பிச்சினிக்காடு இளங்கோ

 

எங்கே

என்

குறிப்புப்பெட்டகங்கள்  ?

 

அவை

தோண்டக்கிடைக்காத

வைரங்கள்

வேண்டக்கிடைக்காத

வரங்கள்

 

தேடிக்கொணருங்கள்

அத்திரவியத்தை

 

கழித்துக்கட்டும்

கடைக்குப்போடும்

பழைய சரக்கல்ல

 

அவை

மின்னல்களின்

சேகரிப்பு

 

மின்சாரக்

கிடங்கு

 

பற்றும்

கற்பூரம்

 

மணக்கும்

ஊதுவத்தி

 

சிரிக்கும்

மெழுகுவத்தி

 

ஒவ்வொரு பக்கத்தையும்

பவ்யமாய்ப் புரட்டுங்கள்

 

ஒவ்வொரு பக்கத்திலும்

உறங்கிக்கொண்டிருக்கும்

என் கவிதை

 

உறைந்துகிடக்கும்

என் கற்பனை

 

சிறைபட்டிருக்கும்

என் சிந்தனை

 

சொற்களெல்லாம்

சிக்கிமுக்கிக் கற்கள்

விருட்சமாய்

விளையும் விதைகள்

 

ஒவ்வொரு சொல்லும்

வாமன வடிவம்

ஒவ்வொரு சொல்லும்

சுரங்கம்

ஒவ்வொரு சொல்லும்

ஒரு

சூத்திரம்

 

சூத்திரம் விரிந்தால்

சூட்சுமம் விளங்கும்

 

விளக்காய் எரியும்

ஒவ்வொரு சொல்லும்

சொல்லும் எனக்குக்

கவிதை

(07.03.2014 பிற்பகல் 12.50க்கு)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *