ஜெயஸ்ரீ ஷங்கர்

pandaripuram1

சமீபத்தில் பண்டரிபுரம் சென்று ஸ்ரீவிட்டல், ஸ்ரீருக்மிணிதேவியைச் சேவிக்கும் அற்புதமான  மஹாராஷ்டிர யாத்திரை எங்களுக்கு அமைந்தது.

பண்டர்பூர் ஒரு சின்ன கிராமம்தான். அந்தப் பழமையான கோயில்தான் பிரதானம். பண்டரி யாத்திரை ஆத்ம சுகத்தை அளிக்கும் என்று நாமதேவர் கூறுகிறார். ”பரப்ரஹ்ம ஸ்வரூபமே பாண்டுரங்கன்…அவனைப் பாடுங்கள்!” என்கிறார் ஆதிசங்கரர். சந்த் ஞானேஸ்வர் முதல் துக்காரம் வரைப் பல பக்தர்கள் பாடிய ஆயிரக்கணக்கான அபங்கங்கள் பக்தியில் நம்மைத் திளைக்க வைக்கின்றன. தினமும் 24 மணிநேரமும் பகவான் நாம சங்கீர்த்தனம் ஒலித்துக் கொண்டே இருக்கும் ஒரே புண்ணியக்ஷேத்திரம் பண்டரிபுரம்.

“ஜெய் ஜெய் ராமகிருஷ்ண ஹரி” என்ற ஒரே நாமம் எங்கும் ஒலித்தபடியே இருக்கும் பண்டரிபுரத்தில், பக்தர்கள் ஒவ்வொருவரும் தனது பாதக் கமலங்களைத் தொட்டு வந்தனம் செய்யும் பாக்கியத்தை அருளும் ஸ்ரீவிட்டலும் மாதா ஸ்ரீருக்மிணியும் (ஸ்ரீ ரகுமாயி) இங்கு சந்த்ரபாகா நதிக்கரையில் கோயில் கொண்டுள்ளார்கள்.

ஸ்ரீகிருஷ்ணன் தனது பட்டத்து ராணி மாதா ஸ்ரீருக்மிணிதேவியுடன் வந்து அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிட்ட புண்ணிய பூமியாம் இது. அதற்குச் சாட்சியாகப் பல விஷயங்கள், பல இடங்கள், பொக்கிஷங்களாகப் பாதுகாக்கப் பட்டு வைக்கப்பட்டிருக்கும் பொருள்கள் என்று எங்கு சென்றாலும் ஸ்ரீ கிருஷ்ணனின் புகழ்தான் அங்கு பாடப்படுகிறது. அதைத் தெரிந்துகொண்டுப் பார்க்கப் பார்க்க  நம்மையும் மீறி ஒரு பரவசம் நம்மைச் சூழ்ந்து கொள்ளும்.

’பூலோக வைகுண்டம்’ என்று அழைக்கப்படும் பண்டரிபுரத்தை தமது வாழ்நாளில் ஒரு முறையாவது சென்று சந்த்ரபாகா நதியில் நீராடி, ஸ்ரீ விட்டலைத்  தரிசனம், பிரதஷிணம், நாம சங்கீர்த்தனம் செய்வதால் நமது பிறவிப்  பயன் அடைகிறது என்று பக்த துக்காராம் கூறுகிறார் என்றாலும், தற்போது சந்த்ரபாகா நதி (கங்கைக்கும் பழையது – மிகவும் புராதனமானது என்று சொல்லப்படுகிறது.) நீராடும் நிலையில் இல்லை என்பதால், மிகவும் கவனமாக ஆற்றின் நடுப்பகுதி வரை நடந்து சென்று சிறிதளவு தீர்த்தம் எடுத்து வந்தோம்.

இனி இந்தப் புண்ணிய க்ஷேத்ரத்தின் தல வரலாறு, அதன் மகிமை என்று சொல்லிக் கொண்டே போகலாம் என்றாலும், அதையே ’வீடு தேடி வருவான் விட்டலன்’ என்னும் நிகழ்ச்சியில் ஸ்ரீ ஸ்ரீமுரளிதரன் சுவாமிகள் வாரா வாரம் ஞாயிற்றுக் கிழமையில் ’விஜய் டிவி’யில் தொடர்ந்து சொல்லிக் கொண்டே வருவதைப் பலர் கேட்டிருக்கக் கூடும் என்பதாலும், அந்தப் புராணம் மிகவும் பெரிதாக இருக்கும் காரணத்தாலும், இதில் அத்தனை விபரங்களும் சொல்லாமல், ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் “தன்னை ஈன்ற பெற்றோர்களை யாரொருவர் மதித்து அன்புடனும் கருணையுடனும் பாதுகாக்கிறார்களோ அவர்களுக்கு பிரத்யக்ஷமாக உடனிருந்து காப்பான் விட்டலன்” என்னும் ஐதீகம் அங்கு நிலவுகிறது. அதற்குச் சாட்சியாக பல புராணக் கதைகளும் சொல்லப்படுகிறது. அந்தக் கதைகளைக் கேட்டால், ஒரு காலத்தில் நாம் கண்ட ‘தியாகராஜ பாகவதர் நடித்த சிவகவி’ என்னும் படம்தான் நினைவுக்கு வருகிறது. ஒருவேளை அந்தப் படத்தை இந்தப் புராணத்தைத் தழுவி எடுத்திருக்கலாம். சில லீலைகளைப் படித்தால் கேரளத்து குருவாயூர் அற்புதங்களைப் போன்றே இருக்கிறது. பரந்தாமன்  ஸ்ரீ கிருஷ்ணனுக்கு மாநிலம் ஏது?

முடிந்த வரையில் சிறியதாக்கிச் சொல்ல முயற்சி செய்கிறேன்…

ஆடி மாதம் (ஜுலை) வரும் ஏகாதசியை மஹராஷ்டரத்தில் ’ஆஷாட ஏகாதசி’ என்று மிகச் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். காவடிபோல் தோளில் இருபக்கமும் பால் அல்லது தயிர் எடுத்துக்கொண்டு பண்டரிபுரம் சென்று பகவான் விட்டலைத் தரிசனம் செய்துவிட்டு வருவார்கள். பண்டரிபுரம் வரைப் பொடி நடைதான். நடு நடுவே சில பிரபுக்கள் பெரிய பந்தல் போட்டு அவர்களுக்கு வயிற்றுக்கு உணவும் படைப்பார்கள். சிறுவர்களும் இதில் கூட்டம் கூட்டமாகப் போவார்கள். அவர்கள் வாயில் ”பாண்டுரங்க விட்டலா பண்டரிநாத விட்டலா ” என்றும் ”விட்டல் விட்டல் ஜய ஜய விட்டல்” என்றும் விடாமல் நாமஜபம் வந்து கொண்டிருக்கும். அந்த நாமம் கேட்டாலே உடலெல்லாம் புல்லரிக்கும். இப்போது அந்த விட்டல் எப்படி வந்தார் என்ற கதையைப் பார்ப்போம்

லோக தண்டம் என்ற காட்டில் ஜன்னு என்ற முனிவர் வாழ்ந்து வந்தார். அவர் மனைவியின் பெயர் சாத்தகி. அவர்களுக்குப் பலவருடங்கள் கழித்து ஒரு மகன் பிறந்தான். அவன் பெயர் புண்டரீகன். அவன் பிறந்ததும் ஏன் பிறந்தான் என்று அவர்களுக்கு ஆகிவிட்டது. எதைப் பார்த்தாலும் அழிப்பான், துன்புறுத்துவான். நாய்மேல் கல் வீசுவான்; முயலின் காதைத் திருகுவான். இப்படி முரடாகவே வளர்ந்து பெற்றோர் பேச்சைக் கேட்காமல் பதிலுக்கு எதிர்த்துப் பேசவும் துணிந்தான். அவனுக்குத் திருமணம் செய்தால் வழிக்கு வருவான் என்று எண்ணிப் புண்டரீகனுக்கு அவன் தந்தை ஒரு நல்ல பெண்ணாகப் பார்த்துத் திருமணம் செய்து வைத்தார். ஆனாலும் அவன் செயலில் மாறுதல் இல்லை. வீட்டில் மனைவி இருக்கும்போதே வெளியில் இன்பம் தேடினான். அவன் தந்தை மனம் ஒடிந்து வருந்தி அவனுக்குப் புத்தி கூறினார். அதற்கு அவன், “அப்பா நான் என் இஷ்டப்படி தான் இருப்பேன். இந்த வீட்டில் எனக்குச் சுதந்திரமில்லை… ஆகையால் நான் வீட்டைவிட்டுப் போகிறேன்” என்று கத்தித் தன் மனைவியுடன் வீட்டைவிட்டு வெளியேறினான். அவன் பெற்றோர் மனமுடைந்துப் போனார்கள். பலநாட்களுக்குப் பிறகு அவர்கள் ஒரு குழுவுடன் காசி யாத்திரைக்குக் கிளம்பினார்கள்.

’தமக்கு ஒரே  மகன் இருந்தும் விதி இப்படி ஆகி விட்டதே!’ என்று வருந்தி எல்லாவற்றையும் கடவுளுக்கே அர்ப்பணம் செய்து விட்டார்கள். அதே நேரத்தில் தன் தந்தை தாய் காசிக்குக் கிளம்பியதை அறிந்து புண்டரீகனும் ஒரு குதிரையின்மேல் தன் மனைவியுடன் காசிக்குக் கிளம்பினான். வழியில் அவன் மனைவி தன் மாமனார் மாமியார் தள்ளாமல் காலில் செருப்புமில்லாமல் நடந்து வருவதைக் கவனித்துத் தன் கணவரிடம் அவர்களுக்கு உதவும்படிக் கூறினாள். ஆனால் அவன் “வாயை மூடிக்கொண்டு வா! அவர்கள் கிழங்கள்…வந்தால் நமக்குத்தான் கஷ்டம்” என்றான் இரக்கமில்லாமல்.

அங்கு ஒரு சத்திரம் தென்பட்டது. அங்குப் போய் சிறிது நேரம் களைப்பாறிவிட்டுச் செல்லலாம் என்று மனைவியுடன் அங்கு போனான். அதனருகில் ஒரு முனிவரின் ஆஸ்ரமம் இருந்தது. அங்கு குக்கூடக முனிவர் என்று ஒருவர் இருந்தார். பொழுது போகாமல் அங்கு என்ன நடக்கிறது என்று பார்த்தான் புண்டரீகன். அங்கு ஒரு முனிவர் தென்பட்டார். உடனே அவரிடம் போய், ”காசி க்ஷேத்திரம் எங்கு உள்ளது?” என்று கேட்டான். “காசியா? எனக்குத் தெரியாதே“ என்றார் அவர்.  “இது கூடத் தெரியாமல் நீங்கள் என்ன முனிவர்?” என்று சீறிய புண்டரீகனிடம், “காசி என்ற இடத்திற்கு நல்ல பண்புள்ளவர்கள் தான் போக வேண்டும்! நீ போகவேண்டும் என்கிறாயே!!” என்றார் கேலியாக.

அதைக் கேட்டுக் கோபம் கொண்டு திரும்பவும் தன் இடத்திற்கு வந்து விட்டான் புண்டரீகன். இரவு தூக்கம் வராமல் வெளியில் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், மூன்று பெண்கள் ஆஸ்ரமத்துள் நுழைந்தனர். மூன்று பேரும் மிகவும் கருப்பாகவும், அழுக்குடன், கோரமாகவும் இருந்தனர். அந்த ஆஸ்ரமத்தில் நுழைந்த அவர்கள் பல வேலைகள் செய்தனர். ஒருத்தி வீடு கூட்டினாள்; மற்றொருத்தி வீட்டைத் துப்புரவாகத் துடைத்து அழகான கோலம் இட்டாள். அந்த முனிவரின் பாதத்தை நீரால் கழுவித் துடைத்து வணங்கினாள்; பின்பு அவர்கள் வெளியே வந்தனர். என்ன ஆச்சரியம்! மூன்று பேரும் மிகவும் அழகாகச் சுந்தரிகளாக வந்தனர்.

”இது என்ன மாயை! போகும் போது சகிக்க முடியாமல் இருந்தார்கள், இப்போது எப்படி இது?” என்று வியந்துபோன புண்டரீகன் அவர்களிடம் ஓடினான். “சுந்தரிகளே! நீங்கள் யார்? சொல்லுங்கள்!” என்று கேட்டபடி ஒருத்தியின் கையைப் பற்றினான். அவள் மிகவும் கோபம் கொண்டு கையை உதறிப் பின் சொன்னாள். “நாங்கள் கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள். தினமும் பலர் குளிப்பதால் பாபம் சேர்ந்து, அந்தப் பாபத்தைக் கழுவ இங்கு வந்து சேவை செய்கிறோம். இந்தக் குக்கூட முனிவருக்குச் சேவை செய்து எங்கள் பாபத்தைப் போக்கிக் கொள்கிறோம். பாபம் எங்களிடம் சேரச் சேர அவலட்சணமாக மாறுவோம். இங்குத் தினமும் வந்து அதைப் போக்கிக் கொள்கிறோம். போன ஜன்ம புண்ணியத்தினால்தான் நீ எங்களைப் பார்த்திருக்கிறாய். இனியாவது திருந்தி உன் பெற்றோருக்குச் சேவை செய்! நீ இத்தனை நாட்கள் செய்த பாபத்தைப் போக்கிக் கொள்! உன் துர்க்குணத்தை மாற்றிக் கொள்! தாய் தந்தைதான் உனக்குத் தெய்வம் அவர்களை வணங்கு!” என்று கூறிவிட்டுச் சென்றனர்.

புண்டரீகன் ஏதோ மந்திரச் சக்திக்குக் கட்டுப்பட்டதுபோல் மனம் மாறினான். தான் செய்த தவறுகளுக்கு வருந்தினான். பின் கங்காதேவியிடம் கேட்டான், “இந்த முனிவர் யார்? இவரைத் தொழுதால் எப்படி பாவங்கள் விலகுகின்றன?” கங்கை சொன்னாள், ”அப்பா புண்டரீகா! இவர் கோவிலுக்குப் போனதில்லை; யாகம் செய்ததில்லை, தான தருமம் செய்ததில்லை. ஆனால் விடாமல் பெற்றோருக்குப் பணிவிடை செய்து வருகிறார். அவர்களே இவரின் தெய்வம். பாபம் செய்தவர்கள் இவர் பாதத்தைத் தொட்டாலே போதும்…பாபங்கள் கரைந்து போகும்!”

புண்டரீகன் மனம் நெகிழ்ந்து…”தாயே நான் என் பெற்றோருக்குப் பல அநீதிகளை இழைத்து விட்டேன். இப்போது திருந்தி விட்டேன்; இதோ இப்போதே போகிறேன்! அவர்களுக்கு மனம் உவந்து சேவை செய்வேன்” என்றான். காலையில் குக்கூட முனிவரைத் தரிசித்து அவர் பாதங்களைக் கழுவி மன்னிப்பும் கேட்டுக் கொண்டு பல சேவைகள் செய்தான், ஆசியும் பெற்றான். பின் தன் பெற்றோரைத் தேடிக் கண்ணீரால் அவர்தம் பாதங்களைக் கழுவினான். அதன்பின் அவன் உலகமே அவன் தாய் தந்தைதான்! அவனுக்கு வேறு ஒரு சிந்தனையும் இல்லை.

இதெல்லாம் பார்த்த கிருஷ்ணர் அவன் சேவையை மெச்சி அவனைப் பார்க்க பூலோகத்திற்கு வந்தார். அவன் வீட்டு வாசலில் வந்து கதவைத் தட்டினார், ”புண்டரீகா புண்டரீகா!” வெளியிலிருந்து ஒலித்த குரல்கேட்ட புண்டரீகன், “யார்? யாராயிருந்தாலும் அங்கேயே நில்லுங்கள்! நான் பெற்றோரின் சேவையில் ஈடுபட்டுள்ளேன்” என்று ஒரு செங்கல்லைக் கதவைத் திறந்து வீசிப் போட்டான். அந்த மாயக்கண்ணன் பக்தனுக்காக அந்தச் செங்கல்மேல் நின்று இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்துக் கொண்டு அப்படியே நின்றிருந்தான்.

வெகு நேரம் கழித்துப் புண்டரீகன் கதவைத் திறந்தான்; பார்த்தான் கண்ணனை. தன்னை மறந்தான்; அப்படியே சாஷ்டாங்கமாக வணங்கினான். “இந்தப் பாபச் செயலுக்கு மன்னியுங்கள்! தங்களுக்குப் போய் செங்கல்லைப் போட்டு அதில் நிற்கவும் சொன்னேனே!” என்று வருந்தினான். “புண்டரீகா! உன் சேவையை மெச்சினேன்! ஏதாவது வரம் கேள்!” என்ற கண்ணபிரானிடம், “உங்கள் அருள் இருந்தாலே போதுமானது ஸ்வாமி!” என்றான் புண்டரீகன். ”புண்டரீகா! உன் சேவையினால் புகழ்பெற்ற இந்த இடம் இனிப் ’பண்டரிபுரம்’ என்று நிலைக்கட்டும்! நீ இங்கிருந்து எல்லோருக்கும் ஆசி வழங்கி வருவாய்! உன்னை எல்லோரும் ’விட்டல்’ என்று அழைத்து என்னையே உன்னிடம் காண்பார்கள்!” என்றான் கண்ணன். ஆடிமாதம் இந்த விட்டல் வந்ததால் அந்த ஏகாதசி அன்று மிகச் சிறப்பாக விரதம் இருந்து மராட்டியர்கள் கொண்டாடுகிறார்கள்.

பண்டரிபுரம் கோவிலின் உள்ளே செல்லச் செல்ல அழகான சிற்பங்கள் நிறைந்த கருங்கல் தூண்கள் காட்சியளிக்கின்றன. ஆண்டுகள் பல கடந்த கையெழுத்துப் படியில் எழுதப்பட்ட மஹாபாரதக் காவியத்தை  கண்ணாடிப் பெட்டியில் பொக்கிஷமாக வைத்திருக்கிறார்கள். ஸ்ரீ விட்டலின் அருகில் சென்று அவரது திருப்பாதங்களில் நமது சிரசை வைத்து வணங்க அனுமதிக்கிறார்கள்.

சாளக்கிராமத்தில் அமைந்த, அழகாக இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்துக் கொண்டு கம்பீரமாகச் சிரிக்கும் விட்டலன் நம்மைப் பார்த்து ”வந்துவிட்டாயா?” என்று கேட்பது போலவே இருப்பது வியப்பு. துளசியும், சந்தனமும் மணக்க மணக்கத் தெய்வீகம் நிறைந்த கோவில் இது. தரிசனம் கண்டபின்பு ஏற்படும் பரவசத்திற்கு அளவேயில்லை.

கோவிலைச் சுற்றி ஏகப்பட்ட கடைகள், துளசிமணி மாலைகள், பஜனைக்குரிய பொருட்கள், சந்தனக் கட்டைகள், வீர சிவாஜியின் படங்கள், ஸ்ரீவிட்டலனின் படங்கள் என்று யாத்திரிகர்களைக் கவரும் வகையில் கொட்டிக் கிடக்கின்றன. தயிரும், பாலும், லஸ்ஸியும் மிகவும் தரமும் சுவையுமாக வழி நெடுகக் கிடைக்கின்றன. மற்றபடி உணவுக்குச் சப்பாத்தியும், சோள ரொட்டியும்தான். ஒரு நாள் வாடகையாக ரூபாய் ஆயிரத்தில் தங்கும் விடுதிகளும் நிறைய இருக்கின்றன.

எங்கும் பக்தியும், விட்டல் மீதான பிரேமையும் மட்டுமே பிரதானமாக இருக்கும் இந்தக் கோவிலைச் சென்று காணவேண்டும் என்ற ஆவல் நிச்சயம் இந்தக் கட்டுரையைப் படிக்கும் பலரின் மனத்தில் ஏற்பட்டு விட்டல் பக்தியை வளர்க்கும் என்பது திண்ணம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *