவிலேயே கைகூடிவரும், உன் எண்ணம் போல் ஊரும் உறவும் மெச்ச உன்னத வாழ்க்கை வாழுங்காலம் ஓடிவரும் என்று நல்வாக்கு சொல்லி அவளை நலமோடு வாழ்விப்பாய் நற்றமிழே! நான் மீண்டும் அவளைச் சேருங்காலம் வரையிலும் அவளை உன்பால் ஈர்த்து இணக்கமாக்கி இன்புறச் செய்வாய் இன்தமிழே!

வெந்தழல் நீராகும்; வெள்ளெலும்பு பெண்ணாகும்;

வந்தமத வேழம் வணங்கிடுமே; – சந்தமெழப்

பாடுவார் உள்ளுருகிப் பாடும் தமிழிசைக்கு

நீடுலகில் உண்டோ நிகர்?

என்னும் கவிமணியின் பாடலுக்கேற்ப இசையாய், பாடலாய் அவள் இதயத்துக்கு இதமூட்டி, கவியாய், காவியமாய் அவள் கருத்தினில் நுழைந்து, எழுத்தாய், எண்ணமாய் அவளைச் சேர்ந்து, உன் கரங்களுக்குள் அவளைக் கோர்த்து சற்றே என்னை இளைப்பாற்றுவாய் இயற்றமிழே! கன்னற்சுவையும் கற்கண்டுப்பாகும் தோற்கும் நல்லிலக்கியச்சாற்றினை அவள் பருகச் செய்வாய் தேன்மொழி! என் கண்மணியின் கண்ணீர் துடைக்கும் கரங்கள் இனி உனதே! அவள் பிரிவுத்துயராற்றும் வல்லமை, வண்டமிழே… உனையன்றி வேறெவருக்குண்டு?

உன் பொறுப்பில் அவளை ஒப்படைத்துவிட்டு முழுச்சிரத்தையோடும் உத்வேகத்தோடும் என் கடமையில் கண்ணாவேன். காலநீட்டிப்புக்கு இடங்கொடாமல் செவ்வனே பணிக்காலம் முடித்து என் பாரியாளைப் பார்க்கப் பரவசத்தோடு வீடு திரும்புவேன்.

பைங்கண் யானைப் பரூஉத்தா ளுதைத்த     

வெண்புறக் களரி விடுநீ றாடிச்     

சுரன்முதல் வருந்திய வருத்தம் பைபயப்     

பாரம் மலிசிறு கூவலின் தணியும்     

நெடுஞ்சேண் சென்று வருந்துவர் மாதோ   

எல்லி வந்த நல்லிசை விருந்திற்குக்     

கிளரிழை அரிவை நெய்துழந் தட்ட     

விளரூன் அம்புகை எறிந்த நெற்றிச்   

சிறுநுண் பல்வியர் பொறித்த     

குறுநடைக் கூட்டம் வேண்டு வோரே

பசிய கண்களையுடைய யானை தன் பருத்தக் காலால் உதைத்துப் பொடியாக்கிய பாழ்நிலத்தின் புழுதியில் நடந்து களைத்த வருத்தமெல்லாம் பருத்திச்செடிகள் சூழ்ந்த கிணற்றால் தணியும். அதுபோல் தலைவன் படும் துயரமெல்லாம், வாழ்க்கைக்குத் தேவையான பொருளீட்டிப் பின்னர், உன்னோடு இனிதே இல்லறம் நடத்துதற்பொருட்டன்றோ? இரவுநேரத்திலும் வீட்டுக்கு வரும் விருந்தினர்க்கு, அடுப்பூதிப் புகைபடிந்த நெற்றியில் வியர்வைத் துளிகள் துளிர்க்க, நெய் மணக்கும் ஊண்சோற்றை குறுநடையுடன் நீ பரிமாறும் அழகில் மயங்கி நிற்பாரன்றோ? என்று அன்றைய தோழி, தலைவியைத் தேற்றியது போல் நீயும் என் தலைவியைத் தேற்றி இன்புறச் செய்திடுவாய்.

எங்கள் உயிருக்கு நிகராய், எங்கள் உயர்வுக்கு வானாய், எங்கள் அசதிக்கு சுடர் தந்த தேனாய், எங்கள் பிறவிக்குத் தாயாய், எங்கள் வளமிக்க உளமுற்ற தீயாய்… தமிழே என்றென்றும் நீ வாழீ!

இங்ஙனம்,

உன்னால் உயிர்வாழ்பவன்.

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “மணிமொழியாம் தமிழுக்கொரு மடல்

  1. அருமை! அருமை! வாழ்த்துக்கள்.

  2. மணிமொழியைத் தமிழ்த்தாயாய் கற்பனை செய்து அவளையே காதலிக்குத் தூது அனுப்புவது புதுமையிலும் புதுமை. தமிழுக்காக ஏங்கும் வெளிநாட்டில் வாழும் தமிழரின் மனநிலையைச் சொல்லிச் சங்க இலக்கியத்தில் தலைவன் தலைவிக்கிடையே ஆறுவகையான பிரிவுகள் இருப்பதை எடுத்துக்காட்டி விழுமிய இலக்கிய நடையில் கடிதம் எழுதியது பிரமாதம்.  ஆங்காங்கே பலருக்கும் தெரியாத அந்நாளைய சங்கத் தமிழ்ப்பாடல்களோடு இந்நாளைய கவிமணி பாடலையும் சேர்த்து விளக்கத்தோடு மேற்கோள் காட்டியதும் சிறப்பு. பாராட்டுக்கள் கீதா!
    ஞா.கலையரசி
      

  3. மிக அருமையாக எழுதப்பட்டுள்ள கடித இலக்கியம். நவீனத் ’தமிழ்விடுதூது’ இவ்வினிய மடல். ஆசிரியர் எடுத்துக்காட்டியிருக்கும் சங்கப் பாடல்களும் மிகச் சிறப்பாகவும் அவர் சொல்லவந்த கருத்துக்களுக்கு அணிசேர்ப்பதாகவும் அமைந்திருப்பது பாராட்டிற்குரியது.

    ஆழ்ந்து சிந்தித்து எழுதப்பட்டுள்ள அரிய மடல். போட்டியில் வெற்றிகாண ஆசிரியர் கீதா மதிவாணன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

  4. அருமை என்ற பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்துள்ள   திரு. சச்சிதானந்தம் அவர்களுக்கும்,  கடிதத்தில்  ரசித்த அனைத்து அம்சங்களையும் குறிப்பிட்டுப் பாராட்டிய கலையரசி அவர்களுக்கும் மடலை ரசித்து வாசித்து கருத்துரையும் வாழ்த்துக்களும் வழங்கிய மேகலா இராமமூர்த்தி அவர்களுக்கும் என் உளமார்ந்த நன்றிகள் பல. 

  5. சங்க பாடலையும் , நீங்காமல் நினைவில் உள்ள நாரைவிடு தூது பாடலையும் நினைவுபடுத்தியமைக்கு  நன்றி !   மிக அருமை ! வாழ்த்துக்கள் !!

Leave a Reply to சச்சிதானந்தம்

Your email address will not be published. Required fields are marked *