மனோன்மணீயம் காட்டும் சிவகாமி சரிதை – பகுதி 2

0

-முனைவர் இராம. இராமமூர்த்தி

sundaranar

பேரா. பெ. சுந்தரம்பிள்ளை

பாண்டிய மன்னன் சீவகவழுதிக்கும் சேரவேந்தன் புருடோத்தமனுக்கும் போர் மூளும் சமயம் ஊரெங்கும் ஒரே பேராரவாரம். இதனைக் கேட்ட மனோன்மணி இதுபற்றித் தன் தோழி வாணியிடம், ”ஊரில் என்ன ஆரவாரம்!” எனக் கேட்கின்றாள். அவள் கவனத்தைத் திருப்ப எண்ணிய வாணி, பிற செய்திகளைப் பேசுகின்றாள். அப்போது மனோன்மணி வாணியை நோக்கி, “நின் இசைவிளங்கு குரலால் பாடுக!” எனச் சொல்லுகிறாள். அப்பாடலே இந்நூலில் இடம்பெற்றுள்ள ’சிவகாமி சரிதை’யாகும். இக்கதை, மனோன்மணீய நாடகத்திற்கு நேரடித் தொடர்பில்லாமல் இடம்பெற்றுள்ள கிளைக் கதையாகும்.

Oliver Goldsmith

கவிஞர் ஆலிவர் கோல்ட்ஸ்மித்

இச்சிவகாமி சரிதை மனோமணீய நூலின் முதற்பதிப்பில் இடம்பெறவில்லை. இரண்டாம் பதிப்பிலேயே இடம்பெற்றதென்பர். இக்கதையும் ஆங்கிலக் கதையின் தழுவலே என்று கூறுவாருமுளர். இதன் மூலக்கதை ஆங்கிலக் கவிஞர் ’Oliver Goldsmith’ எழுதிய ‘The Vicar of Wakefield’ என்னும் நூலில் கிளைக் கதையாக இடம்பெற்றுள்ள “Edwin and Angelina, a ballad” என்பதைத் தழுவி அமைந்துள்ளது. Edwin சிதம்பரமாகவும், Angelina சிவகாமியாகவும் சுந்தரம்பிள்ளையால் படைக்கப்பெற்றுள்ளனர். சிவகாமி சரிதை மனோன்மணீய நாடகத்தின் மூன்றாம் அங்கம், மூன்றாம் களத்தில் வாணியின் கூற்றாக அமைந்துள்ளது.

சிவகாமி சரிதையையும், Edwin and Angelina, a ballad கதையையும் ஒருங்குவைத்துக் கற்பார், சிவகாமி சரிதை இந்த ஆங்கிலக் கதையின் தழுவலே என்பதை நன்கறிவர். தொடக்கமுதல் இறுதிவரை இத்தழுவலின் சாயல் நன்கு புலப்படுகின்றது.

எனினும், ஈண்டும் சுந்தரம்பிள்ளை தமிழ் மரபையும், தமிழ் நாகரிகத்தையும் மிக நன்றாகப் போற்றியுள்ளார். கதை நிகழுமிடம் பூம்புகார். கதைத் தலைவியான சிவகாமியின் தாய்வழிப் பாட்டிக்கு மக்கள் மூவர்; இருவர் பெண்டிர்; ஒருவர் ஆண். பெண்களுள் ஒருத்தியின் மகள் சிவகாமி; மற்றொருத்தி மகப்பேறில்லாதவள். ஆனால் பெரும் செல்வமுடையவள். அச்செல்வம் முழுவதையும் அவள் சிவகாமிக்கே தந்தாள். ஆண் மகனுக்குச் சிதம்பரம் என்ற ஒரே மகன். சிவகாமியும், சிதம்பரனும் உடன்பிரியா நிழல்போல் ஒன்றாக வளர்ந்தனர். ஒருவரை ஒருவர் காதலித்தனர்.

“ஆனாலும், யான் பெற்ற பொருட்செல்வத்தால் தலை மயங்கினேன்; செருக்குற்றேன். தலைவர் என்ற அவரது நிலையை மறந்தேன். இதனால் அவர் என்னைவிட்டுச் சென்றார். பொருள்கருதி மணம் பேச வந்தனர் பலர். பின்னரே எனக்கு உண்மை புலனாயிற்று. எனவே அவரைத் தேடிப் பலவிடங்களிலும் அலைந்தேன்; அவரைக் காணவில்லை. இறுதியாக இக்காட்டிற்கு வந்தேன்” என்று சிவகாமி ஓர் முனிவரிடம் கூறுவதாக இக்கதை நடைபோடுகின்றது.

சிவகாமி ஆண் வேடத்தில் முனிவரிடம் தன் துயரக் கதையினைக் கூறுகின்றாள். அவள் வேடம் கலைகின்றது. ஆற்றொணாது கண்ணீர் பெருக்குகின்றாள் சிவகாமி. மனம் வெறுத்து வெளியேறிய சிதம்பரனே ஆண்டு முனிவர் வேடத்தில் உள்ளான். அவனிடம் தன் கதையைக் கூறிவந்த சிவகாமி, முனிவர் குளிர்காய மூட்டிய தீயில் வீழ முற்படவும் ”சிவகாமி! யானுனது சிதம்பரனே!” எனச் செப்பினான் முனிவர் வேடத்தில் இருந்த சிதம்பரன். இருவரும் ஓருருவமாய் இணைந்தனர். இதுவே சிவகாமி சரிதை. ‘உண்மைக் காதல் வெல்லும்!” என்ற கோட்பாட்டை, வாணி இச்சரிதை வாயிலாக மனோன்மணிக்கு உணர்த்துகின்றாள். எனவே, மனோன்மணி சேரவேந்தன்பால் கொண்ட காதலும் வெல்லும் என்பதை வாசகர்கட்குக் குறிப்பால் உணர்த்துகின்றார் நூலாசிரியர்.

மேலும் நாயகியாகிய உயிர் – பசு – சீவான்மா, மாயையின் வயப்பட்டு அல்லலுற்று இறுதியில் தலைவனை – பதியை – பரமான்மாவை அடைவதை உணர்த்துவது சிவகாமி சரிதை. இவ்வண்ணம் நுண்பொருளாகிய தத்துவக் கருத்தையும் தன்னுள் கொண்டிலங்குவது இக்கதை.

சிவகாமியைச் சிதம்பரன் தீயில் விழாது தழுவிக் கொண்டாற்போல, எட்வினும் ஏஞ்சலினாவும் இணைந்தனர். அதனை,

“Forbid it, Heaven!” the Hermit cried,
And clasp’d her to his breast:
The wond’ring fair one turn’d to chide—
’Twas Edwin’s self that prest.

என்ற செய்யுள் வரிகள் நமக்குணர்த்தும். மேலும் அடுத்த பாடல்,

“Turn, Angelina, ever dear!
My charmer, turn to see
Thy own, thy long lost Edwin here,
Restor’d to love and thee.

என்பதாகும்.

’Thy own, thy long lost Edwin here’ என்ற அடியின் தழுவலே ’சிவகாமி யானுனது சிதம்பரனே!’ என்னும் செய்யுளடி. உண்மைக் காதலும், காதலரும் உலகெங்கிலும் ஒன்றுபோலவே உள்ளனர் என்பதனை ஆலிவர் கோல்ட்ஸ்மித்தும், நம் பேராசிரியர் சுந்தரம்பிள்ளையும் ஒன்றுபோலச் சுட்டியுள்ளனர். இதனை எண்ணுங்கால் ’சான்றோர் சான்றோர் பாலராப’ என்ற புறநானுற்றுப் புலவனின் கருத்தும், ‘Great minds think alike’ என்ற ஆங்கிலப் பழமொழியும் நம்முன் தோன்றுகின்றன.

இங்ஙனம் மனோன்மணீய நூலும் அதன்கண் இடம்பெற்றுள்ள சிவகாமி சரிதையும் கற்பார்க்குக் கழிபேருவகை ஊட்டுவதுடன் அமையாது, அவர்தம் அலைபாயும் மனங்களையும் பக்குவப்படுத்தும் பான்மையது என்றால் அவ்வுரை வெறும் புகழுரையன்று! முற்றிலும் உண்மையேயாம்.

இறுதியாக ஓருரை. மணிவாசகரின் திருக்கோவையாரைப் பற்றி அறிஞர்கள் கூறும் கருத்துரை நம் மனோமணீயக் காப்பியத்திற்கும் முற்றிலும் பொருந்தும். திருக்கோவையார், “இலக்கிய நயங் காண்பார்க்கு ஓரினிய இலக்கிய நூல்; சமயக் கருத்துக்களைத் தேடுவார்க்கு அஃதொரு சமயநூல்; தத்துவ ஆய்வாளருக்குத் தத்துவ நூல்; இறைநிலை காண விழைவார்க்கு அஃதொரு வழிகாட்டி; பேரின்ப வீட்டிற்கு அஃதொரு திறவுகோல் என்பர் அறிஞர்பெருமக்கள். இப்பாராட்டுரைகள் அனைத்தும் மனோன்மணீயத்திற்கும் நன்கு பொருந்துவதைக் காணலாம்.

எனவே, தமிழ்நலங்காண விரும்புவாரும், தமிழ் மாணாக்கர்களும் இவ்வினிய நாடக இலக்கியத்தைக் கற்று இன்புறுக!

(முற்றும்)

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *