வரைந்த ஓவியமும் ‘’வந்தாள் பொன்மகள்’’ வெண்பாக்களும்….

0

 

ரவிவர்மா ‘’மகாலஷ்மி’’ ஓவியம் 1974 ல் வரைந்தது….சு.ரவியும் ,நானும் இஞ்சினீரிங் கொஞ்சனீரிங் படித்த பொன்னான பொறியியற்க் காலம்….எத்திராஜு முதலித் தெருவில் வெங்கடாசலபதிக்கு போட்டியாக நாமம் இட்டுக் கொண்டிருக்கும் பெரியவர் கடையில் ரவிவர்மா படங்களைப் பார்த்து மனதில் பதிய வைத்துக் கொண்டு அவசர அவசரமாக வீடு வந்து வரைவோம்….காக்கை சிறகில் மட்டுமல்ல பசுஞ்சாணி வண்ணத்திலும் பரம்பொருளை பார்த்த காலம்….சு.ரவியும் நானும் சுகமாய் வாழ்ந்த அந்நாட்களை பிற்பாடு விரிவாக பதிவு செய்கிறேன்….கிரேசி மோகன்….
———————————————————————————————————————

பொன்மகள் வந்தாள்….மூன்று தேவியர்க்கும் சேர்த்து முதற்பாடல்

crazy1

“படைத்திடும் வாணி துடைத்திடும் துர்க்கா
இடைபுகுந்து காக்கும் இவளும் -சடைப்பின்னல்
ஆக இணைந்து அலகிலா ஆட்டத்தை
பாகப் பிரிவினையில் பார்ப்பு”….

“பத்தவ தாரப் பணிக்குதவ பூதேவி,
நித்திரை யோகமோ நீளாவால், -பத்தர்க்கு
சேர அருள்சகாயம் ஸ்ரீதேவி , ஆகமால்
தாரங் களின்தயவால் தான்”….

 

” காப்பு”
——–
“அகழ்வாரைத் தாங்குகின்ற அக்காள்முன் வந்த ,
முகிழ்வா ரிசமமர்ந்த மாமி -புகழ்பாட
பாழியன்தோள் மாமன்தோப் புக்கரணம் போட்டபின்பு
ஆழியைத்தந் தோன்தாள் அரண்”….
சமர்ப்பணம்
—————-
“அன்னை இருந்த அசோகவனம் சேர்ந்தன்று
அண்ணல் கணையாழி தந்தவள் -முன்னுச்சி
சூடா மணிகொணர்ந்து ,தேடும் இராகவன்
பாடொழித்தோன் பாதசமர்ப் பிப்பு”….
“கஷ்டம் கலைந்திடும் , இஷ்டம் இணங்கிடும்
அஷ்ட இலக்குமிகள் ஆசியால் -இஷ்டமாய்
சுக்குமி ளக்குதி திப்பிலி என்பதின்றி ,
லக்குமி தாராய் லயம் “….(1)

“கள்ளம் கபடின்றி, கையேந்திய சங்கரர்க்கு
உள்ளங்கை நெல்லி உவந்தளித்த -உள்ளத்தின்
வீரதர் மத்தால் வியந்தவர் வேண்டிட
கூரையைப் பிய்த்தவளைக் கொஞ்சு”….(2)

“சுதாமன் அவலுக்கு சொர்ணங்கள் தந்தாய்
கதாமகன் கீர்த்தியை கண்ணனுக்(கு) -இதோவென்று
பொன்னோடு பேரை புறக்கணித்த பூவையே
நின்னோடு சேர்ந்தகண்ணன் நார்”….(3)

“பொன்வைக் குமிடத்தில் பூவைப்போர் மீதிவள்
கண்வைக்க கஞ்சனும் கர்ணனே -முன்வைத்தக்
காலைப்பின் வைக்கா கடுமுயற்சி யாளர்க்கு
வேலை திருவினையாள் வாகு”….(4)

“தான மவள்லீலை தர்ம மவள்வேலை
மானம் புகுந்து மகாபலி -தானமிட்ட
கர்வத்தை மூவடியைக் கொண்டு அடக்கிய
தர்மத்தின் தாரம் திரு”….(5)

“தானம் கொடுத்தமாட்டின் தாடை பிடிப்பது
ஈனம் எனநூல் இயம்பினாலும் -மானம்
பெரிதென்று எண்ணாமல் பிச்சை எடுப்போரை
சிறிதென்(று) ஒதுக்குவாள் சீர்”….(6)

’’பண்டிதர் பின்தொடர பிச்சைக்குப் போயன்று
கொண்டவூசிக் கஞ்சியை உண்டபின் -மண்டையில்
கையோ(டு) அகந்தை கழவு ரமணரை
மெய்யோடு சேர்த்தாள்பொன் மாது’….(7)

“அக்காள்மூ தேவி அயர்ந்துறங்கும் இல்லத்தில்
நிக்காள்ஸ்ரீ தேவிஎன்பர் நூலோர்கள் -முக்காலம்
தூங்கும் பெருமாளின் தூய திருவடிகளை
தாங்குவதால் தூங்காமல் தூங்கு”….(8)
“பூணுமய பக்திக்கே பூரித் தளித்திடும்
ஏனைய செல்விகள் ஏற்றத்தை -நாணய
நாயகி ஏற்பது நாற்புற சுத்தத்தை
போயகி லத்தை பெருக்கு”….(9)

அலையில் பிறந்து அலையில் புகுந்த
அலைதாண்டா பத்தினியை, அப்பொன் -சிலையை
விழியில் பதித்து விரலால் ஜபிக்க
கிழியும்பார் அவ்வறுமைக் கீத்து….(10)

வித்தைக்கு வேண்டும் வினயம், அதிதீர
சித்தத்தில் வேண்டும் சரிசமம் -சுத்தத்தை
வேண்டுவாள் செந்திரு, வாசல் தெளிப்போர்க்கு
யாண்டும் வறுமை இல….(11)

பட்ட கடனால் பயந்தோடி பாலாஜி
எட்டா மலையுச்சி ஏறிட -வட்டி
அசலோடு சேர்த்தளித்தும் அந்தோ புகழில்
முசலானாள் ஆமைக்கு முன்….(12)

வானுகந்து வந்தீரே வகுண்ட வாசலில்
நானகன்று சூரியாய் நிற்பதற்கு -தானமொன்று
செய்ய வருவாளே ஸ்ரீமன்நா ராயணரின்
கையைப் பிடித்து கனகு….(13)

பாங்கியின் யோகத்தால் பார்த்தனுக்கு பாரதத்தில்
சாங்கிய யோகத்தைச் செப்பியவன் -நீங்கிய
போதுன்னை ராமன் புலம்பினான் பார்த்தனாய்
யாதுமான லக்குமி யே….(14)

“தரமும் தரத்தில் நிரந்தரமும், செய்யும்
கருமத்தால் ஏழைக் குதவும் -கரமும்
இருப்பவர் வீட்டை இமையாது காப்பாள் ,
திருப்பள்ளி கொள்ளாள் திரு”….(15)

“பயில்வான் இறந்தாலும் , பண்டிதனாய் வாழ்ந்த
பயில்வோன் இறந்தாலும் பைசா -துயில்வோன்மேல்;
வீடு வரையுறவு வீதி வரைமனைவி
காடு வரைநெற்றிக் காசு”….(16)

“அவலை சுசீலை அளிக்கக் குசேலன்
கவலை களைந்தான் கிருஷ்ணன்; -அவளை
மணந்ததால் அன்றோமால் மாங்கல்ய பிச்சை
பணம்தந்து பெற்றான் புகழ்”….(OR ) -அவளை
வரித்ததால் தானேமால் வாரிக் கொடுத்து
தரித்திரம் தீர்க்கத் துணிபு”….(17)

“நாத்தனார் வீரத்தை , கூத்தனூர் கல்வியை
ஏத்திட ஏற்றம்தான் , என்றாலும் -பூத்தமலர்
செவ்விதழின் மீதேளும் செல்வியருள் இல்லையேல்
இவ்வுலகில் இல்லை இருப்பு “….(18)

“மஞ்சள் அரிசியில் மங்கல வாத்யத்தில்
வஞ்சியர் கல்யாண வைபவத்தில் -நெஞ்சணைந்த
தாலியில் தங்கமாய்த் தங்கியவள் தாம்பத்ய
வேலியைக் காக்கும்செல் வி”….(19)
“சித்திரம் கைப்பழக்கம் , செந்தமிழ் நாப்பழக்கம்
பத்தரை மாத்துப்பொன் பெண்பழக்கம் -உத்தம
பக்தி வயலில் புளகநீர் பாய்ச்சிட
முக்திநெல்லாய் விட்டெழும்உன் முன்”….(20)

“தங்கநிற வண்டுகள் தாதுக்காய் மொய்த்திட
பொங்கும் புளகமலர் போல்மாலின்-அங்கம்
புளகத்தால் கூச்செறிய, பார்வையால் உண்ணும்
அலகொத்தக் கண்ணாள் அவள்”….(21)

நீல மலர்நாடும் நந்தவன வண்டேபோல்
நீள விழியிரெண்டும் நாரணன் -கோலத்தைக்
கொண்டதோர் நாணத்தால் ,காணும் விருப்பத்தால்
அண்டமாய்ச் சுற்றும் அலைந்து….(22)

ஏழை சிரிப்பில், எடுப்பார்கைப் பிள்ளையின்
பேழைவாய் பொக்கையின் புன்னகையில், -வாழையடி
வாழையாய் வந்த விகல்பமில்லா வேட்டதிர்வில்,
தாழை எனமணக்கும் தாய்….(23)

“உச்சிவான் தோன்றி உறுமும் இடிமின்னல்
பச்சை மலையில் பளிச்சிடலாய் – அச்சுதன்
மாலின் மரகத மார்பில் மகாலட்சுமி
பாலின் நிறத்தில் பொலிவு”….(24)

மடைதிறந்த வெள்ளமாய் மங்கலப் பார்வை
கடைதிறந்து காணமயிர் கால்கள் -புடைத்தெழ
எல்லையில் லாயின்பம் எம்பிரா னுக்களிப்போய்
அல்லலில்லா வாழ்வை அளி….(25)

“கவுத்துவம் பூண்டவன் , கொன்று மதுவைக்
குவித்தவன் யோகத்தைக் கண்ணால் -கவுத்தவளே,
நீலமணி பட்டதால் நீலமுற்ற பார்வையை
பாலனென் மீது பதி”….(26)

’’கைடபனைக் கொன்றவன், கார்முகிலாய் சேடன்மேல்
மெய்படரச் சாய்ந்தவன்மேல் மின்னலாய் -மையடர்ந்த
பங்கயக் கண்களால் பார்த்தது போதுமென்மேல்
திங்கள் விழியைத் திருப்பு’’….(27)

“நாணுமுன் கண்களை நாணாக்கி மன்மதன்
வேணுவின் மீதெய்து வெற்றியைப் -பூணுவான்;
பாற்கடல் தோன்றிய பாவையே பார்வையை
ஓர்கணம் என்மீ (து ) உரசு”….(28)

பயிரான பூர்வஜென்ம பாவங்கள் போக்கும்
அயிரா வதத்தில் அமர்த்தும் -உயிராக
எண்ணினாள் தங்குவாள், ஏத்தினால் தாங்குவாள்
கண்ணினால் காவல் கொடுத்து….(29)

 

 

“அத்தகைய பார்வை அடியேன் மீதுபட்டால்
எத்தகைய செல்வம் எனைச்சேரும் -குத்தகையாய்
பத்தினி யேநீ, படியில்லை பாற்கடலில்,
இத்தரைக்குத் தாண்டிட ஏகு”….(30)

 

நூறிடர் தீர்த்திட பாரதம் செய்தவனின்
மாரிடம் கொண்ட மகாலக்‌ஷ்மி -சோறிடும்
சுத்தம் எதிர்பார்ப்பாள் செல்வம் அளித்திட
அத்திருக்(கு)ஆ சாரம் அணி….(31)

“குப்பையில் மாணிக்கக் கல்லாய் மிளிர்ந்திடுவாள்
அப்பழுக்கு சேறிலவள் அல்லியாவாள் -குப்பனின்
வீட்டுச் சுவரில் வரைந்தாலும் வந்தருள்
கூட்டும் வரலக்ஷ்மி காப்பு”….(32)

“சொர்ண நிறவதனம், செம்மா துளையதரம்
வர்ணனைக்(கு) எட்டா வடிவழகு – கர்ணனை
மிஞ்சும் உதார மனத்திற்க்(கு) உரியவளால்
பஞ்சும் பசும்பொன்னாம் பார்….(OR )
பஞ்சுமா கும்மாணிப் பொன்”….(33)

“அத்தன் அரிமால் அவதா ரமாய்யெடுத்த
பத்தையும் செய்த பணமிவளே -சத்த
நரசிம்மன் சாந்த நிலையுற்றார் ,செல்வி
வரசிம்மன் ஆனான் வரம்”….(34)

“பெண்ணொருத்தி நின்றிடுவாள், பின்னிருந்து ஆடவனை
முன்னிறுத்தி ஈவாள் முழுவெற்றி -கண்ணுறுத்தும்
கானகத்து அல்லிலன்று காகுத்தன் ,பின்தொடர்ந்த
ஜானகியால் கண்டான் ஜெயம்”….(35)

நீல மலர்நாடும் நந்தவன வண்டேபோல்
நீள விழியிரெண்டும் நாரணன் -கோலத்தைக்
கொண்டதோர் நாணத்தால் ,காணும் விருப்பத்தால்
அண்டமாய்ச் சுற்றும் அலைந்து….(36)

ஏழை சிரிப்பில், எடுப்பார்கைப் பிள்ளையின்
பேழைவாய் பொக்கையின் புன்னகையில், -வாழையடி
வாழையாய் வந்த விகல்பமில்லா வேட்டதிர்வில்,
தாழை எனமணக்கும் தாய்….(37)

உத்தம பத்தினியின் உச்சந் தலைவகிட்டில்
பத்தும் செய்யா பணமுடிப்பில் -சுத்தமாய்
சாணத் தெளிப்பில்ஸ்ரீ சூர்ண நுதற்பிறையில்
காணலாம் பொன்மகளின் கால்….(38)

கன்றை விளிக்கும் கறவையின் கத்தலில்
நன்றுரைக்கும் நல்லோர் நயவாக்கில் -வென்று
முழங்கிடும் வீரத்தில், வேதாந்த மூச்சில்
புழங்கிடும் பொமகள் பேச்சு….(39)

யாப்பலங் காரத்தில் ,காப்புக் கவிதையில்
மூப்புணர்ந்தோர் போக்கின் முதிர்ச்சியில் -நாப்பிளக்கப்
பொய்பேசா நாவில், புறங்கூறா புத்தியில்
தைபூசத் தான்மாமி தேசு….(40)

ஏரோட்டி வேர்வையை, ஏமாந்த காதலால்
நீரோட் டமான நினைவுகளை -போராட்ட
ஊழியன் கூலி உயர்விழந்த துக்கத்தை
தோழியாய் பொற்கை துடைப்பு….(41)

பலியின் தலைவைத்துப் பாதாளம் பாய்ந்து
கலிதீர்த்தக் காலிலிவள் காசாய் -ஒளிந்திருந்தாள்.
பாதாளம் பாயும் பணமென்று சொன்னதன்
ஆ!தாரம் அன்றோ அவள்….(or)
ஆ!தாரம் அன்னை அருள்….(42)

பரம்பொரு ளாதாரப் பொன்மகள் பார்வை
தரம்தரும்சே தாரம் தவிர்த்து -வரம்தரும்
செய்கூலி பக்திக்கு. செய்யவளால் உன்பணப்
பைகாலி ஆகாது பார்….(43)

“பணப்பை அரவம் படுத்த பொருளை
கணத்தும் பிரியாத கஞ்ச -மனத்தாளே,
ஓரக்கண்ணால் என்னை ஒருமுறை பார்த்தெனக்கு
சேரச்செய் செல்வச் செழிப்பு”….(44)

வாளாழி வெண்சங்கு வில்லும் கதாயுதமும்
தோளாலும் தர்மத் தலைவனை -பாலாழி
தோன்றிய பொன்மகள் தேர்ந்தெடுத்தக் காரணத்தால்
மூன்றிலவன் ஆனான் முதல்….(45)

“பாக்கள் புனைந்திடுதல் பாரதியே ஆனாலும்
வாக்கில் பொருளாக வந்தமர்ந்து -ஆக்குவள்
ஆசுகவி தம்மை அகிலத்தில் செல்வந்த
காசுகவி யாய்பார் கவி”….(46)

“கருவளர் பிள்ளையை காத்தவன் மார்பில்
மருவத் ஸமாக மிளிரும் -திருவளர்
கண்தானம் கொண்டதோர் காளைக்கும் வாய்த்திடும்
சந்தான செல்வச் சிறப்பு”….(47)

“கற்காத பேருக்கும் கோழைக் குமருளை
துர்க்கா சரஸ்வதியர் தாரார்கள் -தர்காதி
தர்கத்தை விட்டுநீ தாமசமாய் நின்றாலும்
நற்காவல் பொன்மகள் நட்பு”….(48)
“சீதையாய் ராமன்பின் சென்றளித் தாள்ஜெயத்தை
கோதையாய் கோவிந்தன் கைப்பிடித்தாள்-ராதை
யாகி ரசித்தாள் யதுகுலக் கண்ணனை
பாகிமாம் பாதாம் புஜம்”….(49)

“பிருகு குலத்தில் பிறந்த திருவே
உருகும் அடியார்க் (கு ) உதவ -பெருகும்
அறம்பொருள் இன்பம் அளிப்போய் , எனக்கு
வரம்தரவா வீட்டுக்குள் வீடு”….(50)

“சிங்கம் அரியா சனத்து மடியமர்ந்து
பொங்கும் அவன்வெகுளி போக்கினோய் -தங்க
வதனத்து தாயே வரவேண்டும் மாலற்
புதனோடு பொன் சேர்ந்தாற் போல்….(51)

“வைகுண்ட வாசல் விளக்கேற்றும் பொன்ஒளியே ,
பைகொண்ட பாற்கடல் பாம்பணைதோன் -மெய்கொண்ட ,
ஐவர்க்காய் அன்று அலைந்த களைப்பகல
கைவைத்துத் தீர்ப்போளே காப்பு”….(52)

வீரென்று காற்று வீசப் பொழிந்திடும்
நீருண்ட மேகம் நிகர்த்தது; -சோறுண்டு
நாளான சோகத்தை நீக்கிடும் நாரணனை
தாலாட்டும் தாய்விழிகள் தான்….(53)

“புத்தி பலம்வீரம் பொன்புகழ் பேருனை
சுத்தி வலம்வரும் செல்விபதம் -ஒத்தி
விழிநீர் அபிஷேகம் வார்த்திட பக்தி
வழிகூறும் முக்தி வரை”….(54)

பொன்மகள் வந்தாள் (OR ) திரு விளையாடல்….
“வேதம் படித்தென்ன , வேதாந்தம் கற்றென்ன
சீதரன் பாதம் சொடுக்கெடுப்போள் -பாதம்
பணிந்திடு மானுடா, பாரதன்பின் உன்னுள்
கனிந்திடும் காண்முத்திக் காய்”….(55)

“கற்பை நெருப்பிலிட்ட காகுத்தன் சோதனையில்
பொற்பூ புகுந்தெழுந்தாள் பூரணமாய் -அற்ப
இராவணன் தீவெரிய இட்டனள் தீயை;
இராகவன் தூதன் எரிப்பு”….(56)

“ஆடி வெள்ளியில் தேடிவரும் தங்கமுனை
மூடி உறங்காதே முன்கதவை -ஏடி !
எழுந்தேலோ ரெம்பாவாய் ,எம்பிரான் பள்ளி
விழுந்தாளை வாழ்த்தி வணங்கு”….(57)

“நற்கா ரியப்பயன் , நான்மறை நுண்பொருள்
பொற்கம லம்வீற்ற பேரெழில் -நற்குணங்கள்
பூண்ட நிறைவு , பராசக் தியினம்சம்
வேண்டும் அடியார் வரம்”….(58)

“குமுத வதனம் ,கடல்கடைந்து வந்த
அமுத வளர்மதி அக்காள் -துமிதம்
தெறித்திடும் பாற்கடலில் தூங்கும் பெருமாள்
வரித்திடும் செல்வியை வாழ்த்து”….(59)

“சாரங்கன் வில்லுக்கு சக்தி அளித்திடும்
கூரம்புக் கண்களைக் கொண்டவளே , -ஓரங்கை
பங்கஜம் ஏந்தமறு பொற்கரத்தால் பாலிக்கும்
அங்குசம்நீ ஆனைநான் ஆள்”….(60)
“முனிபிருகு வாரிசே மூவா முகுந்தன்
பணிகாத்தல் பக்க பலமே -அணிபொற்
சரமே அவன்மார் சரோஜமே தாமோ
தரனுகக்கும் தாயே துதிப்பு “….(61)

“கண்பறிக்கும் காந்தி , கமல முகம்கண்கள் ,
விண்பரப்பில் எண்திசையாய் வீற்றிருந்து -மண்பிறப்பை
நோக்கி இயக்குவாள், நந்த குமாரனை
ஏக்கமுற வைக்கும் எழில்”….(62)

’’பொறிகளுக்கு எட்டாத போகமே, ஞான
வரிகளுக்(கு) உட்பட்ட வாக்கே -தறிகளுக்கு
ஈடான வேகத்தில் இற்றிடாத நூலாகத்
தேடும் ரமணஎளி தே’’….(63)

“வாள்எதிர்த்தால் நந்தகி , வில்எதிர்த்தால் சாரங்கி
ஆள்எதிர்த்தால் வெண்சங்கு ஆழிவட்டம் -கோள்எதிர்த்தால்
கால்எதிர்த்த கூற்றனின் மேலுதைத்த வீரதுர்க்கா
நூல்எதிர்த்தால் வாணிஅவள் நா”….(64)

“பேராசை பின்சென்று போனால் பெருநஷ்டம்
பாரீசன் போனானே பத்தினியால்- மாரீச
மானென் (று) அறிந்தும் மயர்வுற்ற ராமனைத்
தானன்று சோதனைசெய் தாள்”….(65)

“சாரங்கன் வில்லுக்கு சக்தி அளித்திடும்
கூரம்புக் கண்களைக் கொண்டவளே , -ஓரங்கை
பங்கஜம் ஏந்தமறு பொற்கரத்தால் பாலிக்கும்
அங்குசம்நீ ஆனைநான் ஆள்”….(66)

“சிலையை வளைக்கவந்த ஸ்ரீராமன் ,செம்பொன்
சிலையான சீதையால் சொக்கி -சிலையாகி ,
மற்றவர் வாய்ப்பை மறந்திட , கைவில்லை
இற்றிட வைத்தாள் இவள்”….(67)

“தரித்திரமாய் வந்தாடும் தாண்டவக் கோனை
உருத்தெரியா வண்ணம் ஒசித்து -சரித்திரமாய்
செய்தெதிர் காலத்தை சீரும் சிறப்புமாய்
பெய்தா தரித்தளிப்பாள் பொன்”….(68)

“கோதையாய் ,கோகுலக் கூட்டத்து தாதியாய்,
ராதையாய் வந்தவனை ரட்சித்தோள் -கீதையாய்
வாக்கில் புகுந்துவந்த பாக்கிய லஷ்மியே
காக்கும் கடவுளுக்கு காப்பு….(OR )
காக்கும் திருமஞ்சக் காப்பு”….(70)

’’ ஏறுக்கு மாறான நூறுக்கு தோல்விதர
பாருக்கு வந்தபளு போக்கிட, -போருக்குக்
காரண பாஞ்சாலி கூந்தல் விரிப்பிருந்து
நாரணர்க்கு செய்தாள் நலம்’’….(OR)
நாரணர்க்கு தோள்கொடுத்த நட்பு’’….(71)

“பொன்னாத்தா, தாமரைப் பூவாத்தா, தாங்கிடும்
மண்ணாத்தா, பின்வந்த சின்னாத்தா, -பண்ணாத்தான்,
நன்னாத்தான் பாடிய, நாச்சியார் காதலுக்கு
கண்ணாத்தா வாயிருந்து காப்பு”….(72)

“ஊடலில் பாற்கடலை உக்கிரமாய் பொங்கவைத்து
தேடலில்மால் வாட, திருவிளை -ஆடலாய்,
ஆடிவரும் தங்கமிவள் அக்காள் நிலத்தடியில்
ஓடிக் கரியாய் ஒளிவு”….(73)

“பாலுக்(கு) அழும்சேய்க்கு பார்வதியால் ஞானம்
கோலக் கவிக்கு கலைவாணி -சேலைத்
தலைப்பிட்டு செல்வத்தை தாமரையாள் தந்து
இலைமேல்நீர் பற்றை இடும்”….(74)

“ஆர்த்த கடலில் அரிமால் அவதாரப்
பூர்த்தி வரையில் பொறுமையாய் -காத்துக்
கிடக்கும் திருமகளே காக்கும் கடவுள்
எடக்கு மடக்கல்ல ஈது”….(75)

“அகலாது கல்லில் அடைந்து கிடந்த
அகலிகை மீண்டாள், அதனை -உகந்தது,
ஏகபதி நோன்பிருந்து ஏத்திய தாலன்றோ
ராகவன் பாத ரசம்”….(76)

“வண்ணான் சொல்ல வரித்த மனையிவளை
சொன்னான் வனத்திற்கு செல்லென்று -பின்னாளில்
தந்தை கதைசொல்ல தந்தாள் இருபிள்ளை
விந்தை இவள்செய் விதி”….(77)

அண்ணலும் நோக்கினான், அன்னையும் நோக்கினாள்
அண்ணலவன் நோக்கம் அவதாரம் -அன்னையவள்
நோக்கமோ அக்காள் நிலமடந்தை மாந்தரை
காக்கும் கருணை குணம்….(78)

“குத்திய காகத்தைக் குத்திய காகுத்தன்
பத்தினி தெய்வத்தைப் போற்றிடுவோம் -இத்தரையில்
இன்னல் வருங்கால் இவளைத் துதித்திட
அண்ணல் அபயம் அளிப்பு”….(79)

’’தீதண்டும் வேளை, திருக்கரம் ஏந்திடும்
கோதண்ட ராமன் கரம்பிடித்த -மாதண்டி(மாதை அண்டி)
வாழப் பழகிடு , ஆழ்நிலை யோகத்தில்
ஏழைக் குசேலா எழு’’….(80)

“ஏழுமலைக்(கு ) ஏதிந்த ஏற்றம் எனப்பார்த்தால்
கீழ்அமர்ந்த வல்லியிரு கைகளால் -ஊழ்அழுந்த
வந்தவரை கேள்வனின் வட்டிக் கடன்தீர்க்க
உந்துகிறாள் உண்டியலுக் குள்”….(81)

’’வள்ளென்று பேசாதே, தள்ளென்று கூறாதே
உள்ளொன்று வைத்து உரைக்காதே -கொல்லென்று
பூத்த கமலத்தாள் , பொல்லாத வர்களுக்கு
ஏத்த வளல்ல எதிர்’’….(82)

“எட்டுவகை செல்வங்கள் ,எட்டு வகைசுகங்கள்
கிட்டும் அவள்கடைக் கண்ணொன்று -பட்டால்;
முராரி சகியால் முகாரி இசைக்கும்
பராரிக்கும் வாழ்வில் பொருள்”….(83)

“வாழ்வில் பொருளிருந்தும் வாழ்வின் பொருளறியா
தாழ்வில் புகமறுப்பாள் தங்கமகள் -ஊழ்வினை
தந்த பொருளைத் திரும்ப எடுத்தழிப்பாள்
சிந்தையின் செல்வச் செறுக்கு”….(84)

குறுக்குவழி சென்று குவித்த பணத்தால்
செறுக்கு மரச்சரிவில் செல்லும், -கிறுக்குத்
தனம்பித்தம், செல்வி திருத்தாள் துதிக்கும்
மனம்தான்பொன் செய்யும் மருந்து….(85)

“வெண்பட் டுடுத்திப்பூ வெண்மல்லித் தார்சூடி
மென்பட்டுத் தாமரை மீதிருந்து -கண்கொட்டா
ஞானியர் காட்சியே , நாணமுறக் கண்ணளிப்பாய்
ஆணில் உயர்ந்த அரிக்கு”….(86)

“எட்டுதிக்கு யானைகள் ஏந்திவரும் கங்கையால்
அட்டமா லஷ்மிக் (கு ) அபிஷேகம் -கட்டுக்(கு)
அடங்கா கடலரசன் ஆருயிர் பெண்ணே
தடந்தோள் மாலனமு தே”….(87)

“வீரத் துணிச்சலை (தைரியம் ), வெற்றிக் கனிச்சுவையை ( விஜயம் )
ஈரப் பசைநெஞ்சுக்(கு) ஈகையை (தனம் )-சேரும்
மனைமக்கள்(சந்தானம்) வித்தை(வித்யா) முளைக்கதிர்(தான்யம்), எட்டு
முனையானை(அஷ்ட திக் கஜங்கள்) ஆதி முடிப்பு”….(88)

“வாரிசம் ஓர்கையில், வெண்குடை ஓர்கையில்
ஆறுதல் கூட்டும் அபயத்தை-வேறிரு
அங்கைகள் தாங்கிடும் ஆதி இலக்குமி
பங்கயத் தாளைப் பணி”….(89)

“அம்புஜஅங் கைகள் அபயவரம் முத்திரையில்
அம்புஜம் ஏந்தும் அடுத்தயிரு-அம்புஜங்கள்,
வெண்பட் டுடுத்துமைஸ் வர்ய இலக்குமியை
பொன்கொட்ட வேண்டிப் பணி”….(90)

“ஆறில் அபயம் அளித்திடப்பொன் , ஐந்தில்விண்
சோறமுதம், வில்லம்பு , சங்காழி -வாரிசத்தை
தாங்கும்செம் பட்டு தனலஷ்மி தேவியை
பாங்குற ஏத்திப் பணி”….(91)

“கன்னல் ,இரண்டு கமலம் ,கதைகதலி
செந்நெல் ,அபயவரம் சாதிப்பாள்-தன்எண்கை
தாங்கிபச் சையணிந்த தான்ய இலக்குமியை
பாங்கிஎன எண்ணிப் பணி”….(92)

“கஜங்கள் குளிர்விக்க ,கையம் புஜங்கள்
நிஜம்கொள் அபயவரம், நீள்அம்-புஜங்கள்
தரிக்கப்பச் சையணிந்த தாய்கஜ லஷ்மி
பரத்தினும் மேலாம் பணி”…(93)

“இடையில் குழந்தை இரண்டிளநீர் கும்பம்
படைவாளும் கேடயமும் பற்றி -அடையாள
சேய்அபயம் காண்பிக்கும் சந்தான லஷ்மியை
போய்அபலை ஆகப் பணி….(OR )
போய்சுபம் காணப் பணி”….(94)

’’வரிசங்கு, வீச்சாழி, வில்லம்பு, சூலம்
வரஅபயம், புத்தகம், வீற்றெண் -கரத்தாள்,
வறுமை சிவப்பணிந்த வீர இலக்குமியை
பெருமையாய் சென்று பணி’’….(95)

“பாசம்,வெண் சங்கு, படைதிகிரி, கேடயம்
வீசும்வாள், வாஞ்சை வரஅபயம்-பூசும்
திலகநிறக் கூறையாள் திக்விஜய லஷ்மியை
புளகநீ ராட்டிப் பணி”….(96)

“பூனைக்குப் போய்மணி பூட்டிய கர்வத்தில்
ஆனைக்கு லாடம் அடித்தேனே ! -மோனை
எதுகை வரக்கண்(டு) எழுதப் புகுந்தேன்
பதுமையே கொள்ளென் பழுது”….(97)

“திருமஞ் ஜனக்காப்பே, தீயிட்ட போதும்
கருமை யுறாதங்கக் காப்பே, -திருமகளே,
பாதுகை இல்லாத போதும்மால் பாதகாப்பே,
கோதுகைவெண் பாபாது காப்பு”….(98)

“மாவீரன் பாரதியின் மேதமை இல்லாது
தீவிரலைத் தீண்டினால் தீய்ந்திடுமே! -பூவீற்ற,
தொட்டால் தகதகக்கும் தங்கமுந்தன் கண்பார்வை
பட்டால் துலங்குமென் பா”….(99)

(OR)
“மாவீரன் பாரதியின் மேதமை இல்லாது
தீவிரலைத் தீண்டினால் தீய்ந்திடுமே! -பூவீற்ற,
பட்டால் தகதகக்கும் பொன்மக ளுன்பார்வை
தொட்டால் துலங்கும் தமிழ்”….(99)

“ஈர துணியால் இறுக முடிந்துபசி
ஆற முடிக்கும் அரும்பணியில் -வீரத்
திருமகள் சேர்ந்தெட்டு தோள்கொடுத்து, வானக்
கருமுகிலாய் தீர்ப்பாள் கலி”….(100)

“வாடும் பயிர்கண்டு வாடிய வள்ளலார்
தேடும் அருட்ஜோதி தெய்வத்தை -நாடி
அழைத்த வருக்குமுன்பு ஆதிலஷ்மி சேர்த்து,
செழித்திடப் பெய்வாள் செடிக்கு”….(101)

“தாத்தாக்கை கோர்த்து தெருத்தெருவாய் சென்றன்று
சேர்த்தாள் தமிழின் சுவடிகளை -ஆத்தாவால்
ஐம்பெருங் காப்பியத்தை ஐஸ்வர்ய மாய்பெற்றோம்,
பைம்பொழில்வாழ் பங்கஜத்தைப் போற்று”….(102)

“கொள்ளை அடிக்கவந்த கும்பினிக் காரனைக்
‘வெள்ளையனே போவெளியே’ விண்டுரைத்த -பிள்ளை
மகான் சுதந்திரத்தை மீட்டபோது, இட்ட
லகான்விஜய லஷ்மியின்லீ லை”….(103)

’’மூப்பினை ஏற்றதிய மானளித்த நெல்லியை
சாப்பிடாது சென்றாள் சாவெதிர்த்து -தோப்பில்
தனிமரமாம் அவ்வையை, தைரிய லஷ்மி
பனிமலைஈ சன்பால்வைப் பு’’….(104)

’’ஏழை இருபத்தி ஏழை பிரசவித்து
பாழும் வறுமையால் பாடுற -தோழனுக்கு
கண்ணன்சம் பத்தைக் கொடுத்திட வைத்தது
அன்னைசந் தானலஷ்மி அன்பு’’….(105)

“அச்சம் தவிர்த்திடும் , ஆண்மை பெருக்கிடும்
உச்சப் புகழில் உலவவிடும் -பச்சைமால்
இச்சைக் (கு) உரிய இகபர தேவதையே
பிச்சையிடு ஞானப் பிடிப்பு”….(106)

“அம்பிகை பொன்மகளை ஆரா தனைசெய்து
நம்பினோர் கெட்டதில்லை நானிலத்தில் -சொம்பிலே
தேங்காய் மாவிலை தண்ணிள நீர்வைத்து
பாங்காய் இவளைப் பணி”….(107)

 

’’வேதம் வளையல், விளக்கும் உபநிடதம்
பாதச் சதங்கை, புராணங்கள் -காதணி,
கோதை திருப்பாவை கொண்டாள் புடவையாய்,
பேதையென் பாபாதப் பூ’’….(108)

 

வாயார வாழ்த்து வடவேங் கடன்நெஞ்சத்
தாயாரை, பூவாழ் திருமகளை -ஓயாமல்
அன்னை கடைக்கண் அனுக்கிரகம் கொண்டோர்முன்
முன்னை வினைகள் முடம்…(109)

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *