திவாகர்

’மனைவி அமைவதெல்லாம் ’ என்று முன்பொருநாள் என்னுடைய வலைப்பகுதியிலே மனைவியைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன் (http://vamsadhara.blogspot.in/2008/06/blog-post_05.html) இந்த விஷயத்தில் . என் எண்ணம் இன்றைக்கும் மாறவில்லை. என்றைக்கும் மாறவும் மாறாது. மனைவி என்பவள் என்றைக்குமே ஒரு ஆச்சரியக் குறி. சுயநலமில்லாதவள். தனக்கென வாழாது குடும்பத்துக்கென வாழும் அவளால்தான் இந்தியாவுக்கு, இந்திய சமூகத்துக்கு இன்றளவும் உலகத்தில் நல்லபெயர். இந்த விஷ்யம் விவாதத்துக்குரியதே இல்லை என்பது கூட என் கணிப்பு.

அவ்வப்போது இந்த கல்யாணமே செய்துகொள்ளாமல் பிரமச்சரியமாக இருப்போர் செயலையும் சொல்லையும் பார்க்கும்போதெல்லாம் ஒரு பரிதாபம் கூடத் தோன்றும். இவர்கள் மட்டும் திருமணபந்தத்தில் வந்திருந்தால் இவர்களது புத்தியானது மிகவும் கூரடைந்து சீராக இருந்திருக்குமே.. மனைவியானவள் அமைவதின் பயனை இவர்களும் அனுபவித்திருக்கலாமே இப்படி ஒரு நல் வாய்ப்பை நழுவ விடுகிறார்களே என்று கூட தோன்றும். இதனால் பிரமச்சார்ய சமுதாயம் என்னிடம் சண்டைக்கு வரவேண்டாம். மனைவியானவளின் சக்தி அபரிமிதமானது என்பதை அறியாமலே வாழ்க்கையைக் கழிக்கிறார்களே என்ற ஆதங்கத்தில்தான் சொன்னேன்… அவ்வளவே..

ஆண் பெண் யாராக இருந்தாலும் அந்த ஆத்மாவுக்கு நிச்சயம் வாழ்வின் முடிவில் நினைத்துப் பார்க்கும்போது ஒரு நிம்மதி கிடைக்கவேண்டும். அந்த வகையில் பார்க்கும்போது பொதுவாக தனக்காக விதிக்கப்பட்ட கடமையை செவ்வனே கழிப்பது பெண் அதாவது மனைவியாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். அந்த மனைவி எனும் ஸ்தானத்தில் நிம்மதியை அதி சீக்கிரம் அவள் அடைவதாகவும் நினைப்பதுண்டு. அப்படியானால் ஆண்களுக்கு நிம்மதி கிடையாதா எனக் கேட்க வேண்டாம். அதைப் பற்றி ’கணவர்’ என்ற தலைப்பு கிடைக்கும்போது நிறைய பேசலாம்.

சமீபத்தில் வல்லமையில் இந்தக் கட்டுரையைப் படித்தேன். (https://www.vallamai.com/?p=42320) கஸ்தூரி பா காந்தியைப் பற்றியது. காந்தியைத் தெரிந்த அளவுக்கு கஸ்தூரிபா அவர்களைப் பற்றி எத்தனை பேர் தெரிந்து வைத்திருக்கிறார்களோ.. கஸ்தூரிபா வின் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருந்திருக்கவேண்டும் என்றுதான் இந்தக் கட்டுரையின் மூலம் தெரிய வருவது. காந்தியை விட அவர் ஆத்மா நிச்சயம் சாந்தியடைந்திருக்கவேண்டும் என்றும் மனதில் பட்டதை சொல்லிவிடவேண்டும்தான்.

unnamed (3)

//கஸ்துர்பா அவர்கள் உடல் நிலை மோசமாக இருந்தது, அவர்களுக்கு மூளையில் இரத்தக் கசிவு இருந்தது. ”அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும்; அவர் உடல் மயக்க மருந்தை ஏற்கும் தகுதியற்றதாக இருக்கிறது” என்று மருத்துவர் அண்ணலிடம் தெரிவித்தார். காந்திஜி அன்னையிடம் இதைத் தெரிவித்தார். அவர்கள் உடனே, ’’நான் வலியைத் தாங்கிக் கொள்கிறேன். மயக்க மருந்து தர வேண்டாம்” என்று கஸ்தூர்பா அவர்கள் மருத்துவரிடம் தெரிவித்துவிட்டார். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. இந்த அம்மையாருக்கு இத்தகையதொரு ஆன்ம பலம் எவ்வாறு கிட்டியது? அவருடைய கர்மயோகத்தின் வலிமையே காரணம். கணவரின் செயல்களை தன் உள்ளத்தில் ஏற்றி உண்மையாகவே அவற்றை செயல்படுத்துவதற்கு உறுதுணையாக இருந்ததன் பயன் தான் இந்துமதத்தின் அடிப்படைக் கருத்துகளில் அசையா நம்பிக்கை அவருக்கு. படிப்பறிவோ எழுத்தறிவோ கிடையாது. ஆனால் ஞானம் பெற்ற பெண்மணியாக விளங்கினாள்.

அறுவை சிகிச்சை முடிந்தது. எனினும் அவர்தம் உடல்நிலை தேறவில்லை. அன்னைக்கு மாட்டிறைச்சி தேநீர் கொடுத்தால் உடல் தேறும் என்று மருத்துவர் கூறினார். காந்திஜி இதற்கு ஒத்துக் கொள்ளவில்லை, இதை அன்னையிடம் தெரிவிக்க, ”நான் அந்தத் தேநீரைக் குடிக்க மாட்டேன். இவ்வுலகில் மனிதனாய்ப் பிறந்தது அரிது. நான் என் உடலை அசுத்தப்படுத்த விரும்பவில்லை. அதைவிட நான் உங்கள் மடியில் உயிரை விட விரும்புகிறேன்” என்று பதிலளித்துவிட்டார். அவர்கள் வாழ்ந்து வந்த பீனிக்ஸ் பண்ணைக்கு வந்த ஸ்வாமி மாட்டிறைச்சி தெநீர் அருந்துவதில் தவறில்லை என்றும் இந்துமத நூல்களும் இதை ஆதரிக்கின்றன என்றும் தெரிவித்தார். ஆனால் அன்னை அவர்கள் மறுத்துவிட்டார். நூல்கள் கூறினாலும் தன் கொள்கையினின்றும் சற்றும் பிறழாத தன்மைதான் காந்தி-கஸ்தூர்பா வாழ்க்கையின் சிறந்த அம்சமாகும். ஏனெனில் காந்திஜி அன்னையிடம் சொல்லுவார், ”நாம் மக்களுக்காக பணியாற்ற வந்திருக்கிறோம், நாம் செய்யும் செயல்கள் பிறருக்கு எடுத்துக் காட்டாக இருக்க வேண்டும்” என்று. அதனால் கஸ்தூர்பா அவர்கள் தான் செய்யும் செயல்கள் தன் கணவரின் நெறிக்கு ஏதுவாக இருக்க வேண்டும் என்பதில் மிகக் கவனமாக இருப்பார்

ஆகாகான் மாளிகையில் அவர் இறுதிக் காலம் கழிந்தது. அவர்கள் அங்கே சிறைபடுத்தப்பட்டிருந்தார். அவர் உடல்நிலை மிக மோசமாகிக் கொண்டு வந்தது. பா அவர்கள் காந்திஜியின் மடியில்தான் தன் உயிர் பிரிய வேண்டும் என்று விரும்பினார். தன் உடல் மீது காந்திஜி அவர்கள் நூற்ற நூலினால் நெய்யப் பட்ட துணியைத்தான் தன் மீது போர்த்த வேண்டும் என்றும் தன் சமாதி மகாதேவ் தேசாயின் சமாதியின் அருகில்தான் இருக்க வேண்டும் எண்றும் ஆசைப்பட்டார். அவர் ஆசை நிறைவேற்றப்பட்டது. பா அவர்கள் உயிர் 1944 ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் நாள் பிரிந்தது. காந்திஜி வேதனையுடன் கூறினார், ”என்னை என் மூத்த ஆனால் என்னிடம் நம்பிக்கையுள்ள உடனுறை தோழியிடமிருந்து எவ்வாறு பிரிக்க முடியும்? அவள் என்னுடன் பின்னிப் பிணைந்து விட்டாள். அவள் பிரிவு நிரப்ப முடியாத ஒரு பெரும் இடைவெளியை ஏற்படுத்தி விட்டது.” //.

இந்தக் கட்டுரைக்குத் தலைப்பாக ‘ஒரு மனைவியின் பெருமை’ என்று குறிப்பிட்டிருக்கலாமோ என்றும் தோன்றியது. அருமையான கட்டுரையை வல்லமையில் பகிர்ந்து கொண்ட திரு விப்ரநாராயணன் திருமலையை இந்த வார வல்லமையாளராக அறிவிப்பதில் மகிழ்ச்சி. திரு திருமலைக்கு எனது வாழ்த்துகள்.

கடைசி பாரா::திருமதி மேகலாவின் இறைநேசர் கட்டுரையில் உள்ள குறளுக்கு விளக்கம்:

பகைவர்கள் வணங்கித் தொழுகின்ற கையினுள்ளும் கொலைக் கருவி மறைந்திருக்கும்; அவர்கள் அழுது சொரியும் கண்ணீரும் அத்தன்மையானதே!’

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *