-விசாலம்

Ravanan_-_King_of_Lanka

இராவணணின் அப்பா யார் தெரியுமா? அவர் தான் ’விஸ்ரவஸ்’ என்ற முனிவர்; சிறந்த சிவ பக்தர். இராவணனுக்குக் கும்பகர்ணன், விபீஷணன் என்று இரண்டு இளைய சகோதரர்கள். இராவணின் தங்கைதான் சூர்ப்பனகை. இராவணனும் மிகுந்த சிவ பக்தன். கடுந்தவங்கள் புரிந்தவன். இதனால் சிவ பெருமானே நேரே தோன்றி  அவனுக்கு வரங்களையும் கொடுத்தார். இலங்கையை ஆண்டு,  தன் வரங்களால் மூவுலகையும் வென்று இலங்கேஸ்வரன் ஆனான்.

இதனால் அவன் செருக்கு  அதிகரித்தது. நாம் ஏரோப்பிளேனில் பறப்பது போலவே அவனும் தன் புஷ்பக விமானத்தில் அடிக்கடிப் பறப்பான். புஷ்பக விமானத்தில் பறவை போல் இரு இறக்கைகள் இருக்கும். அதில் ஜம்மென்று அமர்ந்து ஓட்ட  எங்கு வேண்டுமானாலும் வானத்தில் பறக்கமுடியும்!

ஒரு நாள்  இராவணன்  தன் புஷ்பக  விமானத்தில்  பறக்க,  ஓர்  இடத்தில் விமானம்  மேலே பறக்க முடியாமல்  நின்றுவிட்டது. இது எதனால் இருக்கும் என்று எண்ணி அவன்  அந்த விமானத்திலிருந்து இறங்கினான்.

அவன் முன்பு நந்திதேவர் தோன்றினார். “இராவணா!  நீ வந்திருக்கும்  இடம் கயிலயங்கிரி; இது ஈசனிருக்குமிடம்.  ஆகையால்  கர்வம் கொண்டவர் எவருமே இதைத் தாண்ட இயலாது; அதனால் திரும்பிச்செல்!”

இதைக்கேட்ட இராவணனுக்கு முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது!

“நீ யார் என்னைத் தடுக்க! குரங்குபோன்று முகம் உனக்கு!  நீயா என்னைத் தடுக்கிறாய்? நான் யார் என்று தெரியுமா? என்  பராக்கிரமம் என்னவென்று உனக்குத் தெரியுமா? என்னைத் தடுத்து நிறுத்திய நீ யார் சொல்லு முதலில்?”

“இராவணா என்னைக் குரங்கு என்று இகழ்ந்து பேசுகிறாயா? நீயும்  உன் இலங்கையும் அழிய  ஒரு குரங்கே காரணமாக இருப்பார்! நான் நந்திதேவர் தெரியுமா உனக்கு?”

இராவணன் கண்கள் சிவந்தன. மேலும் கோபம் கொண்டு “இந்த மலையா ஹா..ஹா..ஹா…இதை நான் பிடுங்கி எறிந்து விடுகிறேன்!” என்று அடியோடு பெயர்க்க ஆரம்பித்தான். திடீரென்று இமயம் பூகம்பம்போல் ஆடியது. அந்த நடுக்கத்தில் உமையவள்  நடுங்கிப்போனாள். நீரில் வாழும் ஜந்துக்கள்,   பறவைகள், விலங்குகள் எல்லாம் கலவரப்பட்டுக் கத்தின. முனிவர்களின் தபசு கலைந்து போனது. இதையெல்லாம் கண்ட பரமசிவன், இராவணனின் செருக்கை உணர்ந்து அவனுக்குப் பாடம் கற்றுக் கொடுக்க எண்ணித் தன் கட்டைவிரலால்  மலையை ஓர் அமுக்கு அமுக்கினார். அப்போது இமயமலை சாதாரண நிலை அடைந்தது; கலவரமும் நின்றது. சிவபெருமானின் கட்டைவிரலின்  பலத்தைத் தாங்க முடியாமல் இமய மலையின் கீழே இராவணன் நசுங்கிப்போனான். அவன் ஆற்றலும் மறைந்தது!

சுமார் ஆயிரம் ஆண்டுகள் அந்த நிலைமையில் இருந்தான். நசுங்கியபடியே வருந்தினான். பின்பு, தான் செய்ததற்குப் பிராயச்சித்தமாகத் தன் ஒரு தலையைக் கொய்து குடமாக்கித்  தன் நரம்பை வீணைத்தந்தி போல் அதிலே பொருத்தி  இனிய  நாதத்துடன் இசையை எழுப்பினான். அதுவே சாம கானமாக வந்தது. சிவபெருமான் சாம கானத்தில் உருகிப்போனார். அவனை மன்னித்து விட்டார். பின்பு அவனுக்கு ’இராவணேஸ்வரன்’ என்ற பட்டமும் வந்தது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *