முனைவர் அண்ணாகண்ணன்

(annakannan@gmail.com | 9841120975)

 10150804_619889874774344_2540426917301829276_n

தமிழில் பல்லாயிரம் வலைத்தளங்களும் வலைப்பதிவுகளும் தோன்றியுள்ளன. இலட்சக்கணக்கான தமிழ்ப் பக்கங்கள் கிடைக்கின்றன. சமூக ஊடகங்களில் துடிப்பாக இயங்கும் தமிழர்கள், பல இலட்சம் பேர் உள்ளனர். தமிழ்த் தரவுகள் பெருகி வரும் நிலையில், அவற்றில் பிழைகளும் குறைகளும் மலிந்துள்ளன. இந்நிலையில் இணைய இதழாளர்களுக்குச் சில அடிப்படைக் குறிப்புகளை அளித்தல், உதவிகரமாக இருக்கும்.

இணையத்தில் எழுதுவோர் ஒவ்வொருவருக்கும் தனித் தனி நடை இருக்கலாம். ஆனால் இங்கு, செய்திகளையும் தரவுகளையும் எவ்வாறு பதியலாம் எனப் பொதுவான குறிப்புகளை அனுபவத்தின் அடிப்படையில் அளித்துள்ளேன். அவரவர் விருப்பத்திற்கும் தேவைகளுக்கும் ஏற்ப, இந்த நடை மாறுபடும் என்பதை நினைவில் கொள்வோம்.

அச்சிதழில் எழுதுவதற்கும் இணையத்தில் எழுதுவதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. அவற்றுள் முக்கியமான சிலவற்றை இங்கே காணலாம்.

காலக் குறிப்புகள்

இணையத்தில் காலத்தைக் குறிப்பிடும்போது கூடுதல் கவனம் தேவை. நாளிதழில் ‘இன்று’ எனக் குறிப்பிட்டு எழுதும்போது, அதைப் பெரும்பாலும் அந்த நாளில் மட்டுமே படிக்கிறார்கள். அடுத்த நாள் அது, பழைய ஏடாகி, பொட்டலம் மடிக்கவும் இன்னபிற பயன்பாடுகளுக்கும் சென்றுவிடுகிறது.

ஆனால், இணையத்தின் இயல்பின்படி எந்த ஒரு தரவும் எந்த நேரத்திலும் எந்தக் காலத்திலும் படிக்கப்படலாம். இந்தச் செய்தியை அடுத்த ஆண்டோ, பத்து ஆண்டுகள் கழித்தோ ஒருவர் படிக்கும்போது அது எந்த நாள் என்ற குழப்பம் ஏற்படும். என்னதான் தானாகவே அந்தச் செய்தியுடன் நாள் விவரம் தெரிந்தாலும், கூடுதல் விவரத்திற்காக அந்த நாளை முழுவதுமாகக் குறிப்பிடுங்கள்.

இணையத்தில் சம்பவங்களைக் குறித்து எழுதும்போது, ‘இன்று பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாயின’ என எழுதுவது சரியில்லை. ‘2009 மே 23ஆம் தேதி, பத்தாம் வகுப்பு முடிவுகள் வெளியாயின’ என்பது போல் எழுதுவது நல்லது. ‘இன்று கைது ஆனார்’, ‘நாளை விடுதலை ஆவார்’ என்றெல்லாம் எழுதாமல் நாள் குறிப்பிடுங்கள். ‘நேற்று முன்தினம்’, ‘நாளை மறுநாள்’ என எழுதுவதும் சரியில்லை. துல்லியமாக நாளைக் குறிப்பிட வேண்டும்.

இதே போன்று கடந்த வாரம் என்பதும் மயக்கம் மிகுந்த சொல்லாட்சி. இறந்த காலத்தில் உள்ள எல்லா வாரங்களுமே கடந்த வாரம்தான். வரும் வாரத்தில் என எழுதுவதிலும் இதே சிக்கல் உண்டு. வரப்போகின்ற எல்லா வாரங்களுமே வரும் வாரம்தான். இதனை 2009 அக்டோபர் முதல் வாரத்தில், மூன்றாவது வாரத்தில் என எழுதுவது நல்லது. இது கடந்த மாதத்தில், கடந்த ஆண்டில்… என வரும் எல்லா வாக்கியங்களுக்கும் பொருந்தும்.

இன்னும் கேட்டால் கி.பி. (கிறித்துவிற்குப் பிறகு), தி.பி. (திருவள்ளுவருக்குப் பிறகு) என எந்த ஆண்டு வரிசையினைக் குறிப்பிடுகிறோம் என்றும் குறிப்பிடுவது நல்லது. கிறித்து ஆண்டு முறை, பெருவழக்காக இருப்பதால், 2009 என்று குறிப்பிட்டாலே அது கிறித்து ஆண்டுதான் என நாம் எடுத்துக்கொள்கிறோம். திருவள்ளுவர் ஆண்டினைத்தான் தனியே குறிப்பிட வேண்டி இருக்கிறது. இப்பொழுது கிறித்து ஆண்டினைப் பொது ஆண்டு (CE – Common Era)1 எனக் குறிப்பிடுகிறோம்.

காலத்தினைக் குறிப்பிடுவதில் இன்னும் ஒரு சிக்கலும் உண்டு. உலகம் முழுவதும் பொதுவான கால வரிசைகள் இல்லை. நீங்கள் இந்தியாவில் இருந்து எழுதும் போது, இன்று காலையில் என்று எழுதுவீர்கள். ஆனால், அமெரிக்காவில் அதைப் படிப்பவரும் இன்று காலையில் என்றுதான் படிப்பார். ஆனால், இருவரின் காலைகளும் வெவ்வேறானவை. இதைத் தவிர்க்க, 2009 மே 23ஆம் தேதி இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு என எழுதுதல் வேண்டும். அதே போன்று அமெரிக்காவிலிருந்து எழுதுவோர், அமெரிக்க நேரப்படி இன்று மதியம் 2 மணிக்கு என எழுதுவது நல்லது.

இடக் குறிப்புகள்

இடத்தினைக் குறிப்பிடும்போதும் கூடுதல் கவனம் தேவை. ஒரே மாதிரியான உச்சரிப்பில் பல ஊர்ப் பெயர்கள் வரக்கூடும். Quanzhou, Guangzhou என இரண்டு இடங்கள் உள்ளன. Quanzhou2 என்பது சீனாவின் ஃபுஜியான் (Fujian) மாகாணத்தில் உள்ளது. Guangzhou3 என்பது சீனாவின் குவாங்டாங் (Guangdong) மாகாணத்தில், ஹாங்காங்கின் வடமேற்காக 120 கி.மீ. தொலைவில் கேண்டன் (Canton) பகுதியில் உள்ளது. குவான்சோ, குவாங்சோ என இவற்றைத் தமிழில் எழுதினால் போதாது. அடைப்புக் குறிக்குள் அந்த ஊரின் பெயரை ஆங்கிலத்திலும் கொடுப்பது நல்லது.

மதுரை – மதுரா, கடலூர் – கூடலூர் போன்றவையும் எழுத்தளவில் நெருங்கிய தொடர்பு கொண்டவை. வெளிநாட்டுப் பெயர்களில் பல, இவ்வித தோற்ற மயக்கங்கள் கொண்டவை. தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் காட்டூர், கருப்பூர், புதூர்….. போன்ற ஏராளமான ஊர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் உள்ளன. இத்தகைய ஊர்களைக் குறிப்பிடும்போது, நமக்குத் தெரிந்த வரையில் துணை விவரங்களையும் அளிக்கலாம். திருவாரூருக்கு அருகில் உள்ள காட்டூரில் என எழுதலாம். நன்றாகத் தெரியுமானால் திருவாரூரிலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள காட்டூரில் என எழுதலாம்.

அடைமொழிகள்

நபர் பெயர்களைக் குறிப்பிடும்பொழுது, ஒரே வகையான தரநிலைகளைப் பின்பற்ற வேண்டும். நிறைய மனிதர்களின் பெயர்களைக் குறிப்பிடும்பொழுது, ஒவ்வொருவருக்கும் திரு. என அடைமொழிகள் அளிக்க வேண்டியது இல்லை. திருவாளர்கள் என எல்லாப் பெயர்களையும் வரிசையாக அளித்து விடலாம். ஒருவருக்குத் திரு என அடைமொழி அளித்துவிட்டு, இன்னொருவருக்கு அளிக்காமல் விடுவது சரியாய் இருக்காது. மேலும், செல்வி, திருமதி ஆகிய சொற்களை அடுத்துப் புள்ளிகள் வைப்பதைப் பல இடங்களிலும் பார்க்கிறேன். முழுச் சொற்களாக எழுதிய இடங்களில் எல்லாம், புள்ளி வைக்கக் கூடாது. திருவாளர் என்ற முழுச் சொல்லைச் சுருக்குவதால் தான் திருவுக்குப் பக்கத்தில் புள்ளி வைக்கிறோம்.

அவசியம் இல்லாவிடில், திருவாளர், செல்வி, திருமதி ஆகிய அடைமொழிகளைப் பெரும்பாலும் தவிர்க்கலாம். பெண்களைப் பொறுத்தவரை திருமணம் ஆனவரா, இல்லையா என்பதைக் காட்டவே இந்தச் செல்வி, திருமதி ஆகியவை பயன்படுகின்றன. குறிப்பாக, வெளிநாட்டுப் பெயர்கள் பல, ஆண் பெயரா – பெண் பெயரா எனக் குழப்பும் வகையில் உள்ளன. நமக்கு உறுதியாகத் தெரியுமானால், ‘யாங் என்ற பெண்’ எனக் குறிப்பிடலாம்.

இது போன்றே பட்டப் பெயர்களிலும் கவனமாக இருக்க வேண்டும். கலைஞர் மு.கருணாநிதி எனக் குறிப்பிடுவதாக இருந்தால், புரட்சித் தலைவி ஜெ.ஜெயலலிதா எனக் குறிப்பிட வேண்டியிருக்கும். இப்படியாக ஒவ்வொருவருக்கும் உள்ள பட்டப் பெயர்களைக் குறிப்பிடுவது எவ்வளவு பெரிய வேலையாக மாறுகிறது என்பதை நினைத்துப் பாருங்கள். நடுநிலையாளர்கள், முதல்வர் மு.கருணாநிதி, எதிர்க் கட்சித் தலைவர் ஜெ.ஜெயலலிதா எனக் குறிப்பிடுவதே நல்லது.

முனைவர் பட்டம் பெற்றவர்களை டாக்டர் என அழைப்பதை விடவும் முனைவர் என்றே அழைக்க வேண்டும். எழுதுகின்ற மூன்றாவது நபருக்கு, அவர் என்ன டாக்டர் என ஒருவேளை தெரியாவிட்டால் டாக்டர் என்று குறிப்பிடுவதைத் தவிர வேறு வழியில்லை. இந்தச் சிக்கலை உணர்ந்து, இனி தமிழில் எழுதுகின்ற முனைவர்கள், தங்களை முனைவர் என்ற அடைமொழியுடன் குறிப்பிடுமாறு அன்புடன் வேண்டுகிறேன். ஆங்கிலத்தில் இவ்வாறு எழுதும்போது பின்னொட்டாக, பிஎச்.டி. எனக் குறிப்பிடலாம். தமிழில் அது குறைவாக இருப்பதால், அவரவரே தங்களை அடையாளம் காட்டுவது நல்லது.

பின்னொட்டு என்றதும் ‘அவர்கள்’ நினைவுக்கு வருகிறார்கள். பெயர்களுக்குப் பிறகு ‘அவர்கள்’, ‘அவர்கள்’ என வரிசையாக எழுதுவது தேவையற்றது. பெயரைக் குறிப்பிட்டால் போதுமானது. குடியாட்சியில் அனைவரும் மதிப்பிற்கு உரியவர்களே. ஒருவரை ‘அவர்கள்’ என விளித்து, இதர பெயர்களை அவ்வாறு குறிப்பிடாவிடில் பேதம் மிகும். எனவே, மிகவும் முக்கியம் என்றால் தவிர, அவர்களைப் பயன்படுத்த வேண்டாம். இன்னும் சிலர் பட்டங்கள், திரு, டாக்டர் ஆகிய அனைத்தோடும் கல்வித் தகுதிகளையும் அவர்களையும் பின்னால் இணைத்து அழைத்து, மூச்சு வாங்க வைப்பார்கள். இவை போலித்தனமானவை. இதனைப் படிப்பவர்கள் உடனடியாக உணருவார்கள். எனவே, இத்தகைய வழக்கத்திலும் மாற்றம் வேண்டும்.

பாலினம்

இதே போன்று தலைவர் என்பது பொதுச்சொல். பெண்பாலுக்கு வருகையில் தலைவி என எழுதினால், ஆண்பாலுக்குத் தலைவன் என எழுத வேண்டியிருக்கும். எனவே இரு பாலருக்கும் பொதுவான சொற்களைப் பயன்படுத்துவது நல்லது. ஒரே தொடரில் ஒருவரைத் தோழர் என்றும் இன்னொருவரைத் தோழி எனவும் எழுதுவது சரியில்லை. இதனால்தான் ஆங்கிலத்தில் Chairman என்பதை விடுத்து, Chair Person4 என எழுதுகிறார்கள்.

அலகுகள்

வெவ்வேறு நாடுகளிலிருந்து, வெவ்வேறு துறைகளைச் சார்ந்த தரவுகளைப் பயன்படுத்தும்போது, பல்வேறு கூறுகளை நினைவில் கொள்ள வேண்டும். அந்தக் குறிப்பிட்ட மொழி பேசும் மக்களுக்கு எப்படிச் சொன்னால் புரியுமோ, அப்படி அந்தத் தரவுகளை அளிக்க வேண்டும். அவர்களிடம் பெருமளவு புழக்கத்தில் உள்ள அலகுகளையே அதற்குப் பயன்படுத்த வேண்டும்.

அமெரிக்க டாலர், யூரோ, பவுண்டு, யென் என வேறு நாட்டு நாணயங்களை இந்திய ரூபாய்க்கு மாற்றி உரைக்க வேண்டும். இப்படியே மைல் என்பதைக் கிலோ மீட்டராகவும் காலன் என்பதை லிட்டராகவும் இது போன்றே இதர அலகுகளையும் மாற்ற வேண்டும். இதற்கு இலவச அலகு மதிப்பு மாற்றிகள், இணையத்தில் உண்டு.

ஒருமையும் மதிப்புப் பன்மையும்

சிறுவர்களை ஒருமையில் அழைப்பதையும் தவிர்க்கலாம். ‘ஏழாம் வகுப்பு மாணவன் குமார், பேச்சுப் போட்டியில் முதல் பரிசு வென்றான்’ என எழுதும் வழக்கம் உள்ளது. ‘மாணவர் குமார், முதல் பரிசு வென்றார்’ என எழுதுவது, உயர்வானது. மிகவும் உரிமையும் நெருக்கமும் உள்ளவரை மட்டும் சில நேரங்களில் ஒருமையில் அழைக்கலாம்.

‘திருடன் பிடிபட்டான்’, ‘விபசாரி பிடிபட்டாள்’ எனப் பாலினம் தெரியுமாறு ஒருமையில் எழுதுவதையும் தவிர்க்கலாம். சமூகத்தின் மனநிலையைக் காட்டுவதால், இது, பெரும் புழக்கத்திற்கு வந்துவிட்டது. ‘திருட்டு வழக்கில் ஒருவர் கைது’, ‘பாலியல் வழக்கில் பெண் கைது’ என எழுதுவது நல்லது. இன்னும் சொல்லப் போனால், கைது செய்யப்பெற்றவர் – குற்றம் சாற்றப்பெற்றவர், உண்மையான குற்றவாளியா என உறுதியாக நமக்குத் தெரியாது. அவர் நீதிமன்றத்தில் விடுதலை பெறலாம். கீழ் நீதிமன்றத்தில் தண்டனை பெற்றாலும் மேல் நீதிமன்றத்தில் விடுதலை பெறலாம். எனவே, அவசரப்பட்டு அவரது தன்மானத்திற்கு ஊறு விளைவிக்குமாறு எழுதுவது கூடாது.

காவல் துறையினர் ஐயத்தின் பேரில்தான் பலரைக் கைது செய்கிறார்கள். சாட்சிகளின் பேரில்தான் வழக்குத் தொடுக்கிறார்கள். எனவே, குற்றம் சாற்றப்பெற்றவரைச் செய்திகளில் குறிப்பிடும்பொழுது மிகுந்த கவனம் தேவை.

பெயர்கள்

பெயர்களைக் குறிப்பிடும்பொழுது, அவரவர் தம் பெயர்களை எவ்வாறு எழுதுகிறார்களோ அவ்வாறே நாமும் எழுதுவது நல்லது. அண்ணன் – தம்பிகளான எஸ்.பி.முத்துராமன், சுப.வீரபாண்டியன் ஆகியோர் தம் முதலெழுத்துகளை எவ்வாறு எழுதுகிறார்கள் எனப் பாருங்கள். இதனை நாமும் அவ்வாறே எழுதுவது நல்லது. இங்கு சுப.முத்துராமன், எஸ்.பி.வீரபாண்டியன் என எழுதுவது அவர்களைக் குறிப்பிடாமல் போகலாம். இங்கு இன்னொரு முக்கிய குறிப்பு. S.P. முத்துராமன் என எழுதும் முறையை நாம் ஆதரிக்கக் கூடாது. எழுதுபவர், ஆங்கில எழுத்திலேயே எழுதினாலும் நாம் தமிழில் எஸ்.பி.முத்துராமன் என்றுதான் எழுத வேண்டும். அத்தகைய போக்கினை நாம் முற்றிலுமாக ஒழிக்க முடியாவிட்டாலும் கூடியமட்டிலும் இந்த வகையிலாவது முயல வேண்டும்.

ஒரு பகுதிக்கு அறிமுகம் இல்லாத ஒருவரை முதன்முதலாகக் குறிப்பிடும்போது, அவரை ஓரளவு முழுமையாக அறிமுகப்படுத்த வேண்டும். எழுதுபவருக்குத் தெரிந்த அனைத்தும் படிப்பவருக்கும் தெரிந்திருக்கும் என நினைக்கக் கூடாது.

யாருக்காக எழுதுகிறோம்?

இன்று வாசகர்கள் பல்வகையினர்; பல்வேறு பின்புலங்களைக் கொண்டோர். எனவே ஒரு செய்தியை எழுதுபோது, மாணவர்கள் / சிறுவர்கள், நகரவாசிகள் / கிராமவாசிகள், பெண்கள், மூத்தோர்… எனப் பல கூறுகளாய் உள்ள வாசகர்களுள் எவரை முன்னிறுத்தி எழுதுகிறோம் என முடிவு செய்வது, ஒருவரின் எழுத்து நடையை அமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது, அந்தந்தப் பிரிவு மக்களுக்கு ஏற்ற சொற்களைப் பயன்படுத்தவும் எடுத்துக் காட்டுகளைத் தரவும் உதவும்.

இங்கு நாம் ஒரு செய்தியினை எழுதுகையில் நேரம், காலம், இடம், பாலினம், ஒருமை, பன்மை, சிறுவர் – பெரியவர், குற்றம் சாற்றப்பெற்றவர், முன்னொட்டு, பின்னொட்டு எனச் சிலவற்றை எவ்வாறு கையாளுவது எனக் கண்டோம். இவையெல்லாம் செய்திகளுக்கும் செய்திக் கட்டுரைகளுக்கும் மட்டுமே. கதை, கவிதை ஆகிய படைப்பிலக்கியங்களுக்குப் பொருந்தா.

தரவு மூல நம்பகத்தன்மை & இணைப்பேற்றம்

இணையத்தில் எழுதுவோர், ஒரு செய்தியை அல்லது தகவலை மேற்கோள் காட்டும்போது, அதற்கான சான்றினை அளிக்க வேண்டும். அந்தச் செய்தி, எந்தப் பக்கத்தில் / அச்சிதழில் / நூலில் வெளிவந்துள்ளது என்பதைச் சொல்ல வேண்டும். அந்தப் பக்கத்தின் சுட்டியை இணைப்பேற்றமாகவும் (Hyperlink) அளித்தல் வேண்டும். இந்த வசதி, அச்சிதழில் இல்லை; இணையத்தில் மட்டுமே சாத்தியமாக உள்ளது.

அத்துடன் ஒரு தரவு, மூலத் தரவா? இரண்டாம் நிலை / மூன்றாம் நிலைத் தரவா என்பதையும் சொல்ல வேண்டும். மூலத் தரவு எனில், அது எந்த நாளில் / நேரத்தில் எங்கே நடந்தது; அதற்கு வேறு சாட்சிகள் இருக்கிறார்களா? எனச் சொல்வது நல்லது.

கல்வெட்டு, ஓலைச் சுவடி, பட்டயம் போன்றவற்றை மேற்கோள் காட்டுவோர், அந்தக் கல்வெட்டு எங்கே உள்ளது என்பதுடன், அதனைப் படித்துப் பொருள் கூறியவர் யார் என்ற விவரத்தையும் அளிக்க வேண்டும்; ஏனெனில் ஒரே சொல்லுக்கு வெவ்வேறு ஆய்வாளர்கள் வெவ்வேறு பொருள்களைக் கூறும் வாய்ப்பைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மொழிபெயர்ப்புத் தரவு எனில், மூல ஆசிரியரின் பெயருடன், மொழிபெயர்த்தவரின் பெயரையும் சுட்ட வேண்டும்.

இவை ஒரு தரவின் உண்மைத் தன்மையை உணர்த்தப் பெரிதும் உதவும்.

படங்களும் தொடர்புடைய செய்திகளும்

ஒரு செய்தியை எழுதும்போது, அதற்குப் பொருத்தமான படங்களையும் தொடர்புடைய செய்திகளையும் இணைக்க வேண்டும். இந்தப் படங்கள், நிழற்படங்களாகவும் விழியங்களாகவும் இருக்கலாம். இதே செய்திக்குத் தொடர்புடையவாறு உள்ள முந்தைய செய்திகளின் இணைப்புகளைத் தொகுத்து அளிப்பது, படிப்பவருக்குப் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். இது, செய்தியை வெளியிடும் தளத்திற்கும் அதிகப் பக்கப் பார்வைகளைப் (Page views) பெற்றுத் தரும்.

சிரிப்புருக்களும் உணர்நிலை அறிவிப்புகளும்

இணையத்திலும் செல்பேசியிலும் ஒருவரின் உணர்வை வெளிப்படுத்த, சிரிப்புருக்கள் (smilies) பயன்படுகின்றன. மகிழ்ச்சியைத் தெரிவிக்க, கேலி செய்ய, இப்படியுமா என வியக்க, இன்னும் பற்பல செயல்களில் ஈடுபடுவதைத் தெரிவிக்க‌… எனப் பல வகைச் சிரிப்புருக்கள் உண்டு. இவற்றை இடத்துக்கேற்ப பயன்படுத்தினால், மிகச் சுருக்கமான எழுத்துகளில் அல்லது எழுத்தே இல்லாமல் கருத்துகளையும் உணர்வுகளையும் நம் நடவடிக்கைகளையும் பகிர முடியும்.

அத்துடன் ஒருவர் தம் மனநிலையை ஒரே சொல்லால் அறிவிக்க‌லாம். முகநூலில் இந்த வசதி உள்ளது. எவ்வாறு உணர்கிறீர்கள் எனக் கேட்டு, மகிழ்ச்சியாக, கவலையாக, களைப்பாக, சிறப்பாக, அதிசயமாக, வெறுப்பாக, பயமாக, ஸ்பெஷலாக, செக்ஸியாக… என்றெல்லாம் தேர்ந்தெடுக்க வாய்ப்பு அளித்துள்ளது. பல சொற்களையும் தமிழாக்கிய முகநூல் குழுவினர், ஸ்பெஷல், செக்ஸி ஆகியவற்றை அப்படியே கொடுத்துள்ளதையும் நாம் கவனிக்க வேண்டும்.

ஒரே சொல்லுக்குப் பல பொருள்கள் உள்ள நிலையில், இது, இணையத்தில் எழுதுபவரின் அப்போதைய‌ மனநிலையை வாசகர்கள் புரிந்துகொள்ள உதவுகிறது. இன்னொரு கோணத்தில் சொல்வதானால், எழுதுபவரின் மனநிலையைத் தவறாகப் புரிந்துகொள்ளும் வாய்ப்பைக் குறைக்கிறது.

தலைப்பும் குறிச்சொற்களும்

இணையத் தேடுபொறிகளில் ஒரு செய்தியைத் தேடும்போது, அது, அந்தக் குறிச்சொல் (Keyword) எந்தப் பக்கத்தில், எவ்வாறு அமைந்துள்ளது என்பதைப் பொறுத்து, தேடல் முடிவுகளைத் தருகிறது. முக்கியமாக, அக்குறிச்சொல், தலைப்பில் அமைந்துள்ளதா? செய்தியின் உடற்பகுதியில் அதிக முறைகள் இடம்பெற்றுள்ளதா என்றும் தேடுபொறி ஆராய்கிறது. தேடுபொறி உகப்பாக்கம்5 என்பது (Search Engine Optimization – SEO), மிகப் பெரிய துறையாக வளர்ந்துள்ளது.

எனவே செய்தியை எழுதுபவர், தகுந்த தலைப்பினையும் குறிச்சொற்களையும் தேர்ந்தெடுக்க வேண்டும். இது, அதன் பரவலுக்கும் வீச்சுக்கும் அச்செய்தியை எளிதில் கண்டறியவும் பெரிதும் உதவும்.

எழுத்தைச் செம்மையாக்கல்

கணினியில் எழுதி, இணையத்தில் வெளியிடுவோருக்குப் பற்பல வசதிகள் உள்ளன. எழுதியதைப் பிழை திருத்தல், எத்தனை சொற்கள் / பக்கங்கள் உள்ளன, ஒரே சொல் எத்தனை முறைகள் கையாளப்பெற்றுள்ளது… எனப் பலவற்றைக் காணலாம். இவற்றின் மூலம், பிழைகள் இருந்தால் அவற்றைத் திருத்திக்கொள்ள முடியும். ஒரே சொல், பல முறைகள் வந்தால், மாற்றிக்கொள்ள முடியும். படைப்பின் சில பகுதிகளை வெட்டி ஒட்டல், முன்பின் மாற்றல் எனப் பல வகை வசதிகளை மின்னணுக் கருவிகள் தருகின்றன.

பல கருவிகளில் சொற்களை எழுதுகையில் இயன்முற்று (Auto completion) வசதி உள்ளது. இதில் சில சிக்கல்கள் இருப்பினும் கவனமாகப் பயன்படுத்தினால், இதன் மூலம் நேரத்தைச் சேமிக்க முடியும். அகராதி வசதி இருப்பதால், தமிழ்ச் சொல்லுக்கு வேற்று மொழிச் சொல்லையும் வேற்று மொழிச் சொல்லுக்குத் தமிழ்ச் சொல்லையும் எளிதில் காணலாம். இவற்றின் மூலம் சரியான சொற்களை, சரியான அளவில், சரியான நேரத்தில், உரிய பயனர்களிடம் கொண்டு சேர்க்க முடியும். இதற்கு இணையமும் கணினி நுட்பங்களும் பேரளவில் துணை புரிகின்றன.

(இந்தக் கட்டுரை, 2009 அக்டோபர் 5ஆம் தேதி அண்ணாகண்ணன் வெளி6 என்ற வலைப்பதிவில் வெளியான ஆக்கத்தின் விரிவாக்கம்)

அடிக்குறிப்புகள்:

1. http://en.wikipedia.org/wiki/Common_Era

2. http://en.wikipedia.org/wiki/Quanzhou

3. http://en.wikipedia.org/wiki/Guangzhou

4. http://en.wiktionary.org/wiki/chairperson

5. https://www.vallamai.com/?p=3767

6. http://annakannan.blogspot.in/2009/10/blog-post_5644.html

(திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்க் கணினி & இணையப் பயன்பாடுகள் என்ற கருப்பொருளில் 28.03.2014 அன்று நடந்த பன்னாட்டுக் கருத்தரங்கில் வாசிக்கப்பெற்றது)

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “இணைய இதழாளர் நடையேடு

  1. மிகப்பயனுள்ள அற்புதமான கட்டுரை முனைவர் அண்ணாகண்ணன்.  ஏற்கனவே வாசித்திருந்தாலும் மீண்டும் வாசிப்பதற்கு சுவை குன்றாமல் இருப்பதற்குக் காரணம், தங்களுடைய அழகிய நடை மட்டுமல்லாது, பயனுள்ள தகவல்களும்தான்.

    ஒரு ஐயம், லேடி வெங்கட சுப்பாராவ் என்ற இவருடைய பட்டத்துடன் இணைந்த பெயரை தமிழில் எப்படி எழுதுவது?  

    மிக்க நன்றி.

    அன்புடன்
    பவளா

  2. Lord & Lady என்பவை இங்கிலாந்தின் உயர்மதிப்புப் பட்டங்கள். There are two types of Lords, hereditary and for life. The wife of a “Sir” gets the title of “Lady”. (Ref: https://in.answers.yahoo.com/question/index?qid=20100213195100AANYESp) இந்தியாவில் லேடி என்பதைத் திருமதி என அழைக்கலாம்.  

  3. வல்லமை வலையிதழில் எழுத்தாளர் பெயர் முன்வரும் ” By ” என்று வருவதையும், “Add a comment,”  Comments : 2,” என்பதையும் தமிழ்ச் சொற்களால் மாற்றும்படி வேண்டுகிறேன். 

    நன்றி.

    சி. ஜெயபாரதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *