பவள சங்கரி

அன்பு நண்பர்களே,

வணக்கம். இதோ நாம் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த கடித இலக்கியப் போட்டியின் முடிவுகள். தன்னுடைய இடையறாத பணிகளுக்கிடையேயும் திரு. இசைக்கவி இரமணன் அவர்கள் போட்டியின் முடிவுகளை குறிப்பிட்ட நேரத்தில் முடித்துக் கொடுத்திருக்கிறார்கள். அவருக்கு நம் வல்லமையின் மனமார்ந்த நன்றி உரித்தாகுக. போட்டியை அறிவித்த தேமொழி அவர்களுக்கும், உற்சாகமாகக் கலந்துகொண்ட நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளும், பாராட்டுகளும். பரிசு பெற்ற அனைவருக்கும் பாராட்டுகள். நாம் ஏற்கனவே அறிவித்திருந்திருந்த முதல் மூன்று பரிசுகள் மற்றும் மூன்று ஆறுதல் பரிசுகளுடன், திரு இரமணன் அவர்கள் மேலும் ஆறு பேர்களுக்கு தலா ரூ. 200 வீதம் ஆறுதல் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளார்கள். பரிசு பெற்றவர்கள் தங்கள் உள்நாட்டு முகவரிகளை vallamaieditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தால் பரிசுத் தொகை அனுப்பி வைக்கப்படும்.

இதோ திரு இரமணன் அவர்களின் போட்டி முடிவுகள் :

இசைக்கவி இரமணன்

imagesஉலகம் அழகானது. ஆனால், வாழ்க்கைக்கு அதனளவில் அழகேதும் கிடையாது. வைக்கோலைத் தின்று வெந்நீர் குடிக்கும் சுவாரசியமே உள்ள இந்த வாழ்க்கையில், பிறந்த கணத்திற்கு முன்பிருந்தே உயிரின் பிடரியை மரணம் கவ்விக் கிடக்கும் இந்தக் கணநேரக் கூத்தில் என்ன அழகு இருக்க முடியும்?

வாழ்க்கை வேறு, வாழுதல் வேறு. நன்கு வாழுவதன் மூலமே ஒன்றுமற்ற வாழ்க்கை ஒளிபொருந்தியதாக மாறுகின்றது. அதுதான் வாழ்வாங்கு வாழுதல். அதற்கு இரண்டு அம்சங்கள் தேவைப்படுகின்றன. ஒன்று, நேயம். இன்னொன்று கலை.

நேயம், மனிதனை மனிதனாக்குகிறது. கலை, மனிதனுக்கும் இறைவனுக்கும் பாலம் போடுகிறது. வாழ்க்கை, காட்டாறாக இருந்தாலும், பாலத்திலிருந்து பார்க்கும்போது நமக்குப் பதற்றமில்லை. கலை, எல்லாவற்றையும் படைத்து இயக்கும் பரமசக்தியிடமிருந்தே வருகிறது. அந்தப் பரம்பொருள், மனிதனில் தன்னை நேயம் என்றே பதிவு செய்துகொண்டுள்ளது.

சேதி சொல்லும் இயற்கை, நியதி காட்டும் கோள்கள், பாதி சொல்லும் உயிரினங்கள், பாடம் சொல்லும் வாழ்க்கை, இவையே கலைகள் விளங்கும் தளங்கள். இயற்கையிலும் வாழ்க்கையிலும் ஏற்கனவே தென்படுவதை, நேயமென்னும் தூரிகை ஏந்தி ஓவியன் சித்திரம் தீட்டுகிறான். கவிஞன் கவிதை பாடுகிறான். இன்னொருவன் கல்லை தெய்வமாக்கிக் காட்டுகிறான்.

கலைகளில் கடிதமும் அடக்கம் என்பது உண்மை. பேசும் சொல்லும், பதியும் எழுத்தும் கலை வயப்படுவது இயல்புதானே? கலை மிளிரும் எழுத்தே இலக்கியம். எனவேதான், வல்லமைக் குழுமத்தார், ஒரு கடித இலக்கியப் போட்டியை அறிவித்தார்கள். வந்து குவிந்தன கடிதங்கள். வம்பாய், என்னைத் தேர்ந்தெடுக்கச் சொன்னார்கள். எதையும் தட்டிக் கொடுப்பவன் எதைத் தட்டிப் பார்த்து எப்படித் தெரிந்து எதனை எடுப்பான்?

ஆனால், வந்து சேர்ந்த கடிதங்கள் எல்லாம் சுசீந்திரத்துத் தூண்கள் போலானதால், தட்டி மகிழ்ந்தேன். அவற்றை, நான் நன்று, மிக நன்று, மிக மிக நன்று என்றே வகைப்படுத்த முடிந்தது.

அறிஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் என்று பற்பலரும் பலவித வண்ணம் காட்டியிருக்கிறார்கள். முதலில், அவர்கள் அனைவருக்கும் என் வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சரி, எந்த அடிப்படையில் நான் பரிசுகளுக்கு உரியவை இன்னின்னவை என்று தேர்ந்தெடுத்தேன்?

  • சொந்த அனுபவம், சற்றே அறிவு, கொஞ்சம் கற்பனை, நிறைய நேசம், இவை கலந்துவரும் கடிதங்களே மனதில் நிற்க வல்லவை. அல்லவா?
  • ஒரு கடிதத்தின் நீளம், அது தாளில் எடுக்கும் இடத்தைப் பொறுத்தல்ல, மனதில் பிடிக்கும் இடத்திற்கு ஏற்பவே நிச்சயிக்கப்படுகிறது. அமைப்பாளர்கள், இரண்டு பக்கங்கள் என்பதாக ஓர் அளவை நிர்ணயம் செய்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த அளவோடு நிறுத்திவிடுவதாலேயே அந்தக் கடிதம் சரியான நீளத்தில் இருப்பதாகக் கருதிவிட முடியாது. வளவளவென்று போகுமானால், ஒரு பக்கத்திற்கும் குறைவான கடிதம் கூட நீளமாகவே தெரியும்.
  • நமக்குத் தெரிந்தவற்றையெல்லாம் கொட்டித் தீர்த்துவிட வேண்டும் என்னும் ஆவல் மேலிடும் போது, கடிதம் சுமையாகி விடுகிறது
  • கட்டுரை, கடிதமாகாது. கவிதையும் அப்படித்தான்! கடிதம், உரைநடையின் தளம். அதில், கவிதையின் தறுவாய் தென்படலாம். கட்டுரையின் சாயல் தட்டுப்படலாம்.
  • நமது அனுபவத்தைச் சார்ந்திருந்து, அன்பின் அடிப்படையில் வருகின்ற சொற்கள், நேரடியான அறிவூட்டும் நடவடிக்கைகளை விட மேலானவை.
  • ‘இவருக்கு நண்பர்கள் வேண்டாம், முகவரிகள் போதும்!’ என்று சொல்லும் அளவுக்குச் சில கடிதங்கள் இருக்கின்றன. சொல்ல நினைத்ததைச் சொல்வதற்கு பதிலாக, என்ன கேட்க விரும்புவார்கள் என்று அன்பார ஊகித்தல் கடிதங்களை அழகாக்கும்.

இவ்வளவு சொன்னால் போதும் என்று தோன்றுகின்றது.

எப்படி இருப்பினும், என்னுடைய தேர்ந்தெடுப்பு என்னுடைய ரசனை, புரிதல், அறிவு இவற்றிற்கேற்பத்தான் இருக்குமே அன்றி, இதுதான் சரியான முடிவு என்பதாக இருக்க முடியாது. ஏனெனில், நான் சராசரிக்கும் குறைவான சாதாரண மனிதன்.

 

முதற்பரிசு:

கவாகம்ஸ்

கடிதத்தின் இறுதியில்தான் அது ஒருவர் தனக்கே எழுதிக்கொண்ட கடிதம் என்பது விளங்குகிறது. ஓர் அறிவியல் புனைவும், ஆழமான காதலும் கலந்து மிகவும் விறுவிறுப்பாகவும் மிளிர்கின்றது இந்தக் கடிதம். கொஞ்சம் கூட சுருதி விலகாத பாடல் போன்று இருக்கின்றது.

இரண்டாம் பரிசு: 

மாதவன் இளங்கோ

இது தனது ரசிகைக்கு ஓர் ஓவியர் எழுதிய கடிதம். இந்தக் கோணமே மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. ஒரு கலைஞனின் மனம், அவனுடைய படைப்பைக் காட்டிலும் எத்தனை நுண்மையானது, பரிசைக் காட்டிலும் அவன் எப்படி ரசனையைத்தான் நம்பி வாழ்கிறான் என்பதெல்லாம் இந்தக் கடிதம் சிறப்பாக உணர்த்துகின்றது.

 

மூன்றாம் பரிசு :

ரஞ்சனி நாராயணன்

அம்மாவுக்கு மகன் எழுதிய கடிதம். நெஞ்சைத் தொட்டது.

 

ஆறுதல் பரிசுகள்:

  1. கீதா மதிவாணன்: அம்மா, தன் மகனுக்கு எழுதிய அழகான கடிதம்
  2. விசாலம் : மகளுக்குத் தாய் எழுதிய மனதைத் தொடும் கடிதம்
  3. சரஸ்வதி ராஜேந்திரன்: அம்மா, மகளுக்கு எழுதிய அன்புக் கடிதம்

 

 திரு. இரமணன் அவர்கள் வழங்கும் சிறப்புப் பரிசு ரூ. 200 பெறுபவர்கள்

 

  1. நந்திதா : தாய்க்கு எழுதிய அருமையான வரலாற்றுக் கடிதம்
  2. வி. பாலகுமார் : ஒரு கணவன் மனைவிக்கு எழுதியிருக்கும் அன்புக் கடிதம்
  3. கலையரசி : பெண்ணைப் பெற்றவள் தோழிக்கு எழுதிய கடிதம்
  4. ராஜலஷ்மி பரமசிவம் : தோழிக்கு எழுதிய கடிதம்
  5. சங்கர் சுப்ரமண்யன் : காதலிக்கு – சமர்ப்பிக்கப்படாத மடல்
  6. புதுவை பிரபா : ஹாஸ்டலில் சேர்த்த மகளுக்கு அப்பா எழுதியது

எழுதுகோலை எடுக்கும் முன்பே, இதயத்தைத் திறந்துவிடுவோம்! அன்பு காட்டும் வழியில் வந்து விழட்டும் சொற்கள்!

அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்.

வாய்ப்பளித்த வல்லமைக்கு வணக்கம் கலந்த நன்றி.

அன்புடன்,

ரமணன்

 

இந்தப் போட்டியை அறிவித்த தேமொழிக்கும்  தேர்ந்தெடுத்துக் கொடுத்த திரு ரமணன் அவர்களுக்கும் எனது நன்றிகள்.

வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது பாராட்டுகள். 

அன்புடன் என்றும்,
அண்ணாகண்ணன்

பதிவாசிரியரைப் பற்றி

19 thoughts on “கடித இலக்கியப் போட்டி முடிவுகள்!

  1. கடித இலக்கியப் போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

  2. கடித இலக்கிய போட்டியில் பரிசு பெற்ற நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    இதனை நடத்திய வல்லமை குழுமத்திற்கும் , ஏற்பாடு செய்த தேமொழி அவர்களுக்கும் .பாராட்டுக்கள்.

  3. கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும்.

    இந்த அறிவிப்பில் கடிதங்களின் இணைப்புகளையும் சேர்க்கலாமே.

  4. கடிதங்களின் இணைப்புகளுக்கான தொடுப்பு முதல் வரியிலேயே, ‘கடித இலக்கியப் போட்டி’ என்பதில் கொடுக்கப்பட்டுள்ளது. நன்றி.

    அன்புடன்
    பவள சங்கரி

  5. தேமொழி அவர்களுக்கும், இசைக்கவி இரமணன் அவர்களுக்கும், பவளசங்கரி அவர்களுக்கும், அண்ணா கண்ணன் அவர்களுக்கும், கலந்துகொண்ட அனைவருக்கும், பரிசுகள் வென்ற அனைவருக்கும் பாராட்டுகள், நல்வாழ்த்துகள்! இப்படி ஒரு போட்டி நடத்தியதால் பலரும் ஊக்கம் பெற்று படைப்புகள் நல்கி ஆக்கம் அளித்துள்ளனர்! பலருடைய பொறுப்பான உழைப்பால் வெற்றி! வாழ்க!

  6. பரிசு பெற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள.

  7. போட்டியில் வெற்றிபெற்ற, பங்குபெற்ற அனைத்து படைப்பாளிகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்!!! 

    முதலில் இப்படிப்பட்ட சுவாரஸ்யமானதொரு போட்டியை அறிவித்து, பரிசு வழங்க முன்வந்த தேமொழி அவர்களுக்கும், போட்டியைச் செவ்வனே நடத்திய வல்லமை இதழுக்கும் என் நன்றிகள்!!

    வல்லமையில் நான் எழுதத் தொடங்கிய நாளிலிருந்து என்னைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வரும் ஆசிரியர் பவளசங்கரி அம்மா அவர்கள் ஜி-டாக்கில் இன்று காலை தொடர்பு கொண்டு போட்டி முடிவுகளுக்குக்கான இணைப்பை அனுப்பி, போட்டியில் வெற்றி பெற்றதற்காக வாழ்த்து தெரிவித்தார்கள்!! என்னுடைய வெற்றியை தன்னுடைய வெற்றியாகக் கண்டு மகிழ்ச்சியடையும் மாண்புடைய இப்படிப்பட்ட சான்றோர்களின் நட்பு கிட்டி, பழகும் வாய்ப்பு பெற்ற நான் பேறுபெற்றவன். உண்மையில் அது எனக்கு பரிசை விட மிக்க மகிழ்ச்சி தந்தது!! 

    போட்டியில் பங்குபெற்ற அனைவரின் படைப்புகளையும் வாசித்து, சிறந்த படைப்புகளைத் தெரிவு செய்யும் அரும்பொறுப்பை ஏற்று, அழகு தமிழில் அறிவித்த இசைக்கவி இரமணன் அவர்களுக்கும் என் நன்றி!! 

  8. என்னுடைய கடிதமும் பரிசுக்குரியதாய்த் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதில் அளவிலா மகிழ்ச்சி. போட்டியைத் திறம்பட நடத்திய வல்லமை குழுவினருக்கும், இப்படியொரு போட்டியை அறிமுகப்படுத்தி பலரையும் எழுதத் தூண்டி, பரிசும் வழங்கவுள்ள தேமொழி அவர்களுக்கும், போட்டிக்கடிதங்களை சிறப்புற நடுநிலைமையுடன் தேர்ந்தெடுத்து அறிவித்துள்ள திரு.இசைக்கவி ரமணன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும், வெற்றி பெற்றவர்களுக்கும் என் இனிய பாராட்டுகள். 

  9. போட்டி அமைப்பாளர்களுக்கும், வெற்றி பெற்றவர்களுக்கும், கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.

  10. பரிசு பெற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்தப் போட்டியை அறிவித்துப் பலரையும் எழுதத் தூண்டிய திருமதி.தேமொழி அவர்களுக்கும், சிறந்ததொரு தளத்தினை அமைத்துக் கொடுத்த வல்லமைக்கும் என் நன்றிகள்.

  11. எனது கடிதம் முதல் பரிசு பெற்றதற்கு மிகவும் மனம் மகிழ்கிறேன். பரிசு பெற்ற அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள். நன்றி.

  12. முதன் முதலாக அன்பு பவளா. அன்பு தேமொழி . அன்பு திரு அண்ணா கண்ணன் அவர்களுக்கு  இத்தனை அழகான ஒரு போட்டியை வைத்து  எல்லோருக்கும் எழுத வாய்ப்பு அளித்ததற்கு என் மனமார நன்றியைத்தெரிவித்துக்கொள்கிறேன்.  திரு இசைக்கவி ரமணன் இதற்கு நடுவராக வந்தது எங்கள் பாக்கியமே. 
    அவர்கள் இசையிலும்  எழுத்திலும். கவிதையிலும் மிகவும் உயர்ந்த ஸ்தானத்தைப்பெற்றிருக்கிறார்.  அவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் .
    முதல் பரிசு பெற்ற கவாகம்ஸுக்கு என் வாழ்த்துகள் பாராட்டுகள். இரண்டாவது பரிசு பெற்ற திரு மாதவன் இளங்கோவுக்கும் என் வாழ்த்துகள் மூன்றாவதாக வெற்றி பெற்ற திருமதி ரஞ்சனி நாராயணனுக்கும் என் அன்பு கலந்த வாழ்த்துகள். தேர்தல் பரிசு பெற்ற எல்லோருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள் .வாழ்க வளமுடன் 
    அன்புடன் விசாலம்
     

  13. புதுமையான கடித இலக்கியப் போட்டியை அறிவித்துத் திறம்பட நடத்திய வல்லமை ஆசிரியக் குழுவிற்கும், அதனை முன்மொழிந்த தேமொழி அவர்களுக்கும் என் நன்றி.  
    மீண்டும் ஒரு முறை கடிதம் எழுதிய அக்காலத்துக்குச் சென்று மீண்ட சுகமான அனுபவம் ஏற்பட்டது.  போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!  பரிசு பெற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள்!  
    சிறப்புப் பரிசுக்கு என் கடிதத்தையும் தேர்ந்தெடுத்த நடுவர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
    நன்றியுடன்,
    கலையரசி.ஞா.

  14. திருமதி பவள சங்கரி, திருமதி தேமொழி , திரு அண்ணா கண்ணன் , கலந்து கொண்ட நண்பர்கள், கலக்கலான கடிதங்கள் , நடுவராக திரு. இரமணன் , திரு. இரமணன் அவர்களின் சிறப்புப் பரிசு என அமர்க்களப்பட்டது கடிதப் போட்டி . மறக்க முடியாத, எப்பொழுதும் நினைவில் நிற்கும், நினைத்தாலே நினைவு மயங்கும் எங்கள் ஊர் திருவிழா மாதிரி. நன்றி வந்திருந்த அனைவருக்கும்

  15. கடித இலக்கிய போட்டியில் என்னுடைய கடிதம் பரிசுபெற்றிருப்பது கண்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன்.  புதுமையான போட்டியை திறம்பட நடத்திய  வல்லமை குழுவிற்கும் அதனை முன்மொழிந்த தேமொழிக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

  16. வல்லமை குழுவினர்க்கு வணக்கம். நல்லதொரு போட்டியைச் சிறப்பாக நடத்தி முடிவுகளை அறிவித்தமைக்கு வாழ்த்துகள். வெற்றிபெற்ற கடிதங்களைப் படிக்க அந்தந்தக் கட்டுரைகளுக்கே இணைப்புத் தந்திருக்கலாமே? சகோதரி கீதமஞ்சரி வழியாக இந்தத் தளத்திற்கு வந்தேன். என்னைக் கட்டுரை எழுதியனுப்பச் சொல்லி ஒரு மின்னஞ்சலும் வந்தது. நன்றி அனுப்புவேன். தங்கள் தமிழிலக்கிய வழியான தமிழ்ச்சமூகப் பணி தொடர வாழ்த்துகள். வணக்கம்.

Leave a Reply to நா.முத்துநிலவன்

Your email address will not be published. Required fields are marked *