வி.பாலகுமார்

 

இன்மைஉணர்தல்

ஆகாயத்தை எட்டிப்பிடிக்க முயன்று கொண்டிருக்கும் காரைக்கட்டிட அட்டைப்பெட்டி அலுவலகத்தின் புழுக்கத்திலிருந்து வெகு தூரம் தள்ளி வந்து, தனித்து வியாபித்திருக்கும் பெரிய பூவரசமரத்தில், பறவைகள் அடையும் சத்தத்தினூடே இதனை எழுதத் துவங்குகிறேன் மணிமொழி ! உன் வீட்டு மொட்டை மாடியில் வடகிழக்கு மூலையில் உள்ள திண்டில் பறவைகள் வந்து நீர் அருந்தட்டுமென வைத்திருக்கும் வாய் அகலமான தண்ணீர்த் தொட்டியில் குறைந்திருக்கும் நீர் அளவைப் பார்த்து, உனக்கு மிகப்பிரியமான மிக்கி மௌஸ் படம் போட்ட ஊதா நிற பிளாஸ்டிக் குவளையை வலது கையால் பிடித்து நீர் கோரி தொட்டியை நிரப்பியபடி, காற்றில் படபடக்க விடாமல் லாவகமாய்  பிடித்த படி கண்களாலும், கழுத்தாலும் உன் பிரத்யேக செய்கையசைவில் வளைந்து வளைந்து, இடது கையில் பிடித்திருக்கும் இந்தக் கடிதத்தை வாசித்துக் கொண்டிருப்பதாய் கற்பனை செய்து பார்க்கிறேன். உன் வீட்டுக் கொல்லையில் இருக்கும் வேம்பு காய்க்கும் பருவமல்லவா இது. மொட்டை மாடியெங்கும் வேப்பம்பழங்கள் சிதறிக் கிடக்க, அவற்றை சேகரித்து வட்டவட்டமாய் உருவம் அமைத்து மொட்டைமாடியெங்கும் சிரிப்பான்களாய் பரப்பி வைத்திருப்பாயே, அது ஏனோ இன்று காலை எழும் போதே நினைவில் வந்தது. இல்லை, அப்படிக்கூட சொல்ல முடியாது. அந்த வேப்பம்பழ சிரிப்பான்கள் தாம் கனவில் வந்து பொழுது புலர்வதற்கு முன்பாகவே என்னை எழுப்பி விட்டன. அது முதலே, ஒரு இனம்புரியாத பரவசம் என் மனமெங்கும் சிறகடிக்கத் துவங்கி விட்டது. எழுந்து தேநீர்க்கடைக்குச் சென்றால், அங்கே அடுத்த ஆச்சர்யம் ! நூலகத்தின் நிசப்தத்தில், முல்லை நிலத்து வாழ்க்கை முறையை நாம் குறிப்பெடுத்துக் கொண்டிருந்த, மென்தூறல் விழுந்த இளமாலைப் பொழுதில் நீ உயிரைக் குழைத்து, என் கண்ணீர்க்குளங்களை தழும்பச் செய்து சன்னமான குரலில் எனக்காக மட்டும் பாடிய “கங்கைக்கரைத் தோட்டம்” ஒலித்துக் கொண்டிருந்தது.

உயிருடனான முழு விலங்கை வாய் கொள்ளாமல் முழுங்கும் மலைப்பாம்பைப்போன்று நீண்ட பாலங்களாலும், தங்க நாற்கரச்சாலைகளாலும் சுற்றியிருந்த கிராமங்களை எல்லாம் தனக்குள் இழுத்துச் செறித்து, மீந்ததைத் துப்பி விரிவாக்கப்பகுதிகளாக தள்ளி வைத்திருக்கும் இந்த பெருநகரத்தின் ஒரு மூளையில் சந்திப்புச்சாலையைத் தாண்டி ஒடுங்கிப்போயிருக்கும் இந்த சிறு தேநீர்க்கடைக்குள்ளும், உயிர் கசியும் ஒரு தேவநொடியை எங்கிருந்தோ மீட்டுக்கொண்டு வர முடிகிறது, இந்த இசையினால். ”கண் திறந்து பார்த்தேன், கண்ணன் அங்கு இல்லை” என்று சுசீலாம்மாவின் குரலில் உன் விசும்பலை நினைத்த அந்த கணம், என்னையும் அறியாமால் கண்கள் கசிந்து அமர்ந்திருந்தேன். என்றோ நிகழ்ந்த ஒரு உன்னத நிகழ்வின் ஞாபகச்சரடு காலங்களுக்குள் எத்தனை முறை நம்மை மீண்டும் மீண்டும் பிணைத்துக் கொள்ளுமோ, மொழி ! அலைபேசி அலாரத்தை குறைந்தது ஒரு மணி நேரத்திற்க்காகவேணும் கண்ணயர்வு கொள்ளச் செய்து தினமும் கடிகாரத்துடன் சண்டையிட்டு அடித்துப்பிடித்து அலுவலகத்துக்கு விரைபவன் நான். இன்று உனது வேப்பம்பழ சிரிப்பான் அதிகாலையே என்னை எழுப்பி விட்டு, அதிசயமாய் தேநீர்க்கடைக்கும் செல்ல வைத்து, அங்கே ஒரு மகிழ்ச்சிப் பொட்டலத்தையும் இசையாய் விரித்து வைத்திருந்தது. அந்த மென்கீதத்தின் ரீங்காரத்தூடே அறைக்கு வந்து, நிதானமாக அதே சமயம் பரவசமாக இதழ்களுக்குள் மெல்லியதொரு புன்னகையை பரவ விட்ட படியே ஆயத்தமானேன்.

எவ்வளவு நிதானமாகக் கிளம்பி, தயாரான பின்னும் அலுவலக வாகனம் எங்கள் பகுதிக்கு வந்து சேர இன்னும் இரண்டு மணிநேரமிருந்தது. அதற்கு மேல் அறைக்குள் இருப்புக்கொள்ளவில்லை. மெதுவாக தெருமுனைக்கு வந்தேன். அந்தப்பகுதி அவ்வளவு அமைதியாக இருக்கமுடியுமா என்று ஆச்சர்யமாக இருந்தது. ஆறரை மணிக்கும் எட்டரை மணிக்கும் இடையில் உள்ள உவமிப்பு பிரம்மிப்பூட்டுவதாக இருந்தது. தெருமுனையில் இன்னும் தண்ணீர் லாரி வந்திருக்கவில்லை. ஷேர் ஆட்டோக்களின் சாகசங்கள் இன்னும் தொடர்ந்திருக்கவில்லை. வழக்கமாக எட்டரை மணி சுமாருக்கு, தலை நிறைய எண்ணெய் தேய்த்து வகிடெடுத்து படிய சீவி விட்டு, எண்ணெய்க் கைகளில் பாண்ட்ஸ் பவுடர் கொட்டி குழந்தைகளின் முகங்களை வெள்ளையடித்து, பொதியேற்றி பள்ளி வாகனத்திற்குள் திணிக்கும் வழக்கமுள்ள புறநகரத்துப் பெண்மணிகள் அப்பொழுது தான் அன்றைய தினத்தின் முதல் வேலையாக வாசல் தெளிக்கத் துவங்கியிருந்தனர். வீட்டு வாசல்களில் படுத்திருந்த தெருநாய்கள் தண்ணீர் பட்டும் பதற்றம் காட்டாமல், மெதுவாக எழுந்து நெட்டி முறித்து ஓரமாய்ச் சென்று மறுபடியும் படுத்துக் கொண்டன. அந்தப்பகுதியின் அடையாளமாக, தங்கள் இருப்பை எப்போதும் சத்தமிட்டு பறைசாற்றி தங்களுக்குள் சத்த யுத்தம் நடத்தும் இரும்புப்பட்டறைகள் யாவும் இன்னும் துயில் எழுந்திருக்கவில்லை. மூடியிருக்கும் அந்த பட்டறைகளின் கனத்த கரந்தியல் சாத்திகளின் மீது தியானித்திருக்கும் கடவுளின் உருவங்கள் வரையப்பட்டிருந்தது ஆச்சர்யமாக இருந்தது. காலியான அதிகாலை நேரத்து தெருக்களைப் பார்க்கும் போது, அவை இரவில் அகலமடைந்து, பகல் செல்லச்செல்ல சுருங்கிக் கொள்கின்றனவோ என்று தோன்றியது.

நகரப்பேருந்துகள் காலியாகக் கூட செல்லும் என்று இன்றைக்குத் தான் தெரிந்தது, மொழி ! ஒரு ஜன்னலேர இருக்கையை தேர்ந்து சாலையை மௌனமாய் பார்த்தபடியே பயணம் செய்தேன். அடுக்கங்களின் சிறு முன்றில்களில் வளர்க்கப்படும் போன்சாய் மரங்களைப் பார்த்து நீ விசனம் கொண்ட நிகழ்வு, அன்னிச்சையாய் நினைவுக்கு வந்தது. பிராணிகளை வளர்க்கத் தடையுள்ள, வாரமொரு முறை  தாழ்வாரங்களை ஆள்வைத்து சுத்தம் செய்து, அங்கே கூடுகட்ட எத்தனிக்கும் புறாக்களை அதைரியம் கொள்ளச்செய்யும் அடுக்குமாடி குடியிருப்போர் சங்கத்தின் அறிக்கையொன்றில் நீ செய்து காண்பித்த கத்திக்கப்பல் மனதில் தோன்றியது. ஒரு மணிநேரப்பயணத்தின் முழுமைக்கும் என் அருகில் நீ அமர்ந்து வருவதாகவே எண்ணிக் கொண்டேன் மொழி ! நாம் வாசித்த கவிதைத் தொகுப்புகளை, புதினங்களை, சிறுகதைகளை நீ ஓயாமல் பேசிக்கொண்டே வந்தாய், பேருந்துக்கு வெளியே எதிர் திசையில் விரைந்து கொண்டிருக்கும் மிதமான குளிர்க்காற்றை, அவ்வப்பொழுது வலது கையால் தடுத்து உன் முகத்துக்கு நேராக திருப்பி விட்டுக் கொண்டே வந்தேன். காற்றிலாடும் முடியை காதிற்கு பின் தள்ளியபடியே நீ பேசிக்கொண்டே வந்தாய். அலுவலக நிறுத்தம நெருந்துவதை உணர்ந்து உன்னை அப்படியே விட்டுவிட மனமில்லாது தவித்தேன். பின், அலுவலகத்திற்கு முந்தைய நிறுத்ததிலேயே இறங்கி, அருகிலிருந்த மரங்களடர்ந்த பூங்காவிற்குச் சென்றேன். விடாமல் தொடர் கேள்வி கேட்டுக் கொண்டு, தம் அப்பாக்களை வழி நடத்திச் செல்லும் சிறு பெண் குழந்தைகளின் நடைப்பயிற்சியால் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தது அந்த காலை நேரத்து பூங்கா. அந்த சிறுமிகளைப் பார்த்து புன்னகைத்தபடியே மூச்சுப்பயிற்சி செய்து கொண்டிருந்த முதியவர்களின் முகங்கள் பரிசுத்தமாய் காட்சியளித்தன. பூங்காவின் பெரும்பகுதி தெரிவது போன்ற இடத்தைத் தேர்ந்து, அங்கேயிருந்த இருக்கையில் அமர்ந்தேன். கண்களை மூடி ஆழ்மூச்சில் சுவாசிக்கத் துவங்கியவுடன், அருகில் மஞ்சளின் வாசமும், செம்பருத்தியின் மணமும் கலந்த உன் வாசனையை நுகர்ந்து அருகில் நீ அமர்ந்திருப்பதை உணர்ந்தேன். கண்கள் மூடிய படியே உன் அருகாமையை ரசித்தபடியே வெகு நேரம் அமர்ந்திருந்தேன் மொழி ! வெயில் மெல்ல ஏறத்துவங்கியவுடன், அங்கிருந்து நடந்தே அலுவலகம் செல்வதென முடிவெடுத்து மெதுவாக அலுவலகம் சென்றடைந்தேன். எனக்குத் தெரியும் மொழி, பூங்காவில் இருந்த நீ, அங்கே கண்ணிற்குத் தட்டுப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் ஒரு செல்ல பெயர் வைத்திருப்பாய், மரங்களிலிருந்து உதிர்ந்த ஒவ்வொரு மலரோடு ஏதேனும் ஒரு ரகசிய மொழி பேசியிருப்பாய். பகலா, இரவா, வெளியே மழையா, வெயிலா, என்ன நேரம் என்ன திசை என்று கூட அறிந்து கொள்ள முடியாத கருப்புக் கண்ணாடிகள் பதித்த அடுக்குமாடி அலுவலம் உனக்கு பிடிக்காது என எனக்குத் தெரியும். எனவே தான் உன்னை உனக்குப் பிடித்தமான பூங்காவிலேயே இருக்கும் படி நினைத்துக் கொண்டேன்.

இன்று முதல் ஆளாக அலுவலகம் வந்து இருந்தேன். மனம் முழுதும் நீயே நிறைந்து இருந்தாய். என் இன்றைய தினத்தின் பூரிப்பை, அகவெழுச்சியை, உள்ளே பொங்கும் மனவூற்றை எப்படி வெளிக்காட்டுவது என்று சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே அலைந்தேன். நாள் முழுமைக்கும் யாருடனும் பேசப்பிடிக்கவே இல்லை. நிமிடத்துக்கொரு முறையென கணினியிலும் , அலைபேசியிலும் ஆயிரக்கணக்கான சிரிப்பான்களை குறுந்தகவல்களாக, மின்னஞ்சல்களாக எனக்கு நானே அனுப்பிக் கொண்டேன். அதை நான் திறந்து பார்க்கும் போதும் மஞ்சள் நிறத்தில் ஒளிரும் ஒவ்வொரும் சிரிப்பானிலும் வேப்பம்பழத்தின் வாசமும், உன் வெள்ளந்திச்சிரிப்பின் வாசமும் மாறி மாறி வீசிக் கொண்டே இருந்தது. இந்த நாளை முழுமையாக அனுபவிக்க வைத்தாய் மொழி, இன்று என்னை மீண்டும் நானாய் உணர வைத்திருக்கிறாய் மொழி. நமது இந்த பிரிவு  உன் காதலை, நட்பை, அருகாமையை, இருப்பை, தேவையை, உன்னை எனக்கு உணர்த்தியிருக்கிறது மொழி !

உன் தாய் வீட்டிற்குச் சென்றிருக்கும் இந்த சிறு விடுமுறைப்  பிரிவில், ஆழத்தில் புதைந்து கொண்டிருந்த நம் காதலை உன் சிரிப்புருவினால் மீட்டெடுத்திருக்கிறாய் மணிமொழி ! உன்னை உன் வெகுளித்தனங்களோடும், ரசனையோடும், குழந்தைமையோடும் காதலிக்கும் உன் உயிர்த்தோழனை, நம் திருமணமான இத்தனை நாளில் தினப்பாடுகளுக்கும், அலுவலக வேலைப்பளுவுக்கும், எரிச்சல்களுக்கும், பொறுமையின்மைக்கும், நோய்மைக்கும் ஒப்புக் கொடுத்து விட்டு, ஒரு சராசரி கணவனாய் மட்டும் இருந்திருக்கிறேன் என்பதை இந்தப்பிரிவினால் உணர்த்தியிருக்கிறாய் மணிமொழி ! உன்னை நீயாய் இருக்க வைப்பதற்கான எல்லா முயற்சிகளையும் மனதாரச் செய்யும் உன் உற்ற தோழனாய் என்னை பழையபடி மாற்றியிருக்கிறாய் மணிமொழி ! போதும், நீ பாசமாய் வளர்த்த வேப்பமரத்துக்கும், மருதாணிச்செடிக்கும், உன் தாய்வீட்டுக்கும் அவசரமாய் ஒரு பிரியா விடை கொடுத்து விட்டு உடனே நம் வீட்டுக்கு வா என் அருமை மனைவியே !

இப்படிக்கு

உன் இன்மையில் உன்னை முழுவதுமாய் உணரும் உன் கணவன்.

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “அன்புள்ள மணிமொழி!..

  1. பிரிவாற்றாமையை இவ்வளவு நயம்பட சுவைபட எழுதமுடியுமா?
    ஒவ்வொரு சொல்லும், மனத்தின் ஆழத்தில் இருந்து எழுதப்பட்டு உள்ளது.
    நல்ல உவமை நயங்கள். The beauty of this essay is the author’s frankness.

    தென்திசைபாலா எனப்படும் பாலகுமாரின்
    புகழ்பரவும் இனி எண்திசை…

    ……பழனியப்பன்

Leave a Reply to வி.பாலகுமார்

Your email address will not be published. Required fields are marked *