-பிச்சினிக்காடு இளங்கோ

கம்பனே…
நான் இதுவரை
நான்தான்!

நீ                                                                                                                           Kambar2 for picchinikadu
என் தூரத்து நண்பனாகவே
இருந்தாய்!

குருகுலக் கல்வி
உன்னிடமிருந்து
எனக்கில்லை!

இருந்திருந்தால்
என் சுயத்தின் சாயம்
தெளிவற்றிருக்கும்!

எனக்கென ஒரு
சுயம்
இல்லாதுமிருந்திருக்கும்!

பள்ளிப் பாடத்தில்
உன்னைப் படித்தேன்!
கம்பன் கழகத்தில்
உன்னைக் கேட்டேன்!

ஒருமுறை
கம்பன்கழகக் கவியரங்கில்
உன்னைப் பாட நேர்ந்தது!

அது
கேள்வியை வைத்துக்கொண்டே
நடத்திய வேள்வியானது!

சலித்துப் புடைத்தால்
எச்சம்
வேள்வியின் மிச்சம்
நான்கு வரிகளானது 

அவ்வளவுதான்
அறிமுகம்!

அவ்வளவுதான்
என் இருப்புக் கணக்கில்
உன் இருப்பு!

ஒரு நெருக்கம்
இல்லாதிருந்ததால்
நான் இதுவரை
நானென்று சொல்லமுடிகிறது!

எனக்கும்
எனக்குமான
அடையாளத்தில்
நிம்மதியிருக்கிறது!
பெருமையுமிருக்கிறது!

எந்தச் சாயலுமில்லாமல்
என்வழியில் வந்தநான்
வழியில்
உன்னைச் சந்தித்தேன்!

இனிவரும் பயணத்தில்
நீ
உதவக் கூடும்!

எல்லோரையும்போல
நானும்
கடன்காரனாகக் கூடும்!

உதவியேதும் இதுவரை
இல்லையென்பதே
இன்றைய பெருமை!

அப்படியேதும்
நீ உதவினால்
நன்றிசொல்வேன்
அது
என் கடமை!!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *