-கவிஞர் காவிரிமைந்தன்

 

allmurugan

அறுபடை வீடுகள்:
மிகப்பழமை வாய்ந்த தமிழ் இலக்கணமாகிய தொல்காப்பியம் தமிழக நிலப்பரப்பைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நான்கு வகையாகப் பிரிக்கின்றது. இவற்றில் மலையும் மலைசார்ந்த பகுதியாகிய குறிஞ்சி நிலத்திற்குரிய கடவுளே முருகப்பெருமான். முருகப்பெருமான் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்துள்ளவன் என்றாலும், அவன் சிறப்பாக வாழும் இடங்களாகக் கருதப்படுபவை இந்த ஆறு படைவீடுகளாகும்.

முதற்படை வீடு – பழனி – ஸ்ரீபழனி ஆண்டவர்:
சென்னையிலிருந்து 445 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது திருவாவினன்குடி. இதற்குச் சித்தன்வாழ்வு, பொதினி போன்ற பெயர்களும் உண்டு. பொதினி என்ற பெயர் மருவி பழனி என்றானது. இங்குள்ள பழனிஆண்டவரின் சிலை நவ பாஷாணங்களால் ஆனது. இங்கு வழங்கப்படும் பஞ்சாமிர்தம் மிகவும் புகழ்பெற்றது.

பழனி:
ஆறு படைவீடுகளில் முதலாவதாகும். ஞானப்பழம் கிடைக்காத காரணத்தால் தன் பெற்றோர்களிடம் கோபம்கொண்டு முருகன் ஆண்டியின் கோலத்தில் நிற்கும் இடமே பழனி. பழனிமலையில் உள்ள முருகனின் சிலை நவ பாஷாணத்தால் ஆனது. அதனால்தான் அந்த முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் பால், பஞ்சாமிர்தம், விபூதி ஆகியவற்றை உட்கொண்டால் உடல் நலம்பெறும் என்று நம்பப்படுகிறது.

இரண்டாம்படை வீடு – திருச்செந்தூர் – ஸ்ரீபாலசுப்பிரமணியசுவாமி
சென்னையிலிருந்து சுமார் 650 கி.மீ தூரத்தில், தூத்துக்குடி அருகில் கடற்கரை ஓரமாக அமைந்துள்ளது திருச்செந்தூர். திருச்சீரலைவாய், வீராகுபட்டணம், ஜெயந்திபுரம் போன்ற வேறு சில பெயர்களும் இதற்கு உண்டு. இங்கு வழங்கப்படும் பன்னீர்இலை விபூதி மிகவும் புகழ்பெற்றது.

திருச்செந்தூர்:
கடல் அலை ‘ஓம்’ என்ற ரீங்காரத்துடன் கரைமோதும் ‘அலைவாய்’ என்னும் பெயருடைய திருச்செந்தூரானது முருகன், சூரபத்மன் என்ற அசுரனுடன் போரிட்டு வென்ற இடமாகும். சூரபத்மன் தேவர்களையும், இந்திரனையும், அவன் மனைவியையும் சிறைசெய்து கொடுமை செய்தான். அவர்களைக் காப்பாற்ற முருகன் சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றினார். சூரபத்மனுடன் முருகன் போர்புரிந்த இடமே திருச்செந்தூர். அவர் போர்புரிந்த காலம் கார்த்திகை மாதம் சஷ்டியாகும். அதனால்தான் கார்த்திகை மாதம் சஷ்டியின் போது விரதம் இருந்து முருகனை வழிபடுகின்றனர். போரின் இறுதியில் சூரபத்மன் பெரிய மரமாக நிற்க முருகன் தன்தாய் தந்த சக்திவேலால் மரத்தைப் பிளக்கிறார். அதில் ஒருபாதி மயில் ஆகிறது. மற்றொரு பாதி சேவலாகிறது. மயிலைத் தன் வாகனமாகவும், சேவலைத் தன் கொடியாகவும் ஏற்றுக் கொள்கிறார்.

மூன்றாம்படை வீடு – திருப்பரங்குன்றம் – ஸ்ரீசுப்ரமணியசுவாமி
சென்னையிலிருந்து சுமார் 461 கி.மீ. தூரத்தில் மதுரை மாநகரில் அமைந்துள்ளது இவ்வூர். இங்கு ஸ்ரீசுப்ரமணியசுவாமி கல்யாணக் கோலத்துடன் காட்சி தருகிறார்.

திருப்பரங்குன்றம்:
தேவேந்திரனையும், தேவர்களையும் சிறை மீட்டதற்கு நன்றிக் கடனாக இந்திரன் தன்மகள் தெய்வானையை முருகனுக்குத் திருமணம் செய்துகொடுக்கிறான். முருகனுக்கும், தெய்வானைக்கும் திருமணம் நடந்த இடம் திருப்பரங்குன்றம். முருகனுக்கும் சூரபத்மனுக்கும் போர் முடிந்து முருகன் போரில் வெற்றிபெற்ற மறுநாள் இத்தெய்வீகத் திருமணம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

நான்காம்படை வீடு – சுவாமிமலை – ஸ்ரீசுவாமிநாதசுவாமி
சென்னையிலிருந்து சுமார் 309 கி.மீ. தூரத்தில் கும்பகோணத்திற்கு அருகில் அமைந்துள்ளது சுவாமிமலை. இதற்குத் திருவேரகம், குருமலை, தாத்ரீகரீ, சுந்தராசலம் போன்ற பெயர்களும் உண்டு.

சுவாமிமலை:
தந்தைக்குப் பாடம் சொன்ன இடம் சுவாமி மலை. பிரணவ மந்திரத்திற்குப் பொருள் தெரியாத பிரம்மனை முருகன் சிறையில் அடைக்கிறார். இதைக் கேள்வியுற்ற சிவபெருமான், எனக்கும், பிரம்மாவுக்கும்கூடத் தெரியாத பிரணவ மந்திரத்தின் பொருள் உனக்குத் தெரியுமா? என்று கேட்கிறார். அதன்படி உபதேசிப்பவன் குரு, கேட்பவன் சீடன் என்ற முறையில் முருகன் ஆசனத்தில் அமர, அவருக்குக்கீழ் சிவன் அமர்ந்து தன் கரத்தால் வாய் பொத்தி உபதேசம்கேட்ட இடமே சுவாமிமலை.

ஐந்தாம்படை வீடு – திருத்தணி – ஸ்ரீபாலசுப்பிரமணியசுவாமி
சென்னையிலிருந்து 80 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது இவ்வூர். சீபுரணகிரி, தணிகாசலம், மூவாத்திரி, அண்ணகாத்திரி, செருத்தணி போன்ற பெயர்களும் இதற்கு உண்டு. 400 அடி உயர இந்த மலைக் கோயிலில் 365 படிகள் உள்ளன.

திருத்தணி:
முருகன் வேடர்குலத்தில் பிறந்த வள்ளியைக் காதல்மணம் புரிந்துகொண்ட இடமே திருத்தணி. வள்ளியின் தந்தை நம்பிராஜன் முருகனுக்கு வள்ளியைத் திருமணம்செய்து கொடுக்க மறுத்து, முருகனுடன் போரிட்டு மடிகிறான். பின்பு முருகன் வள்ளியைத் திருமணம் செய்துகொள்கிறான். முருகன் போரிட்ட கோபம் தணிய நின்ற மலையே தணிகை மலை ஆகும். அதுவே திருத்தணி என்று போற்றப்படுகிறது.

ஆறாவதுபடை வீடு – பழமுதிர்சோலை – சோலைமலை முருகன்
சென்னையிலிருந்து சுமார் 461 கி.மீ. தூரத்தில் மதுரை மாநகரில் அமைந்துள்ளது பழமுதிர்சோலை. இதற்குத் திருமாலிருஞ்சோலை, குலமலை, கொற்றை மலை என்ற வேறு பெயர்களும் உண்டு. ஒளவைப் பாட்டிக்கு நாவல் பழத்தை உதிர்த்துக் கொடுத்ததால் பழமுதிர்சோலை என்று பெயர்பெற்றது.

பழமுதிர்சோலை:
நக்கீரர், ‘இழுமென இழிதரும் அருவிப் பழமுதிர் சோலை மலைகிழ வோனே’ என்று முருகனின் ஆறாவது படைவீடாகப் பழமுதிர்சோலையைக் கூறித் திருமுருகாற்றுப்படையை நிறைவு செய்கிறார். குறிஞ்சிக் கடவுளாகிய முருகன் வயோதிகனாகத் தோன்றி நக்கீரனுக்குக் காட்சியளித்த இடம் பழமுதிர்சோலையாகும்.

அறுபடை வீடுகொண்ட திருமுருகா!
திருமுருகாற்றுப்படை தனிலே வருமுருகா! முருகா! (அறுபடை)

பாட்டுடைத் தலைவன் என்று உன்னை வைத்தேன்
உன்னைப் பாடித் தொழுவதற்கே என்னை வைத்தேன் முருகா! (அறுபடை)

வேண்டிய மாம்பழத்தைக் கணபதிக்கு – அந்த
வெள்ளிப்பனித் தலையர் கொடுத்ததற்கு
ஆண்டியின் கோலமுற்று மலைமீது – நீ
அமர்ந்த பழனி ஒரு படைவீடு! (அறுபடை)

ஒரு பெரும் தத்துவத்தின் சாறெடுத்து – நல்ல
ஓம் எனும் மந்திரத்தின் பொருள் உரைத்து
தந்தைக்கு உபதேசம் செய்த மலை – எங்கள்
தமிழ்த்திரு நாடுகண்ட சுவாமிமலை! (அறுபடை)

தேவர் படைத்தலைமை பொறுப்பெடுத்துத்
தோள்கள் தினவெடுத்துச் சூரன் உடல்கிழித்துக்
கோவில் கொண்டே அமர்ந்த ஒருவீடு – கடல்
கொஞ்சும் செந்தூரில் உள்ள படைவீடு! (அறுபடை)

குறுநகைத் தெய்வானை மலரோடு – உந்தன்
குலமகளாக வரும் நினைவோடு
திருமணக்கோலம் கொண்ட ஒரு வீடு – வண்ணத்
திருப்பரங்குன்றம் என்னும் படைவீடு! (அறுபடை)

தேவர் குறை தவிர்த்துச் சினம் தணிந்து – வள்ளி
தெள்ளுத் தமிழ்க்குறத்தி தனை மணந்து
காவல்புரிய என்று அமர்ந்த மலை – எங்கள்
கன்னித் தமிழர்திருத் தணிகை மலை! (அறுபடை)

கள்ளமில்லாமல் வரும் அடியவர்க்கு – நல்ல
காட்சிதந்து கந்தன் கருணை தந்து
வள்ளி தெய்வானையுடன் அமர்சோலை
தங்க மயில் விளையாடும்பழ முதிர்சோலை! (அறுபடை)

http://www.youtube.com/watch?v=ZK0dmYHq6oE

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *