— இன்னம்பூரான்

 

இனி ஆவன செய்வோம்

 

tamizhan endru solada

தேசீய தேர்தல் 2014 இந்தியாவுக்கு ஒரு திருப்புமுனை என்பதை விட திருகிய முனை என்று சொல்வது சாலத்தகும். 81.4 கோடி வாக்காளர்களில் 55.1 கோடி வாக்காளர்கள். 66.38 விழுக்காடு வாக்களித்தனர்.. கடந்த தேர்தலை விட 13.4 விழுக்காடு அதிகமான வாக்காளர்களில், இளைய சமுதாயம் கணிசமாக உளர். தேர்தல் கமிஷன் திறம்பட நிர்வகித்தது பற்றி உலகம் பாராட்டுகிறது. செம்மையான நிர்வாகத்தலைமை இருந்தால், அரசு ஊழியர்கள் உருப்படும் வகையில் இயங்குவர் என்பதை, அரசியலர் கட்டுப்பாட்டில் இருந்தபோது நெறியில் தவறியவர்கள் என கருதப்படும் அதே ஊழியர்கள் நிரூபித்துவிட்டனர் என்பது ஒரு பாடம்.

எல்லா கட்சியினரும் விதிமுறைகளை மீறுவதில், துட்டு கொடுப்பதில், வசை பாடுவதில் ஆர்வத்துடன் ஈடுபட்டனர் என்றால் மிகையாகாது. பிரதிநிதித்துவ ஜனநாயகம் இன்றும் கானல் நீர் தான். கதவோரம் ஒளிந்திருந்த கருத்துக் கணிப்பாளர்கள், ஒருமுகமாக, திருகிய முனை பாட்டுப்பாடுகிறார்கள். தற்காலம், வருங்கால பிரதமராக பெரிதும் பேசப்படும் திரு. நரேந்திர மோடி,

‘நான் அரசு இயந்திரத்தை நல்லதொரு நிர்வாகியாக இயக்குவேன்; நாடு சுயநம்பிக்கையை தொலைத்து விட்டது; தேக்கத்தில் அமுங்கி விட்டது; உந்துதல் சக்தியுடன் அதை உசுப்பி விட்டால், நடக்கவேண்டியவை தானே நடக்கும்.’

… என்கிறார். இத்தருணம், போனமாதம் அமெரிக்க நாடாளுமன்றம், ‘திரு. நரேந்திர மோடி பிரதமரானல், அவருக்கு A-1 (diplomatic) visa தனக்குத்தானே வந்து சேரும்’ என்று வருமுன் காப்போனாக உரைத்ததையும், அமெரிக்க அதிபரின் சம்பிரதாயம் கலந்த வரவேற்பையும் நாம் உன்னித்து கவனிக்க வேண்டும். மற்ற நாடுகள் அதே வழியில் தான் பயணிப்பார்கள். நான் எதிர்பார்த்தபடியே, ‘ஊடலும் கூடலுமாக’ இயங்கும் பங்குச்சந்தை அண்ணாந்து பார்க்கிறது. வருங்காலத்தில் அதற்கு மராமத்து தேவை. அது கபளீகரர் உலகம். முற்றுகை போதும். இனி ஆவன செய்வோம்.

அதற்கு ஏதுவாக, தலைமை தேர்தல் கமிஷனர் திரு.வி.எஸ்.சம்பத்
அளித்த ஒரு பேட்டியின் சாராம்சம்.

“வன்முறையை ஓரளவு கட்டுப்படுத்தினாலும், செல்வத்திமிர் (மணி பவர்), நிழல் செல்வம், பணப்புழக்கம், எல்லாமே களத்தில் இறங்கி விடுகின்றன. அதை தடுக்க, கமிஷன் மட்டும் போதாது. தவிர, சட்டப்படி, விதி மீறி கெலித்த பிரதிநிதிகளை வீட்டுக்கனுப்ப எம்மிடம் ஆளுமை கொடுக்கப்படவில்லை. (பேட்டி கண்டவர் 2009 தேர்தலில் விதி மீறி ஆறு வருடங்கள் பதவியிலிருந்த் திரு.அஷோக் சாவன் பற்றி வினவினார். அது ஒரு டெஸ்ட் கேஸ் என்பதால் வருங்காலத்தில் நல்லது நடக்கலாம் என்றார், திரு.சம்பத்.)

ஆக மொத்தம் இன்றைய நிலை:
முறைகேடுகளும் தேர்தல் உத்திகளாக தொடரக்கூடுபவை. சாளரத்தை திறந்தோம். இனி ஆவன செய்வோம்.

  1. மக்கள் சக்தி மங்கக்கூடாது. அது வெளிச்சத்தில் இயங்கவேண்டும், வன்முறையை அறவே தவிர்த்து.
  2. பேட்டை தோறும், மக்கள் நலத்தை வெளிப்படையாக நாடும் தன்னார்வ குழுக்கள் அமைத்து, பிரதிநிதிகளை கண்காணித்து, பொறுப்புடன் தட்டிக்கேட்கும் பண்பை உருவாக்குங்கள். தரம் கெட்டவர்கள் உட்புகுந்து ஆதாயம் தேடுவார்கள். விழிப்புடன் அவர்களை வெளியேற்றுங்கள். இன்னல்கள் உண்டு. அண்ணல் காந்தி சமாளிக்காததா?
  3. கைகளை கூப்பி, காலை பிடித்து, சமயத்தில் காசை வீசி, கெலித்த பிரதிநிதிகள், உமது ஊழியர்கள். அவர்களை சிம்மாசனத்தில் தூக்கி வைத்து அவர்களின் மண்டை கனத்தை ஏற்றாதீர்கள்.
  4. இனபேதங்கள், ஏற்ற தாழ்வுகள், ஆணவம், பெண்ணிய எதிர்ப்பு போன்றவற்றை பேணாதீர்கள்.
  5. மக்கள் நலம் தெளிவு: தேச பாதுகாப்பு, யோக்கியமான நிதி நிர்வாகம், சட்டம் தவறாமை வகையறா: மத்திய அரசு நிலைப்பாடு
  6. இணக்கமான மாநில நிர்வாகம், அணுக்கத்தொண்டு, அடுத்த நிலைப்பாடு.
  7. தொகுதி நலம் முக்கியம். அவரவர் தொகுதியை, பிரதிநிதியும், மக்கள் குழுவும், கவனித்துக்கொள்ள வேண்டும். – சுற்றுச்சூழல், மின்சாரம், தண்ணீர் வகையறா.
  8. மக்கள் குழுக்கள் ஒன்று சேர்ந்து, கல்வி, மருத்துவம், முன்னேற்றம் ஆகியவை பற்றி, அரசுக்கு ஆலோசனை அளிக்க வேண்டும்.
  9. மேலாண்மை, கள்ளைக்குடிப்பது போல, அதிகார மயக்கம் தரும், யாராயிருந்தாலும். எனவே, மேலாண்மை கண்காணிப்பு இல்லையென்றால், செத்தோம்.
  10. மேற்படி இயங்க, நாம் வாய்மையை கடைபிடித்து, லஞ்சம் கொடுக்காமல், தன்னலம் மாடும் நாடாமால், கறாராக இருக்க வேண்டும்.

இதெல்லாம் வேலைக்காவாது என்பர் பலர். அப்படியே இருந்து விட்டோமானால், மோடி ஆண்டாலும், ராகுல் ஆண்டாலும், அரவிந்த் ஆண்டாலும், ‘மேலாண்மை, கள்ளைக்குடிப்பது போல, அதிகார மயக்கம் தரும், யாராயிருந்தாலும். எனவே, மேலாண்மை கண்காணிப்பு இல்லையென்றால், செத்தோம்.’ என்பது நடை முறையில் வந்து விடும்.

 

இன்னம்பூரான்
13 05 2014

http://innamburan.blogspot.co.uk
http://innamburan.blogspot.de/view/magazine
www.olitamizh.com

சித்திரத்துக்கு நன்றி:
http://3.bp.blogspot.com/-dVSaHvVmvhc/U0vGkt31XLI/AAAAAAAABRY/tKDOt8EG5w8/s1600/mb.jpg

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “இனி ஆவன செய்வோம்

  1. ‘நாடு நமக்கென்ன செய்தது என்று கேட்காமல், நாம் நாட்டிற்கு என்ன செய்தோம் என்று நினைத்துப் பார்ப்போம்’ என்ற கென்னடியின் வார்த்தைகளை நினைவு கூர்வோம். வாக்கு அளித்ததுடன் நம் கடமை முடிந்தது என்று சும்மா இருக்காமல், நீங்கள் சொல்வது போல நமது வாக்குக்களினால் ஆட்சிக்கு வந்தவர்களை நாம் குழுவாகச் சேர்ந்து தட்டிக் கேட்க வேண்டும். நல்லவை செய்யும்போது பாராட்டவும் வேண்டும். 
    ஜனநாயகம் என்பதில் ஜனங்களின் பங்கு வாக்கு அளிப்பதுடன் முடிந்துவிடுவதில்லை. புதிய அரசுக்கு ஆதரவாக யோசனைகளை அளிப்பதுடன், பிழை திருத்தமும் செய்வோம்.

    நீங்கள் கூறியுள்ள 9 வது, 10வது  பாயிண்டுகள் எல்லோரும் நினைவில் கொள்ள வேண்டியவை. 

Leave a Reply to ரஞ்சனி நாராயணன்

Your email address will not be published. Required fields are marked *