தஞ்சை வெ.கோபாலன்

பெண்ணுரிமை, ஆண் பெண் சமத்துவம் போன்ற கருத்துக்கள் பல வடிவங்களில் விவாதிக்கப்படுகின்றன. பெண்ணியம் என்பது ஆண்களுக்குச் சமமானது, எந்த விதத்திலும் பெண்கள் ஆண்களுக்குக் குறைந்தவர்கள் இல்லை என்பது போன்ற கருத்துக்கள் இன்று நிலைபெற்றுவிட்டது. இன்னும் சில நேரங்களில் நவீன யுகப் பெண்கள் மேடைகளில் முழங்கும் கருத்துக்களைக் கேட்கும்போது இந்த நாட்டில் இன்னமும் பெண்கள் கவணைகளில் அடைக்கப்பட்ட மாடுகள் போல அடைக்கப்பட்டிருக்கிறார்களோ, எந்தவித சுதந்திரமும் இவர்களுக்கு இல்லையோ என்றுகூட கவலை கொள்ள வைத்து விடுகிறது.

ஆனால் நாட்டு நடப்பைக் கூர்ந்து கவனித்தால் நிலைமை அப்படி அல்ல என்பதும், சில பெண்ணியத் தலைவர்கள் எனச் சொல்லிக் கொள்வோர் இப்படியெல்லாம் பேசுவதன் மூலம் தாங்கள் ஒரு சுதந்திரப் பறவைகள், பெண்களின் முன்னேற்றத்துக்காகத் தங்களைச் சர்வபரித்தியாகம் செய்து கொண்டவர்கள் போன்ற எண்ணத்தை ஏற்படுத்தவே இப்படிப் பேசுகிறார்கள் என்று தோன்றுகிறது. இவர்கள் பேச்சில் இருக்கும் உண்மைகள் என்ன, இவர்கள் பேசும் சுதந்திரம் என்பது எதுவரை ஆண், பெண் பேதங்கள் எதிலெல்லாம் இருக்க வேண்டும் போன்ற கருத்துக்கள் வரையறை செய்யப்படவேண்டும்.

பெண் கல்வி வளர்ச்சியடைந்து உச்சத்தில் இருக்கும் இந்த காலகட்டத்தில், கம்ப்யூட்டர் யுகப் பெண்கள் ஆணுக்குப் பெண் சமம் என்பதில் மட்டுமல்ல, சில நேரங்களில் அவர்களைக் காட்டிலும் அதிக நாகரிகத்தில் முன்னேறியவர்கள் என்றும் காட்டிக் கொள்கிறார்கள். மென்பொருள் துறையில் பணியாற்றும் பெண்கள் பெரும்பாலும் தங்கள் வீட்டைவிட்டு வெளிவந்து விடுதிகளில் அல்லது சிலர் கூடி ஒரு வீட்டை எடுத்துக் கொண்டு வாழ்கிறார்கள். விடுமுறை நாட்களில் ஆண் பெண் பேதமின்றி இவர்கள் ஓட்டல், சினிமா, பார்ட்டி என்றெல்லாம் சென்று தொட்டு விளையாடி பிறர் முகம் சுளிக்கும்படியும் நடந்து கொள்கிறார்கள். இந்த உண்மையை யாராவ்து சுட்டிக் காட்டினால் அவர்கள் ‘பத்தாம் பசலிகள்’, ‘நாகரிகம் தெரியாதவர்கள்’ என்று முத்திரை குத்தப்படுகிறார்கள்.

இன்று தி நியு இந்தியன் எக்ஸ்பிரசில் ஒரு செய்தி. கோவையில் எட்டிமடை எனும் இடத்தில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் பயிலும் இரட்டையர்களான இரு மாணவர்கள் தங்கள் கல்லூரியில் ஜூனியர் வகுப்பில் படிக்கும் ஒரு கேரளத்துப் பெண்ணுடன் நெருங்கிப் பழகியிருக்கிறார்கள். அவர்கள் வழக்கில் சொல்ல வேண்டுமானால், இவர்கள் மிகவும் சோஷலாக பழகி வந்திருக்கிறார்கள். இதைத் தவறு ஆண் பெண் பழக்கத்திலும் ஒரு எல்லைக்கோடு உண்டு என்று யாராவது சொன்னால் அவர்களை இவர்கள் நார் நாராகக் கிழித்துத் தொங்க விட்டுவிடுவார்கள். இந்த இரட்டையர்கள் அந்தப் பெண்ணுடன் ஒரு திரைப்படம் பார்க்க ஒன்றாக இன்னொரு பெண்ணுடனும் சென்றிருக்கிறார்கள். திரைப்படம் முடிந்த நிலையில் இன்னமும் பகல் பொழுது இருந்தமையால் அந்த இரட்டையர்கள் அந்த கேரளத்துப் பெண்ணை இடையர்பாளையம் எனுமிடத்திலுள்ள தங்கள் வீட்டுக்கு அழைத்திருக்கிறார்கள். இவர்கள்தான் சோஷலாகப் பழகுபவர்களாயிற்றே, இரண்டு இளைஞர்கள் ஒரு பெண்ணைத் தங்கள் வீட்டுக்குக் கூப்பிட்டது சரியா, அப்படிக் கூப்பிட்டவுடன் அந்தப் பெண் அவர்களுடன் போவது சரியா என்றெல்லாம் யாரும் கேள்விகள் கேட்டுவிடக் கூடாது, அது பெண்ணிய உரிமைகளுக்கு எதிரானது.

அந்தப் பெண்ணும் அவர்கள் அழைப்பை ஏற்று அவர்களுடன் இடையர்பாளையம் சென்று அவர்கள் வீட்டில் அந்த இளைஞர்கள் கொடுத்த பானத்தை அருந்தியிருக்கிறாள். இதில் கொடுமை என்னவென்றால், அந்த பானத்தில் மயக்க மாத்திரை கலக்கப்பட்டிருந்தது. அவள் நினைவு இழந்தாள், அவ்விருவரும் அந்தப் பெண்ணை மாற்றி மாற்றி அனுபவித்திருக்கிறார்கள், பின்னர் அவளுக்கு நினைவு திரும்பியதும் அவளை விடுதியில் கொண்டு போய் விட்டிருக்கிறார்கள். அப்போதெல்லாம் அந்தப் பெண் என்ன செய்தாள் என்பது தெரியவில்லை. அவள் அதன்பின் துபாயில் இருக்கும் தங்கள் பெற்றோருக்குத் தகவல் கொடுத்து அவர்கள் வந்து போலீசில் புகார் கொடுத்து அந்த இருவரில் ஒருவன் கைது செய்யப்பட்டிருக்கிறான். மற்றொருவன் தலைமறைவாகி யிருக்கிறான்.

இந்த நிகழ்ச்சியிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய பல செய்திகள் உண்டு. முதலில் பெண்ணிய உரிமைகள் பேசும் மாதரசிகள் இதுபோன்ற சோஷல் பழக்கங்களை ஆதரிக்கிறார்களா என்பதைச் சொல்ல வேண்டும். அவர்கள் விரும்பும் பெண் விடுதலை, அல்லது பெண்ணுரிமை என்பது எதுவரை என்பதை விளக்க வேண்டும். மகாகவி பாரதி பெண் விடுதலை பற்றி அதிகம் பேசுவான். அவன் கருத்து இதுபோன்ற சுதந்திரத்தை ஆதரிப்பது அல்ல. நேர்மையும், நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத போக்கும், நேர்மை தவறாத, பாதை மாறாத பண்பும்தான் அவன் சொன்ன பெண் விடுதலை. இந்த கோவை சம்பவத்தில் நடந்தவைகளைக் கொண்டு பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பாடங்கள் அனேகம்.

வயதில் தந்தை அல்லது தாத்தா போல இருந்தாலும், ஆண் ஆண்தான். அவனிடம் பழகும் இளம் பெண்கள் ஒரு எல்லைக்கோட்டைத் தாண்டுவது என்பது அவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும். ஆண் எந்த வயதினனாக இருந்தாலும் மனம் கோணலாக இருக்குமாயின் நிச்சயம் அவன் சமயம் வாய்க்கும்போது வக்கிரச் செயல்களில் இறங்குவான். அதுபோலவே நேர்மை எண்ணமும், பண்பாட்டில் நம்பிக்கையும் கொண்ட ஆண் இளம் வயதினனாக இருந்தாலும், இப்படிப்பட்ட சந்தர்ப்பங்கள், தனிமையில் ஒரு இளம் பெண்ணோடு இருக்கும் நிலையிலும் அவன் நிலை தடுமாற மாட்டான். எல்லா ஆண்களும் தவறு செய்பவர்கள் அல்ல, அது போலவே எல்லோருமே அயோக்கியர்களும் அல்ல. இந்த பேதத்தை இத்தனை காலம் பழகிய பின்னும் ஒரு பெண்ணால் புரிந்து கொள்ள முடியவில்லை, இரு ஆண்களுடன் சினிமாவுக்குப் போகிறாள், அவன் கூப்பிட்டவுடன் அவன் வீட்டுக்குப் போகிறாள் என்றால் அது பெண்களின் சுதந்திரப் போக்கைக் காட்டுகிறதா, பேதைத் தனத்தைக் காட்டுகிறதா. நெஞ்சு கொதிக்கிறது இந்த நிலைகெட்ட மனிதரை நினந்து விட்டால். பட்டது போதாதோ, பெண்ணிய சிந்தனையாளர்கள் நல்லது செய்யாமல் போனாலும் போகட்டும், பெண்களைத் தூண்டிவிட்டு நாகரிகம், முன்னேற்றம் எனும் பெயரால் பலிகடாக்கள் ஆக்காமல் இருக்கட்டும்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “பெண் சுதந்திரம் எதுவரை?

  1. ////வயதில் தந்தை அல்லது தாத்தா போல இருந்தாலும், ஆண் ஆண்தான். அவனிடம் பழகும் இளம் பெண்கள் ஒரு எல்லைக்கோட்டைத் தாண்டுவது என்பது அவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும். அதுபோலவே நேர்மை எண்ணமும், பண்பாட்டில் நம்பிக்கையும் கொண்ட ஆண் இளம் வயதினனாக இருந்தாலும், இப்படிப்பட்ட சந்தர்ப்பங்கள், தனிமையில் ஒரு இளம் பெண்ணோடு இருக்கும் நிலையிலும் அவன் நிலை தடுமாற மாட்டான். எல்லா ஆண்களும் தவறு செய்பவர்கள் அல்ல, அது போலவே எல்லோருமே அயோக்கியர்களும் அல்ல. //// /

    உண்மை.

    ///பெண்ணிய சிந்தனையாளர்கள் நல்லது செய்யாமல் போனாலும் போகட்டும், பெண்களைத் தூண்டிவிட்டு நாகரிகம், முன்னேற்றம் எனும் பெயரால் பலிகடாக்கள் ஆக்காமல் இருக்கட்டும்.///

    நிஜம் தான்.. அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி!

Leave a Reply to பார்வதி இராமச்சந்திரன்.

Your email address will not be published. Required fields are marked *