“குரோட்டன்ஸ் மனிதர்கள்’’

1

ஸ்ரீதேவி

devi

ஊருக்கு சற்றே ஒதுக்குப்புறத்தில் நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து செல்லும் பாதையில் அமைந்திருந்தது அந்த அப்பார்ட்மெண்ட். பெருநகரங்களைப் போலவே இப்போதெல்லாம் குடியிருப்புகள் பெருகிவிட்டிருக்கும் சிறிய நகரங்களில் இதுவும் ஒன்று.

நெடுஞ்சாலையின் ஓரத்தில் இருந்த வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தை தாண்டித்தான் அந்த குடியிருப்புக்கு சென்றாக வேண்டும். வட்டாட்சியர் அலுவலகத்தை ஒட்டி ஒரு பெரிய கல்கிடங்கு இருக்கும். சிறு வயதில் அந்தக் கல்கிடங்கில் மீன் பிடிக்க தூண்டிலோடு அப்பாவுடன் சைக்கிளில் போன நினைவுகள் வந்தது.

இப்போது கல்கிடங்கே இல்லை. அத்தனை பெரிய கல்கிடங்கை எப்படி மூடி சமன்படுத்தி கட்டிடம் கட்டியிருக்கிறார்கள் என்ற நினைப்பே ஆயாசத்தை தந்தது. அந்தக் கட்டிடம் கல்கிடங்கு தண்ணீருக்கும் அதில் வாழ்ந்த ஜீவராசிகளுக்கும் உயிரோடு கட்டப்பட்ட சமாதியாகவே தெரிந்தது.

ஊருக்கு நடுவில் அடுக்கி வைத்த தீப்பெட்டிகளாய் நெருக்கியடித்துக் கிடந்த தெருக்களுக்குள் 28 வருடங்களாய் குடியிருந்த அம்மா இந்த ஒதுக்குப்புற குடியிருப்பில் எப்படி இருக்கப் போகிறாள் என்ற கவலை புதிதாய் முளைத்தது. பக்கத்து வீட்டில் அடுப்பெரிகிறதா இல்லையா என்பதைக் கூட குறிப்பாலுணர்ந்து ”என்னக்கா இன்னைக்கு சோறாக்கலையா” என்று கேட்கக்கூடிய அன்பான மனிதர்கள் நிறைந்த இடத்தை எப்படி ஈடு செய்யப் போகிறது ஒவ்வொரு வீட்டுக்கும் தனித்தனி கேட் போடப்பட்டிருக்கும் இந்த அப்பார்ட்மெண்ட்?

அம்மா…….முப்பது வருடங்களாய் ஒரு மிகச் சிறந்த மனிதரோடு வாழ்க்கை நடத்தியவள் இதுவரை கழுத்தில் காதில் மூக்கில் ஏன் மஞ்சள் கயிற்றுத் தாலியில் கூடப் பொட்டு தங்கத்தைப் பார்க்காதவள். தங்கமனைத்தும் மனிதனாய் உருவெடுத்தது போல் வாய்த்த கணவரின் இன்ப துன்பங்கள் அனைத்திலும் பங்கு போட்டுக் கொண்டவள்.

அப்பா மாரடைப்பால் இறந்த பின் வந்த அடுத்த மூன்று வருடங்களில் பிள்ளைகளின் சம்பாத்தியத்தில் கடனையெல்லாம் அடைத்து விட்டு கையிருப்பாய் இப்போது நகைகளும் பணமும் வசதி வாய்ப்புகளும் வந்த பின்னும் கூட பகட்டை வெளிக்காட்டிக் கொள்ளாதவள். மகன்கள் ஆசையாய் செய்து தந்த தங்கச் சங்கிலியைக் கூட அணிய மறுத்து மகளின் திருமணத்தில் தான் அணிவேன் என்று பிடிவாதத்தோடு இருப்பவள்.அப்பாவின் நினைவுச் சின்னங்களில் ஒன்றாய் இருப்பது இப்போதிருக்கும் இந்த வீடும் தான்.

வீட்டு வாசலில் அம்மா ஆசையோடு வளர்த்த வாத நாராயணன் மரம் இப்போது தான் பூத்துக் குலுங்கி ஒன்றிரண்டாய் காய்க்கவும் தொடங்கியிருக்கிறது. நகராட்சி தெருக்களில் எல்லாம் இப்போது தரைகளில் பேவர் ப்ளாக் கற்கள் பதிக்கப்பட்ட பின்னும் இரண்டு கற்களை வாசற்படியோரம் நெம்பி எடுத்து அதில் நட்டு வளர்த்த மரம் இது. மரத்தையொட்டியிருக்கும் ஒரு சின்ன தொட்டியில் சங்குப்பூவும் பூத்துக் கிடக்கும். அதற்கடுத்தாற் போல ஒரு கற்றாழைச்செடி, தக்காளி, மிளகாய்……

இந்தப் புதிய அப்பார்ட்மெண்ட்டில் மொத்தம் பன்னிரண்டு வீடுகள். கீழ்த் தளத்தில் இடது பக்கம் மூன்றும் வலது பக்கம் மூன்றும் நடுவில் விஸ்தாரமான மாடிப் படிக்கட்டுகளோடு முதல் மாடியிலும் அதே வரிசையில் ஆறு வீடுகளுமாய் அழகாய் இருக்கிறது. இரண்டு கெஸ்ட் ரூம்களோடு கூடிய அகலமான மொட்டை மாடி துணி காயப் போடும் கம்பிகளோடு வரவேற்கத் தயாராய் காத்துக் கிடக்கிறது.

முதல் மாடியில் படிக்கட்டு முடியுமிடத்தில் வலது பக்கம் திரும்பியவுடன் முதல் வீடு எங்களுடையது. வீட்டினுள்ளே நுழைந்ததும் சின்னதாய் ஒரு இடம். காலணிகள் வைக்கும் இடம் போக இரண்டு பேர் தாராளமாய் படுத்து தூங்கும் அளவு இருந்தது. அதைத் தாண்டியதும் பெரிய ஹால், இடது பக்கம் சமையலறை நல்ல காற்றோட்டமும் வெளிச்சமும் நிறைந்திருந்தது. இரண்டு படுக்கையறைகளோடு ஒரு அட்டாச்டு டாய்லட் பாத்ரூம். எல்லா அறைகளிலும் தேவையான அளவுக்கு அடுக்குகள்… பளிச்சிடும் டைல்ஸ் தரையுமாய் வீடு வெகு அம்சமாய் இருந்தது.

வசதியான வீட்டுக்குக் குடி போகும் போது கார் வாங்கப் போவதாய் தம்பி சொல்லியிருந்தது பார்க்கிங் பகுதியைக் கடக்கும் போது அம்மாவுக்கு ஞாபகம் வந்திருக்கும் போல….”வண்டி வாங்கினா இங்க நிறுத்திக்கலாம்ல”ன்னு ஒரு இடத்தைக் காட்டிப் பெரிதாய் புன்னகைத்தாள்.

”ம்மா இங்க உங்களுக்கு தெரிஞ்சவங்க யாரும் இல்ல…நீங்க இருந்துக்குவீங்களா? நம்ம தெரு மாதிரி இல்ல….பேச்சுத் துணைக்கு ஆள் இருக்க மாட்டாங்க. எதிர்ல பார்த்தா வெறுமனே சிரிக்கக் கூட கொஞ்சம் நாள் ஆகும். இதெல்லாம் பரவால்லயா உங்களுக்கு?”

“நான் என்ன இப்ப எனக்காகவா இங்க வரேன். பசங்க எல்லாரும் வளர்ந்துட்டீங்க. வீட்டுல நல்ல நாள் விசேஷம்னா கொஞ்சம் வசதியோட இருக்க வீட்டுல இருந்தாத்தான நமக்கும் நல்லா இருக்கும். இப்ப இருக்க வீட்டுல பழைய சாமான்கள்லாம் இருக்கட்டும். எப்போ வேணும்னாலும் திரும்பி வந்து இருந்துக்கலாம்ல.”

“அந்த வீட்டுல இப்ப இருக்க சங்குப்பூ, தக்காளி, பச்சை மிளகாய், கத்தாழ , வாதாம் மரமெல்லாம் இங்க வைக்க முடியாது”

“செடி வைக்கணும்ன்னா வீட்டுக்குள்ளேயே வளர்க்குறாங்களே…அது மாதிரி வாங்கிக்குவோம்…என்ன ஒண்ணு அந்த வீட்ல இருக்க செடியெல்லாம் பார்த்துக்க தான் ஆளிருக்க மாட்டாங்கல்ல. ஒவ்வொண்ணும் பிள்ள மாதிரி வளர்த்தது. மத்தபடி எனக்கு பிரச்சனை இல்ல. உங்க எல்லாருக்கும் பிடிச்சிருக்கில்ல….அப்புறம் என்ன. நான் இருந்துக்குவேன்டி”

“ம்ம்…..”

பூரண சுதந்திரத்தோடு தரையில் வளரும் செடி கொடி மரங்கள் இப்போதெல்லாம் நிறையவே மாற்றங்களுக்குட்பட்டு வீடுகளுக்குள்ளேயே வளர்க்கப்படுவது போலத்தான் இன்றைய மனிதர்களும் போல. வசதிகள் இருப்பது மட்டுமே வீடாகிப் போவதில்லை….வாழ்வதற்கு உகந்ததே வீடாக இருக்கிறது. வெறும் கட்டடங்களையே வாழுமிடமாக மாற்ற அம்மா போன்ற மனிதர்களால் மட்டுமே முடிகிறது. தரையில் வளர்ந்தாலும் மரமாய் நிழல் தந்தும் , வீட்டுக்குள் வைத்தாலும் பார்வைக்கு அழகாய் இருக்குமிடத்தை வைத்திடும் அம்மா போன்ற “குரோட்டன்ஸ் மனிதர்கள்”..மட்டுமே வாழ்தலை சாத்தியமாக்கி வருகிறார்கள்…

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on ““குரோட்டன்ஸ் மனிதர்கள்’’

  1. தாயன்புக்கு இணை ஏது? நடப்புலகில் நடந்துவரும் நிகழ்வுகளைபட படமாக்கிய ஆசிரியருக்கு பாராட்டுகள்.
    லட்சுமி

Leave a Reply to பாரதி

Your email address will not be published. Required fields are marked *