மக்கள் கேட்கும் கேள்விகள் (1)

3

பவள சங்கரி

தலையங்கம்

உயர்திரு அன்னா ஹசாரே அவர்களே,

ஒரு கட்சி ஆட்சியில் இருக்கும் பொழுது அவர்களுக்கு எதிராக அதாவது அவர்களின் ஊழலுக்கு எதிராகப் போராடுவதாகக் கூறி சமீபத்தில் தலைநகரில் நீங்கள் போராட்டம் நடத்தினீர்கள். ஊழலுக்கு எதிரான சட்ட முன் வடிவம் பாராளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்பட்டது. இதை நிறைவேற்றிய ஆளும் கட்சியினரும் இதற்குத் துணை நின்ற எதிர் கட்சியினரும் ஊழலை ஒழிப்பதில் உண்மையாக அக்கறை உடையவராக இருப்பதாக நீங்கள் கருதுகிறீர்களா? தேர்தல் சமயமான இந்த நேரத்தில் அனைத்துக் கட்சியினரும் ஊழலில் திளைத்தவர்களை தங்களுடைய வேட்பாளராக அறிவித்துள்ளனரே, நீங்கள் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? ஜெயப்பிரகாஷ் நாராயணன் மற்றும் அண்ணல் காந்தியடிகள் போல் போராடாமல் அமைதி காப்பதற்கு என்ன காரணம். நீங்கள் போராட வேண்டிய இத்தகைய நேரத்தில் அலட்சியப் போக்குக் காட்டுவதை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைக்கிறீர்களா?

இன்னும் கேட்க வேண்டிய கேள்விகளும், பதில் சொல்ல வேண்டிய தலைவர்களும் நிறையவே இருக்கிறார்கள்?

வாக்களிப்போம்!

ஊழற்ற அரசை உருவாக்குவோம்!!

விலை போகாமல் வாக்களிப்போம்!!!

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “மக்கள் கேட்கும் கேள்விகள் (1)

  1. கிளம்பிட்டாங்கையா ….கிளம்பிட்டாங்க…..யார் யார் தலை உருளப்போகுதோ தெரியல்லீயே !!!!

  2. அண்ணா ஹசாரே மகாராஷ்டிராவில் சிற்சில போராட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர். நர்மதா அந்தோளன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அம்மையாருடன் சேர்ந்து இவரும் போராடியதால் பெயர் வெளியே தெரிந்தது. டெல்லிக்கு வந்து ஊழலுக்கு எதிரான போராட்டம், உண்ணாவிரதம் என்று தொடங்கியபின் ஊழலை வெறுத்த இளைய தலைமுறையினர் இவர் ஏதோ சாதிக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பில் இவர் பின்னால் திரண்டெழுந்தனர். இவரைப் பின்பற்றி பல பிரபலங்கள் உட்பட சாதாரணமானவர்களும் இவர் அணியில் சேர்ந்து கூட்டம் சேர்த்தனர். அவர்களில் நம்பகத்தன்மை உடையவர்கள் போலீஸ் அதிகாரி ஒருவர் தவிர மற்றவர்கள் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு தன்னை முந்நிலைப் படுத்திக் கொண்டவர்கள். அப்படிப்பட்ட சந்தர்ப்பவாதிகளுள் கேஜ்ரிவாலும் ஒருவர். கூட்டம் சேர்ந்தால் அண்ணன் ஹசாரே சண்டப்பிரசண்டனாக ஆகிவிடுவார்; கூட்டம் குறைந்தால் எல்லோருக்கும் “டேக்கா” கொடுத்துவிட்டுப் போய்விடுவார். அவர் ஒரு மண் குதிரை. அவரால் எதையும் சாதிக்கவும் முடியாது; பிறரை சாதிக்க வைக்கவும் முடியாது. நூற்றாண்டைக் கடந்த பெரிய பெரிய ஆல மரங்கள் நின்றிருக்க நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்கள் ஆலமரங்களைப் பார்த்து சவாலுக்கு அழைப்பது வேடிக்கையாக இருக்கிறது. அண்ணா ஹசாரேயைப் பார்த்து எத்தனை கேள்விகள் கேட்டாலும் எந்தப் பயனும் இருக்காது. மக்கள் சக்தி ஒன்றுதான் ஊழலுக்கு எதிராகப் போராட முடியும்; அண்ணா ஹசாரே, கேஜ்ரிவால் போன்ற விதூஷகர்களால் எதுவும் ஆகாது. தங்கள் தலையங்கம் இந்தப் போலிகளுக்கு விடுக்கப்பட்ட சவாலாகக் கருதுகிறேன். ஆனால் எந்த பதிலும் வராது அவர்களிடமிருந்து.

  3. ”என்னங்க உங்களோட ஒரே தொல்லையாப்போச்சு. நான் சும்மா தூங்கிட்டிருந்தேன். ஏதோ கனவுல காந்தி வந்துப்புட்டாரு. நானும் தூங்கி எழுந்திரிச்சி ஏதோ நெனப்புல டெல்லில வந்து உக்கார்ந்துப்பிட்டேன். நீங்களும் நான் ஏதோ பெருசா செய்யப் போறேன்னு நினைச்சு என் பின்னாடி வந்தீங்க. நான் என்ன காந்தியா, தண்டி யாத்திரையும், நவகாளி யாத்திரையும் போறதுக்கு.. இது சும்மா வெள்ளாட்டுக்குத்தான… ஜெயப்பிரகாஷ் நாராயணன் மாதிரி உங்க எல்லாத்தையும் திரட்டிக்கிட்டு, சக்கர நாற்காலீல உட்கார்ந்துகிட்டு நான் சண்டை போடப் போறேன்னு சொன்னேனா.. சும்மா என்னை உசுப்பேத்தாதீங்க சாமீ… ” இப்புடீன்னு சொல்லுவார் பாவம் பெரியவரு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *