–தேமொழி

நான் எழுவேன் !!!

Maya Angelou

கவிதை  மூலம் – மாயா ஆஞ்சலூ
மொழிபெயர்ப்பு – தேமொழி

நீ வரலாற்றில் என்னைப் பற்றி எழுதலாம்
உனது கசப்பான சரடுகளை
நீ என்னை மண்ணோடு மண்ணாகப் புதைக்கலாம்
எனினும், நான் தூசு போல மேலெழுவேன்

எனது துடுக்குத்தனம் எரிச்சலூட்டுகிறதா?
எதனால் நீ சோர்வில் மூழ்கினாய்?
வீட்டிலேயே எண்ணைக் கிணறுள்ள  செல்வச்
சீமாட்டிபோல நான் வலம் வருவதாலா?

நிலவினைப்போல கதிரவனைப் போல
நிரந்தரமான அலைகளைப்போல
மேலெழும் நம்பிக்கை போல
நானும் மேலெழுவேன்

என்னை மனமுடைந்தவளாகக் காண விருப்பமா?
கவிழ்ந்த தலையுடன்  தாழ்ந்த கண்களுடன்
தொங்கிய தோள்களையும் உறுதியிழந்து  உயிரை
உருக்கும் அழுகையையும்  என்னிடம்  எதிர்பார்த்தாயா?

எனது செருக்கு உன்னைப் பாதிக்கிறதோ?
அதனைக் கண்டு நீ சோர்வு கொள்ளாதே
ஏனெனில் நான் நகைப்பேன் என் வீட்டுத்
தோட்டத்தில் தங்கச்சுரங்கம் வைத்திருப்பவள் போல

நீ என்னைத் தாக்கலாம் உன் சொற்களால்
நீ என்னை கண்டிக்கலாம் உன் பார்வையால்
நீ என்னைக் கொல்லவும் செய்யலாம் உன் வெறுப்பால்
எனினும், உயரும் காற்றாக நான் மேலெழுவேன்

எனது கவர்ச்சி உன்னை வருத்துகிறதா?
எனது துள்ளாட்டம் வியப்பளிக்கிறதா?
மடியிலேயே வைரச் சுரங்கம் கொண்டவள் போல
நானாடும் நடனம் வியப்பளிக்கிறதா?

வரலாற்றின் அவமானக் குடில்களில் இருந்து
நான் எழுவேன்

வேரூன்றிப் போன கடந்த காலத்தின் வலிகளில் இருந்து
நான் எழுவேன்

கொந்தளித்து எழும்பும் அலைகளுடன்
நானொரு பரந்து விரிந்த கருங்கடலாக
இரவுகளின் திகிலையும் அச்சத்தையும் பின்தள்ளி
நான் எழுவேன்

புலரும் வேளையில் தெளிவான பொழுதில்
நான் எழுவேன்

என் முன்னோர் வழங்கிய பரிசுகளுடன்
ஒரு அடிமை காணும்  கனவாக,  நம்பிக்கையுமாகவும்
நான் எழுவேன்
நான் எழுவேன்
நான் எழுவேன்

 

 

மாயா ஆஞ்சலூ கவிதைகளின் மொழி பெயர்ப்பு:
நான் எழுவேன் !!! (Still I Rise – Poem by Maya Angelou)
கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது ? (Caged Bird – Poem by Maya Angelou)
தனிமையிலே … (Alone – Poem by Maya Angelo)

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “நான் எழுவேன் – கவிதை

  1. அமெரிக்காவின் ஆஸ்த்தான கவிஞரின் மறைவுக்கு அவரின் கவிதையாலேயே இரங்கற்பா. நிற வெறியில் சிக்கி இழக்கககூடாததையெல்லாம் இழந்து தொடக்கூடாததையெல்லாம் தொட்டு தாழ்ந்து போய் மீண்டு வந்த ஒரு அதிசய மிறவி.

    அவரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்லவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.

    தெளிவான தமிழில் தமிழாக்கம் செய்த தேமொழி அவர்களுக்கும் பாராட்டுக்கள்.

  2. கவிதையைப் படித்துப் பாராட்டி கருத்துரை வழங்கியமைக்கு மிக்க நன்றி தனுசு

  3. நல்லதொரு மொழிபெயர்ப்பு. மூலக் கவிதையின் தாக்கம் சற்றும் குறையாமல் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள் சகோதரி.

  4. பாராட்டிற்கு மிக்க நன்றி கவிஞர் சச்சிதானந்தம்.   கவிஞர்களிடம் இருந்து கவிதைக்காகக் கிடைக்கும் பாராட்டுகள் தரும் மகிழ்ச்சி விவரிக்க முடியாதது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *