ராஜலக்ஷ்மி பரமசிவம்

அன்புள்ள தோழி  மணிமொழிக்கு,

நீயும் உன் வீட்டினரும் நலமுடன் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

இப்பொழுது கடிதம் எழுத என்ன அவசியம் என்று தோன்றலாம்.மேலே படி உனக்கே புரியும்.

எனக்கு மிகவும் தெரிந்த ஒருவருடைய மகள், நன்கு படித்தவள், நல்ல உத்தியோகம், சம்பளம், கண் நிறைந்த கணவன், அழகான குழந்தை  என்று வாழ்ந்து கொண்டிருந்தவள் சட்டென்று விவாகரத்து செய்வதாக சொன்னவுடன், என் மனம் தாங்க முடியாத வேதனையில் ஆழ்ந்தது. என் ஆதங்கத்தை யாரிடமாவது சொல்ல நினைத்தேன். அதனால் தான் இக்கடிதம் எழுதுகிறேன். இப்பொழுதெல்லாம் விவாகரத்து என்பது சர்வ சாதாரணமாகி விட்டதே என்கிற  ஆதங்கம் தான் மேலோங்கியது. எங்கே தவறு செய்கிறோம் என்று யோசித்தேன். என் மனதில் தோன்றியதை  இதோ கொட்டி விட்டேன்.

உலகமே நம்மைப் பார்த்து  மூக்கில் விரல் வைக்கும் ஒரு விஷயம் உண்டென்றால், அது நம் குடும்ப அமைப்பு தான். அந்தக் குடும்ப அமைப்பை போற்றிப் பாதுகாத்து, சிறிதளவும் சிதையாமல் அடுத்தத் தலைமுறைக்கு கொண்டு செல்வதில், நம் பெண்களுக்கு மாபெரும் பங்கு இருக்கிறது என்பதை யாருமே மறுக்க முடியாது. அதை  நம் பெண்களும் லாவகமாக, நேர்த்தியாக  கொண்டு சென்றார்கள்.

ஆனால் இப்பொழுது அந்தக் குடும்ப அமைப்பு கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்து கொண்டிருக்கிறது. நான் சொல்லவில்லை. குடும்ப நல நீதி மன்றத்தில் மலையாய்  குவிந்திருக்கும் விவாகரத்து வழக்குகள்  வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

நம் பாட்டித் தலைமுறைப் பெண்கள் வீட்டிற்குள்ளேயே தன் ராஜாங்கத்தை அடக்கி வாழ பழக்கப்பட்டவர்கள். பெரும்பாலும் கூட்டுக் குடும்ப வாசிகள் இவர்கள். அவர்களுக்கு  கருத்து சுதந்திரம் கிடையாது. அவர்களுக்கு அடுத்தத் தலைமுறைப் பெண்கள் வீட்டையும், அலுவலகப்  பணியையும் ஒருங்கே செய்து இரட்டைக் குதிரை சவாரி  செய்தவர்கள். அவர்களுக்கு ஓரளவு சுதந்திரம் இருந்தது என்று சொல்லலாம். அதற்கும் அடுத்த தலைமுறைப் பெண்கள், இக்கால இளம் மங்கையர், பெயருக்குப் பின்னால் பல பட்டம் தாங்கியவர்கள். இவர்களில் பெரும்பாலோர் அலுவலகத்தில் பணி புரிகிறவர்கள். இவர்களுக்கு இன்னும் கூடுதல் சுதந்திரம் இருக்கிறது. இவர்களுக்கு அவர்கள் கணவர்களுடைய உதவி பெரிய அளவில் கிடைக்கவே செய்கிறது. சமையலாகட்டும், குழந்தை வளர்ப்பிலாகட்டும் எல்லாவற்றிலும் கணவன் உதவிக் கரம் நீட்டுகிறான். பொருளாதாரத்திலும் பெண்களின் நிலைமை முன்னேறியிருகிறது. இக்காலப் பெண் பொருளாதாரத்திற்காக கணவனை நம்பியிருக்க வேண்டிய நிர்ப்பந்தமில்லை. இது அத்தனையும் பாராட்டுக்குரியதே. ஆனால் விவாகரத்தும் அதிகமாகிக் கொண்டு வருகிறது. ஏன்? மிகப் பெரிய கேள்வி இது.

இந்தத் தன்னிறைவுத் தன்மையை சில பெண்கள் தவறாகப் பயன்படுத்திக் கொள்கிறார்களோ என்கிற சந்தேகம் எழுகிறது. பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தினால் அவர்களின் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, சகிப்புத்தன்மை எல்லாவற்றையும்  தொலைத்து விட்டார்களோ என்கிற அச்சம் எழுகின்றது. விட்டுக்கொடுத்துப் போவது என்பது அடங்கி வாழ்வது என்று தவறாகப் புரிந்து கொள்வதன் விளைவு, விவாகரத்தில் முடிகிறது. நான் எல்லாப் பெண்களையும் சொல்லவில்லை. அற்பக் காரணங்களுக்காக விவாகரத்து செய்து, வாழ்க்கையைத் தொலைத்து விட்டு நான் சுதந்திரமாக இருக்கிறேன் என்று பெருமைப்படும் பெண்களை என்ன சொல்வது? இப்படிக்  கண்ணை விற்று ஓவியம் வாங்கத் துணியும் பெண்களைப் பற்றி தான் குறிப்பிடுகிறேன்.

ஆணாகட்டும், பெண்ணாகட்டும் திருமணத்திற்கு முன் கனவுகளையும், கற்பனைக் கோட்டைகளையும் கட்டி வைத்திருப்பார்கள். சந்தேகமில்லை. அந்த எதிர்பார்ப்புகள் நடக்கவில்லையென்றால், அந்தக் கனவுக் கோட்டை தகர்ந்து நொறுங்கிப் போவதை அவர்களால் எதிர்கொள்ள முடியாமல் போய், ஒரு கால கட்டத்தில் தம்பதிகள் கோர்ட் படியேறி விடுகிறார்கள்.

சரி. விவாகரத்தும் ஆகிவிடுகிறது என்றே வைத்துக் கொள்வோம். அதற்குப் பிறகு…..? தம்பதிகள் இருவருக்கும் வாழ்க்கை ஒரு பெரிய கேள்விக்குறி தானே! குழந்தைகள் இருந்தால் அவர்களும் உள  ரீதியாக அலைகழிக்கப்படுவது நிஜம்.

அப்படி என்றால் என்ன சொல்ல வருகிறாய்? விட்டுக் கொடுப்பது எப்பொழுதும் மனைவியாகத் தான் இருக்க வேண்டும் என்று சொல்கிறாயா? ஏன் கணவன் விட்டுக் கொடுத்தால் குறைந்து போய் விடுமா? என்று  விவாதம் செய்ய வேண்டாம். தம்பதிகளுக்குள் யார் விட்டுக் கொடுப்பது என்பதில் சர்ச்சையே இருக்க வேண்டாமே. தொலை நோக்கில் பார்த்தோமானால், யார் விட்டுக் கொடுப்பது என்கிற வீர விளையாட்டில் இன்று தோற்பவர் தான், பின்பு வெற்றி காண்கிறார்.

எங்கோ படித்தது நினைவிற்கு வருகிறது. திருமணம் என்பது வங்கி சேமிப்பு  கணக்குப் போன்றது. நாம் எவ்வளவு அன்பை செலுத்துகிறோமோ, கண்டிப்பாக அது வட்டி போட்டு பலமடங்காகி  நமக்கு திருப்பி வரும். அன்பு மட்டும் தான் பலமடங்காக வருமா என்ன?  வெறுப்பை உமிழ்ந்தால், அதுவும் பலமடங்காகி விடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இந்த  சமயத்தில் ‘ O Henry ‘ன்  கதை  ஒன்று   நினைவிற்கு  வருகிறது.

நிறைய பேருக்கு இது தெரிந்திருக்கலாம்.

அதன் தமிழாக்கம் இதோ…

வறுமையில் வாடும் கணவன் மனைவி. ஒருவருக்கு ஒருவர் கொடுத்துக் கொள்வதற்கு அன்பைத் தவிர வேறெதுவும் பெரிதாக இல்லை. மனைவி தன் நீண்ட அழகிய கூந்தலை சீவி முடித்து கொண்டையிடும்போது ஒரு “ப்ரூச்” இருந்தால் அழகாக இருக்குமே என்று நினைக்கிறாள். அவள் நினைப்பது அவள் கணவனுக்குத் தெரியும்.

ஆனால் வாங்குவதற்கு கணவனிடம் வசதியில்லை. கிறிஸ்துமஸ் பரிசாகவாவது குடுக்க முயல்வோம் என்று நினைக்கிறான் கணவன்.

கிறிஸ்துமஸ் வருகிறது…

மனைவிக்கு, அவள் கணவனிடம் இருக்கும் பாரம்பர்யமான வாட்ச் பற்றித் தெரியும். அதற்கு தங்க ஸ்ட்ராப் வாங்கி கொடுக்க நினைக்கிறாள். கிளம்புகிறாள். கணவனோ இவள் கூந்தலிற்கு ‘ப்ரூச்’ வாங்கக் கிளம்புகிறான்.

இருவரும் பணத்திற்காக அலையோ அலை என்று அலைகிறார்கள்.

கிடைக்கவில்லை. மாலை இருவரும் வீடு திரும்புகிறார்கள், மனைவி வாட்ச் ஸ்ட்ராப்புடனும், கணவன் ‘ப்ரூச்’சுடனும்.

வீடு திரும்பிய இருவருமே அதிர்ச்சிக்குள்ளாகிறார்கள்.

கணவன் தன்னுடைய பாரம்பர்ய வாட்சை விற்று ப்ரூச் வாங்கியிருக்கிறான்.

மனைவியோ தன் கணவருக்காக அழகிய நீண்ட கூந்தலை ‘விக்’ செய்யும் கடைக்கு விற்று விட்டு வாட்ச் ஸ்ட்ராப் வாங்கி வந்து விடுவாள்.

இருவருக்கும் புரிகிறது தாங்கள் வாங்கி வந்தது இனிமேல் உபயோகப்படாது என்று. கண்கள் குளமாகின்றன.

காதலோடு மனைவியை இழுத்து அணைத்துக் கொள்கிறான்.

அங்கு வார்த்தைகளே இல்லாமல் காதல் உணரப்பட்டது.

வறுமையின் உச்சத்திலும் காதல் வளமாக இருக்கிறது இல்லையா?

உண்மைக் காதல், துணையை அவர்களின் குறைகளோடு ஏற்றுக்கொள்ளச் செய்யும் என்பதில் சந்தேகமேயில்லை. இதை சகோதரிகள் உணர்ந்து கொள்வார்களா? குறையில்லாத மனிதர் யார்? ஒருவரை சுட்டிக்காட்ட முடியுமா நம்மால்?

இதை மனதில் வைத்தால் கண்ணை விற்று ஓவியம் வாங்க முயல மாட்டோம்.

நீ என்ன நினைக்கிறாய் இதைப் பற்றி…. சொல்லேன்.  நான் நினைப்பது சரி தானே?

அன்புடன்,

உன் தோழி,

ராஜலக்ஷ்மி பரமசிவம்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “அன்புள்ள தோழி மணிமொழிக்கு

  1. உங்கள் கடிதம் வந்திருப்பதை இப்போதுதான் பார்த்தேன் ராஜி. பல குடும்பங்களில் இந்த விவாகரத்து ஒரு பெரிய பிரச்னையாக மாறி இருக்கிறது. அதை மையமாக வைத்து ஓ ஹென்றியின் கதையுடன் சேர்த்து அருமையாக எழுதி இருக்கிறீர்கள்.
    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *