வெள்ளி மலையும் குமரிக் கடலும்!

0

சி. ஜெயபாரதன்image

கொந்தளிக்கும் தென்குமரிக் கடலில்
நித்தம் நித்தம் மூழ்கி

முத்தும், பவளமும் தேடிக் 
கோர்த்து
கரையோரம் நீ தொடுத்த
ஆரங்கள் பற்பல 
அன்னையின் கழுத்தில்
பொன்னொளி 
வீசும் !
முத்துக் குளித்தபின் நீ விடும்
மூச்சலைகள்
நெஞ்சின் முகிலாய் 
கடல் கடந்து எந்தன் 
பனிமலையை
உருக்கிப் 
பிழிகின்றன ! உன்
ஆத்மாவின் கீதங்களைக் கேட்டு
எதிரொலிக்க 
மேரு மலை ஒன்று
இன்னும்
வேரிட வில்லை ! 
வாடாமல், வதங்காமல்,
இன்னும் வனப்பு மங்காது
சூடாமலர்கள் 
பூங்காவில் 
தொடுப்பாரற்றுப்
பாடிக் கொண்டுள்ளன !
தடாகத்தில் 
தாமரைப் பூக்கள்
தண்ணீர் ஒட்டாது
பட்டுப் பூச்சிகள்
பள்ளி கொள்ள
வீணைகளை மீட்டுகின்றன! 

கரையான்கள்
கட்டிய
கண்ணாடி அறையி லிருந்து நீ
சேதியுடன் பறக்க விட்ட
தூதுப் புறாக்கள் என்
நெஞ்சுக்குள்
கூடு கட்டி விட்டன !
மலைபோல் உயர்ந்தவ னென்று
மடலில் எழுதினாய் !
மட்டமாயினும்
கடல் ஆழம் உடையது !
படைக்கும் போது
பல்லாங்குழி விளையாடும்
பரமன்
ஒருத்தி மடியில் எடுத்து
அடுத்த மடியை நிரப்பினான் !
குமரிக் கடலைத்
தோண்டி
இமயச் சிகரம் நிரப்பினான் !
பனிக் கட்டிகளை உருக்கி
குமரிப்
பள்ளத்தை நிரப்பினான் !

சமத்துவ வாதிகள் சம்மட்டியால்
இமயச் சிகரத்தை
மட்டப் படுத்தப்
புறப்பட்டு விட்டார் !
தராசின் தட்டுகள் ஏறி  இறங்கி
சமமாக ஓய்ந்து நிற்கும்
அமைதி யுகத்துக்கு
நாமிருவரும்
பூமியில் காத்திருப்போம் !
காலக் குயவன் ஆழியைச் சுற்றி
கறுப்புப் பானைகளைப்
படைத்தான்!
வெள்ளைப் புடவை
கட்டிக் கொண்டு
காக்கைகள்
கண்ணாடி முன் கனவு காணும் !
வானில் பறக்க
உந்திப் பார்க்கும் ஆமைகள் !

குதிரையை வால் புறம் ஓட்டும்
குருமார்கள்  உன்
மூளையைச் சலவை செய்து
நெஞ்சை மிதித்து
கை, கால்களில் கட்டிய விலங்கை
உடைக்க
கையில் எப்போதும்
பேனா உளியை
வைத்திருக்கிறாய் ! எனது
அந்தரங்கக் கொலுவில்
உன் கை செய்த பதுமைகள்தான்
அமர்ந்துள்ளன !
நெஞ்சில் அரங்கேறும் உன் பரதக்கலை
முடியும் போதென்
கடிகாரமும் நின்று விடும்!
இதயக் கோயிலில் நெய் ஊற்றி நீ
எரிய விட்ட விளக்கை
வாசலில் நிற்கும்
எமன் ஊதி விடுவதற்குள்
வைரக் கற்களை நான்
செதுக்கிப்
பட்டை தீட்ட வேண்டும் !

கடலோரம் ஒதுங்கும் சிப்பிகளைத்
திறந்த போது,
உன் முத்துகள் தான்
என் கண்ணில் தெரிந்தன !
மின்வலையில் சிக்கிய மீன்
தப்பி ஓடி
எப்படிக் கண்முன் வந்தது ?
கலைச்செல்வி கழுத்து ஆரங்களில்
ஒன்றை எடுத்து
இன்று ஏவும் புறாவின் காலில்
கட்டி விடுவாயா ?
கடல் உயரும், மலை தாழுமெனப்
பொறுத்தது போதும் தோழீ !
கடல் பொங்கி
சுனாமி எழும் போது
பேனாவுடன் தேடி வா !
மலை சரியும் போது
நான் மையுடன் வருவேன்
பேனாவுக்கு !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *