திவாகர்

ஸார்.. எதுக்கு இந்த விஷப்பரீட்சை.. சொன்னாக் கேளுங்க.. எனக்கு ஒரு ஞானமும் இல்லே.. கர்நாடக சங்கீதத்துக்கும் எனக்கும் காத தூரம்..இல்லே இல்லே டெல்லி தூரம்.. அத்தோட ஏழு மணிக்கு ரிலையன்ஸ் க்ரூப் பார்ட்டி இருக்கு.. போகணும்..வுட்டுடுங்க ஸார்..”

”என்னப்பா.. என்ன சொல்லிட்டேனு இப்படிப் பெரீசா கத்தறே.. ரொம்ப முக்கியமான கச்சேரிய்யா.. இந்தம்மா ஏறத்தாழ ஒரு வருஷமா எந்தக் கச்சேரியும் பண்ணலே.ரொம்ப ஃபேமஸ்.. ஆர்கனைஸர்ஸ் எப்படியோ கஷ்டப்பட்டு இந்த அம்மாவின் அனுமதி வாங்கியிருக்காங்களாம்.. நானே போகணும்.. ஆனா என் கஷ்டகாலம்.. ராத்திரியானா வர்ர தலைவலி சாயங்காலமே வந்துடறது.. இதோ பார்.. நான் ரிடையர் ஆனவுடனே இந்த நாற்காலி’ல நீதான் உட்காரப்போறே! உனக்கு எல்லாம் தெரிஞ்சாகணும்.. கர்நாடக சங்கீதம்’னா எனக்கும்தான் ஒரு எழவும் தெரியாது.. நான் அப்பப்ப எழுதல?.. அதனால.. நான் சொல்லிட்டேன்.. நீதான் அட்டெண்ட் பண்றே.. இன்னொண்ணும் சொல்லிடறேன்.. நம்ம சார்’ஜி கண்டிப்பா பாக்கற பத்தி இது.. இந்த விமர்சன ஆர்டிகிள்’ல கீழே உன் பேரை வேற போடப் போறேன்.. சார்’ஜி பாக்கணும்.. அட.. ந்னு மூக்கு’ல கையை வெக்கணும்.. ரிலையன்ஸ் க்ரூப் மீடிங் முக்கியம்தான். அதனால என்ன.. அந்த மாதிரி பார்ட்டிக்கு இன்னொரு சந்தர்ப்பம் வரும்.. ஆனா இந்தம்மா கச்சேரி சந்தர்ப்பமெல்லாம் உனக்கு வருமா? இப்போதைக்கு எனக்கும் உன்னை விட்டா வேற ஆளு இல்லே.. சங்கீதக் கச்சேரிக்கு போ.. போ.. சரிகமபத நீ’ன்னு எதையாவது எழுதித் தொலை.. அப்படியே பாடற அந்தம்மாவையும் முதல்லே பார்த்து ஒரு அவுட்சைட் பேட்டி எடுத்துக்கோ.. அதையும் பார்த்தா சார்’ஜிக்கு ஆத்மா குளிர்ந்து போகும்.. மனுசனுக்கு ரொம்ப ரொம்ப ஃஃபேவரைட்டாக்கும்.”

வெற்றிலை மென்றுகொண்டே எடிட்டர் சொல்லிவிட்டார். பேசும்போது அவரையும் மீறி கொஞ்சம் சிவப்பு எச்சில் சொட்டுகள் என் மீது விழத்தான் செய்தன. அவரை இந்தச் சமயங்களில் பேசவைக்கக்கூடாதுதான்.. ஆனாலும் வேறு வழியில்லை.. இவர் உட்காரும் இந்த இருக்கை நாளை எனக்கு வரப்போகிறது.. இந்த விஷயத்தில் இவரும் நமக்கு சாதகம்தான்.. என்ன.. இதோ போகிறேன்.. அதோ போகிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறாரே தவிர முடிவு எதுவும் எடுக்கவில்லை.. சார்’ஜி மனதில் நான் இன்னமும் ஆழமாகப் பதியவில்லை என்று அவ்வப்போது இவர் வேறு வயிற்றெரிச்சலைக் கிளப்புகிறார்.

”இன்னொண்ணு.. இன்னைக்கு உன்னோட இந்த ஸ்டோரிக்கு கடைசி பக்கம் நாலு பத்தி கொடுக்கச் சொல்லி ஸ்பேஸ் ரிசர்வ் பண்ணியிருக்கேன்.. டக்கென்னு எல்லார் கண்ணுலயும் படும்.. போட்டோகிராஃபரிடம் சொல்லிட்டேன். மணிதான் வருவான். சமயம் பார்த்து எடுக்கறதுலே அவன் கில்லாடி.. அவன் எப்பாவாவது போய் எடுத்துடுவான். போட்டோவோட நீ ராத்திரி 12க்குள்ளே ஸ்டோரி ஃபைல் பண்ணிடு.. காலை’ல எழுந்ததும் ஸார்ஜி பாக்கறச்சே முதல் நியூஸ் ஐடம் உன்னோடதுதான்.. உனக்கு ஒரு சீக்ரெட் சொல்லறேன்.. கேட்டுக்கோ.. நியூஸ் பேப்பரை கடைசி பேஜிலேர்ந்து ஆரம்பிச்சுப் படிக்கிற பழக்கம் ஸார்ஜிக்கு எப்பவும் உண்டு..”

நாங்கள் சார்’ஜி என்று சொல்வது எங்கள் பத்திரிகை முதலாளியான கிஷன்ஜியைத்தான்.. மிகப் பெரிய க்ரூப் கம்பெனிகளின் தலைவரான அவர் இந்தப் பத்திரிகையைக் கையால் தொடுவது கூட கிடையாது’ என்று இதே எடிட்டர்தான் ஒருமுறை தலையில் அடித்துச் சத்தியம் செய்திருக்கிறார். அப்படிப்பட்டவர் சங்கீதம் பற்றிய செய்தி மட்டும் பார்ப்பாராம்.. அதுவும் அவருக்கு பிடித்தமான பாடகியாமே.. கடவுளே.. என்ன நினைத்து என்னை இந்தப் பத்திரிகைத் தொழிலுக்கு அனுப்பி வைத்தாயோ..

என் அறைக்குள் அமர்ந்ததும் குட்டி வந்தான். ‘என்ன சார்.. முகம் ஒரு மாதிரி இருக்கு.. எங்க போக சொல்லிச்சு கிழம்?” என்று கேட்டுக் கொண்டே காபியை மேஜையில் வைத்தான். ஆபீஸ்பையன் என்ற பேர்தான்.. ஆனால் எல்லாம் தெரிந்த இவனைத் தனியாக விட்டால் ஒரு பேப்பரையே நடத்திவிடுவான், என்ன.. எழுத சரியாகத் தெரியாது.. அவ்வளவுதான்.. ஆனால் இந்தக் காலத்தில் பத்திரிகையாளர்களுக்குக் கட்டாயம் எழுதத் தெரிந்துதான் ஆகணும்’ என்று யார் சொன்னது…

“பாருடா.. பிஸினஸ் கரெஸ்பாண்டெட்’க்கும் கல்சுரல் கரெஸ்பாண்டெட்’க்கும் வித்தியாஸம் தெரிய வேணாமாடா.. இந்தம்மா கச்சேரிக்குப் போய் என்னத்த எழுதப்போறேனோ.. சங்கீதத்தைப் பத்தி ஒரு மண்ணும் தெரியாதேடா”..

“ஸார்.. ஏன் கவலைப் படறே.. நான் சொல்றதைச் செய்யறியா..”

“சங்கீதத்தைப் பத்தி நீ சொல்லறியா.. சொல்லு.. சொல்லு.. நான் இப்போ யார் என்ன சொன்னாலும் கேட்கற நிலைமைலதான் இருக்கேன்..”

“சிம்பிள் சார்.. போனதபா நம்ம எடிட்டர் இந்தம்மா பாடின கச்சேரிக்குன்னு போனார்.. கூடவே வெத்தலைப் பெட்டியோடு நானும் போவேனில்லையா. இவரு முதல்ல என்னா பண்ணார் தெரியுமா.. சும்மா மேடை மேலே போனாரு.. அந்த சபா செக்ரடரி நின்னுகினு இருந்தாரா. அவர்கிட்டே ஏதோ முணுமுணுத்துக்கினே அந்த அம்மா பாடப் போற பாட்டோட லிஸ்ட் முளுசுமா கேட்டுக்கினார்.. அவங்ககிட்டே அதெல்லாம் டைப் பண்ணி ரெடியா இருக்கும் சார்.. கச்சேரி’ல சும்மா கொஞ்ச நேரம் முன்னாடி சீட்’ல உக்கார்ந்தார்.. நடுவுல ஏதோ போன் வந்தது மாதிரி கையில மொபைல் பிடிச்சுண்டே சடார்’னு எழுந்து வெளியே வந்தார்.. அவ்வளவுதான்.. அப்புறம் ஆபீசுக்கு வந்துட்டோம்..அந்த மாதிரி நீங்களும் பண்ணுங்க.. அந்த செக்ரடரி கொடுக்கற பேப்பர்ல இருக்கறதை அப்படியே எழுதப் போறிங்க.. நடுவுல ஆஹா அருமை.. ஓஹோ அது பிரமாதம், இது உசத்தி’ன்னு மசாலா போட்டுடுங்க..”

அவன் சொன்ன ஐடியா அந்தக் கணத்திலேயே மிகவும் பிடித்துப் போனது.. இவனல்லவா உண்மையான பத்திரிகையாளன்..’ இருந்தாலும் குட்டி சற்று வேண்டுமென்றே அலுத்துக் கொண்டான்.

”ம்.. பேசாம இந்தக் கிழவன் உங்களுக்குப் பதிலா என்னிய அனுப்பிச்சிருக்கலாம்..”

“அடேய் குட்டி, இந்தக் கிழம் போனதுமே நான் எடிட்டர்.. அப்படி வந்த உடனே உனக்கு டபுள் பிரமோஷன்..டா..”

“என்ன சார்.. கனாக் காணறிங்களா?.. கிழம் போகும்கிறீங்க? ரெண்டு அட்டாக் பாத்தாச்சு, ஆபிஸ் செலவுல ஆபரேஷன் பண்ணிட்டு ஜாலியா அங்கே உட்கார்ந்திருக்கு.. இதோ சூடா வெங்காய பஜ்ஜி வேற வாங்கியாறச் சொல்லியிருக்கு.. நான் ஓடறேன்..” அவன் நிஜமாகவே ஓடிவிட்டான்.

நான் என் நடையைக் கட்டினேன்.. அட, கச்சேரிக்கெல்லாம் பயமா.. சேச்சே.. ஊதிடலாம்.. நேரே ஆடிட்டோரியம் போகணும், எவனாவது செக்ரடரியைப் பார்த்துட்டு பாட்டோட லிஸ்ட் வாங்கணும்.. கொஞ்ச நேரம் அங்கே உட்கார்ந்திருக்கணும்.. அப்பறம் அப்படியே வெளியே வந்து காண்டீன்’ல ஏதாவது சூடா சாப்பிட்டவுடனே ஜூட் விட்டுட வேண்டியதுதான்.. அட, அந்தப் பாடகியை ஒரு சின்ன பேட்டி எடுக்கணுமே.. பார்க்கலாம்.. இதெல்லாம் ஒரு பிரச்னையா.. சமாளிச்சுடலாம்.. என் கண் முன்னே இன்னொரு அழகான காட்சி விரிந்தது. சார்’ஜி கை குலுக்குகிறார். அருமையா எல்லா சப்ஜக்ட்டையுமே எழுதறீங்க.. உட்காருங்க இந்த நாற்காலியில்’ என்று என்னை அமர வைக்கிறார். எடிட்டர் முகத்தில் பெருமை.. ’என் சீடனாச்சே’ என்று முதுகில் ஷொட்டுகிறார். தலையைச் சற்று அசைத்துக் கொண்டேன். கனவை நினைவாக்க ஒரு நல்ல சந்தர்ப்பம்தான்.

நினைத்தவுடனே எளிதாகிவிட்ட மனதுடன் அந்த அகன்ற அரங்கத்துள் நுழைந்ததும் முதலில் என் கண்ணில் பட்டது திருமலை நாயுடுதான்.. திருமலை நாயுடு மிகவும் தெரிந்த தொழிலதிபர் என்பதோடு சென்னை மாநகர வியாபார சங்கத்துத் தலைவரென்பதாலும் அடிக்கடி நாங்கள் சந்தித்துப் பேச வேண்டிய நிர்ப்பந்தங்களும் உண்டு. . அந்த சபாவுக்கும் அவர்தான் கௌரவத் தலைவராம்.. எனக்கு இப்படிப்பட்ட கச்சேரிகளில், அதுவும் சங்கீதத்தில், இவ்வளவு விருப்பம் இருக்கிறது என்பது தனக்கு தற்போதுதான் தெரியும் என்று எல்லோருக்கும் கேட்கும்படி கத்திச் சொல்லியதோடு அந்த சபா காரியதரிசியையும் அழைத்து என்னை அறிமுகம் செய்தார். அவரைப் பக்கத்தில் தள்ளிக்கொண்டே பேசினேன்.. ‘சார்.. உங்களைப் பத்தி எங்க எடிட்டர் ரொம்பப் புகழ்ந்து சொல்லிருக்காரு.. அது சரி, இவங்க பாடல் பாடற லிஸ்ட் கிடைக்குமா..” என்று கேட்டு வைத்தேன்.

“அட, லிஸ்ட்’தானே.. எங்கிட்டே இல்லே.. இருந்தாலும் க்ரீன் ரூமுக்கு வாங்க.. அவங்க வந்துட்டாங்க.. அவங்ககிட்டேயே கேட்டுடலாம்.. அத்தோட ஒரு சின்ன பேட்டியும் எடுத்துடுங்களேன்.. அதுவும் நாளைக்கு பேப்பர்’ல வரட்டுமே, என்ன சொல்றிங்க.. சரிதானா.. சரிதான் சரிதான்..”

பழம் நழுவிப் பாலில் விழுந்து அதை வாயிலும் ஊட்டினால் வேண்டாமென்றா சொல்வார்கள். ஆனாலும் அதை நான் விருப்பம் இல்லாமல் செய்பவனாகக் காட்டிக் கொண்டு அவரோடு சென்றேன். இன்னமும் அரை மணியாகும் ஆரம்பிக்க.. இந்த அம்மாளைப் பார்க்கவேண்டும்.. ஏதாவது பேசவேண்டும்.. பார்ப்போம்.. சங்கீதத்தில் எனக்கு என்னவெல்லாம் தெரியும்.. கல்யாணி ராகம், ம்ம்.. முகாரி.. ம்ம்.. ஆதி.. அட அது.. அது.. தாளமாச்சே.. ஒருவேளை ராகத்தோட பேர்தானா.. ச்சே.. எத்தனை சினிமா பார்த்தோம்.. ஆங்.. சங்கராபரணம்.. அப்பறம் ஆனந்த ராகம், இப்படி நிஜமாவே பேர் இருக்கோ இல்லையோ.. இந்த ராகத்தை அவாய்ட் பண்ணிடவேண்டியதுதான்.. தில்லானா மோகனாம்பாள், அடச்சே அது நாட்டியப்படம்.. பார்க்கலாம்.. முதல்ல இந்த லிஸ்ட் கையில கிடைச்சா போதும்.. அதுல ராகம் பேர் போட்டுருப்பாங்களே.. அதை முதல்ல வாங்குவோமே..

”முக்கியமான ஒரு வேண்டுகோள். கடைசில ஒரு வரி என் பேரை மட்டும் மறக்காம போடுங்கோ.. ஹி.. சும்மா ஒரு நாலு பேர் பார்வைக்கு, ரிகார்டுக்கு இருக்கட்டுமே.. என்ன சொல்றேள்.. சரிதானா? சரிதான் சரிதான்” என்று செக்ரடரி கேள்வியும் பதிலும் தானாகக் கொடுத்ததோடு அவர் விஸிட்டிங் கார்டையும் கூடவே கொடுத்தார். கல்யாணராமன் என்று பேர் போட்டிருந்தது.. அட.. இந்த ராகம்தான் தெரியுமே.. வேறு ஏதாவது ராகத்தின் பெயரை தன் பெயராக வைத்திருக்கக்கூடாதோ..

நான் ஒன்றுமே பேசாமல் அதை வாங்கிக் கொண்டு அவரைப் பின் தொடர்ந்து சென்றேன். அங்கே ஒரு வி.ஐ.பி. அறையில் கதவைச் சட்டெனத் திறந்து உரிமையாக செக்ரடரி உள்ளே நுழைய நானும் பின்தொடர்ந்தேன்..மெலிதான சப்தத்தில் வயலின் ஒலிக்க அதே குறைந்த சப்தத்தில் மிருதங்கத்தைத் தட்டிக்கொண்டிருந்தார் இன்னொருவர். கொஞ்சநேரம் அங்கேயே நின்று ரசித்தார்.

”அடடா.. சஹானா ராகத்துல பிச்சு உதறறேள்.. டிஸ்டர்ப் பண்ணிட்டேன்.. இதோ இவர்தான்..” அவர் சொல்வதற்குள் அந்தப் பெண்மணி முந்திக்கொண்டாள்.

“ஐய்யோ.. இது சஹானா இல்லே பிலஹரியாக்கும்..” என்று சட்டென வெட்டியவளைக் கொஞ்சமும் லட்சியம் செய்யாமல் என்னை அறிமுகம் செய்து வைத்தார்.

எனக்கு என்னவோ இரண்டு புதிய ராகங்களின் பெயர்கள் கிடைத்த ஒரு சந்தோஷத்தில் ஒரு நமஸ்காரம் போட்டு வைத்தேன். வாத்தியக்காரர்கள் மெல்ல எழுந்து கொள்ள என்னை ஒரு நாற்காலியில் உட்காரச் செய்தாள். செக்ரடரி விடாமல் ’என்ன இருந்தாலும் நீங்க சஹானா பாடறதுன்னா நான் உயிரையே விட்டு விடுவேன்.. அப்படி ஒரு ஈர்ப்பு அந்த ராகத்துல’என்று அவரின் உயிரின் ரகசியத்தை மறுபடியும் பிடிவாதமாக ஒருமுறை அந்தப் பெண்மணியிடம் சொல்லி அசடு வழிந்துவிட்டுதான் அந்த அறையை விட்டு அகன்றார்.

அறை காலியானதும் என்ன பேசுவது என்று தெரியாமல் கொஞ்சம் முழித்தேன்.. இளமை கொஞ்சுகிறதுதான் என்றாலும் அருகாமையில் பார்க்க அவள் முக அழகு இயற்கையாகவே செழிப்பாக இருந்ததைக் கவனிக்கத்தான் செய்தேன். நெற்றியில் இருந்த சிறிய குங்குமப்பொட்டு அவள் முகத்தழகுக்கு மெருகூட்டியது கண்கள் வேறு குறும்பாகப் பார்த்ததாகப் பட்டது. அவளே ஆரம்பித்தாள்.

“போனமுறை உங்கபேப்பர்’ல ரிவ்யூ ரொம்ப நல்லாதான் எழுதியிருந்தீங்க…. ஆனா எனக்கு ஒரு சின்னக் கோபம்..”

குழந்தை போல பேசினாள். குரலில் கரகரப்பு இருந்ததும் அதை மெல்லமாகப் பேசும்போது ஒரு மயக்கமும் கூடவே வந்ததை உணர்ந்தேன்..

”அடடா.. எங்க மேல கோபமா?” நான் பொதுவாக கேட்டு வைத்தேன்..

“உங்க எல்லார் மேலயும் கோபம்’ன்னு சொல்லலே..போனதடவை என் கச்சேரி முடியறதுக்கு முன்னாடி எழுந்து போயிட்டதா செக்ரடரி சொன்னார்.. சரிதானே..”

அடக் கடவுளே.. இந்த எடிட்டர் கிழம் செஞ்சதை அப்படியே சொல்றாளே.. என மனதுள் நினைத்துக் கொண்டாலும் இவள் எதற்காக எங்கள் பத்திரிகைக்காரகளை மட்டும் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.. வெளியே கொஞ்சம் அசட்டுச் சிரிப்பு சிரித்தேன்..

“ஓ.. அது எனக்குத் தெரியாதே.. ஆனா..”

“பரவாயில்லை.. அதனாலென்ன.. பத்திரிகைக்காரங்களுக்கு ஆயிரத்தெட்டு ஜோலி..” என்று முறுவலித்தவள் அடுத்து ஒரு இடியைப் போட்டு வைத்தாள். “அவர் வந்திருக்கிறார் இல்லையா?”

“யார், எடிட்டரா?”

“சேச்சே.. நான் சொல்றது கிஷன்’ஜிதான்.. வர்ரேன்னும் காலைல போன் போட்டு அவரே சொன்னாரே..”

எனக்கு சட்டென வியர்த்தது.. சார்’ஜி வருகிறாரா.. ஐய்யோ..

அவள் கண்கள் விரிய சிரித்தாள். “ஆனால் எங்காவது பின்னாடி உட்கார்ந்து போய்விடுவதுதான் அவர் வழக்கம்.. ரொம்ப சிம்பிள் பெர்ஸன்..” இவளுக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது.. கொஞ்சம் ஜாக்கிரதை அவசியம்.

“அவர் புரொக்ராம் தெரியல்லே மேடம்.. நான் என் ட்யூடியை செய்யவேண்டாமா.. நான்பாட்டுக்கு வந்துட்டேன்”

“ம்ம்.. நான்பாட்டுக்கில்லே.. என் பாட்டுக்காக வந்தீங்க’ன்னு சொல்லுங்க.. நீங்க வெளிப்படையா சொல்லாவிட்டாலும் உங்க முகமே சொல்லுதே..” என்னை உற்றுப்பார்த்த அந்த பார்வை கலக்கினாலும், அவள் சாமர்த்தியம் என்னை சற்று தளர்த்தி உட்காரச் செய்தது..

“அப்படின்னுதான் வெச்சுக்கணும்.. உங்க பாட்டுங்களைக் கேட்கக் கொடுத்து வெச்சுருக்கணுமே”..

போனமுறை எடிட்டர் போற்றிப் புகழ்ந்தது போலத்தான் இந்த முறையும் எழுதவேண்டும்.. வேறு வழியில்லை என்று நினைத்துக் கொண்டேன்.

“ரொம்பப் புகழாதீங்க.. அப்படியே இதையும் சேர்த்து உங்க பேப்பரிலேயும் எழுதிடாதீங்க.. ஏன்னா.. புகழ்ச்சி ஒரு போதை இல்லையா.. நமக்கு எதுக்குங்க அந்தப் போதை.. என்னால் எந்தப் போதைக்கும் அடிமையாக முடியாது”

இப்படிச் சொல்லிவிட்டு சிரித்தாள். போலியான சிரிப்பில்லாமல் மிக யதார்த்தமாக இருந்தது. நான் பொதுவாக சொல்லி வைத்தேன்..

“இதெல்லாம் உங்க தன்னடக்கம்.ஆனா ஒண்ணு… எதை எழுதினாலும் என் மனதுக்குப் பட்டதைத்தான் எழுதப் போறேன்..”

“உங்களை மாதிரி சங்கீத எக்ஸ்பர்ட்ஸ் எழுதறாங்கன்னா சும்மாவா.. உங்க மனசுக்கு என் பாட்டு ரொம்பவே பிடிச்சுருக்கு’ன்னு ஏற்கனவே சொல்லிட்டீங்களே.. ..”

நான் எங்கே அப்படிச் சொன்னேன்’ என்று கேட்க விரும்பினேன்.. இருந்தாலும் பேச்சை மாற்ற விரும்பினேன்.. செக்ரடரியிடம் வாங்க விரும்பிய அந்த பாட்டு வகைகளை இவளிடமே கேட்டால் என்ன?

“இன்னிக்கு புரோக்கிராம்’ல என்ன பாடல்கள் பாடப்போறிங்கன்னு லிஸ்ட் இருக்குமே.. கொஞ்சம் கொடுங்களேன்..”

என் கள்ள மனத்தைப் படித்துவிட்டாளோ என்னவோ, கொஞ்சமாக முறுவலித்து இன்னொரு முறை குறும்பாக ஒரு பார்வை பார்த்தாள்

“எனக்குத் தெரியும் நீங்க கேப்பீங்க’ன்னு.. ஆனா இந்தமுறை சஸ்பென்ஸ் வெச்சிருக்கேன்.. என் இஷ்டத்துக்கு நான் அந்த சமயத்துல பிடிச்சதெல்லாம் பாடப்போறேன்.. என்ன நான் சொல்றது பிடிச்சிருக்கா?”

ஈசுவரா.. இதென்ன சோதனை.. சார்ஜி வருகிறார் என்கிறாள்.. கூடவே சஸ்பென்ஸ் கொடுத்து தான் பாடப்போகும் லிஸ்ட்டையும் மறைக்கிறாள்..

“பொதுவா லிஸ்ட் வெச்சுத்தான் எல்லோரும் பாடணும்.. வாத்தியக்காரா கூட அப்பதான் சரியா ஒத்துழைப்பாங்க.. ஆனா இந்த தடவை இந்த வாத்தியக்காராளுக்கும் சேர்த்து ஒரு சோதனை.. முதல்லேயே சொன்னதாலே இப்ப அவங்களுக்கு வயித்தைக் கலக்கிண்டிருக்கு.. எப்படி என் ஸர்ப்ரைஸ்?’ என்று கலகலவென சிரித்தாள்.

வாத்தியக்காரர்களுக்கு மட்டுமில்லை தாயே.. எனக்கும் வயிற்றைக் கலக்குகிறது.. என் மனத்துள் கிலேசம் அதிகரித்தது இவளுக்குப் புரியுமா.. ஆனால் என் மனதை இவள் கண்டுகொள்ளவில்லை என்பது அவள் அடுத்துக் கேட்ட கேள்வியில் புரிந்தது..

“சரி, உங்களுக்காக ஒரு பாட்டு கேளுங்களேன்.. நான் பாடுகிறேன்.. ஆடியன்ஸ் எல்லோரும் அவங்களாகவே இது வேண்டும் அது வேண்டும் எனக் கேட்பார்கள். இப்போது நான் கேட்கிறேன்.. உங்களுக்கு எது வேண்டும்?” ஒரு மயக்கச் சிரிப்பு சிரித்தாள். கடவுளே.. எனக்கு எது வேண்டும்..

பேட்டி நான் எடுக்க வந்தேனா?, இவள் என்னைப் பேட்டிக் காண்கிறாளா.. ஒரு நிமிடம் புரியாமல் பார்த்தேன். சட்டென வாயில் வந்ததை அப்படியே சொன்னேன்.

“கல்யாணி’யில் ஒரு பாடல் பாடுங்களேன்..”

இதைக் கேட்டதும் அவள் ஆச்சரியமாய் கண் விரித்துப் பார்த்தது அழகாகத்தான் இருந்தது.

”கல்யாணியா?”

“ஆமாம்.. கல்யாணி ராகம் என்றால் மிகவும் பிடிக்கும்” என் மனது என்னைத் திட்டியது.. அடேய்.. இது எக்ஸ்ட்ரா உனக்கு’ என்றது..

“ஓ.. கல்யாணி ராகம்னா அவ்வளோ இஷ்டமா.. அட, உங்கள் கிஷன்’ஜிக்கு மிகவும் பிடித்த ராகம் அதே கல்யாணி.. உங்களுக்குமா? உங்களுக்கு கல்யாணியில் உயிரா.. உங்கள் உயிரைப் போற்றி நிச்சயம் பாடுகிறேன்.. சரி..கல்யாணியில் என்ன பாட்டு வேண்டும்..”

எனக்கு வேண்டும்.. நானே போய் வலையில் சிக்கிக் கொண்டேன்.. இன்று யார் முகத்தில் முழித்தோம்.. ஆஹா.. எனக்கு அந்த எடிட்டர் சீட்டே வேண்டாம்.. ஆளை விட்டால் போதும்’ என் மனதுள் ஏதோ ஒன்று சொல்லி அலறியது.

“இந்த பாட்டுதான்னு சொல்லமுடியாது.. நீங்க எந்தப் பாட்டு பாடினாலும் அது இனிமையாகத்தான் இருக்கும்..”

’ஓஹோ’ என்று சொல்லி கலகலவென மறுபடி சிரித்தவள், “நீங்க இதையெல்லாம் இப்படியே நாளைக்கு பேப்பர்’ல போடப் போறீங்க’ன்னு தெரிஞ்சு போச்சு.. என்ன.. நான் சொல்றது சரிதானே..”

“சரி, உங்களுக்குப் பிடிச்ச உங்க பாடல் எதுன்னு சொல்லுங்களேன்..”

“அட, எனக்குப் பிடிச்ச அத்தனை பாடல்களையும்தான் பாடப் போறேனே..உங்களுக்காக அந்தக் கல்யாணியையும் சேர்த்துதான்”

“இல்லே.. அப்படி சொல்ல வரலே. எல்லாப் பாடகர்களுக்குமே அவங்களுக்குன்னு ஒரு பிடிச்ச பாடல் இருக்கணுமே.. .. ரசிகர்களுக்காக சில பாடல்கள், உங்களுக்கு ஆத்ம திருப்திக்காக சில பாடல்கள்’னு பாடுவீங்க இல்லையா.. அந்த ஆத்மாவைத் திருப்தி தரும் ஒரு பாடல் சொல்லுங்களேன்..”

அவள் மறுபடி ஏதோ ஆச்சரியமாக என்னைப் பார்த்தாள். ஏதாவது கேட்கக் கூடாத கேள்வியைக் கேட்டுவிட்டோமா என்ன..

“நல்லா மடக்கறீங்க.. எந்த பாடகிக்கும் தான் பாடற அத்தனை பாடலுமே உசத்தியாதான் தோணும்.. சங்கீதத்துலயும் வெல்லப்பிள்ளையாரிலும் எந்தப் பகுதி இனிக்கும்’னு எப்படி சொல்றது? சரி, ஸர்ப்ரைஸிங்’னு சொன்னேன் இல்லையா.. இன்னிக்கு நான் பாடற அத்தனை பாடலுமே எனக்குப் பிடிச்சுப் பாடினதா எழுதிடுங்களேன்”

அடக்கடவுளே.. எனக்கு உதவி செய்கிறாளா அல்லது உபத்திரவமாக ஏளனம் செய்கிறாளா.. ஏன் இந்த சபா செக்ரடரி நம்மை இப்படித் தனியா இவளிடம் மாட்டிவிட்டுப் போய்விட்டான்.. இவளிடம் உண்மையைச் சொல்லிவிடலாமா.. நீ நினைக்கிறா மாதிரி நான் சங்கீத எக்ஸ்பர்ட் இல்லேம்மா.. லிஸ்ட் இல்லாமல் சரியாக ரிவ்யூவெல்லாம் எழுதமுடியாது தாயே..’

வேண்டாம்.. இவளிடம் எது சொன்னாலும் வம்பாகிப் போகும், போதாதற்கு கிஷன்ஜி பெயரை அடிக்கடி இழுக்கிறாள்..

அதற்குள் அந்த சஹானா செக்ரடரி உள்ளே நுழைந்து குழைந்து மேடைக்குக் கூப்பிட்டதால் அவளும் எழுந்தாள். “சரி, பார்ப்போம் உங்க ரிவ்யூவை.. எப்படி எழுதப்போறிங்கன்னு இப்ப நினைச்சாலே மனசு ரொம்ப சந்தோஷப்படுது.. அந்த சந்தோஷத்தோடப் பாடப் போறேன்..வாங்கோ.. போகலாம்..” என்று கவர்ச்சிப் புன்னகை வீசிவிட்டு வெளியேற நானும் அவளுடன் ஏமாற்றத்துடன் வந்தேன்.

எனக்குப் புரிந்தது.. இவள் என்னவோ ஏதோ எல்லோரையும் பரிட்சை செய்வதாக நினைத்துக்கொண்டு அந்த எல்லோரையும் மாட்டி விடுகிறாளோ.. கடவுளே.. என்ன இது.. இப்படி என்னை ஒரு இக்கட்டில் மாட்டி விட்டாய்..

வேறு வழி தெரியாத நிலையில்தான் என்னுள் வைராக்கியம் வந்தது.. சரி எப்படியும் சமாளித்துதான் ஆகவேண்டும். ராகத்தின் பெயர் தெரியாவிட்டால் என்ன.. பேசாமல் முடிந்தவரை மொபைல் போனில் ரிகார்ட் செய்து கொள்வோம். ஒவ்வொரு பாடல் முதல் வரிகளை எழுதி வைத்துக் கொள்வோம்..

திடீரென எங்கள் ஃபிளாட் மாடியில் குடியிருக்கும் டீச்சர் நினைவுக்கு வந்தாள். அவள் சங்கீதம் அறிந்தவள்.. அவளிடம் பாடல் வரிகளையும் நம் மொபைல் ரிகார்ட் செய்ததையும் வைத்துக் கேட்டால் சொல்லமாட்டாளா என்ன.. ஆஹா.. முடிந்து போச்சு கதை.. ஆனால் நேரம் போதாது.. ராத்திரியில் தொல்லை தருவதாக நினைத்துக்கொள்வார்களே.. என்ன வேண்டுமென்றாலும் நினைத்துக் கொள்ளட்டும்.. இது ஒரு மாதிரியான சிக்கலான பிரச்னை.. பயந்தால் தீர்க்கமுடியாது.. எதையும் எப்படியும் சமாளிப்போம். நாளைக் காலை பத்திரிகையில் நம் ரிவ்யூ கொஞ்சம் நன்றாக வரவேண்டாமா.. இவள் வேறு பெரிதாக எதிர்பார்க்கிறாள்….

மனதுள் கொஞ்சம் நிதானம் வந்தது.. ஆச்சு.. மணி ஆறரை.. எப்படியும் ஒன்பதுக்குள் கச்சேரி முடித்தாக வேண்டும். ஒன்பதரைக்கு வீடு, பத்துமணிக்குள் அந்த சங்கீத டீச்சரிடம் பாடம் கேட்டு விட்டு ஆபீஸுக்கு 11 மணிக்குள் போனாலும் கடைசி டெஸ்பாட்ச்சாக நம் ஆர்டிகிள் போட்டுவிடலாம். என்னுடைய மொபைலில் ரிகார்டிங் ஆன் செய்துவிட்டு மேடையில் கவனம் செலுத்தினேன். குங்குமப்பொட்டுக்காரி முகம் மலர அமர்ந்து பாட ஆரம்பித்தாள்.

singer2முதலில் அவள் அழகு முகம்தான் மனதில் அப்படியே நின்றது. தூரத்திலிருந்து பார்த்தால் கூட அந்தக் குறும்பு பொங்கும் கண்களும் அழகான வட்டவடிவ குங்குமப்பொட்டும் கொஞ்சம் சலனத்தை ஏற்படுத்தியதுதான் .,, ஆனால் போகப்போக அவள் பாடப் பாட அவள் முகம் மறைந்து போய் அந்தக் குரலினிமையும் பாட்டுக்களின் நேர்த்தியும் வேறெங்கோ அழைத்துச் சென்றதுதான்.

அவள் கச்சேரி செய்யும் விதமே தனிதான். இவள் பேசும் குரலிலிருந்த கரகரப்பு விலகி இனிமையான இசைக் குயிலாக மாறிய அனுபவமே அலாதிதான். கிஷன்ஜி என்றில்லை யார் வேண்டுமானாலும் இந்த இனிமையான குரலுக்கு அடிமையாக மாறி விடுவார்கள்தான்.. அவ்வப்போது என்னை வேறு உற்றுப் பார்க்கிறாள்.. ஒருவேளை நான் நடுவில் போகிறேனோ என்று சந்தேகப்படுகிறாளோ.. இல்லையில்லை.. இவள் கவனம் கொஞ்சமும் நம்மீது இல்லைதான்.. இசையின் இறுக்கமான அணைப்பில் இருக்கும் அவளுக்கு நான் கண்ணில் படமுடியாது என்றுதான் நினைத்தேன். எத்தனை அநாயசம்.. எத்தனை நளினம்.. அடாடா. இந்த எடிட்டர் தப்பு செய்துவிட்டார்..அவர் என்னை கட்டாயம் செய்து இங்கு அனுப்பி தவறு செய்து விட்டார். நான் வந்திருக்கக்கூடாது.. யாராவது தேர்ந்த இசை விமர்சகரை அனுப்பி இருக்கவேண்டும்.. இவள் இசைக்கு நானெல்லாம், என் எழுத்தெல்லாம் எம்மாத்திரம்.. என் எழுத்தில் இவள் இசை நயத்தைக் கொண்டு வரமுடியுமா..

ஒன்பது மணிக்கு முன்பாகவே முடித்துவிட்டாள் என்றாலும் அவள் இசையின் தாக்கம் என்னைப் பரிபூரணமாக ஆக்கிரமித்திருந்தது. ராகங்கள் தெரிந்தால்தான் இசையை அனுபவிக்கமுடியுமா.. இவள் மந்திரக்காரிதான்.. மாயம் செய்பவள். இசையால் எல்லோரையும் மயக்கத் தெரிந்தவள்.. இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக சபையைக் கட்டிப் போடத் தெரிந்தவள்.. இவள் பேச்சில் கெட்டிக்காரி என்று நினைத்தது தவறு.. இசையையும் தன்னுள் அடக்கி ஆள்பவள், இவள் நினைப்புக்கேற்றவாறு அந்த இசையை தன் இஷ்டத்துக்கு திசை திருப்புபவள். இன்னமும் கச்சேரியை நீட்டித்திருக்கலாம்தான்.. இப்படி என்னையும் கூட நினைக்க வைத்ததுதான் இவள் வெற்றிதானே..

இருந்தாலும் கடமையை மறக்காமல் என் வேலைகளை பூர்த்தி செய்து அலுவலகத்தில் நுழைந்தபோது மணி பத்தரையைத் தாண்டியிருந்தது. என்னுடைய மேஜையில் போட்டோகிராஃபர் மணி ஏற்கனவே போட்டோவின் பிரதி ஒன்றை வைத்திருந்தார். அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டே கட்டுரையைத் தட்ட ஆரம்பித்தேன்..

மனதுக்குள் ஒரு குரல் என்னைத் திட்டிக் கொண்டே இருந்தது. பிஸினஸ் எழுதறவன் இப்போ மியூசிக் எழுதறியா.. பார்த்து எழுது.. என்பது போல ஏதேதோ சொன்னாலும் மியூசிக் டீச்சர் பார்த்துப் பார்த்து கேட்டு கேட்டு ரசித்துச் சொன்ன ராக ஆலாபனைக் குறிப்புகளை அப்படியே கலந்தேன்.. கட்டுரை ரெடி.. இன்னொரு முறை படித்துப் பார்த்தேன்.. திருப்தியாக இருந்தது.. மணியைப் பார்த்தேன்.. பன்னிரண்டைத் தாண்டியிருந்தது.. மனதில் மகிழ்ச்சி ஏராளமாக உண்டாக ஏதோ ஒரு மிகப் பெரிய சாதனைப் படைத்து விட்ட திருப்தியுடன் அச்சுக்காக அனுப்பி வைத்தேன்.. சற்று நேரம் அப்படியே சாய்ந்துஅந்த மாலை நேரத்து இனிமையான பொழுதுகளை மறுபடியும் மனதில் திருப்பினேன்..

வீட்டுக்குச் செல்லவேண்டுமா என்றுதான் மனதில் பட்டது.. ஒரு இனிமையான அனுபவத்தை அப்படியே இன்னொரு முறை ரசிக்கவேண்டும் என்ற ஆவலுடன் வெளியே வந்தேன்.. அறையில் இருந்த குளிரை விட வெளிக்காற்றின் குளிர் ஏராளமாக மகிழ்விக்க வீடு திரும்பினேன்.

பசிக்கவில்லை.. ஏனென்று தெரியவில்லை.. சாப்பிடாமலேயே படுக்கையில் விழுந்தவனின் காதில் அந்த இசையும் அவள் குங்குமப்பொட்டு முகமும் சற்று சலனப்படுத்தியது. புரண்டு புரண்டு படுத்தேனே தவிர தூக்கம் வருவதாயில்லை..மீண்டும் மீண்டும் அந்த முகம் அவனை அலைக்கழித்தது. தூக்கமா இல்லை அரைத்தூக்கமா தெரியவில்லை.. மறுபடியும் அவள் வந்தாள்.. அந்த குங்குமப்பொட்டும் கருவிழிகளும் இப்போது சற்று அருகில் வந்தது. ‘சங்கீதம் என்றால் உனக்கு ரொம்பப் பிடிக்குமோ’ என்று கேட்டது.. ‘சரி, உனக்கு என்ன பிடிக்கும்.. கேள்.. உடனே பாடுகிறேன்.. என்றது’. நான் நினைவில் உளறினேன்.. ‘கல்யாணி ராகத்தில் பாடு’ என்றேன்.. ’ஏன் கல்யாணி என்றால் உயிரோ’ என்று கேட்டு கலகலவென சிரித்தாள். நானும் ‘கல்யாணி.. கல்யாணி…

திடீரென்று குதித்து எழுந்தேன். அடக்கடவுளே.. நான் எழுதிய அந்தக் கட்டுரையில் இந்தக் கல்யாணி பற்றிக் குறிப்பிடவே இல்லையே.. இவள் நிச்சயம் எனக்காகப் பாடுவதாக சொல்லிச் சொல்லிச் சென்றாளே.. எங்கே போச்சு இந்த கல்யாணி? ஏன், நிச்சயம் பாடியும் இருப்பாள். ஸார்ஜிக்கு மிகவும் பிடித்த ராகமாயிற்றே.. அட, இந்த டீச்சரும் தப்பு சொல்லிவிட்டாளோ.. இல்லை.. நான் தவறு செய்துவிட்டேன்..ஒரு வார்த்தை கூட கல்யாணியைப் பற்றி எங்கும் எழுதவில்லையே.. ராகங்கள் ஏதாவது மாற்றி எழுதி விட்டேனோ.. கல்யாணியும் எங்கும் காணப்படாதது ஏன் என் அறிவுக்குத் தெளிவாகவில்லை.. கடவுளே.. நாளை ஒரு அபத்தமான கட்டுரை வெளியாகி ஊர் சிரிக்கப் போகிறதே..

உடனே எங்கள் ஆபிஸ் பிரஸ்ஸுக்கு போன் செய்தேன்.. யாரும் எடுக்கவில்லை.. பிரிண்டர் போய்விட்டானா.. அடக்கடவுளே.. அவன் கைபேசியில் தொடர்பு கொண்டேன்.. நீண்ட நேரம் கழித்து எடுத்தான்.. ’அது சரி, நான் கொடுத்த மேட்டர் பிரிண்ட் ஆகிவிட்டதா’.. என்றதற்கு அவன் எரிச்சலாகப் பேசினான்.. ‘என்ன சார்.. மணி என்ன இப்போ.. மூணாகப் போவுதுல்ல.. பேப்பர் டெஸ்பாட்ச்சிங் டைம் சார்.. நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க.. உங்க மேட்டர் சூபரா வந்திருக்கு.. கடைசிப்பக்கத்துல முதல் நான்கு பத்திதான்..” என்று சொல்லிவிட்டு கைபேசியை மூடிவிட்டான்.

ஆஹா.. எவ்வளவு அழகாக திட்டம் போட்டு கச்சேரி முடிந்ததும் அடித்துப் பிடித்து ஓடி, தூங்கப் போன அந்த டீச்சரை எழுப்பி உட்காரவைத்து ஒவ்வொன்றாகக் கேட்கவைத்து எழுதி என்ன பயன்.. அட, நானாவது ஒரு வார்த்தை இந்தக் கல்யாணி ராகத்தைப் பற்றி அந்த டீச்சரிடம் ஞாபகம் செய்திருக்கவேண்டாமா.. அவளும் தவறுவது சகஜம்தானே..ஒரு அபத்தமான கட்டுரை அரங்கேறிவிட்டதே.. லட்சக்கணக்கில் ஊரெங்கும் பிரதியாக்கப்பட்டாகிவிட்டது..

தியாகய்யாவின் கிருதிகள் முத்துசாமி தீட்சிதர் பாடல்கள் என்றெல்லாம் எழுதி அந்த தெய்வப்பாடல்களுக்கும் சேர்த்தா தவறிழைத்தேன்.. அரைகுறை ஞானம் கூட இப்போது சூன்யமாகப் போய்விட்டதே.. அவள் சபையில் பாடிய பத்துப் பாடல்களுமே தவறாக விளக்கப்பட்டதோ.. ஐய்யோ.. அப்படியானால் அவள் பாடியதில் எந்தப் பாடல் இந்தக் கல்யாணி?

எனக்கு அந்தக் குளிரிலும் வியர்க்க ஆரம்பித்துவிட்டது.. எடிட்டர் முதலில் திட்டுவார். கிஷன்ஜி ஏதும் சொல்லமாட்டார் என்றாலும் ‘அரைகுறைக்கெல்லாம் ஆசிரியர் பொறுப்பா’ என்று நம் பதவி உயர்வு கேஸை இழுத்து மூடி விடப்போகிறார்கள். அவள் அந்த இசை ராட்சஸி வந்தாள்.. இந்த முறை அவள் குரலில் இனிமை இல்லை..குரலும் கரகரப்பு அதிகமாகி காரமாக வந்தது.. ஏதோ கத்தினாள். நீயெல்லாம் ரசிகனா’ என்று திட்டுகிறாளோ..

ஊம்ஹூம்.. அநாவசியமாக ஒப்புக்கொண்டுவிட்டேன். நான் சுயமாக இதுவரை ஈட்டிய என் புகழை இந்த ஒரு சங்கீதக் கட்டுரை ஒரேயடியாக வீழ்த்தி விட்டது.. அறியாத துறையில் தெரியாத ஆழத்தில் காலை விட்டால் முழுகவேண்டியதுதான்.. அதிகாலை வரை மனது துடித்துக் கொண்டே இருந்தது. பகல் வெளிச்சம் பளிச்செனப் பட்டதும் வாசலுக்கு வந்தேன். தரையில் போடப்பட்டிருந்த அந்த பேப்பர் எனக்கு ஒரு அவலட்சணப் பொருளாகத் தெரிந்தது. பயத்துடனே கடைசி பக்கத்தைத்தான் முதலில் பார்த்தேன். எல்லாமே நான் எழுதியதுதான்..கட்டுரைக்கடியில் பெயரை வேறு அழகாகப் பதித்த சோகத்தை என்னவெனச் சொல்வது.. இனி என்ன செய்ய.. எதுவுமே தெரியாதமாதிரிதான் இனி அலுவலகம் செல்லவேண்டும்..கண்ணீர்த் துளிகள் அந்தப் பத்தியில் விழுந்து பேப்பரை நனைத்தது.

இன்று என்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய துக்கதினம்தான்..

தூக்கம் ஒரேயடியாகப் போய்விட்டது. மதியம்தான் அலுவலகம் சென்றேன்.. அறைகள் காலியாக இருந்தன. இது கூட நல்லதுக்குதான்.. என் மேஜையில் இரண்டு கம்பெனி விழா அழைப்புகள் கிடந்தன.. ஆமாம்.. இப்படிப்பட்ட விழாக்களுக்குச் சென்று ஹலோ சொல்லி அவர்களைப் பேட்டி கண்டு எழுதுவதுதான் என் வேலை. எடிட்டர் நாற்காலிக்கு ஆசைப்படுவதற்குக் கூட ஒரு அருகதை வேண்டாமா.. தூக்கம் இல்லாதலால் சோர்வு அதிகமாக நாற்காலியில் சாய்ந்தேன்.. குட்டி சாப்பிட்டுவிட்டு அப்போதுதான் வந்தான்.

”என்ன சார், காலைலேர்ந்து மொபைல் ஆஃப் பண்ணி வெச்சிட்டிங்க.. உங்கள எங்கல்லாம் தேடறது.. தோ.. கொஞ்ச நேரம் போனா உங்க வீட்டுக்கே வந்திருப்பேன்..”

எனக்குப் புரிந்தது.. ஏதாவது விளக்கம் கேட்பார்கள். கிஷன்’ஜி நேற்று கச்சேரிக்கு வந்திருக்கலாம்.. இன்று காலை பேப்பர் பார்த்திருக்க வேண்டும்.. எடிட்டர் தேடியிருக்கலாம்..

குட்டி யாருக்கோ போன் செய்தான் தன் மொபைலில்.. “தோ இருங்க.. வந்துட்டார்..”

கைபேசியை என்னிடம் கொடுத்தான். “சார் பேசுங்க.. அந்தம்மாதான்”

ஓஹோ.. கழுத்துவரை முழுகிவிட்டோம்.. இனியென்ன.. இவளையும் சமாளிப்போம்.. இனி இவள் இருக்கும் திசை கூட போகக்கூடாது..

“என்ன சார்.. என் மேல கோபமா.. காலைலேர்ந்து உங்களைத் தேடறேன்… ஆனால் உங்க கட்டுரை ரியல்லி சூபர்ப்.. அப்படியே பிரேம் பண்ணச் சொல்லிட்டேன்.. கிஷன்’ஜி காலைல போன் பண்ணி அரைமணி நேரம் ஒரே பாராட்டு மழைதான்.. நேத்து அவரால்ல வரமுடியலியாம்.. ஆனா உங்க ஆர்டிகிள் மூலமா விவரமா படிச்சுத் தெரிஞ்சுண்டதா சொல்லி ஆஹா ஓஹோ’ன்னு பாராட்டினாரா.. ரொம்பவே கூச்சமாயிடுச்சு.. எல்லாம் உங்க ஆர்டிகிள் செஞ்ச மாயை..”

இவள் என்ன சொல்கிறாள்?

“சரி புரியறது உங்க கோபம்.. நேத்து சொன்னேன் இல்லையா..

எல்லாமே சர்ப்ரைஸிங்’ நு ஒரு பாலிஸி வெச்சுண்டு பாடப்போறேன்’னு.. அந்த சர்ப்ரைஸிங் உங்களுக்கும் சேர்த்துதான்.. ஆனா நீங்க எதையும் மனசுல வெச்சுக்காம இவ்வளோ அழகா ஒரு ஆர்டிகிள் ஒண்ணு எழுதி அசத்திட்டீங்க..நேர்த்தியா கலைக்கண்ணோட ஒவ்வொரு ராகத்தையும் அழகாக் குறிப்பிட்டு என்னோட புகழையும் நிறையவே ஏத்திட்டீங்க.. இப்படிக் கொடுத்தது உங்க பெரிய மனசைக் காட்டறது,, ஸோ.. உங்க ஆபிசுக்கு இன்னிக்கு சாயந்திரம் கார் அனுப்பறேன். நீங்க அவசியம் வீட்டுக்கு வரணும்.. உங்களுக்கென்னு தனியா கல்யாணி ராகத்துல எத்தனை வேணும்னாலும் பாடறேன்.. கல்யாணி ராகத்தில் நேத்துப் பாடலியேங்கற குறையை, அதுவும் நீங்க கேட்டு நான் பாடலியே’ங்கற குறையை தீர்த்து வெக்கறேன்.. வர்ரீங்க இல்லே..”

“க.. க.. கல்யாணி அப்ப..”

”ஆஹா! கல்யாணின்னு இவ்வளோ உருகறீங்களே.. நான் எவ்வளோ பெரிய தப்புப் பண்ணிட்டேன்னு இப்பத்தான் புரியறது.. நேத்தேப் பாடியிருக்கணும்.. கச்சேரில விளையாட்டா உங்களைப் பார்த்து ஒரு சிரிப்பு கூட சிரிச்சேனே.. ஸாரி, இன்னிக்கு உங்க கல்யாணி விருந்து உங்களுக்கு மட்டும் விசேஷமா தரேன்.. கட்டாயம் வாங்க..”

கையிலிருந்த கைபேசியை குட்டியிடம் கொடுத்தேன்..

“என்ன சார்.. என்ன ஆச்சு?”

“இன்னிக்கு சாய்ந்திரம் வீட்டுக்குக் கூப்பிடறா.. என் கட்டுரை ரொம்பப் பிடிச்சுருக்காம்.. ஆனா.. குட்டி.. என்னை இவள் சரியா ஏமாத்திட்டாடா.. எனக்காக ஒரு பாட்டு பாடறேன்’னு பிராமிஸ் பண்ணினவ.. ஆனா சபை’ல பாடலே.. நானும் மறந்து போயிட்டேன்.. கட்டுரைலயும் மறந்து எழுதிட்டேன்.. ஆனா டக்கெனு ஞாபகம் வந்தப்ப இவ கண்டிப்பா பாடியிருக்கா’ன்னு மனசார நினைச்சேண்டா.. ராத்திரி பூரா இந்த விஷயத்தை எழுதாம தப்பு பண்ணிட்டோமோ’ன்னு நான் பட்ட அவஸ்தை எனக்குதான் தெரியும்.. இப்ப என்னடா’ன்னா சிரிக்கிறா.. என்னை வீட்டுக்கு வரச்சொல்லி தனியா பாடறாளாம்.. நேத்து சாயந்திரமே அவகிட்டே பேசறச்சே பாக்கணுமே.. எதுக்குமே பிடிகொடுக்காமப் பேசினாடா.. அட, எவ்வளோ அழகா பிராமிஸ் பண்ணினா.. அவ்வளோ சிம்பிளா ஏமாத்திட்டாடா..இப்போ வரைக்கும் நான் மனசுக்குள்ளே கலங்கிண்டு இருந்தேண்டா.. நான் அவளுக்கு விளையாட்டுப் பொருளா மாறிட்டேனோ என்னவோ.. அப்படித்தான் இருக்கணும்”

“அப்படியா சார், அடப் பாவமே.. நீங்க என்ன சார் பண்ணப்போறிங்க.. சாயங்காலம் அவங்க வீட்டுக்கெல்லாம் போவாதீங்க சார்.. ஏன்னா.. நாமளே போய் வலை’ல மாட்டப்படாது பாருங்க..”

“சேச்சே.. என்னை என்ன மடையன்’னு நினைச்சியா.. அவஸ்தப்பட்டவங்க யாராவது மறுபடியும் போய் அதே அவஸ்தையை அனுபவிப்பாங்களாடா.. முட்டாள்தான் மறுபடி போவான்.. எதுக்கும் அவங்க போன் நம்பர் கொடுத்துட்டு போ.. கண்டிப்பா கறாரா பேசி ஒரு தேங்க்ஸ் சொல்லிட்டு கட் பண்ணிட்டா போச்சு.. போடா.. ஒரு காபி எடுத்துண்டு வா.. தலையை வலிக்குது..”

குட்டி போன் நம்பரைக் கொடுத்துவிட்டுப் போனான். அதற்குப் பிறகு நான் அவளோடு பேசியதையும் அவள் குழைந்து பேசும் மயக்கக் குரலுக்கு மயங்கி அவள் வீட்டுக்கு ஓடியதையும் குட்டியிடம் நான் ஏன் சொல்லப்போகிறேன்…
————————————————————–

படம்: ஓவியர் தேமொழி.

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “சரிகமபத நீ..கல்யாணி

  1. Excellent one. I am expecting more stories from you. 
    The only regret is, the feast is coming after long time.
    Sridevi.

  2. ஹாஹாஹா, கல்யாணி கலக்கிய விதம் அருமை.  இதைக் குழுமத்தில் பகிர்ந்தப்போப் பார்க்காமல் விட்டிருக்கேன் போல! 🙂

  3. Excellent short story. Kalyani is best among ragas. This short story also best among your SS’s.
    Dhevan 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *