மீனவர்களை விடுதலை செய்யாவிடில் மீனவர்களுடன் இணைந்து போராட்டம்- சீமான் அறிக்கை – செய்திகள்

2

இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 23 தமிழக மீனவர்களையும், உடனடியாக விடுவி்க்கா விட்டால், தமிழக மீனவர்களைத் திரட்டி அவர்களுடன் இணைந்து மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று ‘நாம் தமிழர் கட்சி’த் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கை:

“இது வரை 550 க்கும் மேற்பட்ட மீனவர்களைக் கொலை செய்தும் ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரங்களைச் சிதைத்தும் அவர்களைச் சித்திரவதை செய்த சிங்களப் படை சிறிது காலம் தனது வெறியாட்டத்தை நிறுத்தி வைத்திருந்தது.

சில நாட்களுக்கு முன் இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள், முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்ததன் பேரில் 16-ந் தேதி விடுதலை செய்யப்பட்டனர். இப்பொழுது மீண்டும் சிங்களக் கடற்படை தனது அட்டூழியத்தையும் வெறித்தனத்தையும் ஆரம்பித்துள்ளது.

ராமேசுவரத்தில் இருந்து 20 ஜுன் 2011 அன்று காலை 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 2500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நடுக்கடலில் வலைகளை விரித்து, மீன்களை பிடித்துக் கொண்டிருந்த பொழுது, அங்கு வந்த சிங்களக் கடற்படை வீரர்கள் நமது மீனவர்களை அச்சுறுத்தியும் மிரட்டியும் மிகக் கடுமையாக நடந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் சிந்தாதுரை, செல்வம், பேரின்பம், அழகேசன், கணேசன், முத்துக்காளை, ராம கிருஷ்ணன், ராமசாமி, உள்பட 23 மீனவர்களை சிறைப்பிடித்துச் சென்று, மன்னார் கடற்படை முகாமில் வைத்துள்ளது.

இந்த அட்டுழியத்தை, இந்த முறையாவது நாம் அனைவரும் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும். இந்த நிலை தொடர நாம் அனுமதிக்கக் கூடாது.

கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும், அடிக்கடி கொலை வெறித் தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படையைக் கண்டித்தும் இராமேசுவரம் பகுதி மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்து அதன்படி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லாததால் விசைப்படகுகள் ராமேசுவரம் துறைமுகம், பாம்பன், தங்கச்சிமடம் கடற்கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சுமார் 25 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இந்த மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கைளை எடுக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய அரசு இதில் உடனடியாகத் தலையிட்டு தனது சிறப்புத் தூதரை இன்று உடனடியாக கொழும்பு அனுப்பி சிறைபிடிக்கப்பட்ட 23 மீனவர்களையும் மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் ராமேசுவரத்தில் போராட்டம் நடத்தும் மீனவர் அமைப்புக்களுடன் இணைந்து நாம் தமிழர் கட்சி மிகப் பெரிய போராட்டமாக முன்னெடுக்கும்”. என்று எச்சரித்தார்.

இதற்கிடையே, சென்னையில் இலங்கைத் தூதர் தமிழக அரசுக்கு கொடுத்துள்ள அறிக்கையில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள 23 மீனவர்களும் மன்னார் கடற்படை முகாமில் நல்ல முறையில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்களை விடுதலை செய்ய விரைவில் நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, இராமேசுவரம் பகுதி மீனவர்கள் தங்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.  இவர்கள்,  24 ஜுன்,  2011 முதல் கடலுக்குச் செல்வார்கள்.

 

 

படத்திற்கு நன்றி :  geethu.net

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “மீனவர்களை விடுதலை செய்யாவிடில் மீனவர்களுடன் இணைந்து போராட்டம்- சீமான் அறிக்கை – செய்திகள்

  1. தமிழ்நாட்டுத் தமிழனுக்கு ஒரு முதுகெலும்புள்ள தலைவனாக திரு.சீமான் கிடைத்துள்ளார். இவர் பின்னால் அணிதிரள அனைவரும் முன்வரவேண்டும்

    D.மார்டீன்(ஓவியன்), கோவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *