விசாலம்

Vishalamஎல்லோருக்கும் தாய் என்றாலே ஒரு விலை மதிக்க முடியாத சொத்து. அந்த அன்னை நமக்குக் கற்றுக் கொடுக்கும் மொழியைத் தாய்மொழி என்கிறோம். ஒவ்வொருவருக்கும் அவரவரது தாய் மொழி உயர்வாகத்தான் இருக்கும். அந்தத் தாய் மொழியைக் கற்றுக்கொள்ளாமல் வேறு மொழிகளில் மனதைச் செலுத்துவது என்பது  தன் தாயையே எட்டி உதைப்பது போலாகும்.

பெற்றோர்கள் சிலர், தங்கள் குழந்தைகள் ஆங்கிலம் பேசுவதை மிகப் பெருமையுடன் ஆதரித்து வருவதோடல்லாமல், யாராவது வந்தால் “ஏன்டா செல்லம், அந்த அங்கிளுக்கு இங்கிலீசில் பேசிக் காமி. டிவிங்கில் டிவிங்கில் லிடில் ஸ்டார் பாடிக் காமி” என்றும் சொல்வதைக் கேட்க மனம் வெம்புகிறது.

சிலர் “நாங்கள் வடக்கிலேயே இருந்து விட்டதால் என் பெண்ணிற்குத் தமிழ் பேச வராது” என்று சொல்வது அதை விடக் கொடுமை. கூடிய வரை தாய் மொழிச் சூழலில் தான் குழந்தை வளர வேண்டும். வீட்டில் எல்லோருமே தாய்மொழியில் தான் பேச வேண்டும். குழந்தைகளும் அந்த மொழியைக் கேட்டே வளர வேண்டும். இப்போது காதல் திருமணம் மிகவும் சகஜமாக நடந்து விடுவதால் பொதுவாகப் பேசும் ஆங்கிலம்,
தம்பதிகளுக்குக் கைகொடுக்கிறது. இதனால் சூழ்நிலையும் ஆங்கிலமாக மாறுகிறது.

சரி, தாய் மொழியைப் பற்றி பேசினோம். இப்போது மொழி வெறியைப் பற்றியும் பார்க்கலாமே.

ஒருவனுக்கு மொழிப் பற்று வேண்டும். ஆனால் அதுவே மொழி வெறியாகக் கூடாது. எல்லா மொழிகளிலும் ஒரு விதத்தில் ஒரு தனிச் சிறப்பு  இருக்கும். அந்த மொழி பேசுபவர்களுக்கு அந்த மொழி அவர்களது தாய்ப்போல்தான். அந்தத் தாயை நாம் உதாசீனம் செய்ய உரிமை இல்லை. அதற்குப் பதிலாக நாம் அந்த மொழிகளிலும் ஆர்வம் காட்டிக் கற்றுக்கொண்டோமானால் மன தைரியத்துடன் இந்தியாவைப் பவனி வரலாம். நம் இலக்கியங்களுடன் அவர்களுடையவற்றையும் ஒப்பிடலாம். மொழி பெயர்க்கலாம் சிறப்பை ஆராயலாம்.

இதில் எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவம் என் சிந்தனைக்கு வருகிறது……

இந்த மொழி வெறியால் நாங்கள் பட்ட மனக் கஷ்டம், பணக் கஷ்டம், இன்னும் என் மனத்தில் பதிந்து  இருக்கிறது. இது  ஒரு கசப்பு அனுபவந்தான்…….

ஒரு தடவை பள்ளி மாணவ மாணவிகளுடன் தில்லியிலிருந்து கன்னியாகுமரி வரை நீண்ட சுற்றுலா போனோம். எல்லோரும் பஞ்சாபி, ஹிந்தி பேசும் குழந்தைகள். எங்களுக்குப் பெங்களூரில் தங்க  விவேகானந்த மடத்தில் இடம் கொடுத்திருந்தார்கள். நாங்கள் ஹைதராபாத்திலிருந்து பெங்களூர் வந்து இறங்கினோம். ஒரு பேருந்தில் ஏறி, மடத்தை நோக்கிப் புறப்பட்டோம்.

அன்றிரவே கன்னியாகுமரிக்கும் போக வேண்டும். சரியான வழி தெரியாததால் உத்தேசமாக ஒரு இடம் வந்து, ஒரு இடத்தில் பேருந்தை நிறுத்தி, ஒரு இளைஞர் கூட்டத்தினிடம் மடத்தைப் பற்றிக் கேட்டோம். கன்னடம் தெரியாததால் ஆங்கிலத்திலும் பின் ஹிந்தியிலும் கேட்டோம். ஒருவன் கன்னடத்தில் ஏதோ சொல்ல, மற்றவர்கள் சிரிக்க, பின் ஒருவன்  வடக்கு திசையைக் காட்டி முப்பது கிலோ மீட்டர்….. கோ கோ என்று சொல்லியவுடன் எல்லோரும் “கொல்” என்று சிரித்தனர். அவர்கள் ஏன் சிரிக்கிறார்கள் என்றும் புரியவில்லை.

பின் நாங்கள் அவன் சொன்ன வழியே வந்து சுற்ற….. ஒரே சுற்றலோ சுற்றல்….. ஒன்றும் தென்படவில்லை. குழந்தைகள் பாணி… பாணி என்று  அலர, பசியாலும் சுற்றலாலும் எல்லோரும் களைத்துப் போக, பேருந்து ஓடிக்கொண்டே இருந்தது. பின் வண்டி ஒரு இடத்தில் நிறுத்தப்பட்டது.
அப்போது ஒரு பெரியவர் தன்  வண்டியிலிருந்து  இறங்கி, ஒரு கடைக்குப் போனார். அவரைப் பார்க்கத் தமிழர் போலிருந்தது.

நான் அவரைத் தொடர்ந்து இந்த முகவரியைப் பற்றிக் கேட்டேன். அதற்கு  அவர் “என்ன! எதிர்ப் பக்கமாக ரொம்ப தூரம் வந்து இருக்கிறீர்கள்? ஏன் இவ்வளவு தூரம் வந்தீர்கள்? அந்த இடம் ரயில் நிலையத்தின் பக்கம் தானே உள்ளது” என்றார். பின் புரிந்தது, அந்த மொழி வெறியர்கள் செய்த கூத்து இது என்று.
அந்தப் பெரியவர் எங்கள் நிலைமையைப் புரிந்துகொண்டு அவர் காரில் என்னை ஏற்றிக்கொண்டு வழியும் காண்பித்தார்.

அப்போது அவர் சொன்னது, “இங்கு கன்னடம் பேசுபவர்களுக்குத்தான் மரியாதை. வேறு மொழிகளை ஒப்புக்கொள்வதில்லை. பேருந்திலும்  கன்னடம் தான் எழுதியிருக்கும்” என்றார். அதற்கு என்று இப்படி ஒரு வெறியா? குழந்தைகளின் பிஞ்சு முகத்திற்காகவாவது யோசித்திருக்க வேண்டாமா? நாங்கள் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் பேசியதற்கு இது தண்டனையா?

பின் நாங்கள் விவேகானந்த மடம் வந்தவுடன் அங்கிருந்த காரியதரிசி நாங்கள் வெகு நேரம் வராதது கண்டு, பூட்டி சாவி எடுத்துக்கொண்டு வீடு போய்விட்டார். நாங்கள் 60 பேர்கள் தங்க இடமில்லை. அறுபது பேர்கள் நடு வீதியில்தான். வீதியோர இட்லிக்காரருக்கு எங்களால் நல்ல லாபம்.

இதை எல்லாம் பார்த்த ஒரு ஹோட்டல் முதலாளி, பெரிய மனது செய்து, எங்களை ஒரு ராத்திரிக்கு தங்க ஒரு பெரிய அறை கொடுத்தார். அது உக்கிராண் உள் எனப்படும் இடம். அதில் அரிசி மூட்டையிலிருந்து பலசரக்குப் பொருட்கள் நிரம்பி இருந்தன. இரவு வந்து விட்டது. அத்தனை பேர்களும் ஒருவர் மேல் ஒருவர் பொத்தென்று விழுந்தனர். அவ்வளவு களைப்பு… அலைச்சல்… ஒரு சின்ன விளக்குப் போடப்பட்டது.

ஆனால், சற்று நேரத்தில் பல கரப்புகள் படை எடுத்தன. சில விர் என்று பறந்து, தங்கள் வலிமையைக் காட்டின. குழந்தைகளுடன் நானும் சேர்ந்து வீல் என்று கத்த, அன்று சிவராத்திரி ஆயிற்று. நாங்கள் பயப்பட, அவை எங்கள் பக்கமே பாசத்துடன் வந்தன. எங்கள் மேல் அளவு கடந்த  அன்பு போலிருக்கிறது.

ஒரு வேளையாகக் காலை வந்தது. அந்த ஹோட்டல் முதலாளி, நாங்கள் பட்ட கஷ்டத்தைக் கேட்டு, மனித நேயத்துடன் பல  அறைகள் இலவசமாகக் கொடுத்து, சாப்பாடும் தந்து எங்களைக் குளிர வைத்தார். அந்தப் புண்ணியவானை மறக்கமுடியுமா? மறுநாள் {எங்களுக்காக} இரண்டு தனிப் பெட்டிகள் ரயிலில் சேர்க்கப்பட்டு விடப்பட்டன. இவை வெகு வேகமாகச் செயல்படக் காரணம் என்ன தெரியுமா? எல்லாம் பிரார்த்தனையும் தேவியின் அருளும் தான்.

ஆம், என் பள்ளிக்குத் தலைவராக இருந்தவர், நாட்டின் முக்கிய மந்திரி எஸ்.பி. சவான் அவர்கள் தான். நாங்கள் அவரிடம் தொலைபேசியில் பேச, எல்லாமே சுப மங்களம் தான்.

மொழிப் பற்று வைப்போம். மொழி வெறி தவிர்ப்போம்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “மொழி வெறி

  1. அருமையா எழுதி இருக்காங்க. எனக்கும் இந்த மொழி வெறியினால் சில அநுபவங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அவை அறுபதுகளில் ஹிந்தி எதிர்ப்பின் போது மதுரையில் நடந்த கலவரத்தின் போது என் தந்தை மதுரையிலேயே ஒரு உயர்நிலைப்பள்ளியின் ஹிந்தி ஆசிரியராக இருந்தமையால் ஏற்பட்ட சில கசப்பான அநுபவங்கள். 🙁 உண்மைதான், மொழிப்பற்றுக்கும், மொழி வெறிக்கும் வித்தியாசம் உண்டுதான்.

    ஆனால் கர்நாடகாவின் உள்ளே மலைப்பிரதேசக் கிராமங்களில் கூட நாங்கள் பயணம் செய்த வரைக்கும், அங்கே அநேகமாய் அனைவருக்கும் ஹிந்தி கொஞ்சம் புரிந்து கொள்ளும் அளவுக்குத் தெரிந்திருக்கிறது. நாங்க போனது 2006-ம் வருஷம் கடைசியாய்ப் போனோம். அதற்குப் பின் பங்களூர் வரையும் சில சமயம் சென்றிருக்கிறோம். அங்கேயும், தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் நன்றாய்ப் புரிந்து கொள்கின்றனர். ஆனால் ஒவ்வொருவர் அநுபவமும் ஒவ்வொரு மாதிரி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *