சக்தி சக்திதாசன்

LBCBD2 LBCBD4

 

அன்பினியவர்களே !

இனிய வணக்கங்கள்.

புதியதோர் வாரத்திலே புதியதோர் மடலுடன் உங்களுடன் உறவாட வந்துள்ளேன்.

அவசரமான உலகம், அவசரமான வாழ்க்கை . இந்த வாழ்க்கையை மிகவும் அவசரமாகவே வாழ்ந்து முடித்துவிட காலத்தோடு போட்டி போட்டுக் கொண்டு முண்டியடித்துக் கொண்டு ஓடும் சமுதாயங்கள்.

இன்றைய காலகட்டத்திலே சமுதாயங்களுக்கிடையில் பல்வேறு பிரச்சனைகள் தலைதூக்குகின்றன. அன்றாட வாழ்க்கைச் சிக்கல்களுக்கு விடையை எம்மை அரசாளும் அரசியல்வாதிகள் தருவார்கள் எனும் நம்பிக்கையோடு வாழும் மக்கள் கூட்டம்.

ஆனால் பல்வேறு முக்கியமான் மக்கள் பிரச்சனைகள் வாதிடுவதற்கு சிக்கலாக இருப்பதனால் பல்வேறு அரசியல்வாதிகளால் ஒரு மூலையில் ஒதுக்கி வைக்கப்படுகின்றன. அவை ஒதுக்கி வைக்கப்பட்டு விட்டன என்பதற்காக அவைகள் அப்படியே மக்கள் மனங்களில் இருந்து மறைந்து போய்விடுவதில்லை.

மாறாக நீறுபூத்த நெருப்புப் போல மக்கள் மனங்களில் புகைந்து கொண்டுதானிருக்கின்றன. மிகவும் சர்ச்சைக்குரிய விடயம் என்பதற்காக முக்கியமான விடயங்கள் பகிரங்கமாக விவாதிக்கப்படாமல் விடுபட்டு போவது கவலைக்குரிய விடயமே !

ஜனநாயக அரசியல் நீரோட்டத்திற்கு இத்தகைய விவாதத் தவிர்ப்பு ஓர் இழப்பு என்றே கூற வேண்டும்.

எங்கே இந்த ஆரம்பம் எம்மை அழைத்துச் செல்கிறது என்று நீங்கள் ஆரய முற்பட வேண்டியதில்லை இதோ விடயத்திற்கு வந்து விடுகிறேன்.

இங்கிலாந்திலுள்ள மக்களின் வாழ்க்கை வசதிகளில் ஏற்பட்ட தாக்கங்கள். நிலைகுலைந்த பொருளாதாரத்தைச் சீராக்க கூட்டரசாங்கம் எடுத்த மிகக்கடுமையான பொதுச்சேவைக்கான செலவீனக்குறைப்பு என்பனவற்றின் அதீத தக்கங்கள்,

வேலையில்லாத் திண்டாட்டத்தின் எதிரொலிப்பு, வாழ்க்கையின் அடிமட்டத்தில் வாழும் மக்களுக்காக வழங்கப்படும் உதவிகளில் ஏற்படுத்தப்பட்ட கடும் போக்குகளின் தாக்கங்கள் என்பன இங்கிலாந்துக்கு வெளிநாடுகளில் இருந்து வந்து குடியேறுவோர் மீதான இந்நாட்டு மக்களின் அதிருப்தியின் அளவை அதிகரித்திருக்கிறது என்பது கசப்பான உண்மை.

அன்றாடம் ஊடகங்களில் இதைப்பற்றிய கருத்தாடல்க அதிக அளவில் இடம்பெறுவதே இதற்குரிய சான்றாகிறது.

இதை இங்கிலாந்து இனத்தவரின் இனவிரோதப் பார்வை என்று ஒதுக்கி வைத்து விட முடியாது. ஏனெனில் இங்கு வந்து வாழும் ஆசிய ஆபிரிக்க மக்களின் பார்வையும் இத்தகைய வெளிநாட்டவரின் வருகையை நோக்கி அதிருப்தியானதாகவே தென்படுகிறது.

ஆனால் இதைப்பற்றிய பகிங்கரமான சர்ச்சைகளை முக்கிய அரசியல் கட்சிகளின் தலலவர்களால் எங்கே தாம் இனவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டுவிடுவோமோ எனும் அச்சத்தினால் தவிர்க்கப்பட்டே வந்திருக்கிறது.

இங்கிலாந்து ஜரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவத்திலிருந்து தம்மை அகற்றிக் கொள்ள வேண்டும் எனும் வாதத்தை முன்வைத்து ஜக்கிய இராச்சிய சுதந்திரக் கட்சி (UKIP) என்று ஒரு அரசியல் கட்சி ஆரம்பித்து நடத்தி வருபவர் நைஜல் ப்றாஜ் (Nigel Farage) என்பவர்.

இங்கிலாந்தின் மூன்று முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றும் தற்போதைய கூட்டரசாங்கத்தின் பங்காளிக் கட்சியுமான லிபரல் டெமகிரட்ஸ் கட்சியின் தலைவர் நிக் கிளேஹ் (Nick Cleg). இவர் தனது கட்சியின் அழுத்தமான கொள்கையான இங்கிலாந்து ஜரோப்பிய ஒன்றியத்தில் முக்கியமான பங்கு வகிக்க வேண்டியது தவிர்க்க முடியாது என்பதில் மிகுந்த அழுத்தமாக இருப்பவர்.

நிக் கிளேக் ஒவ்வொருவாரமும் லண்டனின் பிரசித்தி பெற்ற எல்.பி.சி (LBC) எனும் வானொலியில் அதன் பிரசித்தி பெற்ற காலைநேர ஒலிபரப்பாளரான நிக் வெராரி (Nick Ferrari) என்பவர் நடத்தும் காலைநேர ஒலிபரப்பில் வியாழக்கிழமைகளில் பங்குபற்றி நேயர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பது வழக்கம்.

சமீபத்தில் அப்படியான ஒரு நிகழ்வின் போது நிக் கிளேஹ் , நைஜல் ப்ராக் என்பவருக்கு பகிரங்கமாக இவ்வானோலியில் நிக் வெராரி தலைமையில் இங்கிலாந்து ஜரோப்பிய ஒன்றியத்தில் பங்கு பற்ற வேண்டுமா? வேண்டாமா? என்று விவாதிக்க வரும்படி அறைகூவல் விடுத்தார்.

விடுவாரா ? நைஜல் ப்ராக் ஏற்றுக் கொண்டார். இலவசமாக தனக்கும் தனது கட்சிக்கும் கிடைக்கும் வானொலி விளம்பரத்தை ஏன் தவிர்க்கப் போகிறார் ?

விளைவு !

நேற்று மாலை அதாவது மார்ச் 26ம் திகதி 7 மணிக்கு நிக் வெராரி தலைமையில் லிபரல் கட்சித் தலைவர் நிக் கிளேஹும் , ஜக்கிய இராச்சிய சுதந்திரக் கட்சியின் தலைவர் நைஜல் ப்ராக்கும் இங்கிலாந்து ஜரோப்பிய ஒன்றியத்தில் பங்கு பற்றுவதின் சாதகங்களையும், பாதகங்களையும் பற்றிய பகிரங்க விவாதத்தில் ஈடுபட்டார்கள்.

இங்கிலாந்து ஜரோப்பிய ஒன்றியத்தில் இருப்பதன் அவசியத்திற்காக நிக் கிளேஹ் உம் , இங்கிலாந்து ஏன் ஜரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கக்கூடாது என்பதன் காரணத்தை நைஜல் ப்ராக் உம் விவாதித்தார்கள்.

இவ்விவாதத்திலே யார் சரி, யார் பிழை என்பதல்ல எனது இம்மடலுக்கான காரணம். இத்தகைய விவாதம் ஜனநாயகத்திற்குக் கிடைத்த ஒரு பெரும் வெற்றி எனும் எனது தாழ்மையான கருத்தை எனது இனிய வாசகர்களான் உங்களுடன் பகிர்ந்து கொள்வதே இம்மடலின் நோக்கம்.

மிகவும் சிக்கலான விடயம் என்பதற்காக மக்களின் மனதில் முக்கியமாகக் கருதப்படும் ஒரு விடயத்தை ஓரங்கட்டி விடுவது என்றுமே ஆராக்கியமான ஜனநாயகத்திற்கு வழிவகுக்காது.

மாறாக இத்தகைய பகிரங்க விவாதங்களின் மூலம் தலைவர்கள் தாங்கள் கொண்டுள்ள கொள்கைகளின் மீது தங்களுக்கு இருக்கும் நம்பிக்கையை மக்களுக்கு வெளிப்படுத்த ஒரு சந்தர்ப்பம் வாய்க்கிறது..

நேற்றைய விவாதத்தில் ஒருவர் வெற்றி பெற்றவரல்ல அங்கே மூன்று வெற்றியாளர்கள் இருக்கிறார்கள் .

அவர்கள் . . . .

பங்குபற்றிய இரு தலைவர்கள், மூன்றாமவர் “மக்கள்”

பசும்புல்லின் மீது எப்போதும் நடப்பதல்ல உண்மையான பயணம் புற்தரை கற்தரையாக மாறும் போதும் நடையின் வேகம் தணியாமல் நடப்பதே பயணத்தின் வெற்றியைக் குறிக்கிறது.

இதை மற்றைய பெரும் கட்சிகளின் தலைவர்களும் உணர்ந்து கொள்வார்களா ?

பொறுத்திருந்து பார்ப்போம் !

மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *