நாகேஸ்வரி அண்ணாமலை

அமெரிக்காவில் ஆப்பிரிக்காவிலிருந்து அப்பாவி ஆப்பிரிக்கர்களை அவர்கள் விருப்பத்திற்கு மாறாகக் கூடிவந்து அடிமைகளாக்கி ஆடு, மாடுகள் போல் நடத்தி அவர்கள் உழைப்பை உறிஞ்சி நாட்டை வளப்படுத்தியதெல்லாம் ரொம்ப, ரொம்பப் பழங்கதை என்று நினைத்திருந்தோம்.  இப்போது இன்னும் சில அமெரிக்கர்களுக்கு ஆப்பிரிக்க-அமெரிக்கர்களின் மேல் வன்மம் இருக்கும் போலும் என்று நினைப்பதற்கு ஏதுவாக அவர்களைப் பற்றி ஒரு பெரிய கால்நடைப் பண்ணையின் அதிபர் கூறியிருக்கிறார்.  இவர் யார் என்று நினைக்கிறீர்கள்?  அரசுக்குச் சொந்தமான நிலத்தில் தன் ஐநூறு கால்நடைகளை மேயவிட்டுக்கொண்டிருக்கிறார்.  அதைத்தட்டிக் கேட்ட அரசு ஊழியர்களோடு சண்டை போட்டு வருகிறார்.

பதினான்கு குழந்தைகளுக்குத் தந்தையான இந்தப் பண்ணை அதிபர் நெவாடாவில் ஒரு பெரிய பண்ணைக்குச் சொந்தக்காரர்.  நெவாடா மாநிலத்தில் உள்ள மொத்த பண்ணைகளின் எண்ணிக்கை 3000. இவற்றின் பரப்பளவு 63,00,000 ஏக்கர்கள்.  ஒவ்வொன்றின் சராசரி அளவு 2100 ஏக்கர்கள்.  இவருடைய மூதாதையர்கள் 1870-களில் இந்தப் பண்ணையை ஆரம்பித்திருக்கிறார்கள்.  இத்தனை பெரிய பண்ணைக்குச் சொந்தக்காரர் தன்னுடைய பண்ணை மாடுகளை அரசுக்குச் சொந்தமான இடத்தில் மேயவிட்டிருக்கிறார்.  அரசு நிலத்தில் உள்ள, அழிந்துவரும் காட்டு ஆமைகளைக் காப்பாற்றுவதற்காக கால்நடைகள் மேயும் நிலத்தைச் சுருக்கிக்கொள்ளுமாறு அரசு நில மேலாண்மைத் துறை இவரைக் கேட்டுக்கொண்டபோது அரசு நிலத்தை கால்நடைகள் மேய்ச்சலுக்காக உபயோகிப்பதற்காக அரசுக்குச் செலுத்திவந்த பணத்தை நிறுத்திவிட்டார்.  இப்போது இவர் மத்திய அரசுக்குச் செலுத்த வேண்டிய தொகை பத்து லட்சம் டாலர்கள்.

அரசுத் துறை அதிகாரிகள் இவர் பண்ணைக்கு வந்தபோது இவருடைய ஆதரவாளர்கள் பலர் துப்பாக்கிகளோடு இவருக்கு ஆதரவு தர வந்திருந்தனர்.  அரசு அதிகாரிகள் எதற்கு வீண் வம்பு என்று திரும்பிச் சென்றுவிட்டார்கள்.  அரசு ஆணை மூலமும் நீதிமன்றங்கள் மூலமும் இந்தப் பண்ணைக்காரரை வழிக்குக் கொண்டுவர முடிவுசெய்தனர்.

இந்தப் பண்ணைக்காரருக்கு ஆயிரக் கணக்கில் ஆதரவாளர்கள் இருக்கின்றனர்.  இவர்கள் எல்லோருக்கும் மத்திய அரசு தங்கள் உரிமைகளில் அதிகமாகத் தலையிடுவதாக குறை உண்டு.  இப்போது நில மேலாண்மைத் துறை இந்தப் பண்ணையாரிடம் வரம்புக்கு மேல் நடந்துகொள்வதாக நினைத்து இவருக்கு ஆதரவு தருகின்றனர்.  பல மாநிலங்களிலிருந்து பலர் இவருக்கு ஆதரவு தர வந்திருக்கிறார்கள்.

இவர் வாரம் ஒரு முறை கூட்டம் நடத்தி எப்படி மத்திய அரசு வரம்பு மீறி மக்களிடம் நடந்துகொள்கிறது என்று கூறி வருகிறாராம்.  அந்தக் கட்டத்தில் அமெரிக்கக் கருப்பர்களுக்கு மத்திய அரசு அடிமைத்தனத்திலிருந்து விடுதலை கொடுத்ததன் மூலம் அவர்களுடைய வாழ்வு அப்படி ஒன்றும் மேம்பாடு அடைந்திருப்பதாகத் தெரியவில்லை என்று கூறியிருக்கிறார்.  அவர்களை நீக்ரோ என்ற பெயரிலேயே குறிப்பிட்டிருக்கிறார்.  இப்போது கருப்பர்களை இப்படி யாரும் நீக்ரோ என்று அழைப்பதில்லை.  அவர்கள் அடிமைகளாக இருந்தபோது அவர்களுக்குச் செய்வதற்கு ஏதாவது வேலை இருந்ததாம்.  பெண்கள் கருச்சிதைவு செய்துகொள்ளவில்லையாம்.  அவர்களுடைய இளைஞர்கள் சிறைக்குப் போகவில்லையாம்.  இப்போது கருப்பர்களில் நிறைய இளைஞர்கள் குற்றம் புரிந்துவிட்டு சிறையில் இருக்கிறார்களாம்.  இந்தக் குடும்பங்கள் அரசின் நலத்திட்டங்களின் மூலம் வரும் பணத்தில் வாழ்ந்துகொண்டு எந்த வேலையும் செய்யாமல் இருக்கிறார்களாம்.  இப்படிப் பேசுவதற்கு இவருக்கு எவ்வளவு திமிர் இருக்க வேண்டும்.

2016-இல் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடும் வாய்ப்புள்ள குடியரசுக் கட்சியைச் சேர்ந்த செனெட்டர் ரேண்ட் பால் இவருடைய மத்திய அரசின் தலையீடு பற்றிய கருத்துக்களுக்கு ஆதரவு தெரிவித்துப் பேசியிருக்கிறார்.  இவர் மத்திய அரசின் தலையீடு பற்றி ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார்.  குடிமக்களின் வாழ்க்கையில் அரசின் தலையீடு மிகக் குறைந்த அளவே இருக்க வேண்டும் என்ற கட்சியைச் சேர்ந்தவர் ரேண்ட் பால்.  ஆனால் நல்ல வேளையாக கருப்பர்கள் அடிமைகளாக இருந்தபோது இப்போது இருப்பதை விட நன்றாக இருந்தார்கள் என்ற பண்ணைக்காரரின் கருத்தை ஒப்புக்கொள்ளாதது மட்டுமின்றி தான் அதை தீவிரமாக மறுப்பதாகக் கூறியிருக்கிறார்.  இந்தப் பண்ணையாரைப் பற்றி அடிக்கடி செய்தி வெளியிடும் ஃபாக்ஸ் செய்தி நிறுவனமும் பண்ணையார் சொன்னது தங்களுக்கு ஒப்பவில்லை என்று கூறியிருக்கிறது.  குடியரசுக் கட்சியின் தலைமையகமும் பண்ணைக்காரர் சொன்னது நூறு சதவிகிதம் தவறு, கருப்பர்களைப் புண்படுத்தக் கூடியது என்று கூறியிருக்கிறது.  செனட்டில் பெரும்பான்மை கட்சித் தலைவரான ரீட் இவரையும் இவரது ஆதரவாளர்களையும் உள்நாட்டுப் பயங்கரவாதிகள் என்று வர்ணித்திருக்கிறார்.

இத்தனை பேர் இவரை விமர்சித்தும் கண்டித்தும் இருக்கும் நிலையிலும் இவருக்கு எந்த விதக் குற்ற உணர்ச்சியும் இருப்பதாகத் தெரியவில்லை.  கருப்பர்கள் பற்றிச் சொன்னதை திரும்பக் கூறியிருக்கிறார்.  அமெரிக்காவில் பேச்சுரிமை இந்த அளவிற்குஇருக்கிறது.

இந்தப் பண்ணைக்காரரிடம் முன்பொரு முறை மோத வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளான ஒரு அரசு அதிகாரி, இப்போது அரசு அதிகாரிகள் இந்தப் பண்ணைக்காரர் விஷயத்தில் பின்வாங்கியதைக் கண்டு தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.  “இந்தப் பண்ணைக்காரர் தனக்கு நாட்டுப்பற்று உள்ளதாகக் கூறிக்கொள்கிறார்.  அமெரிக்காவை நேசிப்பவர் என்கிறார்.  ஆனால் அதே சமயம் மத்திய அரசின் சட்டங்களை மதிக்க மாட்டேன் என்கிறார்.  இவரை இப்படியே விட்டுவிட்டால் இவரைப் பார்த்து மற்றவர்களும் ‘அவர் சட்டத்தை மதிக்காதபோது நாங்கள் மட்டும் ஏன்  மதிக்க வேண்டும்’ என்று கேட்க மாட்டார்களா?” என்கிறார்.

சில வாரங்களுக்கு முன்னால் வெள்ளை இன உயர்வுவாதிகள் (White supremacists) கூட்டத்தைச் சேர்ந்த ஒரு வெள்ளையன் யூதர்களின் முதியோர் இல்லத்தின் அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மூன்று அப்பாவிகள் – யூதரல்லதோர் – கொல்லப்பட்டனர்.  கருப்பர்களின் மேலும் இவனுக்கு வெறுப்பு அதிகம்.

அமெரிக்காவில் ஒரு இனத்தையோ அல்லது ஒரு மதத்தினரையோ குறிவைத்துத் தாக்குவதை வெறிப்பினால் விளையும் குற்றம் (hate crimes)  என்கிறார்கள்.  2000-ஆம் ஆண்டில் 936-ஆக இருந்த இம்மாதிரியான குற்றங்கள் இப்போது 50 சதவிகிதத்திற்கு மேல் உயர்ந்திருக்கிறதாம்.  ஒபாமா ஜனாதிபதியாகப் பதவியேற்ற பிறகு கருப்பர்களுக்கு எதிரான இம்மாதிரியான குற்றங்கள் கூடியிருக்கின்றனவாம்.  வெள்ளை இனம்தான் உயர்ந்தது, அமெரிக்காவில் வெள்ளை இனத்தவர்தான் இருக்க வேண்டும் என்ற மனப்பான்மை உடையவர்கள் பலர் அமெரிக்காவில் இன்னும் இருக்கிறார்கள்.  சமீப காலத்தில் அமெரிக்காவில் குடியேறியவர்களை விட்டுவிடுங்கள்.  முன்னூறு ஆண்டுகளாக இங்கு வாழ்ந்துவரும், அதில் பாதி நாட்கள் அடிமைகளாக வாழ்ந்த, அதன் பிறகும் வெள்ளையர்களோடு சம குடிமையுரிமைகள் இல்லாமல் வாழ்ந்த, இந்த நாட்டின் பொருளாதாரத்தில் பெரும்பான்மை வகித்த கருப்பர்களைப் பற்றி அவர்கள் அடிமைகளாக வாழ்ந்தபோது இப்போது இருப்பதை விட சந்தோஷமாக இருந்தார்கள் என்று சொல்வதற்கு எப்படிப்பட்ட அரக்க குணம் வேண்டும்.  உலக நாடுகளிலேயே பல விதங்களில் சிறந்து விளங்கும் அமெரிக்காவுக்கு இது பெரிய வெட்கக்கேடு.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “இன்னுமா இன துவேஷம்?

  1. மத்தியப் பகுதி மக்களிடம் இது போன்ற மனப்பான்மை அதிகம்.  கிணற்றுத் தவளைகளாகவே இருப்பார்கள். தன்னைத் தவிர உலகில் யாரும் உயர்வு இல்லை என்ற அகங்காரம் இவர்கள் மனதில் ஆழமாக வேரூன்றி விட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *