ச. பொன்முத்து

மதிப்பிற்குரிய மணிமொழிக்கு!

பொன்முத்து வணக்கத்துடன் எழுதும் கடிதம். இங்கு நானும் என் மனைவியும் மகளும் நலமாக இருக்கிறோம். அங்கு தங்களின் நலனையும், குடும்பத்தினர், நண்பர்கள், உற்றார், உறவினர் என அனைவரின் நலனையும் அறிய அவா! குழந்தைகளுக்கு அன்பு முத்தங்களும் ஆசிகளும்! அவர்கள் செய்யும் நல்ல காரியங்களுக்கும் சுட்டித்தனத்திற்கும் என் வாழ்த்துகள்.

வீட்டிலும், ஊரிலும் உள்ள பெரியவர்களுக்கும், சான்றோர்களுக்கும், மற்ற சமூகத்துப் பெரியவர்களுக்கும் என் தலைதாழ்ந்த வணக்கத்தையும் அன்பான விசாரிப்புகளையும் தெரிவிக்கவும். அவர்களின் ஆசிகளையும் வேண்டுகிறேன். தாங்கள் பணிபுரியும் இடத்திலுள்ள உயர் அலுவலர்களுக்கும், சக பணியாள நண்பர்களுக்கும் என் வணக்கங்களையும் வாழ்த்துதல்களையும் தெரிவிக்க வேண்டுகிறேன்.

உங்களுடன் பணிபுரியும் என் தோழி திரிசடைக்கு, என்னால் அவ்வப்போது எழுதப்படும் கடிதங்களைப் படித்துவிட்டு, மு.வ. ‘தங்கைக்கு’ எழுதியுள்ள கடிதம் போன்று இருப்பதாக பெரிதும் பாராட்டியதாகவும், சில ஐயங்களைத் தெளிவுபடுத்தி, நீண்டதொரு கடிதம் எழுதுமாறு நீங்கள் என்னை கேட்டுக் கொண்டதாகவும் தோழி தெரிவித்து உங்களின் முகவரியைக் குறிப்பிட்டிருந்தாள். மிக்க மகிழ்ச்சி!

எனது இந்தக் கடிதம் ஜவஹர்லால் நேரு தன்னுடைய மகள் இந்திரா பிரியதர்சினிக்கு எழுதிய ‘ The Letters from a father to his Daughter போன்றதோ, பேரறிஞர் அண்ணாதுரை அவர்கள், ‘தம்பிக்கு’ என விளித்து எழுதும் கடிதம் போன்றதோ, மு.வ. ‘அன்னைக்கு’, ‘தம்பிக்கு’, ‘தங்கைக்கு’, ‘நண்பர்க்கு’ என எழுதிய கடிதங்களைப் போன்ற விரிவான கடிதங்களோ அல்ல. மேலும், மேற்கூறிய அறிஞர்கள் அளவுக்கு அறிவால், வயதால், அனுபவத்தால் நான் பெரியவனல்ல என்பதை முதலில் வலியுறுத்தித் தெரிவித்துக் கொள்கிறேன். என்னைப் பாராட்டுவதை நான் பெரிதும் ஏற்றுக் கொள்வதில்லை. காரணம்,

தூக்க மருந்தினைப் போன்றவை
பெற்றவர் கூறும் புகழுரைகள்!-நோய்
தீர்க்கும் மருந்தினைப் போன்றவை
கற்றவர் கூறும் அறிவுரைகள்!
என்ற கவிஞர் புலமைப்பித்தனின் திரைப்படப் பாடல் வரிகளை மனதில் உள்வாங்கிக் கொண்டு இன்றளவும் கடைபிடிக்க முயற்சித்து வருகிறேன்.

என்னுடைய தாயாரின் உடல்நிலை சற்று மோசமாக உள்ளது. வயது மூப்பின் காரணமாகவும், தொடர்ந்து ஓராண்டாக படுத்த படுக்கையாக இருந்ததாலும், படுக்கைப் புண்கள் (க்ஷநன ளுடிசந) ஏற்பட்டிருந்தது. அதன்பொருட்டு உடனிருந்து அவ்வப்போது மருந்திட்டு கவனித்துக் கொள்ள வேண்டியிருந்ததால் இக்கடிதத்தினை எழுதுவதற்கு காலதாமதமானது. அதற்காக என் வருத்தங்களைத் தெரிவிப்பதோடு மன்னிக்கவும் வேண்டுகிறேன். இனி நீங்கள் கேட்டிருந்த ஐயங்களுக்கான பதில்களுக்குப் போவோம்.

இந்தக் கடிதம் எழுதும் பழக்கம் எனக்கு எப்படி வந்தது? என்பது குறித்து வினவியிருந்ததாகத் தோழி தெரிவித்திருந்தாள். இதற்கான முழுக் காரணமும் என் தந்தையையே சாரும். என் எழுத்துக்கள் நன்றாக இருக்கிறது என்றால் அதற்கு அடித்தளமிட்டவர் என் தந்தை. சிறுவர்களோடு விளையாட வேண்டிய வயதில் ‘என் துடுக்கடக்கி’ என பாரதி கூறுவது போல, விவர விருட்சத்திற்கான விதைகளை என் மனதில் தூவியவர்.

நான் சிறுவனாக இருந்தபோது, குறிப்பாக நான்கு அல்லது ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே, தொலைபேசியும் கைபேசியும் இல்லாத அந்தக் காலத்தில், எங்களின் உறவினர்களை நலம் விசாரிக்கவும், சிலபல நல்ல காரியங்களைத் தெரிவிக்கவும் வேண்டி, கடிதங்களுக்கான செய்திகளை, தந்தையார் தறி நெய்து கொண்டே கூற, அவற்றை வரிகளாக்கி என்னை எழுதுமாறு பணிப்பார். இவ்வாறாக, ஏராளமான கடிதங்கள் எழுத வைப்பார். எனக்கு எழுத்துப் பயிற்சியையும், மொழியறிவையும் அளிக்க வேண்டும் என்ற நோக்கோடு அவர் இந்த முயற்சியைச் செய்துள்ளார் என்பதை, விவரம் தெரிந்த இன்றைய நாளில் நான் எழுதும் ஒவ்வொரு கடிதத்தின் போதும் நினைத்துப் பார்க்கிறேன்.

பிறகு கல்லூரி நாட்களில், விடுதியில் தங்கிப் படிக்கும் காலத்தில், பதின்பருவ தள்ளாட்டத்தில் வழிதவறிவிடக்கூடாது என்ற நோக்கில், குடும்ப வறுமைச் சூழலை உணர்த்தாமல் உணர்த்தி, படிப்பின் அவசியத்தை மனதில் இருத்துமாறு ஒரு கடிதம் எழுதியிருந்தார். புறநானூற்றின் அறிவுப்பொற்குவியலைக் குறித்த அறிமுகம் அந்தக் கடிதம். ஒவ்வொருவரின் கடமையைக் குறித்த அறிவுறுத்தல் என்றால் அது மிகையாகாது. அக்கடிதத்தில் இடம்பெற்ற சில வரிகளை அப்படியே உங்களுக்குத் தருவது நன்றாக இருக்கும் என எண்ணுகிறேன்.

‘ தம் புதல்வர்களுக்கு அணியும் மணியும் அணிவித்து அகமகிழ்வதோடு நின்றாரில்லை அக்காலத்துப் பெற்றோர்கள். மக்களைக் கல்லாவரை விடல்தீது (நான்மணிக்கடிகை-94) என்ற உண்மையை அறிந்திருந்த அவர்கள் தம் புதல்வர்களுக்கு உரிய காலத்திலிருந்தே கல்வி கற்பித்து வரத் தவறவில்லை. இளமையிலிருந்தே முறையான கல்வி புகட்டிப் புதல்வர்களை நாட்டின் நற்குடி மக்களாக ஆக்கிடும் பொறுப்பு தந்தையரையே சார்ந்ததாகும். இவ்வுண்மையை அக்காலத் தந்தையர் நன்கு உணர்ந்து அதற்குகேற்ப கடனாற்றி வந்தனர். இச்செய்தியை

ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே
சான்றோ னாக்குதல் தந்தைக்குக் கடனே
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே
தண்ணடை நல்கல் வேந்தற்குக் கடனே
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கி,
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே

என்ற புறநானூற்றுப் பாடல் தெரிவித்துள்ளது. இப்பாடலைப் பாடியவர் தாய்க்குலத்தைச் சேர்ந்த பொன்முடியார் என்பவராவார். சங்க காலம் என்றில்லை, இன்றைய காலத்திலும் பெற்றோர் பிள்ளைகளுக்கு கல்வியறிவு அளிக்க வேண்டும் என்ற முனைப்பில், கல்லூரிக்கு உன்னை அனுப்பியுள்ளேன். இங்கு கடன் என்பது பணி என்ற பொருள்படும். எனவே, என் கடனாக உள்ள அதாவது பணியாக உள்ள உன்னைச் சான்றோனாக்குவதற்காக அங்கு அனுப்பியுள்ளேன்.. களிறு எறிந்து பெயரும் அன்றைய நிலை, காளையான உனக்கு இன்றில்லை என்றாலும், உனக்கான பணியை உணர்வாய் என்று நம்புகிறேன்’

என புறநானூற்றுப் பாடலையும் என் பொறுப்பையும் குறிப்பிட்டு கடிதம் எழுதியிருந்தார். ‘புறநானூறு’ என்ற இலக்கியத்தைக் குறித்து எழுதுகிற போதே ‘நான்மணிக்கடிகை’ என்ற இலக்கியத்தையும் அறிமுகப்படுத்தினார். இவ்வாறு, கடிதம் எழுதுவது குறித்து நான் பெற்ற அனுபவம் சார்ந்த ஏராளமான செய்திகளைக் எழுதிக்கொண்டே போகலாம்.
தாங்கள், திரிசடையிடம் இன்றைய வாழ்வியல் நெறிகளைச் சார்ந்து பல்வேறு விளக்கங்களை வினவியிருந்ததாகத் தெரிவித்திருந்தாள். அதற்கான பதிலை விளக்கமாகப் பார்ப்பது உங்களுக்கான குழப்ப இருளைப் போக்கும் வெளிச்ச விடியலாக அமையும் என்று நம்புகிறேன்.

நீங்கள் என் தோழியிடம் இன்றைய காலகட்டத்தில் கைபேசி, இணையதளம், முகநூல், டுவிட்டர் என்றெல்லாம் வந்துவிட்ட நிலையில் இன்னும் அஞ்சலில் கடிதம் எழுதும் என் நிலையைப் பார்த்து ஆச்சரியப்பட்டதாகத் தெரிவித்திருந்தாள். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. காரணம்.. இன்றைய நாளில் அறிவியல் வளர்ச்சியின் காரணமாக தகவல் தொடர்பு சாதனங்கள் ஆதியும் அந்தமும் தெரியாத அளவிற்கு விசுவரூபம் எடுத்து நம்மை விழுங்கிக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்திருக்கிறோம்; ஆனால், அதிலிருந்து விலகி நிற்க மறுக்கிறோம். அதற்காக ஆதிகால வன வாழ்க்கை வாழ வேண்டுமெனக் கூறவில்லை.

நாம் வாழும் இந்தக் காலம் பல வகையிலும் முன்னேறியிருக்கிறது. நம் முன்னோர்களின் காலத்தில் இல்லாத எத்தனையோ புதிய கருவிகளை நாம் பெற்றிருக்கிறோம். மிக வேகமாகப் பயணம் செய்ய முடிகிறது; விரைவாகச் செய்திகளை அனுப்பவும், பரப்பவும் முடிகிறது, வானளாவிய உயர்ந்த மாளிகைகளைக் கட்ட முடிகிறது; ஆயிரக்கணக்கானவர்களின் கைகள் உழைத்தும் செய்ய முடியாத அரிய வேலையை ஓர் இயந்திரத்தைக் கொண்டு செய்துவிட முடிகிறது;

ஆனால் ஒன்றுதான் முடியவில்லை. நம் முன்னோர்களைப்போல் அவ்வளவு அமைதியாக இன்பமாக வாழ முடியவில்லை. பல வகையிலும் நமக்கு உதவி வருகிற அறிவியல் நம் வாழ்க்கையின் அமைதிக்கு அவ்வளவாக உதவி செய்ய முடியவில்லை. இயற்கைவளம் மிகுந்து செல்வம் கொழிக்கும் நாடுகளிலும் மக்களின் வாழ்க்கையில் குறைகள் பல இருந்து வருகின்றன. வறுமை மிகுந்து வாடும் நாடுகளைக் குறித்து சொல்லத் தேவையில்லை. ஆகவே பல வகையிலும் முன்னேறியுள்ள இந்தக் காலத்தில் வாழும் வழி மட்டும் இன்னும் தெளிவாக அமையவில்லை. இத்தகு அவல நிலையை அகற்றி வளமான வாழ்க்கைக்கு நம்மை வழிநடத்த வேண்டிய அவசியச் சூழலில் உள்ளோம்.

நம்மை வழிநடத்திக்கொள்ள நாம் செய்யவேண்டிது என்ன? நம் அவல வாழ்வை ஒரு சிறு எடுத்துக்காட்டு மூலம் உணரலாம். அரிசி, பருப்பு, உப்பு, மிளகாய், காய்கறி முதலிய பலவகைப் பொருள்களையும் நிரம்பச் சேர்த்து வைக்கக் கற்றுக் கொண்டிருக்கிறாள் ஒருத்தி. ஆனால், சுவையாகச் சமைத்து உண்ணத் தெரியாதவளாக இருக்கிறாள். அவள் சேர்த்து வைத்துள்ள பண்டங்களால் பயன் என்ன? அதுபோல்தான் உள்ளது இக்காலத்து வாழ்க்கையின்பம். அறிவியல் துறையின் வளர்ச்சியால் கருவிகளைப் பெருக்கிக் கொண்டோம்; வேகத்தை வளர்த்துக் கொண்டோம். ஆனால் நன்றாக வாழ மறந்தோம்.

முன்னோர் சொன்ன வழிகள்; அவர்கள் கடந்து பயன்கண்ட வழிகள்; தேய்ந்த ஒற்றையடிப் பாதைகள் போன்றவை. ஆனால் முன்னோரின் வழிகளை நம்ப மனம் இல்லை; புதிய வழிகளைச் செம்மையாக வகுத்துக் கொள்ளவும் முடியவில்லை. குடும்பத்திலுள்ள ஆண்கள் குறிப்பாக கணவனின் உழைப்பில் பெறுகிற ஊதியம் குடும்பத்தை நடத்த இயலாது என்றளவுக்கு பெண்கள் தங்களின் நுகர்வுக் கலாச்சாரத்தை விருப்பங்கள் என்ற பெயரில் பல வகைகளில் விரிவாக்கிக் கொண்டதால் பெண்களும் பணிக்குச் செல்ல வேண்டிய பெரிதான அவலம் நம்மிடையே காணப்படுகிறது. இதன் விளைவே கல்விக்கட்டண உயர்வு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு, விலை உயர்வு என ஒன்றை ஒட்டி இன்னொன்று என புற வாழ்க்கை பொருளாதாரத்தின் பின்னே ஓடிக் கொண்டிருக்கிறது.

பணிக்குச் செல்ல உரிமையும் தேவையும் பெற்ற தாய்மார்கள், குழந்தை பெற்ற நிலையில் பணிக்குச் செல்ல முனைவதால் தாய்ப்பால் கட்டிவிடுகிற அபாயமும், அதன்பொருட்டு உட்கொள்கிற மருந்துகள் உடலை பாதிப்புக்குள்ளாக்குவதையும் மறந்துவிடுவதேன்? தாய்ப்பாலுக்குப் பதில், ஆவின் பால் வழங்கி வளர்க்கிற குழந்தை எப்படி, தாயை, தாய்நாட்டை நேசிக்கும்..? நாட்டுப்பற்று எப்படி வரும்? மனித நேயமிக்கதாய் இருக்கும்? பதிலாக வெடிகுண்டு வைக்கும்; தண்டவாளத்தைப் பெயர்க்கும்; விலங்கினமாகத் திரியும்.

அறிவைப் பெருக்கப் பெற்ற உரிமையால் பெண்கள் பெருக்கியிருப்பது அணிகலன்களைத் தானே தவிர வேறொன்றுமில்லை; அறியாமையைக் குறைக்கப் பெற்ற உரிமையால் பெண்கள் குறைத்திருப்பது ஆடைகளைத் தானே தவிர வேறென்ன?; அண்டைநாடுகளின் அரசியல் நிலவரங்களைத் தெரிந்துகொள்ள பெற்ற உரிமையை, அடுத்தவீட்டு அடுக்களைத் தயாரிப்புகளையே தெரிந்து கொள்ளப் பயன்படுத்துகின்றனர்; பணிசெய்ய வேண்டி அலுவலகத்தில் பெற்ற உரிமையை துணிகளையும், நகைகளையும் பற்றியுமே பேசி பயன்படுத்திவரும் அவலம்; விவகாரங்களைத் தெரிந்து கொண்டு வீரியம் பெற பெற்ற உரிமை இன்று விவாகரத்து செய்ய மட்டுமே பயன்பட்டு வருகிறது என ஏராளமான குற்றச்சாட்டுகள் இன்றைய பெண்களின் மீது சுமத்தப்படுகிறது. இவை அனைத்தும் வாழ்வியல் என்னும் அகம் சார்ந்தவை. இதே போன்றதொரு கருத்தை முன்னொரு கடிதத்தில் திரிசடைக்கு எழுதியிருந்தேன். நீங்களும் படித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடியாக இருந்தாலும், காட்டு மிராண்டிகளாய், நாடோடிகளாய், சமுதாயமாய் படிப்படியாய் தங்களின் வாழ்க்கை முறையை மாற்றி வளர்ந்த மனித இனம், தங்களுக்கென வகுத்துக் கொண்ட வாழ்வியலை மறந்து, நெறிதுறந்து, உய்யும் வழி தொலைத்து உலகெங்கும் அல்லலுறுவதைக் காண்கிறோம். வாழ்வியலில் அகம், புறம் என்றும் வகுத்துக் கொண்ட நாம், இவ்விரண்டிலும் இல்வாழ்க்கை, விருந்தோம்பல், ஆடம்பரம், அறவுரைகள், அறிவுரைகள், அரசியல் நெறிகள், அரும்பெரும் செயல்கள், போர் நிகழ்ச்சிகள், பொருளீட்டும் முயற்சிகள், பண்பாட்டுப் பெருமைகள், பழக்கவழக்கங்கள், வரலாற்றுச் சிறப்புகள், வாணிகப் பொறுப்புகள் போன்ற பல்வேறு துறைகளில் நமது வாழ்க்கை நெறிகள் வந்துபோகின்றன.

நம் முன்னோர்கள் நீதிநெறிகளாக வற்புறுத்திக் கூறியவை இந்த உலகில் அமைதியாக வாழ்வதற்கு தேவையானவை என்பதைத் தெளிவாக உணர வேண்டும். செத்த பிறகு முக்திக்கு உரிய வழிகள் என்று அன்பு உண்மை முதலியவற்றை ஒதுக்கி வைக்கக் கூடாது. மண்ணில் நல்லவண்ணம் வாழ்வதற்கு அவை தேவையானவை என்று உணர வேண்டும். அன்பு இல்லாமல் நண்பர் இருவர் சேர்ந்து பழக முடியுமா? அன்பு இல்லாத ஒரு குடும்பத் தலைவரை மனைவி மக்கள் நம்பி வாழ்க்கை நடத்த முடியுமா? நாட்டினிடத்திலும் மொழியிடத்திலும் அன்பு இல்லாத மக்களைக் கொண்டு நல்ல ஆட்சி நடத்த முடியுமா? உண்மை இல்லாத தொழிலாளிகளைக் கொண்டு ஒரு தொழிற்சாலையை வளம்பெற நடத்த முடியுமா? நேர்மை இல்லாத அறிவாளிகளைக் கொண்டு ஓர் அலுவலகத்தைச் செம்மையாக நடத்த முடியுமா? ஆகவே, அன்பு, உண்மை, நேர்மை முதலியவை இந்த வாழ்க்கைக்குத் தேவையானவை என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

அன்பும் அறனும் உடைத்தாயின்’, ‘மனத்துக்கண் மாசிலனாதல்’, ‘அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல்’, ‘மறந்தும் பிறன் கேடும் சூழாமை’, எனத் திருக்குறள் போன்ற நீதிநூல்கள் ஏராளமான கருத்துகளை வலியுறுத்தி வருகின்றன. எனவே, நம்வாழ்க்கை நலம்பெற ஏடுகள்கூறும் வாழ்க்கை நெறிகளைப் பின்பற்றுவது சரியானதாக அமையும். “”””ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது”” என்பது உண்மை. ஆனால் சுரைக்காய் குறித்து ஏடுகளில் படித்தால்தான், அதன் விளைச்சல், வணிக முறை, உணவாக்கும் பக்குவம் போன்றவற்றை தெரிந்து கொள்ள முடியும். அந்த வகையில், தமிழிலுள்ள படைப்புகள் அனைத்தும் நமக்கான படிப்பினைகளே என்பதை மனதில் கொண்டு அதன்வழி நடந்தால் வாழ்வின் உச்சங்களை எட்டலாம்.

அடுத்ததாக, நீங்கள் வினவியதாக திரிசடை குறிப்பிட்டிருந்தது ‘எளிய வாழ்க்கை சாத்தியமா?’ என்பதாகும். அது ஒன்றும் மிகப் பெரிய மலையைப் புரட்டும் வேலையல்ல. ஆடம்பர வாழ்க்கை வாழாது எளிய வாழ்க்கை வாழ வேண்டுமானால், நம்மைச் சுற்றிலும் ஏழைகள் உணவுக்கும் உடைக்கும் வழியில்லாமல் வாடும் போது, நாம் ஆடம்பரத்தைத் தேடுவது அவசியமா, தேவையா? என்பதை நம் மனதை நோக்கி நாமே கேட்டுக் கொள்ள வேண்டும். ஏழைகளுக்குப் பணம் கொடுத்து உதவி செய்யாவிட்டாலும், ஏக்கம் உண்டாக்கி மனதைக் கெடுக்காமல் இருக்க வேண்டும். தேவைகளைக் குறைத்துக் கொண்டு எளிய வாழ்க்கை வாழ்வது என்றைக்கும் நல்லது. அதுவே முதன்மையான தவம். ‘வேண்டாமை விழுச்செல்வம்’ என்கிறார் திருவள்ளுவர். தேவையே இல்லாமல் மனிதன் வாழ முடியாது. அதற்காக தேவைகளை அதிகரித்துக் கொள்வதைவிட குறைத்துக் கொள்வது நலம். இதைத்தான் புத்தர் ஆசையே துன்பத்திற்கான காரணம் என்கிறார்.

இது சாத்தியமா? என்று நீங்கள் கேட்கலாம். நிறைய பணம் சேர்க்க வேண்டும் என்பவர்களுக்கு எவ்வளவு சேர்க்க வேண்டும் என்ற எல்லை இல்லை. ஒரு லட்சம் சேர்த்தால் இரண்டு லட்சத்தை மனம் நாடுகிறது. பத்து லட்சம் சேர்த்தாலும், கோடி சேர்த்தாலும், அதற்கு மேற்பட்ட நிலையையே மனம் நாடுகிறது. வரம்பு கட்டுவதற்குப் பெரிய ஞானம் வேண்டும். அந்தத் தெளிவு ஏற்பட்டுவிட்டால், பத்தாயிரம் ஐயாயிரம் என்ற குறைந்த எல்லையிலேயே மனம் அமைதி அடைந்து விடுகிறது.
அதனால் முயற்சியும் ஊக்கமும் குறைந்துவிடாதா? என உங்களின் மனம் கேட்கும் கேள்வி என் காதில் விழுகிறது. குறையவே குறையாது, கடமையுணர்ச்சி ஒரு பக்கம் இருந்தால், எறும்மைப் போல், தேனீயைப் போல் அன்றாடம் கடமையை விடாமல் செய்யத் தூண்டும். கடமையைச் செய்யாமல், கஞ்சி குடிப்பது குற்றம் அல்லவா? உழைக்காதவனுக்கு உணவு பெற உரிமை இல்லை. உழைத்தால் தான் உலகம் தரும் உணவில் பங்கு உண்டு என்று கடமையைச் செய்ய வேண்டும். இந்த ஞானம் வந்தால் பின் நமக்கெது வேண்டும்?

அடுத்ததாக, பெண்ணுரிமை குறித்து வினவியதாகத் திரிசடை தெரிவித்திருந்தாள். பெரும் அறிஞர்கள் பல்வேறு வகைகளில் சிந்தித்துள்ள நிலையில், நான் ஏதேனும் புதுமையாகச் சிந்திப்பேனோ என நீங்கள் எண்ணியிருக்கலாம் என ஐயுறுகிறேன். பெண்ணுரிமையைப் பொறுத்த வரை பெண்கல்வி, வரதட்சிணை ஒழிப்பு, காதல் மணம், மணவிலக்கு, தனி வாழ்க்கை, கற்புடைமை, மறுமணம், பொருளாதாரச் சுதந்திரம் எனப் பல கோணங்களில் விளக்கலாம்.

பழைமைக்கும் புதுமைக்கும் போர்; கடமைக்கும் உரிமைக்கும் முரண்பாடு; கற்புக்கும் காதலுக்கும் மாறுபாடு; குடும்பத்திற்கும் உலகத்திற்கும் போராட்டம்; இவ்வாறு ஒவ்வொரு துறையிலும் பொதுவாக வாழ்க்கை தாக்குண்டு நலிவுறுகின்றது; சிறப்பாகப் பெண்ணுள்ளம் சிதைவுறுகின்றது. எது, எங்கே, எவ்வாறு என ஒவ்வொரு துறையிலும் ஆராய்ந்து தெளியாமையும், தெளிந்தவரின் நெறியை நம்பாமையுமே இன்றைய பெண்ணுரிமை குறித்து பெண்களுக்கும் சமூகத்திற்கும் இடையிலான முரணான காரணம். நெறியில் தெளிவும் நம்பிக்கையும் ஏற்பட்டால் வாழ்வைக் காத்துக் கொள்ள முடியும்; ‘வையத்துள் வாழ்வாங்கு வாழ’ முடியும்.

இன்றைய காலகட்டத்தில் பெண்ணுரிமை என்கிற பெயரில் பெண்கள் நடந்து கொள்ளும் விதம் மிகவும் வருந்தத்தக்கதாகவே உள்ளது. பெண்ணுரிமை என்ற நிலை சமுதாயத்தில் உருவான போது, திருமண ஏற்பாட்டிற்குக் கட்டுப்பட்டு வாழ்ந்த பெண்களின் போக்கில் மாற்றங்கள் ஏற்படலாயின. இதன் காரணமாகத் தமிழ்ச் சமூகம் போற்றிப் பாதுகாத்து வந்த குடும்ப வாழ்க்கை முறையில் பல புதிய சிக்கல்கள் தோன்றியுள்ளன.

“”அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை”” என்று வள்ளுவர் கூறும் வாழ்க்கை நெறியே சிறந்தது. குடும்பம் என்பது உள்ளம் ஒன்றிய கணவனும் மனைவியும் மக்களைப் பெற்று வாழும் அன்பு நிலையம். அன்பு வளர்வதற்கும், தன்னலம் குறைந்து பொது நலம் பெருகுவதற்கும், இன்றளவும் சமுதாய வாழ்வில் ஒழுங்கு, கட்டுப்பாடு போன்றவற்றைக் காப்பதற்கும் மிகப் பெரிய காரணமாக இருக்கும் அமைப்பு குடும்பம் எனலாம். இந்நிலையில், கூட்டுக் குடும்பமாக இருந்து, எரிபொருள், பொருளாதாரச் சிக்கனம், பெரியோரின் வழிகாட்டுதல், மானுடப் பிணைப்பு என்பவையெல்லாம் பெண்ணுரிமை என்ற பெயரில் தனித்தனி குடும்பங்களாக சிதைந்துள்ளதை எவராலும் மறுக்க முடியாது.

கல்வியறிவில் ஆண்களைவிட பெண்களில் அதிகம் பேர் எழுத்தறிவு பெற்றுவிட்டதாக கூறப்படும் இந்தக் காலகட்டத்தில், தாய்மைக்கே பெருமை சேர்க்கும் தாய்ப்பால் தர மறுப்பது எல்லாவற்றையும்விட மோசமானது. தாய்ப்பால் ஊட்ட வேண்டியதன் அவசியத்தை, எழுத்தறிவு இல்லாத காலக்கட்டத்தில் கூறப்படாததைவிட, எழுத்தறிவுள்ள இந்த காலத்தில், அனைத்து அமைப்புகளும் அவசிய அறிவிப்புகளாய் அனுதினமும் அறிவித்துக் கொண்டே இருப்பது எதனால்…? உரிமை என்கிற பெயரால் ஊர் சுற்றுவதாலோ…? அல்லது உடலுக்கு ஊறுவிளையும் என்னும் விழிப்புணர்வின்மையா?

அதிகம் படித்துவிட்டோம்; ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுகிறோம்; நவீன ஆடைகளை உடுத்துகிறோம்; கைநிறைய பொருளீட்டுகிறோம் என்ற அதீத எண்ணங்களால் பெண்கள் அழிந்து வருவதையும், அவர்கள் பெற்ற அறிவு, பண்பாடு இல்லாத நிலையை எட்டியுள்ளது. பண்பாடு இல்லாத அறிவு நமக்கு உதாவது; நம்மைக் கெடுக்கவும் கெடுக்கும். அது எதற்கும் காரணம் சொல்லும்; சிறிய குற்றத்தைப் பெரிய குறையாக்கிக் காட்டும்; பெரிய குணத்தையும் சிறிதாக்கி மறக்கச் செய்யும், பண்பாடு இல்லாதபோது அத்தகைய அறிவால் பயன் என்ன? மக்கட்பண்பு இல்லாத நிலையில் நல்வாழ்க்கைக்கான சாத்தியமில்லை. இதையே,

‘அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர்.’

எனத் திருவள்ளுவர் கூறியுள்ளதை நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும். இவையனைத்தும் ஏதோ பெண்களுக்கு மட்டுமே உரியது; ஆண்களுக்கு உரியதல்ல என நினைக்க வேண்டாம். சமூகத்தில் மக்கட்பண்பு இல்லாத அனைவருக்குமே இது பொருந்தும்.

அடுத்ததாக, நீங்கள் கேட்டிருந்த வினா அரசியல் சாக்கடையைத் தூர் வாருவது எப்படி என்பதாகும். இலஞ்சம், ஊழல், அடிதடி, கொலை, கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து, விதிகளை மீறுதல், மக்களுக்கு நலத்திட்டங்களைத் தீட்டுவதாகக் கூறி தன் நலனையும் தன் குடும்பத்து நலனையும் வசதிகளையும் பெருக்கிக் கொள்வது என்ற இலக்கணத்தில் செயல்படும் இன்றைய அரசியல் இழிநிலையை அகற்றுவது என்பதே இன்றைய அரசியல் மீதுள்ள அனைவரது அவாவும் கனவும் எனலாம்.

‘அறநெறி முதற்றே அரசின் கொற்றம்’ என்னும் கருத்தை ஆழமாக வற்புறுத்திக் கூறியிருப்பது புறநானூறு. இன்றைய மக்களாட்சி முறைக்கும் இக் கருத்து தேவைப்படுவதை உணர்கிறோம். ‘அரசு எவ்வழி குடிகள் அவ்வழி’ என்பதையும் நாம் மறப்பதற்கில்லை. ஒரு நாட்டின் தலைவர் அல்லது ஓர் அமைப்பின் தலைவர் எப்படி இருக்கிறாரோ அதற்கு ஏற்றாற்போலவே அந்த நாட்டின் மக்கள் அல்லது அமைப்பைச் சார்ந்தவர்கள் இருப்பார்கள். தலைவர் நீதியையும் நேர்மையையும் வழுவாமல் போற்றி நடப்பவராக இருந்தால், மற்றவர்களும் நீதியையும் நேர்மையையும் போற்றி நடப்பார்கள். சிறிதும் வழுவாமல் நடப்பதுதான் முக்கியம்.

நூற்றுக்குத் தொண்ணூற்றைந்து பங்கு நேர்மையாக நடந்து ஐந்து பங்கு வழுவினாலும் மற்றவர்கள் அந்த ஐந்து பங்கையே கருதிக் கொண்டு பெருந்தவறுகள் செய்ய முற்படுவார்கள். ஆகவே ஒரு நாட்டிலோ அமைப்பிலோ ஊழல் இடம்பெறாமல் இருக்க வேண்டுமானால் அதன் தலைவர் சிறிதளவும் நேர்மை வழுவாமல் நீதி பிறழாமல் நடக்க வல்லவராக இருக்க வேண்டும். அவர் தூய்மையான வெள்ளாடைபோல் சிறிதும் மாசு இல்லாமல் நடந்தால்தான் மற்றவர்கள் ஒழுங்குமுறையை மதித்து நடப்பார்கள். இத்தகு தகுதியைக் கொண்ட தலைவர் தலைமை ஏற்கும்போது மட்டுமே அரசியல் சாக்கடையின் தூர் வாரும் பணி சிறப்புறும்.

அடுத்ததாக தமிழக உணர்வு குறித்த உங்களது ஐயத்திற்கு விடையளிக்கிறேன். இந்தியா ஓர் ஊர்; தமிழ்நாடு ஒரு தெரு; பழம்பெருமை வாய்ந்த பண்பட்ட தெரு. தமிழ்நாட்டுத் தலைவர்கள் இந்த உண்மையை மறந்து, தமிழர் என்று சொல்லத் தயங்கும் போக்கு நீடிக்குமானால், இந்தியாவின் முற்போக்கிற்கு இடையூறாகத் தமிழ்நாடு மாறும். உலக வரலாற்றை ஆராய்ந்தால் இது இயற்கை என்பது தெரிந்துவிடும். தமிழினம் ஆங்காங்கே வெளிநாடுகளில் படும் பலவகைத் தொல்லைகளையும் இன்னல்களையும் நினைத்துப் பாரதியார் பதைபதைத்துக் கூறும்

ஆப்பிரிக் கத்துக் காப்பிரி நாட்டிலும்
தென்முனை அடுத்த தீவுகள் பலவினும்
பூமிப் பந்தின் கீழ்ப்புறத் துள்ள
பற்பல துவினும் பரவியிவ் வெளியே
தமிழச் சாதி தடியுதை உண்டும்
வருந்திடும் செய்தியும் மாய்ந்திடும் செய்தியும்
பெண்டிரை மிலேச்சர் பிரித்திடல் பொறாது
செத்திடும் செய்தியும் பசியாற் சாதலும்
பிணிகளாற் சாதலும் பெருந்தொலை யுள்ளதம்
நாட்டினைப் பிரிந்த நலிவினால் சாதலும்
இஃதெலாம் கேட்டும் எனதுளம் அழிந்திலேன்;
தெய்வம் மறவார் செய்யுங்கடன் பிழையார்
ஏதுதாம் செயினும் ஏதுதான் வருந்தினும்
இறுதியில் பெருமையும் இன்பமும் பெறுவார்
என்பதுஎன் உளத்து வேரகழ்ந் திருத்தலால்
என்னும் கவிச்சொற்களும் இன்றைய நிலைக்கு ஏறக்குறைய பொருத்தமாகவே உள்ளன.

இவ்வாறு வெளிநாடுகளிலும் தொல்லைபட்டுச் செத்து மடிந்தாலும், நல்ல நெறியில் நடக்கும் மக்களாக இருத்தலால் தமிழர்க்கு இறுதியில் வெற்றி கிடைக்கும் எனப் பாரதியார் நம்பினார். ஆயினும் அந்த நம்பிக்கை தளர்ந்தது என்பதை உள்நாட்டில் தமிழர்க்கு இடையே உள்ள பிளவை எண்ணும்போது உணர்ந்து வருந்தலானார்; கலங்கினார். எனினும்,
‘இப்பெருங் கொள்கை இதய மேற்கொண்டுகலங்கிடா திருந்த எனைக்கலக் குறுத்தும் செய்தி ஒன்றதனைத் தெளிவுறக் கேட்பாய் என்று உள்ளம் நொந்து, பெருமூச்சுவிட்டுக் கூறலானார். பாட்டை முடிக்கும் நிலையில் மீண்டும் விதியை நோக்கி

. . . . நம்மவர் எப்படி உய்வர்?
விதியே! விதியே! தமிழச் சாதியை
என்செயக் கருதி யிருக்கின் றாயடா?

என மகாகவி பாரதி முறையிடுவதை எண்ணிப் பார்க்க வேண்டும். பாரதியின் இந்த எண்ணங்களை மனதில் கொண்டு, இந்நிலைமாறவும், தமிழக மீனவர்கள் இலங்கை நாட்டு இராணுவத்தின் இன்னலுக்கு ஆளாகாதிருக்கவும், முள்வேலிக்குள் வாழும் தமிழர்கள் விரைவில் விடுதலை பெறவும் நம்முடைய புற வாழ்க்கையை அமைத்துக் கொள்வோம்.

இன்றைய நிலையில், உலகமயமாக்கல், தனியார்மயமாதல், தாராளமயமாக்கல், என்ற கோட்பாடுகளால் நாகரிகம் என்னும் பெயரில் நம்மை நாமே அழித்துக் கொள்ளும் நாசகரமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறோம். உணவுக்காகவும், இருத்தலுக்காகவும் நாம் மூத்தகுடிகள் போரைத் துவங்கினர். பண்பாட்டின் உச்சத்தில், போரிலேயுங்கூடச் சில நெறிமுறைகளை மேற்கொண்டிருந்தனர். ஆநிரை கவர்தல்; அதனை மீட்க எழும் சண்டையில் வெற்றி கொள்ளுதல் என்ற நிலையோடு குறைந்த அளவே பாதிப்பு இருந்தது.

புறநானூற்றில், பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்பான், பகைநாட்டை முற்றுகையிடுதற்கு முன் “”பசுக்களும், அந்தணர்களும், பெண்களும், நோய்வாய்ப்பட்டோரும், தென்புலத்தார்க்கு உரிய கடன்களைச் செய்தற்கெனப் புதல்வர்கள் வேண்டும், அத்தகு புதல்வர்களைப் பெறாத பெற்றோரும் ஆகிய இவர்கள், பாதுகாவலான இடத்திற்குச் சென்றுவிடுங்கள்”” என அறிவிப்பு செய்கிறான். பகையரசனுக்கும் அறம் கூறுவதுபோலவே உள்ளதால்தான் ‘அறத்தாறு நுவலும்’ என்ற சொற்களைப் புலவர் பயன்படுத்தியிருக்க வேண்டும். இதையே மதுரையை எரிக்கும் முன்னர் மேற்கூறியவர்களைத் தவிர்த்து மற்றவர்களை தீ எரிக்கட்டும் என கண்ணகி கூறுவதாக புலவர் இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் வடித்திருப்பார்.

போரை நடத்தச் சிறந்த திறமை வேண்டுமாம்! அதற்காக அளவற்ற செல்வத்தைச் செலவழிக்க வேண்டுமாம்! எங்கள் படைகள் இவ்வளவு, போர் விமானங்கள் இத்தனை, போர்க் கப்பல்கள் இந்தளவு என்று பெருமையாகப் பேசுகின்றார்கள். எங்கள் வீட்டில் இவ்வளவு நஞ்சு இருக்கின்றது என்று யாராவது பெருமை பாராட்டுவார்களா? போர்த்தளவாடங்கள் வாங்கவும், இராணுவத்தை வலுப்படுத்தவும் ஒவ்வொரு நாடும் போட்டி போட்டுக் கொண்டு அதிகபட்ச நிதியை ஒதுக்கி வருவதை நம்மால் காண முடிகிறது. (இராணுவத்தில் அதிகமான இலஞ்சம் வாங்க, ஊழல் செய்ய கூடுதல் நிதி ஒதுக்கப்படுகிறதோ என ஐயுறும் வகையில் தற்போதுவரும் செய்திகள் நம்மை திடுக்கிட வைக்கின்றன.)
‘ஐந்து பைசாவுக்கு பிரயோஜனம் இருந்தால் சொல்லுங்க’ என்று கிராமத்தில் ஒரு சொலவடை உண்டு. எங்கும் எதிலும் பலனை எதிர்பார்த்தே பயணிக்கிற மக்கள் நிறைந்த உலகில், அதுபோலவே கூறும் அறிவுரைகளை ஏற்று நடப்பதால் பலனுண்டா? என்று கேட்கிறவர்களே அதிகமாக உள்ள உலகில், அறநெறியில் நடப்பவர்களில் நூற்றுக்கு எத்தனைபேர் தாழ்ந்து விடுகிறார்கள். அறநெறியில் நடக்காதவர்களில் நூற்றுக்கு எத்தனைபேர் உயர்ந்து விடுகிறார்கள் என்று கணக்கிட்டுப் பார்க்க வேண்டும். அவ்வாறு கணக்கிட்டுப் பார்க்காத காரணத்தால்தான் இளைஞர்களின் மனம் அவசரப்படுகிறது.

தீயவழியில் நடப்பவர்களில் நூற்றுக்குத் தொண்ணூற்றைந்து பேர் கெட்டுப் போகிறார்கள். யாரோ ஒரு சிலர் நூற்றுக்கு ஒருவர் இருவர்தான் செல்வம் பெறுகிறார்கள்; பதவி பெற்று உயர்கிறார்கள். அவர்கள் விதிவிலக்காக முன்னேறியவர்கள். அவர்களைப் போல் பலர் ஆவதில்லை. வேறு காரணங்களால் அவர்கள் முன்னேறினார்கள் என்பதை இளைஞர்கள் மறந்துவிடுகிறார்கள். அவர்கள் இன்னொரு வகையாகவும் எண்ணிப் பார்க்க வேண்டும். கிழக்கே ஒருவழி, மேற்கே ஒருவழி, கிழக்கு வழியில் போனவர்களில் பெரும்பாலோர் சிறு நன்மையாவது அடைகிறார்கள். மேற்கு வழியில் போனவர்களில் பெரும்பாலோர் அழிகிறார்கள்; ஒரு சிலர் மட்டுமே சிறப்பாக இருக்கிறார்கள். புதிதாக வருவோர்க்கு எந்த வழி நல்லது என்று சொல்வோம்? மேற்கு வழியில் யாரோ ஒரு சிலர் மட்டும் சிறப்புப் பெறுவதைப் பார்த்து, அந்த வழியில் போகுமாறு ஒருவருக்கும் அறிவுரை சொல்லமாட்டோம்.

அதுபோலவே, எவ்வளவோ நன்மை வருவதுபோல் தோன்றினாலும், தவறான வழியை பிறர்க்குக் காட்டக் கூடாது. நாமும் ஏற்கக் கூடாது; அறநெறியை விட்டு விலகக் கூடாது என்பதைத் தெளிவாக உணர வேண்டும். அறநெறியால்தான் இன்பம் பெறமுடியும் என புத்தர், திருவள்ளுவர் முதலான சான்றோர்கள் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் தம் வாழ்க்கையனுபவத்தால் கற்ற உண்மைகளை நம் நன்மைக்காகத் தந்திருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் கண்மூடி வாழ்ந்தவர்கள் அல்லர்; எண்ணங்களால், அனுபவங்களால் தெளிந்த உண்மைகளை நாமும் உணர்ந்து நடக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

இன்னும் எளிமையாகக் கூறவேண்டுமானால், மின்விளக்கு, மின்விசிறி, வானொலிப்பெட்டி முதலியவற்றை இயக்குகிறோம். பழுதுபார்க்கிறோம். சில அடிப்படை விதிகளை நம்பிக்கையோடு கற்றுக் கொண்டு அவற்றை நம்பி அந்தக் கருவிகளை இயக்கிப் பயன்படுத்துகிறோம். ஒவ்வொரு விதியையும் அலசி ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருக்க நேரம் இல்லை. ஆகவே நம்புகிறோம்; கற்கிறோம். அறநெறிகளை அப்படி நம்புவதே நல்லது. ஏன் என்றால் சான்றோர் பலர் இவற்றைத் தன் வாழ்க்கையில் பயின்று பயன்பெற்று நற்சான்று வழங்கியிருக்கிறார்கள்.

திருக்குறளில் கூறியுள்ள ஒவ்வொரு சிந்தனையையும் செயல்படுத்தினாலே நாட்டில், மக்களிடத்தில் பல்வேறு குழப்பங்களைத் தெளிவாக்க முடியும். சுருங்கக் கூறின், அன்பில் நெகிழ்வு, அறிவில் தெளிவு, ஆக்கத்தில் ஊக்கம், வாழ்வில் எளிமை, உண்மையில் உயிர்ப்பு, உழைப்பில் ஓய்வின்மை, கொள்கையில் உறுதி, இயற்கையில் ஈடுபாடு, துன்பத்தில் துணைநிலை, புலமையில் ஆழம், ஆராய்ச்சியில் நடுநிலைமை, இல்லத்தில் துறவு, பதவியில் பகட்டின்மை, புரட்சியில் முதன்மை, பண்பில் சால்பு, அறத்தில் நம்பிக்கை, புகழில் மயங்காநிலை, செல்வத்தில் செருக்கின்மை, விளம்பரத்தில் விருப்பின்மை என எளிமையைப் பின்பற்ற எல்லாம் நலமாகும்.

ஒரு பயன்பாட்டுக்கு ஒரு வேலை என்ற நிலையில், நாகரிகம் வளர்ந்த இன்றைய நாளில் ஒரு பயன்பாட்டுக்காக மூன்று அல்லது நான்கு பணிகளைச் செய்து மனித வளத்தையும் இயற்கை வளத்தையும் கெடுத்து வருகிறோம். எடுத்துக்காட்டாக, வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமானால், முன்னாளில் காலைக் கடன் கழிக்க சிறிது தூரம் நடந்து சென்று வயலுக்கு உரமாக்கிவிட்டு வருவோம். அதனைக் கால்கழுவுதல் என்பர். இன்றோ, வீட்டுக்குள்ளேயே கழிவறையை வைத்துக் கொண்டு காலையும் கழுவி, உணவுப் பொருளில் ஏற்பட்ட நாகரிக மாற்றத்தால் கழிவறையையும் சேர்த்துக் கழுவி, ஓரிரு ஆண்டுகள் ஆன நிலையில், கழிவறைத் தொட்டியை சுத்தப்படுத்தும் முயற்சியில் வாயு தாக்கி தொழிலாளி மரணமுறுகிற அவலத்தை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

இயந்திரங்களைச் சார்ந்து வாழாத அன்றைய நாளில், காலையில் எழுந்து காலார நடந்து பணிகளுக்கு நடந்து செல்வது, கிணற்றிலிருந்தோ, ஊருணியிலிருந்தோ குடிநீர் கொண்டுவருவது, குளங்களில் கிணற்றில் குதித்து நீச்சலடித்து குளிப்பது என செய்யப்படும் ஒவ்வொரு வேலையும் நம் உடலுக்கு வலிவையும், பொலிவையும், நலத்தையும் அளித்தது. தற்போதைய நிலையில் இதனைச் செய்ய, வீட்டிலிருந்து இரண்டு அல்லது நான்கு சக்கர வாகனத்தில் பயிற்சிக் கூடத்திற்கு (Gym) செல்கின்றனர்.

இதனால் எரிபொருள் தட்டுப்பாடு, விலைஉயர்வு, வாகனத் தேய்மானம், வெளியிடும் புகையால் சுற்றுச்சூழல் பாதிப்பு என பல்வேறு தீமைகளை நம்மை அறியாமலேயே நாம் செய்து வருகிறோம் என்பதை உணர வேண்டும். நடைபயிற்சி மேற்கொள்ள நடைப்பயிற்சி இயந்திரம்(Treadmill Practice,)  போன்ற இயந்திரங்களை இயக்க மின்சாரம் பயன்படுத்தப்படுவதால் மின் வெட்டு நேரம் அதிகரிக்கப்படுகிறது. இவ்வாறு ஏராளமானவற்றை நாம் விரயமாக்கி வருகிறோம்.

நுகர்வுக் கலாச்சாரத்தால் துர்நாற்றம் மிகுந்த தூர்வார இயலாத சாக்கடை வாழ்க்கை வாழ்ந்து வருகிறோம். இதற்கு அங்காங்கே கொட்டப்பட்டுள்ள ஞெகிழி (Plastic) குப்பைக் குவியலும், கொசுப் பெருக்கமும் சான்றாகும். வீட்டுக்குப் பின்னாலேயே குப்பை கொட்டப்பட்ட காலத்திலும், ஆடுமாடுகள் வீட்டிலேயே வைத்து வளர்க்கப்பட்ட நிலையிலும் கூட இவ்வளவு கொசுக்களின் பெருக்கம் இருந்ததில்லை.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், இயந்திரங்களைச் சாராத வாழ்க்கையால் பெண்களுக்கு சுகப்பிரசவமும், ஆண் பெண் இருபாலாருக்கும் உடல் பருமன், சர்க்கரை, இரத்தக் கொதிப்பு, இருதயக் கோளாறு என எந்த நோயும் வந்ததில்லை. இன்றைய நாகரிகத்தினால் நோய்கள் பல்கிப் பெருகியுள்ளதையும் ‘கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்று’வதைத் தவிர்த்து, பழைமையின் பயன்பாடுகளை, நாட்டுக்குரிய நலன்களை நாமும் சமூகமும் நினைவில் கொண்டு செயல்பாட்டால் சமூகத்தின் அத்தனை அவலங்களையும் அழித்தொழிக்க முடியும்.

முதல்நாள் இரவு சமைத்த உணவில் நீரையோ, வடித்த கஞ்சியையோ ஊற்றி வைத்தஉணவை மறுநாள் சாப்பிடுவதை நம் முந்தைய தலைமுறை நடைமுறையில் கொண்டிருந்தது. நம் தலைமுறையில் சிற்றுண்டிகளுக்கு முதன்மை கொடுத்து அந்த உணவு முறையை மறந்து விட்டோம். ஆனால் இன்றைய நாளில் வெளிநாட்டு விஞ்ஞானிகள் அந்த உணவு குறித்து ஆய்வு செய்து, அந்த உணவில் நோய் எதிர்ப்பு சக்தி, வெள்ளையணுக்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யும் காரணிகள் என உடலுக்கு நலம்பயக்கும் பல்வேறு கூறுகள் அதில் உள்ளதாகக் கண்டுள்ளனர். இது குறித்து இன்றைய பத்திரிகைகள் பக்கம்பக்கமாய் எழுதி வருகின்றன. இதுகுறித்த செய்திகள் முகநூலிலும் டுவிட்டரிலும் வலம் வருவதாகவும் நண்பர்கள் என்னிடம் தெரிவித்தனர். அநேகமாக முகநூல் பயன்படுத்தும் நீங்கள் அத்தகு செய்தியைப் பார்த்திருப்பீர்கள் எனவும் நம்புகிறேன்.

நம்முன்னோர் சேர்த்து வைத்த சொத்துகளான நிலபுலன்கள், வீடுவாசல்கள், நகைதிரவியங்கள் ஆகியவற்றை அனுபவிக்கிறோம். சில சமயங்களில் உரிமைகொண்டாடி அனுபவிக்கும் பொருட்டு சொந்த பந்தங்களோடு சண்டையிட்டுவது, நீதிமன்றத்தை அணுகித் தீர்வு காண்பது என்றெல்லாம் நம்மை ஆட்படுத்திக் கொள்கிறோம். ஆனால், அவர்கள் வாழ்ந்த இயற்கைக் சூழலோடு இயைந்த, பல்லுயிர் நலம் சார்ந்த, மண்ணும் மக்களும் பயனுறும் வாழ்க்கை வாழ மட்டும் மறுக்கிறோம். இப்படி ஏராளமாகக் கூறலாம். இந்தக் கடிதத்தில் ஒருசில வாழ்க்கை நெறிகளை என் சிற்றறிவுக்கு எட்டிய வகையில் விளக்கியுள்ளேன். இத்தகு எழுச்சிமிகு சிந்தனைகளை என்னுள் விதைத்த சமூக இலக்கியச் சான்றோர்களின் எண்ணங்களுக்கும் எழுத்துகளுக்கும் இந்த நேரத்தில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆத்திகம், நாத்திகம், புரட்சி, பொதுவுடமை, உடலோம்பல், சுற்றுச்சூழல், கொலை, களவு, காமம், பொய் முதலிய ஒழுக்கக் கேடுகளைத் தவிர்ப்பது, தீய பழக்க வழக்கங்களிலிருந்து விடுபடுவது, இலஞ்சம், ஊழல் போன்றவற்றிலிருந்து விலகியிருப்பது, பொது இடங்களில் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் போன்றவற்றிற்கான எனது பதில்கள் இக்கடிதத்தில் விடப்பட்டுள்ளன என்பதையும், அதுகுறித்து அடுத்தடுத்த கடிதங்களில் நிச்சயம் எழுதுகிறேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

எல்லாவற்றுக்கும் உங்களின் பதிலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். திரிசடைக்கு என் வாழ்த்துகளையும், விசாரிப்புகளையும், தெரிவிப்பதோடு அவளுக்கு சில தினங்கள் கழித்து கடிதம் எழுதுகிறேன் என்பதையும் தயவுசெய்து தெரிவிக்கவும்.

என்றும் நன்றியுடன்,
ச. பொன்முத்து.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *