பி.தமிழ் முகில்

மதுரை

12.03.2014

அன்புள்ள மணிமொழி அக்காவிற்கு,

அன்புடன் உன் தங்கை மணிமேகலை எழுதிக் கொள்வது. இங்கு அனைவரும் நல்ல சுகம். அதுபோல் அங்கு உனது மற்றும் அத்தான் நலம் குறித்தும், பிள்ளைகள் கவின்பாரதி, கவின்மலர் நலம் குறித்தும் அறிய ஆவல்.

கல்லூரியில் உனது விரிவுரையாளர் பணி எப்படி போய்க் கொண்டிருக்கிறது? மேற்படிப்பிற்கு விண்ணப்பிக்கப் போவதாக சொல்லிக் கொண்டிருந்தாயே? விண்ணப்பித்து விட்டாயா?

அக்கா! என் மனதை மிகவும் நோகடித்துக் கொண்டிருக்கும் சில விஷயங்களை உன்னிடம் பகிர்ந்து கொண்டு ஆறுதல் தேடிக் கொள்ளவே இக்கடிதத்தை எழுதுகிறேன். மனதிற்குள்ளேயே போட்டு வைத்து குமைந்து கொண்டிருப்பதை விட எவரிடமேனும் கொட்டித் தீர்த்து விட்டால், மனம் சற்று இலேசாகும் என்ற எண்ணத்தின் விளைவே இக்கடிதம்.

நீ பலமுறை என்னிடம் கூறியிருக்கிறாய். “பெண்ணுக்கு பெண்ணே எதிரி!” என்று. நானோ, அதெப்படி இருக்க முடியும் என்று உன்னிடம் வாதிட்டிருக்கிறேன். இப்போது எனக்கு ஏற்பட்டுள்ள சில அனுபவங்கள், நீ கூறியவை எல்லாம் நூற்றுக்கு நூறு உண்மை என்று பறைசாற்றுபவையாகவே இருக்கின்றன. என் மனதில் தோன்றியுள்ள இந்த எண்ணம் சரியானது தானா என்பது எனக்கு விளங்கவில்லை.

என்னை இவ்வாறு எண்ண வைத்த சில சம்பவங்கள்:

திருமண வயதுப் பெண்ணொருத்தி, நல்ல மணவாழ்க்கை வேண்டி இறைவனுக்கு விரதங்கள் மேற்கொண்டு, பூஜை வேளைகளில் இறைவனுக்கு விளக்கேற்றச் செல்கிறாள். அப்படி செல்கையில், தனக்கு துணையாக தன் சமவயது தோழியையும் உடனழைத்துச் செல்கிறாள். தோழியும் பூஜையில் கலந்து கொள்கிறாள். அப்படி கலந்து கொண்ட சில நாட்களிலேயே, உடன் சென்ற தோழிக்கு பல நல்ல இடங்களில் இருந்து திருமண வரன்கள் வருவதாகவும், விரதம் மேற்கொண்டவளுக்கு வரன்கள் ஏதும் அமையவில்லையே என்று வருத்தப்படுவது போல பேசிவிட்டு, இனிமேல் நீ மட்டும் கோவிலுக்குப் போய் உன் பிரார்த்தனைகளை செலுத்திக் கொள் என்று முகத்தில் அறைந்தாற் போல் சொல்லி, அந்தப் பெண்ணின் மன வருத்தத்தை மேலும் அதிகமாக்குகிறாள்.

வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் அந்தப் பெண்ணிற்கு மனதில் இரக்கம் இல்லை என்று எண்ணுவதா, அல்லது, அடுத்தவர் படும் துன்பத்தில் இன்பம் காண்பவள் என்று எண்ணுவதா?

மற்றோர் சம்பவம்.

பல வருட காலமாக சந்திக்காத தோழி  ஒருத்தியை சந்தித்து உரையாட வாய்ப்பு கிடைத்தால், மகிழ்ச்சி அடையாதவர் எவரும் உளரோ? அப்படி ஓர் சந்தர்ப்பம் கிடைக்குமாயின் வழக்கமாக நிகழ்வது எதுவாக இருக்கும்? பரஸ்பரம் நலன் விசாரிப்பு, படிப்பு முடித்து வேலைக்குச் செல்லும் வயதுப் பெண்களாயிருப்பின், திருமணம் குறித்த பேச்சுக்கள், இவை தானே. இப்படியான பேச்சுகள் சகஜம் தானே. அப்படி பேசும் வேளையில், தோழியிடம், “உனக்கு திருமணம் எப்போது? வீட்டில் வரன்கள் பார்க்கிறார்களா?” என்று கேட்க, ” உனக்குத் தான் திருமணமாகி இரண்டாண்டுகள் ஆகப் போகிறதே, உனக்கு இன்னும் குழந்தை இல்லை. உனக்கு குழந்தை பிறந்ததும் எனக்குத் திருமணம்” என்று  படபடவென்று பேசிவிடுகிறாள்.

பிறரது மன உணர்வுகள், தனது பேச்சால் பின்விளைவுகள் என்ன விழையும் என்பதை சற்றும் சிந்தியாது இருக்கும் இது  போன்ற பெண்களை என்னவென்று சொல்வது? பிள்ளைப் பேறு என்பது ஒரு பெண்ணுக்கு எவ்வளவு உணர்வுப்பூர்வமான விஷயம் என்பதை உணராத பெண்களும் இருப்பார்களோ?

இன்னொரு பெண்ணோ, பிள்ளைப் பேற்றுக்காக ஏங்கி தவம் கிடக்கும் பெண்ணொருத்தியிடம்,

“என்ன! குழந்தை பெற்றுக் கொள்ளும் எண்ணமில்லை போலுள்ளதே! இப்போது தான் மணமுடித்துக் கொண்ட இளம் தம்பதியரைப் போல், வாழ்வை அனுபவிக்கிறீர்கள். மணமாகி இரண்டாண்டு ஆகப் போகிறது. குழந்தை என்று வந்து விட்டால், இஷ்டம் போல் வாழ்வை அனுபவிக்க முடியாது  என்ற எண்ணமோ?”

இப்படி எல்லாம் ஒரு பெண்ணின் வாழ்வில் நடைபெறும் ஒவ்வோர்  நிகழ்வுகள் சார்ந்த விஷயங்களில், சம்மந்தப்பட்ட பெண்ணின் மனதை புண்படுத்துவது பெண்களே தான். இதை எல்லாம் அவர்கள் உணர்ந்து தான் செய்கிறார்களா என்பதை இறைவனொருவனே அறிவான்.

பெண் என்பவள் தாயாக, சகோதரியாக, மகளாக, மனைவியாக, தோழியாக என்று தன் வாழ்நாளில் பல பரிணாமங்களை எடுக்கிறாள். அவள் தான் எடுக்கும் காரியத்தை செவ்வனே செய்து முடிக்க தன்னையே அர்ப்பணிக்கிறாள். இதில் எவ்வித மாற்றுக் கருத்தும் எவருக்கும் எழுவதில் அர்த்தமில்லை. ஆனால், அவளது தியாகம், அன்பு, பொறுமை, பெருமை எனும் மேன்மை பொருந்திய குணங்களனைத்தும் அவளது சிந்தை தவறிய ஒரு நொடிப் பொழுது பேச்சால் நசிந்து போய்விடுகின்றனவே. இதை உணர்ந்து நடந்து கொண்டால், பெண்ணின் பெருமை எந்நாளும் நிலைத்து நிற்குமன்றோ.

என் மனதில் தோன்றிய எண்ணங்களை, வருத்தங்களை, கோபதாபங்களை எல்லாம் இக்கடிதத்தை ஒரு வடிகாலாய் எண்ணி உன்னிடம் கொட்டித் தீர்த்து விட்டேன் அக்கா. எதிர்காலத்திலேனும், நீ சொல்வாயே, ” பெண்ணுக்குப் பெண்ணே எதிரி ” என்று. இந்தக் கூற்று பொய்யாய்ப் போய்விடில் மகிழ்ச்சியே.

கவின்பாரதி, கவின்மலர் இருவருக்கும் அன்பு முத்தஙகள். மற்றவை உன் கடிதம் கண்டு.

அன்புடன்,

உன் தங்கை மணிமேகலை

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *