கீதா மதிவாணன்

 

மகனே மணிமொழி!

அன்புமகன் மணிமொழிக்கு,

அம்மா எழுதுகிறேன். நலமாக இருக்கிறாயா? நீ எப்போதும் குன்றாக உடல்நலத்தோடும் குறைவிலாத மகிழ்வோடும் வாழவேண்டும் என்பதுதான் பெற்றவர்களாகிய எங்கள் எண்ணமும் ஆசையும். மனத்தாங்கலுடன் ஊருக்குப் புறப்பட்டுச் சென்ற நீ இந்நேரம் வருத்தம் நீங்கி தெளிவடைந்திருப்பாய் என்றும் எப்போதும் போல் தொலைபேசியில் பேசுவாய் என்றும் நாங்கள் காத்திருந்தோம். ஆனால் கடந்த நான்கைந்து நாட்களாக உன்னிடமிருந்து அழைப்பு வரவேயில்லை. நாங்களாக அழைத்தபோதும் நீ வேலையாக இருப்பதாக உன் அறைத்தோழன்தான் பேசினான். உண்மையில் வேலையாகத்தான் இருக்கிறாயா? அல்லது மனவருத்தம் இன்னும் குறைந்தபாடில்லையா? என்ற கவலையோடு எங்கே உனக்கு உடல்நிலை சரியில்லையோ என்ற புதிய கவலையும் சேர்ந்துகொண்டது.

நடந்த விஷயத்தை எண்ணி இன்னும் நீ மருகிக்கொண்டிருக்கிறாயெனில் அதைப் போக்கித் தெளிவேற்படுத்தவேண்டியது பெற்றோரான எங்கள் கடமை. அதன்பொருட்டே இக்கடிதத்தை எழுதுகிறேன். நீ அமைதியான மனநிலையில் இருக்கும்போது இதைப் படிக்குமாறு வேண்டுகிறேன். நீ படித்தவன்; புத்திசாலி. நான் சொல்வதை நிதானமாக யோசித்துப் புரிந்துகொள்வாய் என்று நம்புகிறேன்.

நம் உறவினர்களும் நண்பர்களும் உன் அப்பாவைப் பார்த்து வியக்கும் ஒரு விஷயம்… எப்படி ஒருவரால் என்றுமே கடன் வாங்காமல் இப்படியொரு நல்ல வாழ்க்கையை வாழமுடிகிறது என்பதுதான். உச்சபட்சமாய் கலங்கிய நெஞ்சத்துக்கு “கடன்பட்டார் நெஞ்சம்போல” என்றொரு உவமையைக் காட்டுவார் கம்பர். அப்படியொரு கலக்கத்தை இதுவரை உன் அப்பாவும் அனுபவித்ததில்லை. நம்மையும் அனுபவிக்க வைத்ததில்லை.

எனக்கும் உன் அப்பாவுக்கும் திருமணமானபோது வறுமைக் கோட்டுக்கும் கீழேதான் எங்கள் வாழ்க்கை இருந்தது. இப்போது உன் அப்பா மேலாளராய் பணிபுரியும் அதே நிறுவனத்தில்தான் ஒரு கடைநிலைத் தொழிலாளியாய் தன் வாழ்க்கையை ஆரம்பித்தார். ஆனால் தன் உழைப்பாலும் திறமையாலும் கொஞ்சம் கொஞ்சமாய் முன்னேறி இன்று இந்த நிலையை அடைந்திருக்கிறார். ஆரம்பகாலத்தில் அவருக்குக் கிடைத்த சொற்ப வருமானத்திலும் திட்டமிட்ட வாழ்க்கையை வாழ்ந்தோம். நான் என்னுடைய ஓய்வுநேரங்களில் கைவினைப் பொருட்கள் செய்து விற்று முடிந்தவரை உன் அப்பாவுக்கு உதவினேன். எதிலும் சிக்கனத்தைக் கடைப்பிடித்தோம். அநாவசிய செலவுகளைத் தவிர்த்தோம். மருத்துவம், கல்வி, போன்ற அவசியத் தேவைகளுக்கு சேமித்துவைத்தோம். அதற்காக கஞ்சத்தனமாகவும் இல்லை. விருந்தோம்பல், உறவினர் திருமணம், சுற்றுலா போன்ற மகிழ்வான தருணங்களையும் தவறவிடவில்லை.

யாவும் நீ அறிந்ததுதான். அந்த சூழ்நிலையிலும் உன்னையும் உன் தங்கை மலர்விழியையும் நல்லபடியாகவே வளர்த்தோம். எங்களுக்கு சிரமந்தராமல் நீங்களும் நல்ல பிள்ளைகளாக வளர்ந்தீர்கள்; நீ மணிமொழிச்செல்வன் என்ற உன் பெயருக்கேற்ப மணிமணியாய் பேசுவாய்; அனைவரிடமும் அன்புடனும் மரியாதையுடனும் நடந்துகொண்டாய்; அரசுப்பள்ளியில் படித்தாலும் நன்கு படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல்மாணவனாய்த் தேறினான். சென்னையில் நல்ல கல்லூரியில் இடம் கிடைத்து எங்களை விட்டுப் பிரிந்து சென்றாய். வாழ்க்கைப்பாடத்தைக் கற்றுக்கொள்ள உனக்கு இதைவிடவும் நல்ல வாய்ப்பு அமையாது என்று எங்கள் மனத்தை திடப்படுத்திக்கொண்டு உன்னை விடுதிக்கு வழியனுப்பிவைத்தோம். கல்லூரியிலும் கருமமே கண்ணாக படித்து, நல்மாணாக்கனாய்த் தேறி மும்பையிலிருக்கும் பெரிய நிறுவனமொன்றில் நல்லதொரு உத்தியோகமும் பெற்றுக்கொண்டாய். அதன் பின்னணியிலான உன் கடுமையான உழைப்பை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம்.

நீ வேலையில் சேர்ந்து இந்த மாதத்துடன் ஒருவருடம் ஓடிவிட்டது. நினைத்துப்பார்க்கவே மலைப்பாக உள்ளது. நேற்றுதான் உன்னை முதன்முதலாகப் பள்ளியில் சேர்த்த நினைவு! நீயும் படித்துப் பட்டம் பெற்று நல்ல உத்தியோகமும் கிடைத்து ஒருவருடம் முடிந்துவிட்டது என்றால் நம்பத்தான் முடியவில்லை. இதோ… இந்த வருடம் உன் தங்கையும் கல்லூரியில் காலடி எடுத்துவைத்துவிட்டாள்…

“வேலை கிடைத்தவுடன் அந்தப் பணத்தை என்ன செய்யப்போகிறாய் அண்ணா?” என்று மலர்விழி கேட்டாள். நீ உன் சம்பளப்பணத்தை முழுவதுமாய் அப்பாவிடம் தந்துவிடப்போவதாக சொன்னாய். அப்பா அதை மறுத்துவிட்டு அந்தப் பணத்தை உன் செலவுகளுக்காக பயன்படுத்திக்கொள்ளுமாறும் மீதத்தை உன் பெயரில் வங்கியில் சேமித்துவைக்கும்படியும் சொன்னதோடு அவரே அதற்கான முயற்சிகளையும் செய்து உன் பெயரில் வங்கிக்கணக்கைத் துவக்கியும் கொடுத்தார். மாதமொருமுறை ஊருக்கு வந்துபோகும் நீ ஒவ்வொருமுறையும் மனங்கொள்ளாத அன்புடனும் கைகொள்ளாத அன்பளிப்புகளுடனும் வருவதையே வழக்கமாக்கிக் கொண்டாய்.

நீ உன் முதல்மாத சம்பளத்தில் எனக்கு ஒரு பட்டுப்புடவையும் அப்பாவுக்கு ஒரு கைக்கடிகாரமும் மலர்விழிக்கு ஒரு மடிக்கணினியும் வாங்கித்தந்தாய். அவை ஒவ்வொன்றின் விலையும் மிகவும் அதிகம் என்றபோதும் உன் திருப்திக்காக நாங்கள் அவற்றை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டோம். அதன்பின் தொடர்ந்து உன் சம்பளப்பணத்திலிருந்து எங்களுக்கு, தங்கைக்கு, வீட்டுக்கு அது இது என்று எதையாவது வாங்கித் தந்துகொண்டேதான் இருக்கிறாய். ஒன்றிரண்டு முறை நானும் அப்பாவும் சூசகமாக உன்னிடம் சேமிப்புப் பற்றித் தெரிவித்தோம். நீ அதைப் புரிந்துகொண்டாயா என்று தெரியவில்லை. புரிந்திருந்தால் நீ தேவையற்றப் பொருட்களில் பணத்தைப் போடுவதை நிச்சயம் தவிர்த்திருப்பாய்.

சென்றவாரம் வந்தபோது அதிநவீன கைபேசிகளை ஆளுக்கொன்றாய் வாங்கிவந்திருந்தாய். அதன் விலை என்னவென்று எனக்குத் தெரியாது. ஆனால் சாதாரண கைபேசியைவிடவும் அதிகமாக இருக்குமென்று தெரியும். அது எங்களுக்குத் தேவைதானா? யோசித்துப் பார்… கைபேசியின் முக்கியப் பயன் தொலைவில் உள்ளவர்களோடு தகவல் தொடர்பை பரிமாறிக் கொள்வதுதான். அதற்கு இப்போதிருக்கும் சாதாரண கைபேசியே போதுமானது அல்லவா?

நீ உன் அப்பாவிடம் அந்த கைபேசியைக் கொடுத்தபோது, “எதற்கு இந்த அநாவசியச் செலவு? இனி இதுபோல் தேவையின்றி செலவழிக்காதே” என்றார். நீ முகம் சுருங்கிப் போனாய். எதுவும் சொல்லாமல் அறைக்குள் சென்று முடங்கிக்கொண்டாய். அதன்பின் நீ எங்களுடன் சரியாகப் பேசவே இல்லை. அண்ணன் எப்போது வருவான் என்று ஆசையாய்க் காத்திருந்த உன் தங்கை மலர்விழியிடம்கூட முகம் கொடுத்துப் பேசவில்லை. சரியாக சாப்பிடவும் இல்லை. நானும் உன் மனநிலை சற்று மாறியதும் உன்னுடன் பேசி தெளிவுபடுத்தலாம் என்று காத்திருந்தேன். நான்குநாட்கள் தங்குவதாகச் சொல்லி வந்திருந்த நீ வேலை இருக்கிறது என்றுசொல்லி மறுநாளே மும்பை கிளம்பிச்சென்றுவிட்டாய்.

மனவருத்தத்துடன்தான் நீ ஊருக்குச் செல்கிறாய் என்று தெரிந்தாலும் நான் தடுக்கவில்லை. நிதானமாக யோசித்தால் நீயே புரிந்துகொள்வாய் என்று விட்டுவிட்டேன். ஆனால் உன் எண்ணத்தில் சிறிதும் மாற்றமில்லை என்று தெரியவரும்போது வருத்தமாய் உள்ளது. பிள்ளைகள் தவறு செய்யும்போது திருத்துவது பெற்றவர் கடமை அல்லவா? மன்னனுக்கே இது பொருந்தும்போது… மகனுக்குப் பொருந்தாதா?

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

கெடுப்பார் இலானும் கெடும்

என்னும் குறளின் விளக்கம் நீ அறியாததா?

உழைப்பு, சிக்கனம், சேமிப்பு இவற்றின் மூலமே சீரான, மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழமுடியும் என்று வாழ்ந்துகாட்டிக்கொண்டிருப்பவர் உன் அப்பா. ஆரம்பநாட்கள் முதலே அதற்குத் உறுதுணையாயிருந்தவர்கள் நானும் எங்கள் பிள்ளைகளாகிய நீங்களும். ஆம். சிறுகுழந்தையிலிருந்தே பார்க்கும் எதற்கும் ஆசைப்படாதவர்கள் நீங்கள். அதுவேண்டும் இதுவேண்டும் என்று நச்சரிக்காதவர்கள். ஒரு பொருளைக் கேட்டு அது கிடைக்காவிடில் அதற்காக பிடிவாதம் பிடிக்காதவர்கள். மொத்தத்தில் குடும்பத்தின் நிலையை உணர்ந்து பொறுப்புடன் செயல்பட்டவர்கள். முக்கியமாய் நீ!

உனக்கு நினைவிருக்கிறதா? உனக்கு பத்துவயதாயிருக்கும்போது ஒருமுறை திருவிழாவுக்குச் சென்றிருந்தோம். உன் தங்கை ஊதல் வேண்டுமென்று கேட்டாள். அப்பா வாங்கித்தர முன்வந்தபோது நீ சொன்னாய், “ஏன் அப்பா ஊதலுக்கு செலவு செய்கிறீர்கள்? நம் வீட்டு பூவரசு இலையில் நான் அவளுக்கு பீப்பீ… செய்து தருகிறேன்” என்று சொன்னதோடு, வீட்டுக்கு வந்தவுடனேயே விதவிதமான ஒலியெழுப்பும் ஏராளமான பீப்பீக்களைச் செய்துகொடுத்து அவளை மகிழ்வித்தாய். நானும் உன் அப்பாவும் உன் செயலை எண்ணி வியப்பும் பெருமையும் அடைந்தோம்.

இரண்டு வீடு தள்ளியிருக்கும் கடையில் தேங்காய் வாங்கிவரச்சொன்னால் இரண்டுதெரு தள்ளியிருக்கும் கடைக்குச் சென்று வாங்கிவருவாய். கேட்டால் இந்தக் கடையைவிடவும் அந்தக்கடையில் விலை மலிவு. பொருளும் தரமாக இருக்கும் என்பாய். பன்னிரண்டு வயதில் உனக்கிருந்த பொறுப்பை எண்ணி வியந்தேன்.

சிறுவயதில் அவ்வளவு பொறுப்புடன் இருந்த நீ இப்போது முறையற்ற செலவுகளை செய்வதைப் பார்த்து இப்போதும் வியக்கிறேன். நீ இப்போதுதான் வாழ்க்கையைத் துவங்கியிருக்கிறாய். இனி திருமணம், குடும்பம், குழந்தைகள் என்று பொறுப்புகள் அதிகரிக்கும். செலவுகளும் அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகள் எவ்வளவோ ஏற்படலாம். எதிர்காலத்தை எப்போதும் மனத்தில் வைத்து நிகழ்காலத்தில் செயல்படுவதே புத்திசாலித்தனம்.

வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்

வைத்தூறு போலக் கெடும்

அல்லவா?

எங்களை வசதியாக வாழவைக்கவேண்டுமென்பதுதான் உன் ஆசையென்று அடிக்கடி சொல்வாய். வளர்ந்து பெரியவர்களானதும் பெற்றவர்களைத் திரும்பியும் பார்க்காத பிள்ளைகளுக்கு மத்தியில் இப்படியொரு அற்புதமான பிள்ளையைப் பெற்றதற்காக ஈன்ற பொழுதினும் நாங்கள் பெரிதும் மகிழ்கிறோம். இந்த அன்பு ஒன்றே போதும். வசதியான வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை வாங்கித் தந்துவிட்டாய். இனி ஏதேனும் வாங்குவாயானால் அது ஆடம்பரம்தான். அது நமக்குத் தேவையில்லாத ஒன்று. இனியாவது உன் சேமிப்பில் கவனம் செலுத்து. எந்தவொரு பொருளையும் வாங்குவதற்கு முன் அது நமக்கு அவசியம் தேவைதானா என்று ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து வாங்கு.

சிக்கனமும் சேமிப்பும் பணத்தில் மட்டுமன்று… தண்ணீர், மின்சாரம், எரிபொருள் என்று நமக்கு அத்தியாவசியத் தேவையான எல்லாவற்றிலும் சிக்கனத்தைக் கடைப்பிடித்தால் பின்னாளில் கையைப் பிசைந்துகொண்டு கலங்கிநிற்கவேண்டிய அவசியம் ஏற்படாது.

வருமுன் காப்பவன்தானே அறிவாளி?

வந்தபின் தவிப்பவன் ஏமாளியல்லவா?

நீ அறிவாளியாக இருக்கவிரும்புகிறாயா? ஏமாளியாகப் போகிறாயா? அப்பாவின் சொற்ப வருவாயில் நாம் சந்தோஷமாக வாழ்ந்த காலங்களை நினைத்துப்பார். இப்போது நீ கைநிறைய சம்பாதிக்கிறாய்… ஆனால் உன் எதிர்காலத்தைக் குறித்து எங்களை கவலையுறச் செய்திருக்கிறாய்… மகனே மணிமொழி! இதுவா நீ எங்களை மகிழ்வாய் வைத்திருக்கச் செய்யும் முயற்சி? நிதானமாக யோசித்துப்பாரப்பா! அடுத்தமுறை நீ நம் வீட்டிற்கு வரும்போது பை நிறைய பரிசுப்பொருள் வேண்டாம். மனம் நிறைக்கும் அன்பை மட்டுமே அள்ளிக்கொண்டுவா! நம் குடும்பத்துடன் குதூகலமாய் உன் விடுமுறை நாட்கள் கழியட்டும்! எங்களுக்கு உண்மையான மகிழ்ச்சி அதுதான் என்பதை உணர்ந்துகொள்!

உன் உடல்நிலையைக் கவனித்துக்கொள். உடல்நிலை சரியில்லையெனில் அலட்சியமாய் இருக்காதே. உடனே மருத்துவரிடம் காட்டு. ஏதேனும் தேவையெனில் எனக்குத் தெரிவி. உன் அறைத்தோழர்களைக் கேட்டதாகச் சொல். நாங்கள் அனைவரும் உன் அடுத்த வருகையை ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறோம்.

என்றும் அன்புடன்,

உன் அம்மா.

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “அன்புள்ள மணிமொழி!…

  1. தங்களது கருத்து நன்று.(சேமிப்பு)
    ஆனால் இளைஞர்களின் மனப்போக்கு வேறு.கைநிறைய பணம்.இருக்கப்போவது பெற்றோர்களுடன் சிலநாட்கள்.அதில் பொருட்களை வாங்கிக்கொடுப்பது அவரது மகிழ்ச்சி.பெற்றோர் அனுபவிக்கவேண்டும் என்பது அவர்களது ஆசை.சேமிப்பிலும் அக்கறையுடன்தான்இருக்கிறோம்.பெற்றோர் எங்களுடன் மகிழ்வாக இருந்தால் என்ன?சிக்கனத்தைக்கடைபிடி என்று கூறிவிட்டு எப்போதும் பெற்றோர் அந்தக்காலத்திலேயே இருக்கவேண்டுமா?இதுதான் இன்றைய இளைஞர்களின் மனக்குறை.நிறைய வீடுகளில் இந்த குறைபாடுகளினால் மனவிரிசல்கள் நிறைய ஏற்பட்டுள்ளன. பெற்றோர்களும் ஊர்ப்பண்பாட்டிற்காக பிள்ளைகள் பெரிய இடத்தில் பணியாற்றுகிறார்கள் என்று சொல்கிறார்களேதவிர அவர்களது பணத்தை எடுக்க விரும்புவது கிடையாது.பெரிய இடத்தில் வேலை பார்க்கிறாய்.அதான் பழையதை மறந்துவிட்டாய் என்றும் எத்தனை இடிபாடுகள்.உடல்நலம் சரியில்லை என்றால்கூட பிள்ளைகளைச்சார்ந்து வாழாமல் இருப்பவர் இன்றளவில் மிகுந்துள்ளனர்(வறட்டுப்பிடிவாதம்)
    இது இளைஞர்களின் மனக்குறை.ஒழுக்கமாகமனதளவில் ஒருவனுக்கு ஒருத்தியாய் வாழ்ந்து,அறம்செய்து பிறர்மகிழ நம்வாழ்வை அமைத்துக்கொள்வதுதான் உண்மையான வாழ்க்கை. அதைப்புரிந்து அனைவரும் நடந்தாலே போதுமானது.

  2. தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவித்துப் பிள்ளைகள் அநாவசியமாக செலவு செய்கிறார்களே என்று பெற்றோர் கவலைப்படத்தான் செய்கின்றனர்.  அவர்களைப்  பொறுத்தவரை பிள்ளைகளின் வாழ்வு வளமானதாக இருக்க வேண்டும்; இப்படியெல்லாம் செலவு செய்தால் நாளைக்கு நம் பிள்ளை கஷ்டப்படுவானோ என்ற எண்ணம் தான்.  ஆனால் பிள்ளைகளுக்கோ விலையுயர்ந்த பொருட்களை வாங்கிக் கொடுத்து நம் பெற்றோரைச் சுகப்பட வைக்க வேண்டும் என்று ஆசை.  இந்தத் தலைமுறை இடைவெளியையும் சேமிப்பின் அவசியத்தையும் விளக்கி நல்ல நடையில் கடிதம் எழுதியிருக்கும் கீதாவிற்குப் பாராட்டுக்கள்!

  3. இந்தக்கால இளைஞர்களின் மனநிலையையும், அதைக் குறித்த பெற்றோர்களின் மனக்கவலையையும் நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள், கீதா. இந்த தலைமுறை இடைவெளி ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிறது. நமக்கு அவர்கள் எதிர்காலத்திற்கு சேர்த்து வைக்கவேண்டுமென்று கவலை. அவர்களுக்கோ கிடைக்கும்போது அனுபவித்து விடவேண்டும் என்ற ஆசை.
    மிகச் சிறப்பாக இரு பக்க நியாயத்தையும் கடிதத்தின் மூலம் சொல்லியிருக்கிறீர்கள். 
    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்!

  4. @ DR.Lakshmi (பொன்ராம்)

    தங்கள் கருத்துரையும் விமர்சனமும் கண்டு மிக்க மகிழ்ச்சி. தாங்கள் குறிப்பிட்டுள்ளபடி தற்காலத்திய இளைஞர்களுக்கும் முந்தைய தலைமுறையினருக்கும் பலவிதங்களில் உண்டாகும் விரிசல்களையும் மன உரசல்களையும் எண்ணத்தில் கொண்டே எழுதப்பட்டது இக்கடிதம்.  தங்கள் கருத்து பதிவுக்கு  சிறப்பு சேர்ப்பதாய் உள்ளது. மிக்க நன்றி தங்களுக்கு. 

  5. @ ஞா.கலையரசி

    கடிதத்தின் சாராம்சத்தைப் பாராட்டி கருத்துரைத்து பதிவுக்கு சிறப்பு சேர்த்த தங்களுக்கு என் இனிய நன்றி. 

  6. @ ரஞ்சனி நாராயணன்

    தங்கள் கருத்தும் விமர்சனமும் கண்டு மிக்க மகிழ்ச்சி. தங்கள் மறுமொழிக்கும் வாழ்த்துக்கும் அன்பான நன்றி.

Leave a Reply to DR.Lakshmi(பொன்ராம்)

Your email address will not be published. Required fields are marked *