எஸ். பாலசுப்ரமணியன்

அன்புள்ள மணிமொழி ஆனந்த  கண்மணி,

வாழ்த்துக்கள் எப்போதும் எனது நினைவில் நின்று என்னை இயக்குவதற்கு…!

என்ன ஆச்சு….? திடீரென கடந்த ஒருவார காலமாகவே  உனது காட்சியும் இல்லை. கைபேசி தொடர்பும் இல்லை…? இரண்டாண்டு காலமாக நமது நட்பு கொஞ்சம்  கொஞ்சமாக வளர்ந்து காதலாக கனிந்து இப்போது நாம் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு வருகையில் ஏன் இந்த திடீர் இடைவெளி..? எனது வீட்டில் பெரியவர்கள் எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்கள் என்பதை நீ நன்கு அறிந்திருப்பாய்….! உங்கள் வீட்டில் தான் எனது வருமானத்தை வைத்து குறை சொல்லியதாக சொன்னதை நான் இன்னமும் மறக்கவில்லை. எனது சம்பளம் குறைவுதான். அதுக்காக நாம் கல்யாணம் செய்துகொள்ளாமல் இருக்க முடியுமா…? இப்போதைக்கு நம்மிருவரின் தேவைக்கு எனது சம்பளம் கண்டிப்பாக போதும் எனபதே உண்மை . அன்று கடைசியாக மெரீனாவில் நமது சந்திப்பில் கூட விளையாட்டாக ஒரு மாத பட்ஜெட் எனது சம்பளத்தை மட்டும் வைத்து போட்டோமே. அதில் கூட மீதமாக மாதம் இரண்டாயிரம் ரூபாய் வந்ததே…!

மறந்து விட்டாயா மணிமொழி. கொஞ்ச நாட்களுக்கு உனது சம்பளம் முழுவதையும் உனது வீட்டுக்கே கொடுப்பதில் எனக்கோ எனது வீட்டு பெரியவர்களுக்கோ எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை என்று சொல்லியிருந்ததை மறந்து விட்டாயா மணிமொழி. கடந்த இரண்டு ஆண்டுகளாக உன்னிடம் நான் கொடுத்த வாக்கை மீறி எதுவும் செய்யவில்லை என்பதை நீ அறிந்திருப்பாய் அல்லவா…?  நாம் தமிழ் நாட்டில் இருக்கும் வரை குடும்ப  செலவை பற்றி ஏன் கவலை கண்ணே.

நமக்கு திருமணம் முடிந்ததும் முதலில் நாம் செய்யபோவது நமக்கென தனியாக ஒரு ரேசன் கார்டுதான். அதுவும் பச்சை கலர் அட்டையுடன் கூடியது. அப்படி பச்சை கார்டு வாங்கி விட்டால் மாதமாதம் அரிசி  இலவசமா கிடைக்கும். அப்படி கிடைக்கும் அரிசியை  வாங்கி வைத்து கொண்டாலும் நமக்கு முடியாத நேரத்தில்  மலிவு விலையில் அம்மா உணவகங்கள்.  இப்போ இரவு கூட சப்பாத்தி மிகவும் குறைந்த விலையில்  அப்புறம் என்ன நமக்கு கவலை..? நமது அரசாங்கமே நமக்கு இலவசமாக கிரைண்டர்… மிக்ஸி… மின்விசிறி கூட கொடுக்கிறர்கள். கிட்டத்தட்ட 45 வருட காலமாக தேசியக்கட்சிகள் நமது தமிழ்நாட்டில் ஆட்சியில் அமர முடியில்லை. திராவிட கட்சிகள் இதுவரையில் கொடுத்த இலவசங்களை கண்டிப்பாக இனி அதிகபடுத்துவார்களே தவிர கண்டிப்பாக குறைக்க மாட்டார்கள் என்பது மட்டும் உண்மை, என்னதான் தேர்தல் கமிஷன் தடை போட்டலும் வேறு ஒரு ரூபத்தில் இலவசங்கள் நமக்கு கிடைத்து கொண்டே இருக்கும், நமது வருமானம் குறைவாக இருந்தாலும் இது போன்ற  இலவசங்கள் நம் போன்று உண்மையான வசதி குறைவானவர்களுக்கும் உபயோகமாக இருக்கும்,  எனவே நீ இன்னமும் என்னை பாரா முகமாக இருப்பதில் அர்த்தம் இல்லை. இந்த மின் அஞ்சல் கண்டதும் உடனடியாக கைபேசி மூலம் உன் குரலை கேட்பேன் என்ற நம்பிக்கையுடன்  உன் நினைவுகளை மனதில் சுமந்தபடி உலா வருகின்ற

உன் உளங்கவர்ந்த கள்வன்

பாலா​​​​​

27.02.2014

பின் குறிப்பு: நாளை கண்டிப்பாக நாம் வழக்கமாக சந்திக்கும் இடத்தில காத்திருப்பேன் என்பதை மறவாதே. நேரில் வா … உனக்கு வேறு சந்தேகங்கள் இருந்தா அதையும் நிவர்த்தி பண்ணுகிறேன். அவசியம் வருக . எனக்கு மன அமைதியை தருக.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *