ஜெயஸ்ரீ ஷங்கர்

unnamed

மகளிர் தினம் …! கேட்பதற்கு நிறைவான வார்த்தையாக இருந்தாலும் சிறிது முரண்பாடாகத் தான் தோன்றுகிறது. அறிவுப்பூர்வமாகப் பார்த்தால் இதில் ஒரு விசேஷமும் இருப்பதாகத் தெரிவதில்லை. இது சும்மா மனதை மயக்கும் மாய வார்த்தை. அழும் பள்ளி சிறுமிகளுக்கு சாக்லேட் கொடுப்பது போலத் தான். ஒரு விதமான ஈசல் சந்தோஷம். தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளும் வித்தை. அப்படி என்ன தான் இருக்கிறது இந்த மகளிர் தினத்தில்?  வருடத்தின் ஒருநாள் மகளிர் தினம் என்றால் மீதம் உள்ள நாட்கள் மகளிருக்கு இல்லையா? அதன் குறிக்கோள் தான் என்ன? மகளிர் தினம் கொண்டாட ஆரம்பித்து பல ஆண்டுகள் ஆகிறது என்று சொல்லிக்கொள்கிறோம். இத்தனை வருடங்களாகியும் மாறாத சூழல் இனி வரும் காலங்களில் மாறிவிடுமா?

சர்வதேச அளவில் கூட  இத்தனை ஆண்டுகள் கழிந்தும் இன்னும் பூரண சுதந்திரம் மகளிருக்கு கிடைத்து விட்டதா என்பது கேள்விக் குறி தான். இது போன்ற எண்ணங்களை நாம் பரவலாக கேட்க முடிகிறது.

செய்தித் தாளைத் திறந்தால் கூடவே நாள் ஒன்றுக்கு குறைந்த பட்சம் 2 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் , 2 பெண்கள் கொலை, 5 பெண்கள் வன்முறையால் மானபங்கம் என்று பெண்கள் மீதான வன்முறைத் தாக்குதல் நீண்டு கொண்டே போகிறது. நாட்டில், ரோட்டில், வீட்டில், பள்ளியில், கல்லூரியில், மருத்துவமனையில் என்று அதிகப்படியான பெண்கள் தங்களின் வாழ்க்கையை நிம்மதியாக நடத்த மிகவும் சிரமப் படவேண்டியிருப்பது தான் நிதர்சன உண்மை. நாளுக்கு நாள் பெரும்பாலான பெண்கள் மனதாலும், உடலாலும் கஷ்டப் படுகிறார்கள். இன்றைய பெண்களுக்கு பாதுகாப்பு என்பது  துளியும் இல்லை என்பது தான் கண்கூடு. இதற்காக இந்த மகளிர் தினம் என்ன செய்யப் போகிறது. அது என்ன ஒரு அமைப்பா..? ஒரு திருநாள். நித்தம் திருவிழா கொண்டாட நினைக்கும் ஒரு வர்க்கத்தினருக்கு மட்டும் இது பொருந்தும். சமுதாயத்தில் உயர்ந்த இலட்சியங்கள் கொண்ட எத்தனையோ பெண்கள் எதுவும் செய்ய இயலாமல் சமூக விலங்குகளால் கைகள், கால்கள், கழுத்து , வாய் என்று பூட்டப்பட்டு இறுகிய நிலையில் இருக்கிறார்களே….அவர்கள் மகளிர் இல்லையா?

அவலை நினைத்து உரலை இடித்த கதையாக, அவர்கள் இந்த மாய மான் தோற்றத்தில் மயங்கி ‘மகளிர் கொடியை உயர்த்திப் பிடித்தால் தெரியும் ‘அவளை அடித்து உரலில் கட்டிப் போட்டு’ விடுவார்கள்.

சமத்துவம் ஒங்க வேண்டும். சமுதாயச் சீர்கேடுகள் அழிக்கப் பட வேண்டும். ஆண்களைப் பெண்கள் வாழ விட வேண்டும். பெண்களை ஆண்கள் வாழ விட வேண்டும். இதற்கெல்லாம் சட்டங்களும், திட்டங்களும் கொண்டு வரப்படல் வேண்டும். திருமணச் சந்தையில் பெண்ணைப் பெற்றவர்களுக்கும், பிள்ளையைப் பெற்றவர்களுக்கும் ஒரே சமமான நிலையில் பார்க்கப் பட வேண்டும். இது ஒரு சில இடங்களில் மாறி இருந்தாலும், இன்னும் சில கிராமப் பகுதிகளிலும், சின்ன டவுன், மற்றும் பல ஊர்களிலும் பழைய சம்பிரதாயப் படி தான் உயர்வு, தாழ்வு என்னும் கண்ணோட்டத்தோடு நடத்தப் படுவது தவிர்க்கப் பட வேண்டும்.இதற்கும் நாட்டில்  சட்டம் வர வேண்டும்.

கண்டிப்பாக வரதட்ஷணை முற்றிலுமாக அழிக்கப் பட வேண்டும்.

பெண்கள் தங்கத்தைத் தவிர்த்திடல் வேண்டும். பல அபாயங்களில் இருந்து அது அவர்களைக் காப்பாற்றும் என்ற மனப்பான்மையை ஒவ்வொரு மகளிரும் உணர வேண்டும்.

சமுதாயத்தில் உயர் தட்டு பெண்டிருக்கு மட்டுமே இந்த மகளிர் தினம் ரோஜாப்பூவாக இருக்கும். மீதமுள்ள நடுத்தர வர்க்கப் பெண்களும் கீழ்தட்டு பெண்களும் அதனருகில் இருக்கும் முட்களாகத் தான் இந்த தினத்தை விமரிசிக்கிறார்கள். மாற வேண்டும். இந்த நிலை முற்றிலும் மாற வேண்டும். ஒரு பெண்ணைப் பெற்றவர், தன் பாசமுள்ள மகள் வீட்டை விட்டு வெளியே சென்ற பின்பு அவள் வீட்டுக்கு பத்திரமாக வந்து சேரும் வரையில் வயிற்றில் புளி கரைத்து கொண்டு தான் உட்கார்ந்திருப்பார்.வெளியில் சென்ற மனைவியோ, மகளோ, பேத்தியோ, வீடு வந்து சேரும் வரை ரோட்டில் அவளுக்கு பாதுகாப்பு என்பது குறைவு என்ற நினைவு அவருள் ஓடிக் கொண்டு தானே இருக்கும். இந்தியாவின் பல பகுதிகளில் இதே நிலைமை தான் தொடர்கிறது.

சமத்துவம் பேசுவதெல்லாம் இங்கே சும்மா.பெண்களின் அதிகப்படியான சுதந்திரத்தை நிர்ணயம் செய்வது அவள் சம்பாதிக்கும் அதிகமான பணம் மட்டும் தான் காரணம்.இதற்கு நிறைய உதாரணங்கள் உங்களுக்கே தெரியும். இருதலைக் கொள்ளி  எறும்பின் நிலை தான் என்றும் பெண்டிரின் நிலை. தான் பிறந்த வீடும் தனக்கு சொந்தமில்லை. தான் புகுந்த வீடும் அவளுக்கு சொந்தமில்லை…என்று எப்போதும் மனதுக்குள் ஒரு பாதுகாப்பு இல்லாத நிலையில் தான் அவளது வாழ்வு ஆரம்பிக்கப் படுகிறது.

எத்தனையோ பேர்கள் உடனிருந்து  மிகவும் கஷ்டப்பட்டு பெண்ணுக்கு அளிக்கப்படும் கொடுமையிலும் கொடுமையான ‘சதி’யை  நீக்கினார்கள். பெண் கல்விக்கு கைகொடுத்தனர். முன்னேற்றப் பாதை வகுத்து காண்பித்தனர். பெண்களுக்கு வழி விட்ட நல்லவர் அனைவருக்கும்  இந்த நாளில் நன்றி சொல்லலாம். இன்னும் ஒழிக்க வேண்டியது எவ்வளவோ இருக்கிறது .

மகளிர் சுதந்திரம் எனும் பெயரில் பெண்கள் செய்யும்  முறைகேடுகளும் கொஞ்ச நஞ்சமல்ல. பெரிய பெரிய நகரங்களில் அவர்களின் அதி மிகுதியான சுதந்திரப் போக்கால் ஏற்படும் குடும்ப இழப்புகள் நீதிமன்றங்களில் கோப்புக் குவியல்கள் சொல்லும்.

இந்த உலகில் இருப்பது இரண்டு வர்க்கம். ஒருவரைச் சார்ந்து ஒருவர் என்று வாழும் போது ‘அன்பாக’ அச்சாணி இருந்தால் போதும்.

அந்த பரஸ்பர நம்பிக்கையை ஒருவருக்கொருவர் அளித்துக் கொண்டால் குடும்பத்தில் அமைதி நிலவும்.இதை உணர்ந்து உணரச் செய்யுங்கள்.

மகளிர் தினத்தில் முக்கியமாக  இன்றைய , இளைஞர்  சமுதாயத்தில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் பாதை மாறிப் போகிறார்கள். இவர்களுக்கு வாழ்வியல் நியதிகளை கற்றுத் தருவது நமது கடமையும் பொறுப்பும்.நாளைய இந்தியா சிறப்புற இன்றே இவர்களைக் காக்க வேண்டும்.விஞ்ஞானி அப்துல் கலாம் அன்று சொன்னதை மீண்டும் மீண்டும் மீள்பதிவு செய்வித்து நல்ல விஷயங்களை மூளைச் சலவை செய்த வண்ணம் இருந்தாலும் தவறில்லை. ஆரோக்கியமான இந்தியா இளைய சமுதாயத்தினரிடமிருந்து  உருவாக இன்றைய மகளிர் ஒவ்வொருவரும் ஆவன செய்யவேண்டும். இந்தியாவிலிருந்து மதுவும், புகையும் அடியோடு ஒழிக்க மகளிர் அனைவரும் மனிதச் சங்கிலியாய் ஒன்று திரள வேண்டும். அது ஒன்று இல்லாவிட்டால் போதும், எத்தனையோ குடும்பங்கள் புத்துணர்வு பெற்று சுவாசிக்கும்.

நாளைய இந்தியா, கிராமப் பகுதிகளில் கூட பெண்கள் சுதந்திரமாக தனது கருத்துக்களை வெளியிடும் தைரியத்தோடு இருக்க வேண்டும்.

சொல்வது போல சமூகத்தில் பல வகையான மனிதர்களை நான்கு பிரிவாகப் பிரித்துக் காட்டியிருக்கிறார்கள் பெரியவர்கள்.

தன்னிடம் இருப்பதை பகிர்ந்து கொண்டு மகிழ்வோடு இருப்பவர்.

தன்னிடம் மட்டும் இருக்க வேண்டும் இருந்தால் போதும் என்று மகிழ்வில் திளைப்பவர்

அடுத்தவர் மட்டும் மகிழ்வோடு இருந்தால் போதும் என்றும் நினைப்பவர்

தானும் சரி, அடுத்தவரும் சரி….மகிழ்வாக இருப்பதையே பிடிக்காதவர். இந்த பிரச்சனை பார்ட்டி.

இதற்குப்  பின்னால் கதை கூட உண்டு. இதில் நாலாவது வகை முழுதும் முதல் வகையாக மாறி “மகளிர் தினம்” “மானுட தினமாக” மாறி விடும். அதன் பின் யாருக்கும் ‘எந்தத் தினம்மும்” தேவையில்லை. தினம் தினம் ‘திருவிழா’ தானே.

‘அக்ஷய திருதியை’ எட்டிப் பார்த்தது. தலையை மட்டும் நுழைத்தது, கைகளைக் குலுக்கியது, சென்ற வருடம் வரையில் ஏதோ ஆண்டாண்டு காலமாய் கூடவே வந்ததைப் போல சம்மணமிட்டு உட்கார்ந்து கொண்டது. விற்காத குந்துமணி தங்கம் கூட விற்றுப் போனது. பெண்களைக் குறி வைத்துக் காயடித்ததாலோ ஏனோ , மந்தை மந்தையாய் சந்தையில் கத்திரிக்காய் வாங்குவது போல தங்கம் விற்றுப் போனது. இது ஒரு சின்ன உதாரணம் மட்டும் தான். இது போல எட்டிப் பார்த்த பலவற்றிற்கும் இப்போது அடிமையாய் இருப்பது கண்கூடு.

மகளிர் தினமும் அப்படி உள்ளே நுழைந்தது தான்.அப்படி நுழைந்த இந்த நாள் ஒட்டுமொத்த மகளிருக்கும்  என்றாவது

சுதந்திர மனப்பாங்கைப் பரவலாகத்  தந்தால் அன்று  தான் ‘மகளிர் தினம்’.அதுவரை அவளது முகத்திரை தான் அவளுக்கு  முத்திரை.

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “சுதந்திர மகளிர் தினம்..!

  1. அன்பு ஜெயஸ்ரீ  அருமையாக எழுதியிருக்கிறீர்கள். இதையேதான் நான் ஒரு கவிதையாக எழுதியுள்ளேன் வாழ்த்துகள்

  2. ///அக்ஷய திருதியை’ எட்டிப் பார்த்தது. தலையை மட்டும் நுழைத்தது, கைகளைக் குலுக்கியது, சென்ற வருடம் வரையில் ஏதோ ஆண்டாண்டு காலமாய் கூடவே வந்ததைப் போல சம்மணமிட்டு உட்கார்ந்து கொண்டது. விற்காத குந்துமணி தங்கம் கூட விற்றுப் போனது. பெண்களைக் குறி வைத்துக் காயடித்ததாலோ ஏனோ , மந்தை மந்தையாய் சந்தையில் கத்திரிக்காய் வாங்குவது போல தங்கம் விற்றுப் போனது. இது ஒரு சின்ன உதாரணம் மட்டும் தான். இது போல எட்டிப் பார்த்த பலவற்றிற்கும் இப்போது அடிமையாய் இருப்பது கண்கூடு.///

    அருமையான கருத்துப் பகிர்வு!.. மிக்க நன்றி!

  3. அன்பின் விசாலம் அம்மா,

    தங்களின் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றிகள்.

    அன்புடன்
    ஜெயஸ்ரீ

  4. அன்பின் திருமதி.பார்வதி அவர்களுக்கு.,

    தங்களின் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றிகள்.

    அன்புடன்
    ஜெயஸ்ரீ

Leave a Reply to rvishalam

Your email address will not be published. Required fields are marked *