கவிஞர் காவிரி மைந்தன்

மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., 1965ம் ஆண்டில் நடித்து வெளியான, ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம், ‘டிஜிட்டல்’ தொழில்நுட்பத்தில் நவீன மயமாக்கப்பட்டு, (14.03.2014) தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில், 110 திரையரங்குகளில் மீண்டும் வெளியிடப்பட்டது. எம்.ஜி.ஆர்., மறைந்து, 37 ஆண்டுகள் ஆனாலும், அவரது செல்வாக்கு குறையவே இல்லை என்பதை, இந்த படம் நிரூபித்துள்ளது.

சென்னையில், 20க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான அந்த படத்தைப் பார்த்த ரசிகர்கள், மலரும் அனுபவங்களில் மூழ்கினர். அவரது பல படங்கள், ‘டிஜிட்டல்’ மயமாக்கப்பட வேண்டும் என, விருப்பம் தெரிவித்துள்ளனர். பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். ‘சத்யம்’ திரையரங்கில் வைக்கப்பட்ட எம்.ஜி.ஆர்., பேனருக்கு பாலபிஷேகம் செய்தனர். தேர்தல் நேரத்தில் படம் வெளியானதால் அ.தி.மு.க.,வினர் மத்தியிலும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

“புத்தகத்தின் ஏதோ ஒரு பக்கத்துக்குள் ஒளித்து வைத்திருக்கிற மயில் இறகை, ஒரு புதையலை பார்ப்பது போல் புத்தகத்தைத் திறந்து பார்த்து மகிழ்ந்து போகும் பள்ளிச் சிறுவர்களைப் போல, ஒரு சில காவியப் படைப்புகளை மீண்டும் மீண்டும் பார்க்கும் போது, மனம் மகிழ்ச்சியில் திளைக்கும்.”

2014ல் திருமதி.சாந்தி சொக்கலிங்கம் அவர்களின் முயற்சியில்.. தயாரிப்பில்.. மறு உருவாக்கத்தில் 1965ல் வெளியான பத்மினி பிக்சர்ஸாரின் பிரம்மாண்டப் படைப்பு ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் நவீன தொழில்நுட்பவடிவம் பெற்றது! மார்ச்சு 14.03.2014ல் தமிழகம் முழுவதிலும் புதிய திரைப்பட வரவேற்பை விட அதிகம் பெற்று மறுவெளியீடு செய்யப்பட்டது! எம்.ஜி.ஆர் ரசிகர்கள் திரண்டுவந்து திரையரங்குகளில் குவிந்திட திருவிழாக் கோலம் ஒவ்வொரு ஊரிலும்! என்ன இது சாத்தியமா என்கிற கேள்வி பிறக்கிறது! ஆம்! நண்பர்களே.. ஒரு வரலாறு புதிய வரலாற்றை எழுதியது!!

எம்.ஜி.ஆர் என்பது ஒரு சிலருக்கு, பலரைப்போல் அவரும் நடிக்க வந்த ஒரு நடிகர்! கதாநாயகனாக உலா வந்த ஒருவர்! பல வெற்றிப்படங்களைத் தந்திருக்கிறார் என்கிற பார்வை இருக்கலாம்! ஆனால்.. நண்பர்களே.. தமிழகத்தில் அவரை நேசித்த நெஞ்சங்கள்.. இன்னும் அளவிடற்கரியது! எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்.. ஒரு தலைவனாக அவரை ஏற்று அவரைப் பின் தொடர்ந்த கூட்டமது! அவரின் திரைப்படம் ஒன்று வருகிறதென்றால்.. ரசிகனுக்கு அன்றுதான் திருவிழா!!

திரையில் அவர் மற்ற கதாநாயகர்கள் போல வந்து போனவரல்ல.. அத்துறையை முழுக்க முழுக்க.. தன்வசப்படுத்தி.. நல்ல கருத்து விதைகளை கதையில், வசனத்தில், பாடல்களில் புகுத்தி இந்த சமுதாயம் பயன்பட.. அடுத்தடுத்தத் தலைமுறைகள் பயனுற.. ஒரு கருவிதான் இந்த ஊடகம் என்பதை முழுமையாக உணர்ந்து அதனை தக்கவாறு கையாண்டார்! அதனால்தான் அவரை வாத்தியார் என்று அழைக்கிறோம்! தாயின் மீது தனயன் கொள்ள வேண்டிய அன்பு .. யாவருக்கும் தெரிந்ததுதான்.. ஆனால் எம்.ஜி.ஆர் சொன்னபின்பு அல்லவா அது பன்மடங்காகி.. பெருகி தனி மனிதன் தன்னை உணர, தாயை வணங்க, தாயின் பெருமை அறிய, தாயைப் பாதுகாக்கத் தூண்டியது என்றால் இதைவிட ஒரு சேவையை இனி இந்த உலகில் எவர் வந்து செய்துவிட முடியும்?

உடலை நல்ல முறையில் வைத்திருக்க உடற்பயிற்சி தேவை என்பதை அவர் ஒவ்வொரு நேர்முகத்திலும் வலியுறுத்தியவர்.. அவரின் வாழ்க்கையில் நடைமுறையில் அவர் அதை முழுக்க முழுக்கக் கடைப்பிடித்தார். இன்னும் சொல்லப்போனால், அரசியலில் முழுமையாக ஈடுபட்டு நள்ளிரவு வரை தேர்தல் பிரச்சாரங்கள் மேற்கொண்ட பயண நாட்களிலும்கூட, அதிகாலை எழுந்து அவர் உடற்பயிற்சி செய்தவர் என்பது தமிழகம் அறிந்ததே! அதனால்தான் சராசரி வயதைத் தாண்டியபின்னே கதாநாயகனாக.. உயர்ந்தபோதும்.. தன் கடைசி நாட்கள் வரை அந்த நிலையில் அவரால் நிலைத்து நிற்க முடிந்தது!

கவியரசு கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கவிஞர் வாலி, புலவர் புலமைப்பித்தன், கவிஞர் முத்துக்கூத்தன், கவிஞர் முத்துலிங்கம் என பல்வேறு கவிஞர் பெருமக்களின் கற்பனையில் முகிழ்த்த பல நூறு பாடல்கள் அன்றும் இன்றும் என்றும் தமிழகத்தில் மட்டுமின்றி தமிழ்கூறும் நல்லுலகம் எங்கும் காற்றில் பரவிக்கொண்டிருப்பதை மறக்க முடியுமா?

மக்கள் திலகம்

கண்டவரைக் கட்டிபோடும் வசீகரத்திற்கு சொந்தக்காரர்

பூக்களை ஏந்திப் போகும் புன்னகைக்கு சொந்தக்காரர்

கேளாமல் அள்ளித்தரும் பொற்கரங்களுக்கு சொந்தக்காரர்

மக்கள் மனங்களை கட்டி ஆளும் மகுடத்திற்கு சொந்தக்காரர்

என்றும் மாறாதிருக்கும் மங்காப் புகழுக்கு சொந்தக்காரர்

அன்றும் இன்றும் என்றுமே மக்கள் திலகம்

நன்றி – பூங்குழலி – http://mgrsongs.blogspot.ae/

எம்.ஜி.ஆர். என்பது ஏழை மக்களைப் பொறுத்தவரை.. எங்களின் தலைவன் மட்டுமல்ல.. இன்றைக்கும் அவர்தம் இதயங்களில் தங்க சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பவர்! மக்கள்.. மக்கள் என்று தன் வாழ்க்கை முழுவதும் மக்களோடு பயணித்தவர்! இவரின் பன்முகங்கள்.. இவரின் செயல்பாடுகள்.. இவரின் ஆற்றல் எல்லாம் மக்களை நோக்கியே.. மக்களுக்காகவே.. எனவேதான்.. தமிழகத்தின் அரசியலில் தவிர்க்க முடியாத வகையில் தலைவரானார்! பதினோறு ஆண்டுகாலம் தமிழகத்தின் முதலமைச்சராய் திகழ்ந்தார்! எந்த நிலையிலும் ஏழைமக்களின் வாழ்வு துலங்க.. திட்டங்களை அணிவகுத்தார்! கர்மவீரர் காமராசர் கொண்டுவந்த மதிய உணவுத்திட்டத்தை விரிவுபடுத்தி.. சத்துணவுத்திட்டம் என்கிற பெயரில் அவர் திருச்சியில் தொடக்கி வைத்தபோது ஆற்றிய உரையில் ஒரு வைரவரி.. இதோ.. “சிறுவயதில் எங்களுக்கு ஒரு கவளம் சோறு கொடுக்க முடியாமல் என் தாய் பட்ட வேதனை தமிழ்நாட்டில் எந்த தாய்க்கும் வந்துவிடக்கூடாது என்றுதான் இந்தத் திட்டத்தை மேற்கொள்கிறேன்” என்றார். அவருக்கு நிகர் அவர்தான்!

வாள்வீச்சு, கத்திச் சண்டை, சிலம்பாட்டம், குத்துச் சண்டை போன்ற பல்வேறு கலைகளை சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர் அவர்களிடம் கோவையில் பயின்றவர்! அதனால்தான் அவர்தம் திரைப்படங்களில் சண்டைக்காட்சிகள் பிரபலமாகின! எம்.ஜி.ஆர். நம்பியார் வாள்வீச்சு என்பது அன்றைய நாளில் ஊரெல்லாம் பேச்சாக இருந்தது.. குறிப்பாக ஆயிரத்தில் ஒருவன் அதற்கான களமானது! அவர் கடைசியாக நடித்திருந்த ஒரு சில படங்களில் மீனவ நண்பன் – இதிலும் எம்.ஜி.ஆர். நம்பியார் வாள்வீச்சு இடம்பெற்றது! ரசிகர்களின் ..மக்களின் நாடித்துடிப்பை அறிந்து வைத்திருந்த கலைஞன் எம்.ஜி.ஆர்!

அதனால்தான் அவர் தொட்டதெல்லாம் துலங்கியது! எந்தெந்த விஷயங்கள் மக்களுக்குத் தேவை.. எந்த அளவில் என்பதை எம்.ஜி.ஆர் வரையறுத்து வைத்திருந்தார்! அது அவரின் பார்முலா என்று பேசப்பட்டது! காதல் காட்சிகளில் மட்டும் என்ன குறையா வைத்துவிட்டார்? மனித வாழ்வின் பூரணம் காதலில் இருப்பதை அறிந்தவர் என்பதால்.. தனது படங்களில் இடம்பெறும் காட்சிகளிலும் பாடல்களிலும் கவனம்செலுத்தி பல்சுவை தந்திருக்கிறார். கதையின் நாயகிகளை தேர்ந்தெடுப்பது முதல் அவர்களுடன் நடித்து வெற்றியைக் குவிக்கின்ற வரை ஓயாமல் உழைத்திருந்தார்! எம்.ஜி.ஆர் அவர்கள் மறைந்து 27 ஆண்டுகள் ஆகின்றன.. எனினும் அவர் இறந்துவிட்டார் என்கிற சேதியை நம்பாதவர்கள் உண்டு! அவரைப் போற்றியவர்கள்.. புகழ்ந்தவர்கள்.. வாழ்ந்ததாக சரித்திரம் உண்டு.. தாழ்ந்ததாக இல்லவே இல்லை! அவரை பின்பற்றிய ரசிகர்களில் பல லட்சம்பேர் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை.. நன்னடத்தையால்.. பலருக்கும் உதவி செய்கின்ற பாங்கால்.. இந்தச் சமுதாயம் விரும்புகிற மனிதர்களாய் வாழ்கிறோம் என்றால்.. அது முழுக்க முழுக்க எம்.ஜி.ஆர் என்கிற மந்திரச் சொல்லின் மகிமை என்பதைப் பெருமையோடு எந்த சபையிலும்.. எந்த அவையிலும் பகிர்ந்துகொள்வோம்!

எம்.ஜி.ஆர்.. ரசிகன் ஒருவரை அழைத்து எம்.ஜி.ஆர் படங்களில் உங்களுக்குப் பிடித்த முதல் 10 அல்லது 20 படங்களைப் பட்டியலிடுங்கள் என்றால்.. அதில் அன்பே வா.. படகோட்டி, எங்க வீட்டுப் பிள்ளை, நாடோடி மன்னன், ஆயிரத்தில் ஒருவன், ரகசிய போலீஸ் 115, மாட்டுக்கார வேலன், உலகம் சுற்றும் வாலிபன், அடிமைப் பெண், இதயக்கனி என்று இடம்பெறும் படங்கள் பெரும்பாலும் ஒருசேரவே இருக்கும்! ஆனால் இதில் எந்தப் படத்தை நீங்கள் முதன்மை வகிக்கும் படமாகக் கருதுவீர்கள் என்று கேட்டால் பதில் சொல்வது மிகச் சிரமமாக இருக்கும்! காரணம்.. இந்தப் படங்கள் ஒவ்வொன்றும் பாடங்களாக.. மறக்க முடியாதவைகளாக.. பலமுறை பார்த்து ரசித்தவையாக இருப்பதால், ரசிகன் அந்த விடை சொல்லத் திணறுவான்!

ஆனால்.. இந்தக் கேள்விக்கான விடையை.. நமக்காக வழங்கியிருக்கிறார்.. அமீரக மண்ணில் சுவையின் சூப்பர் ஸ்டார் என்கிற பெயரோடு உலா வரும் லெ.கோவிந்தராஜு அவர்கள்! ஆம்! உழைப்பாளர் தினமான 01.05.2014 அன்று மாலை .. துபாயின் மையப்பகுதியில் உள்ள கிராண்ட் சினிமா என்னும் திரையரங்கில் அன்று மாலை புதிதாக வெளியான திரு.மம்முட்டி அவர்கள் படத்தைக்கூட ஒரு காட்சி எங்களுக்காக என்று வாதாடி.. பிரத்யேக காட்சியாக.. முதன் முறையாக அயல்நாட்டில்.. அதுவும் அமீரகத்தில்.. ஆயிரத்தில் ஒருவன் வெளியீடு செய்தார். அதுமட்டுமல்லாமல் அவர்தம் நண்பர்கள்.. உறவினர்கள்.. வாடிக்கையாளர்கள் எல்லோருக்கும் இலவசமாய் அனுமதிச்சீட்டு வழங்கி.. அசத்திவிட்டார்!

அட.. அந்தப் படத்தில் என்ன இருக்கிறது சார்? அதுதான் நீங்கள் பலமுறை வேறு பார்த்துவிட்டேன் என்று கூறுகிறீர்களே என்கிற குரல்கள் எழாமல் இல்லை! புரட்சி.. முழக்கம், உரிமையின் குரல்கள்.. சமுதாய அவலங்களைத் தட்டிக்கேட்கும் துணிவு, விவேகம், கடமை, அன்பு, இவையெல்லாம் நாங்கள் படித்த பயிலகம் எம்.ஜி.ஆர் படங்கள் அல்லவா? தனது ஒரு திரைப்படத்திலும்கூட எம்.ஜி.ஆர் மது அருந்தியவராக நடித்ததே இல்லையே.. இது எப்படி சாத்தியமானது? அப்படி ஒரு சில காட்சிகளில் நடிக்க வேண்டிவந்தபோதும்.. அதில் புதுமைகள் புகுத்தி.. மதுவின் கொடுமைகளை மக்கள் அறியச் செய்த மகோன்னத மனிதரன்றோ? அவர்தந்த பாதையில்.. நடைபோடும் என்னைப்போன்ற இலட்சக்கணக்கான ரசிகர்கள்.. இன்றும் மதுவின்பக்கம் சென்றதில்லை.. இந்தப் பெருமைக்கெல்லாம் அவர் ஒருவரே காரணம்!! புகைப்பிடிக்கும் பழக்கத்தையும் அவர் இதே பட்டியலில் வைத்து எங்களையெல்லாம் அந்த அவசியமற்ற பழக்கத்திலிருந்தும் காப்பாற்றிய பெருமையும் எம்.ஜி. ஆர் ஒருவருக்கே!!

ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் என்று நினைக்கும்போதே தேனினும் இனிய அந்தப் பாடல்கள் நினைவுக்கு வருகின்றன! இசையமைப்பாளர்களின் கைவண்ணமும் கவிஞர்களின் கற்பனைகளும் கலந்த கலவைதான் பாடல்! அது கதைக்கு முற்றிலும் பொருந்திப்போக.. பாடிய குரல்கள் அதை இன்னும் மெருகேற்றிவழங்க.. நாம் வாழ்கின்ற இந்த காலக்கட்டத்தில் நம் காதுகளை கெளரவித்த.. நெஞ்சங்களை நிறைத்த இனிய பாடல்கள் வரிசையில் இந்தப் படத்தின் ஏழுபாடல்களும் அமோகமாக கொடிகட்டிப் பறக்கின்றன! பொதுவாகப் படத்திற்கு இசையமைப்பாளர் அல்லது இசையமைப்பாளர்கள் இசை அமைப்பார்கள் என்று சொல்வார்கள்.. என்னைப் பொறுத்தவரை ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி ஆகிய இருவரும் இசை வேட்டை நடத்தியிருக்கிறார்கள் என்றே சொல்லுவேன். இந்தப் படம்தான் இருவரும் இசையமைத்த கடைசிப்படம் என்பதும் வரலாற்றுப் பதிவாகிவிட்டது காலத்தின் நிர்ணயம்.

பாடல்கள் எழுதிய விதம்.. வரிகளின் ஆட்சி.. இசையின் மேன்மை.. பாடிய குரல்கள்.. நடித்த இரண்டு தங்கங்கள்.. என்று சொல்லிக் கொண்டே போகலாம்.. இயக்குனர் வரையிலான இந்தப் பெருமைக்குரிய பட்டியலில் ஒளிப்பதிவாளர் முதல் ஒலிப்பதிவாளர் வரை அனைவருக்கும் பங்குண்டு! காட்சிப்படைப்புவகையில் அந்தக் காலத்தில் விளைந்த இந்த அற்புதவிளைச்சல் இன்றைக்கும் திரைத்துறை சார்ந்தோருக்கு வியப்பின் எல்லைதான் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை!

பருவம் எனது பாடல்..

இப்படத்தில் முதல் பாடல்! முத்தான பாடல்! குழுவினர் நடனத்தோடு அந்தக் குதூகலம் அரங்கேறுகிறது! மாடமாளிகையின் மைய மண்டபம்.. சித்திரம்போல் எழுதிவைத்த சிங்காரியின் வருகையை கலைநுணுக்கங்களோடு கண்ணுக்கு விருந்தாக்கிப் படைக்கிறது! இயக்குனர் பி.ஆர்.பந்துலுவின் கற்பனை காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆம்.. அதோ வருகிறாள் கதையின் நாயகி.. அறிமுகக் கட்டத்தை இப்படி ஆராதிக்க ஒரு கவிஞனால் மட்டுமே முடியும் என்று கருதிதான் பாடல்காட்சியாக அமைக்கப்பட்டிருக்கிறது. வரிகளை வரிந்து கட்டிக்கொண்டு எழுதியிருக்கிறார் கவிஞர் வாலி வண்ணத்தமிழில் வசந்தவிழா எடுக்க.. எண்ணங்களில் கோலம்வரைந்த இயக்குனர் கைவண்ணம் நம் கண்களில் விரிகிறது! அழகு மயிலொன்று ஆடிவருகிறது!

கருணை எனது கோயில்.. கலைகள் எனது காதல்!

முதல் நான்கு வரிகளுக்கு முத்திரை பதிக்கும் காட்சிப்படிமங்கள்!

கன்னித்தீவின் இளவரசி.. கட்டழகுப் பெட்டகமாய்.. கலைகளையெல்லாம் கற்றுக் காத்திருக்கிறாளோ.. கதையின் நாயகன் வருகைக்காக!

50 வருடங்களுக்குப் பிறகும் அன்று பூத்தமலர்போல வாடாமல் இருக்கிற பவளமல்லிகை.. தமிழ்த்திரையிசைப் பாட்டுச்சுரங்கத்துள் கொட்டிக்கிடக்கும் முத்துமாலை! காதுகளை மட்டுமல்ல! இதயங்களையும் கவனமாக வைத்துக் கேளுங்கள்! எப்படியும் களவாடப்பட்டிருக்கக்கூடும் உங்கள் இதயம்!

பருவம் எனது …

பருவம் எனது பாடல்paruvam enathu paadal
பார்வை எனது ஆடல்
கருணை எனது கோயில்
கலைகள் எனது காதல்
கருணை உனது கோயில்
கலைகள் உனது காதல்

இதயம் எனது ஊராகும்
இளமை எனது தேராகும்
மான்கள் எனது உறவாகும்
மானம் எனது உயிராகும்
மான்கள் உனது உறவாகும்
மானம் உனது உயிராகும்
தென்றல் என்னைத் தொடலாம் –
குளிர்த்திங்கள் என்னைத் தொடலாம்
மலர்கள் முத்தம் தரலாம் –
அதில்மயக்கம் கூட வரலாம்
(பருவம்)

சின்னஞ்சிறிய கிளி பேசும்
கன்னங்கரிய குயில் கூவும்
பறவையினங்கள் துதி பாடும்
பாவை எனக்குத் துணையாகும்
பறவையினங்கள் துதி பாடும்
பாவை உனக்குத் துணையாகும்
பழகும் விதம் புரியும் –
அன்பின்பாதை அங்கு தெரியும்
பயணம் அதில் தொடரும் –
புதுவாழ்க்கை அங்கு மலரும்

ஏன் என்ற கேள்வி ?
பகுத்தறிவு என்னும் ஆறாம் அறிவைப்பெற்ற மனிதர்கள் நாம்! எது சரி.. எது தவறு? ஏன் இப்படி? என்னும் வினாக்களின் அணிவகுப்பு நெஞ்சில் எழுந்துகொண்டேயிருக்கும்! இதற்கான விடையை அறிந்து அதில் நல்லவற்றைத் தேர்ந்தெடுத்து, அல்லவனவற்றை துறந்து வாழ்பவர்கள் எத்தனை பேர்? இதோ கதையின் நாயகன் அடிமைப்பட்ட வீரர்களுக்கு தலைமை தாங்க வேண்டிய சூழலில் அவர்கள் மனதிற்கு தேவையான பாடங்களை.. அறநெறிகளை.. தர்ம சிந்தனைகளை, புரட்சி விதைகளை.. பொறுமையின் அவசியத்தை.. பொங்கும்தமிழில் எடுத்துவைக்க.. அதற்கேற்ற இசையும் தன் சிம்மக்குரலால் இப்பாடலுக்கு சிறப்பு சேர்த்திட்ட டி.எம்.செளந்திரராஜன் அவர்களை எத்தனைப் பாராட்டினாலும் தகுதியானவராக.. வீறுகொண்ட கர்ஜனை விவேகத்துடன் அரங்கேறும் காட்சியிது! மக்கள்திலகத்தின் வாழ்க்கைப்பாதையில் இதுபோன்ற பாடல்கள்தான் அவரின் வெற்றிப்படிகள் என்பது மறைக்கப்படாத ரகசியமாகும்!

ஏன் என்ற கேள்விen endra kelvi
இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற எண்ணம்
கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை
பகுத்தறிவு பிறந்ததெல்லாம்

கேள்விகள் கேட்டதனாலே
பகுத்தறிவு பிறந்ததெல்லாம்

கேள்விகள் கேட்டதனாலே
உரிமைகளை பெறுவதெல்லாம்

உணர்ச்சிகள் உள்ளதனாலே
உரிமைகளை பெறுவதெல்லாம்

உணர்ச்சிகள் உள்ளதனாலே
ஏன் என்ற கேள்வி

இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற எண்ணம்

கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை

காலா காலத்துக்கு இப்படியே ஒழசிக்கிட்டே இருந்து
இந்த கன்னி தீவு மண்ணுகே எரு ஆக வேண்டியாது தானா ?
நம்ப சொந்த ஊருக்கு போவது எப்போ ?
இளவரசி முகத்த பார்ப்பது எப்போ ?
புள்ள குட்டி மொகத்த பார்ப்பது எப்போ ?
இன்னும் எத்தன நாளைக்கு தான் பொறுமையா இருப்பது ?

ஓர் ஆயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே
நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே
ஓர் ஆயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே
நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே
வரும் காலத்திலே நம் பரம்பரைகள்
நாம் அடிமை இல்லை என்று முழங்கட்டுமே

ஏன் என்ற கேள்வி

இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற எண்ணம்

கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை

பூங்கொடி , சீக்கிரமே இந்த தீவு சொர்க்க பூமி ஆகிவிடும் போல் இருக்கின்றது
எல்லாம் இந்த அடிமைகளின் உழைப்பால் தானே ?
சந்தேகம் என்ன ?
நமக்கு வாய்த்த அடிமைகள் மிக மிக திறமைசாலிகள்
ஆனால் வாய் தான் காது வரை இருக்கிறது

நீர் ஓடைகள் கோடையில் காய்ந்திருக்கும்
மழை காலத்தில் வெள்ளங்கள் பாய்ந்திருக்கும்

நீர் ஓடைகள் கோடையில் காய்ந்திருக்கும்
மழை காலத்தில் வெள்ளங்கள் பாய்ந்திருக்கும்
நம் தோள் வலியால் அந்த நாள் வரலாம்
அன்று ஏழை எளியவர்கள் நலம் பெறலாம்
முன்னேற்றம் என்பதெல்லாம்

உழைப்பவர் உழைப்பதனாலே
கடமைகளை புரிவதெல்லாம்
விடுதலை வேண்டுவதாலே

ஏன் என்ற கேள்வி
இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற எண்ணம்
கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை
ஏன் என்ற கேள்வி
இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற எண்ணம்
கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை

http://www.youtube.com/watch?v=qAHlMihcxzU

படத்தில் வரும் ஒரு திரைப்பாடல் என்று விட்டுவிடக்கூடிய பாடலா இது? பள்ளியில் கல்லூரிகளில் மாணவ மாணவியருக்கு உணர்த்தப்படவேண்டிய பாடமிது! அடிமைகளின் வாழ்வில் பரவ வேண்டிய வெளிச்சக்கீற்று இந்தப்பாடலில் தெரியவில்லையா? அவர்களின் வாழ்க்கையில் தன்னலம் இல்லாத தலைவனைப் பெற்றுவிட்டால்.. சுதந்திரப் போராட்டம் வெற்றியைத் தொடுவது நிச்சயம்தானே! அருமையான சூழ்நிலைக்கு ஏற்ப.. எழுதப்பட்ட வரிகள்.. கவிஞர் வாலியைச் சார்ந்தது! பாடலின் இடையே வருகின்ற வசனங்கள் ஆர்.கே.சண்முகம் அவர்களுடையது. எத்தனைப் பொருத்தமாய்.. இந்தப்பாடலில் வசனங்கள்!! மறக்க முடியாத மாணிக்க வரிகள் மனதில் பதித்துக்கொண்டால் புதுமை உணர்வுகள் வளரும்! புரட்சியின் பூரண அர்த்தங்கள் விளங்கும்!!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *