டி. விப்ரநாராயணன் 

23-3-2014

அன்புள்ள தோழி மணிமொழிக்கு

உன் கடிதம் கிடைத்தது. உன் குழந்தைகள் எல்லோரும் நலமாக இருக்கிறார்கள் என்று உன் கடிதத்தின் மூலம் புரிந்து கொண்டேன். நானும் மனைவியும் இங்கே தனியாகத்தான் இருக்கிறோம். மூத்தவன் சான்பிரான்சிஸ்கோவிலும் இளையவன் கனெக்டிகட்டிலும் இருக்கிறான். இளையவனுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. என் அத்தை காலமாகிவிட்டார்கள். என் மனைவி அத்தையின் மகள் தான் என்று உனக்கு நினைவிருக்கும். ஒரு துக்கம், ஒரு சந்தோஷம். இரண்டையும் ஒரே கடிதத்தில் சொல்கிறேனே என்று நினைக்கிறாயா? இரண்டையும் ஒன்றாகப் பார்க்கும் மனநிலையை பெறுவதற்கு முனைய வேண்டும். அதாவது குழந்தை பிறந்தால் அழவேண்டும்;  யாரேனும் இறந்தால் சந்தோஷப் படவேண்டும். ஒன்று பிறவிக் கடலில் துக்கப்பட பிறந்துள்ளது;. மற்றொன்று பிறவிக் கடலிலிருந்து விடுதலையாகிச் செல்கிறது என்று என் தாத்தா அடிக்கடி சொல்வார். ஆனால் நாம் நடைமுறையில் அப்படியிருக்க முடியவில்லை.

இசைக்கச்சேரிகளுக்குப் போய்க் கொண்டிருக்கிறாயா? உபன்யாசங்களுக்குச் செல்கிறாயா? சென்ற கடிதத்தில் கீதையில்  இரண்டாவது அத்தியாயத்தில் 47 ஆவது ஸ்லோகம் புரியவில்லை என்று எழுதியிருந்தாய். அதுதான் கீதையின் அச்சாணி; நம் வாழ்விற்கும் அச்சாணி. ஸ்லோகத்தைக் கீழே தருகிறேன்

கர்மண்யே வாதிகாரஸ்தே மாபலேஷு கதாசந                                       

மாகர்ம பலஹேதுர்பூர்மாதே லங்கோஸ்தவ கர்மணி

இதன் பொருளாவது — கருமத்தைச் செய்வதில் தான் உனக்கு அதிகாரம். அதன் பலன்களில் உனக்கு அதிகாரம் எப்பொழுதும் இல்லை. மற்றும் கரும பலன்களுக்கு காரணமாக ஆகாதே. ஆனால் கருமத்தைச் செய்யாமலிருப்பதில் மனத்தைச் செலுத்தாதே.

ஒரு வேலை செய்தால் பலனை எதிர்பார்ப்பதுதானே மனித இயல்பு. எவ்வாறு பலனில் நமக்கு அதிகாரம் இல்லை என்று எப்படிச் சொல்லலாம்? —என்று நீ எழுதியிருக்கிறாய்.

நீ கூறுவது நூற்றுக்கு நூறு உண்மைதான். அப்படியிருப்பதால்தான் சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம், இதய நோய் போன்ற கடுமையான நோய்கள் நம்மை வந்து ஆட்கொள்ளுகின்றன. பலனை எதிர்பார்ப்பதற்கும் நோய்களுக்கும் என்ன தொடர்பு உள்ளது என்று நீ நினைக்கலாம்.

ஒரு செயலைச் செய்கிறோம். அதன் பலனை எதிர்பார்க்கிறோம், அது கிட்டவில்லை என வைத்துக் கொள்ளலாம். உடனே நம் மனம் அதை எண்ணி அசைபோடுகிறது. பெருத்த ஏமாற்றம் விளைகிறது. யாருக்காக இந்த வேலை செய்தாயோ அவன் உன்னை சீண்டக்கூட இல்லை. அவனுக்குப் பலன் கிடைத்துவிட்டது. அவன் உனக்கு நன்றி கூடச் சொல்லவில்லை என்று உன் மனம் வேதனைப் படுகிறது. அவன்மேல் கோபம் உண்டாகிறது. கோபம் வெறுப்பாகிறது. அவனைப் பார்க்கக் கூடாது; அவனிடம் பேசக் கூடாது என்றெல்லம் உன் மனம் நினைக்கிறது. மற்றவர்களிடம் சொல்லிப் புலம்புகிறாய். தூக்கம் கெடுகிறது. மனவலி அதிகமாகிறது. மயக்கமாகி விடுகிறாய். மருத்துவர் சோதனை செய்கிறார்; இதயத்தில் கோளாறு என்று கணிக்கிறார். ஒரு சிறு எதிர்பார்ப்பு எங்கே உன்னை இட்டுச் சென்று விட்டது என்று பார்த்தாயா?

காந்திஜி நமக்கு சுதந்திரம் வாங்கித் தந்தார். ஆனால் ஆகஸ்டு 15ஆம் நாள் சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ளவில்லை. அவர் நவகாளிக்கு யாத்திரையை மேற்கொண்டுவிட்டார். தான் பிரதமராவதற்கோ அல்லது ஜனாதிபதி ஆவதற்கோ அவர் தியாகம் புரியவில்லை. ஆகவே நாம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாது நம் கர்மங்களைச் செய்ய நாம் மனதைத் தயார் செய்துகொள்ள வேண்டும்.

ஸ்ரீராமானுஜர் தன் குருவிடம் உபதேசம் பெற 18 முறை ஸ்ரீரங்கத்திலிருந்து திருக்கோஷ்டியூருக்கு நடந்தார். 18 ஆவது  முறையின்போதுதான் அவர் உபதேசம் பெற்றார். 18 முறை சென்றதற்குக் காரணம் அவர் அந்த உபதேசத்தைப் பேறுவதற்கு அவர் தயாராகவில்லை என்று அவர் குரு எண்ணினார். அந்த உபதேசத்தைப் பெற்றவுடன் அவர் அந்த மந்திரத்தை சாதி மத வேறுபாடின்றி எல்லோருக்கும் உபதேசம் செய்தார். தான் நரகம் புகுந்தாலும் மற்றவர்கள் வைகுண்டம் செல்ல வேண்டும் என்ற உன்னதமான எண்ணம்.  இவர்கள் எந்த பலனையும் எதிர்பார்க்காது மக்களுக்குத் தொண்டாற்றவே நாம் பிறந்திருக்கிறோம் என்று எண்ணிய மகான்கள்.

நான் என் கடமையைச் செய்துவிட்டேன். இனி நான் ஓய்வெடுக்கப் போகிறேன் என்பதும், என் பிள்ளையை 10 மாதம் தோளில் சுமந்தேன், அவன் என்னைக் கவனிக்காமல் விட்டு விட்டான் என்பதும், நான் அவனை இந்த வயிற்றில் 10 மாதங்கள் சுமந்து பெற்றேன்; ஆனால் இன்று அவன் இந்த வயிற்றுக்கு ஒரு வாய் சோறு கூட போடமாட்டேனென்கிறான் என்று புலம்புவதும் எதிர்பார்ப்பின் பயனே.

குழந்தைக்கு தாய் உணவு ஊட்டுகிறாள். அப்பொழுது அவன் பிற்காலத்தில் தன்னை சுகமாக வைத்திருப்பான் என்றா அவள் நினைக்கிறாள். இல்லையே. ஆனால் அவன் வேலைக்குப் போன பின்பு நினைக்கிறாள். அவனுக்குத்  திருமணம் நடந்தபின் இதையே நினைக்கிறாள். அவன் மனமோ தாயைப் பற்றிய சிந்தனையில்லாது இருக்கிறது. முடிவு முதியோர் இல்லம் தான். இவையாவும் எதிர்பார்ப்பின் விளைவே.

காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார்கள் இளம் சிட்டுகள். இரண்டு நாளில் பிரிந்து விடுகிறார்கள். காதலிக்கும்போது ஈருயிரும் ஓருடலுமாக இருந்தவர்கள் வெவ்வேறு உயிராக மாறிய விந்தைதான் எங்ஙனம்? எல்லாம் எதிர்பார்ப்பின் விளைவுதான். நான் சொன்னபடிதான் நீ இருக்கணும் என்று அவனும் தான் சொன்னபடி அவன் இருக்கணும் என்று அவளும் நினைக்க மணச் சிதைவு ஏற்பட்டுவிட்டது. பயத்தினால் எதிர்பார்ப்பு ஏற்படுகிறது.

 நாம் பிறருக்கு உதவி செய்தாலும், ஆலயங்களில் பணியாற்றினாலும் நமக்கு மோக்ஷம் கிட்டும் என்று மதங்களும் மறை நூல்களும் கூறுகின்றன. இம்மாதிரி கூறும் மதங்களைச் சாடுகிறார் வினோபாபாவே. மோக்ஷத்தைக் காட்டி பணி செய்யவைக்கக் கூடாது என்கிறார். ஆலயங்களில் எந்தவித ஊதியமுமின்றி பணியாற்றிக் கொண்டிருக்கிறார் ஒருவர். ஒருநாள் ”நாம் இத்தனை நாள் இங்கு பணியாற்றி வருகிறோம் இந்தக் கடவுள் கண்ணைத் திறக்க மாட்டேனென்கிறானே; இங்கு பணியாற்றினால் நம் பெண்ணுக்கு நல்ல வரன் வரும் என்று கூறினாரே அந்த ஜோஸியர்” என்றெல்லாம் அவர் மனம் அங்கலாய்க்கிறது. முடிவில் ஆலயத்திற்குச் செல்வதையே நிறுத்திவிட்டார்.

அதனால் மணி மொழி நாம் நம் வேலையைச் செய்து கொண்டேயிருக்க வேண்டும். நம் கடன் பணி செய்வதே. அன்னை தெரசா, காஞ்சி பெரியவர், இரமண மகரிஷி, காந்திஜி, தியகராஜ ஸ்வாமிகள், ஸ்ரீராமகிருஷ்ணர், விவேகானந்தர் ஆகியோருடைய அறிவுரைகளையும் வாழ்க்கையையும் படிக்கவேண்டும். எதிர்பார்க்காமல் வாழ முடியாது; ஆனால் நம்மை நாம் செய்யும் கர்மத்தில் முழுமையாக ஈடுபட்டு அதில் ஆனந்தத்தைப் பெறும் வழியைக் கண்டால் எதிர்பார்ப்பு  என்ற சொல்லே நம் அரிச்சுவடியில் வராது. இது ஒரே நாளில் வரக் கூடிய பண்பு இல்லை.

கோவிலுக்கு ஒரு பால்காரி பால்கொண்டு வருவது வழக்கம். மழையின் காரணமாக ஆற்றில் வெள்ளம் வந்துவிட்டது.. அவள் மெதுவாகக் ஆற்றைக் கடந்து தாமதமாகப் பாலைக் கொண்டு வந்து கொடுத்தாள். கோவில் பூசாரி அவளிடம் “நீ ஆண்டவனை மனதில் நினைத்திருந்தால் ஆறே உனக்கு வழி விட்டிருக்கும்“ என்றார். “அப்படியா! நான் முயன்று  பார்க்கிறேன்” என்றாள். மறுநாள் மழை பெய்தது. ஆற்றில் வெள்ளம் வடியவில்லை. ஆனால் அவளோ சீக்கிரம் பாலைக் கொண்டு வந்து விட்டாள். ”எப்படி?”என்று கேட்டார் பூசாரி. “நீங்கள் சொன்ன மாதிரி செய்தேன். ஆறு வழி விட்டது, வந்துவிட்டேன்” என்றாள் பால்காரி. உடனே பூசாரி ”என்னையும் அழைத்துச் செல்” என்றார். உடனே இருவரும் ஆற்றை நோக்கி வந்தனர். இருவரும் ஆற்றில் இறங்கினர். பால்காரி ஆற்றில் எளிதாக நடந்து சென்றாள். ஆனால் பூசாரியால் முடியவில்லை. காரணம் அவர் பால்காரி போல் அக்கறையுடன் ஆண்டவனைத் தியானிக்கவில்லை. பூசாரி ஆண்டவன் அருகில் சேவை செய்தும் அவருக்குப் பலன் கிட்டவில்லை. ஏனெனில் அவர் பலனை எதிர்பார்த்து பணியாற்றுகிறார். பொதுவாக கோயில் பூசாரிகள் தட்டில் விழும் பணத்தையே பார்த்துக் கொண்டிருப்பதை நாம் கவனித்திருக்கலாம்.

மேலே சொன்ன செய்திகள் உனக்கு நன்றாகப் புரிந்திருக்கும். செய்யும் வேலையில் கவனமும் அன்பும் ஈடுபாடும் வேண்டும். பலன் தானாகவே வந்து சேரும். நீயும் நானும் படிக்கும்போது நம் பெற்றொர்கள் நம்மைப் போல் எந்த எதிர்பார்ப்பும் இல்லாதுதான் நம்மை வளர்த்தார்கள். அவர்களுக்கு. வாழ்க்கையைக் கண்டு பயமில்லை. அதனால்தான் என் உடன் பிறந்தவர்கள் ஆறு பேர், உன்கூடப் பிறந்தவர்கள் எண்மர். நம் பெற்றொர்கள் நம் எதிர்காலம் பற்றிக் கனவு கண்டு தங்கள் வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டார்களா? இல்லையே. அவர்களுக்கு எந்த வியாதியும் வரவில்லை.

எதிர்பார்ப்பு இல்லாமல் வாழ்வதற்கு ஒரே வழி கடந்தகால நினைவுகளையும் வருங்காலக் கனவுகளையும் விடுத்து நிகழ்காலத்தில் வாழ்வதுதான்.

உன் பிள்ளைகளையும் பேரன் பேத்திகளையும் விசாரித்ததாகச் சொல்லவும். ஒருதடவை இங்கு வந்துவிட்டுப் போயேன்.

உன் பிரியமுள்ள தோழன்,

அருள்மொழி.

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “அன்புள்ள தோழி மணிமொழிக்கு

  1. The message given in the letter form,though looks simple 
    Has a very strong value.It makes you to introspect a lot and
    actually gives us the solution to a  stress free life.
    l especially like the place where the author tells about birth and
    death with equal attitude.
    congrats for a nice piece of writing.keep up the good work.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *