– சு.கோதண்டராமன்

எல்லாத் தேவர்களும் ஒன்றே

 

நாமம் பல்கோடி ஓர் உண்மைக்கு உள என்று
நான்மறை கூறிடுமே- ஆங்கோர்
நாமத்தை நீருண்மை என்று கொள்வீரென்று அந்
நான்மறை கண்டிலதே   
-பாரதி

 

 

vaedam

ரிக் வேதத்தில் ஒவ்வொரு தேவருக்கும் தனித் தனி அடையாளங்கள், சாதனைகள் கூறப்பட்டுள்ளன. ஆனாலும் பல இடங்களில் இந்தத் தனித் தன்மை மறைந்து விடுகிறது.

பூமியை நிலைநாட்டியது, ஆகாயத்தைத் தூக்கி நிறுத்தியது, சூரியனை உலாவ விட்டது, நதிகளுக்குப் பாதை அமைத்துக் கொடுத்தது முதலான சாதனைகளைச் செய்தவர்களாக வருணன், இந்திரன் இருவரும் போற்றப்படுகிறார்கள். பூமியை நிலை நிறுத்தின சிறப்பு ப்ருஹஸ்பதி, ரிபுக்கள் மற்றும் அக்னியின் பெயராலும் பேசப்படுகிறது.

விருத்திரனைக் கொன்றது இந்திரன் என்று பல இடங்களில் பேசப்பட்டாலும், விஷ்ணுவுக்கும் அதில் பங்கு உண்டு என்று கூறப்பட்டுள்ளது. அக்னி விருத்திரனைக் கொன்றதாகவும் கூறப்படுகிறது.

வலனைக் கொன்று பசுக்களை விடுவித்தார் என்ற சிறப்பு ப்ரம்மணஸ்பதிக்கும் சொல்லப்படுகிறது, இந்திரனுக்கும் சொல்லப்படுகிறது. அந்தப் பெருமை ப்ருஹஸ்பதிக்கும் கொடுக்கப்படுகிறது.

வாயுவின் குதிரைகளின் பெயர் நியுத். ஆனால் மருத்துகளுடைய குதிரைகளும், அக்னியின் குதிரைகளும், அஸ்வின்களின் குதிரைகளும் இந்திரனுடைய குதிரைகளும் நியுத்கள் என்று சில இடங்களில் கூறப்படுகின்றன.

வருணன் இந்திரனுக்குரிய அத்ரிவ (இடியை ஆயுதமாகக் கொண்டவர்) என்ற பெயரால் அழைக்கப்படுகிறார்.

ஸஹஸஸ் ஸூனு (வலிமையின் மைந்தன்) என்ற பெயர் அக்னிக்கு உரியது. ஆனால் இரு இடங்களில் இந்திரனுக்கும் இது வழங்கப்படுகிறது.

ப்ரம்மணஸ்பதியைக் குறிப்பிடும் ப்ரம்மண: ராஜா (ஸ்தோத்திரங்களின் ராஜா) என்ற சொல்லால் இந்திரன் புகழப்படுகிறார். அது போல, அத்ரிபித் (மலைகளை உடைத்தவர்), விருத்திரனை வென்றவர், நகரங்களை அழித்தவர் என்ற இந்திரனின் சிறப்புகள் ப்ருஹஸ்பதிக்கும் கொடுக்கப்படுகின்றன.

அக்னியும் சூரியனும் தனித் தனி தேவர்களாகப் பேசப்பட்டாலும் அக்னியைப் பற்றிப் பேசும்போது சூரியன் என்ற பெயரையும், சூரியனைப் பற்றிப் பேசும்போது அக்னி என்ற பெயரையும் பயன்படுத்துகிறார்கள்.

காலை நேரச் சூரியனின் பெயர் தான் ஸவிதா என்றாலும் இருவரும் தனித்தனியாகக் காட்டப்படுகிறார்கள். சூரியன் ஸவிதாவுக்கு சக்தி தருகிறார் என்கிறது ஒரு மந்திரம். [1]

அக்னியைப் போற்றும்போது, நீயே இந்திரன், நீயே வருணன் என்கிறார்கள். உலகத்தைப் படைத்துக் காப்பவன் என்ற முழு முதல் கடவுள் தகுதியும் அவருக்குக் கொடுக்கப் படுகிறது.  இதே போல, இந்திரனைப் போற்றும்போது, நீயே விஷ்ணு, நீயே அக்னி என்று பேசுகின்றனர். இவ்வாறு தேவர்களுக்கிடையேயான வேறுபாடுகள் மறைகின்றன. 9.5 இல்  ஒரு சூக்தம் முழுவதும் இந்திரன், அக்னி, பாரதி, இலா, ஸரஸ்வதி முதலான பல தெய்வங்களுடன் சோமன் ஒன்றுபடுத்தப்படுகிறார்.

ஒரு கட்டத்தில் எல்லாத் தேவர்களும் ஒன்றே என்று கூறுகின்றனர். எனவே பெயர்கள் என்பது பெயரளவுக்குத் தான். இதை தெளிவாகவே சொல்கிறது கீழ்க் கண்ட மந்திரம்.

இந்திரன், மித்ரன், வருணன், அக்னி என்று அறிஞர்கள் பல விதமாக அழைக்கிறார்கள். உள்ளது ஒன்று தான். [2]

தேவர்களுக்கெல்லாம் மேலான ஒரு சக்தி உள்ளது என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள் என்பதைக் கீழே வரும் மந்திரங்கள் காட்டுகின்றன.

விண்ணையும் மண்ணையும் பரப்பியிருப்பதும், இரவு பகலை உண்டாக்குவதும், அசையும் பொருளெல்லாவற்றையும் தன்னுள் அடக்கி உறங்கச் செய்வதும், நதிகளைப் பாயச்செய்வதும், சூரியனை உதிக்கச் செய்வதுமான ஸத்யமான வார்த்தை என்னைக் காப்பாற்றட்டும். [3]

தேவர்கள் எந்த மூலப் பொருளைக் கொண்டு இந்த மண்ணையும் விண்ணையும் படைத்தார்கள்? இவை உறுதியாகவும் முதுமை அடையாததாகவும் உள்ளன. இவை பல காலை நேரங்களைப் பார்த்துள்ளன. [4]

அல்ல, அல்ல. இந்தத் தேவர்களுக்கெல்லாம் மேலான ஒன்று உள்ளது. அவனே மண்ணையும் விண்ணையும் தாங்குகிறான். [5]

நமது தந்தையும் பாதுகாவலனும் அனைத்தையும் படைத்தவனும் எல்லா இடங்களையும் உயிர்களையும் அறிபவனும் தேவர்களுக்குப் பெயர் சூட்டியவனும் ஒருவனே உண்டு. எல்லா உயிர்களும் அறிந்துகொள்ள அவனிடமே செல்கின்றன. [6]      

ரிஷிகளின் பாடல்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். சில சாதாரண நிலையில் பாடப்பட்டவை. சில அருள் நிலையில் பாடப்பட்டவை. மற்றவை பேரருள் நிலையில் பாடப்பட்டவை. ரிஷிகள் காணும் பொருளை எல்லாம் தேவனாகக் காணும்போது அருள் நிலையில் உள்ளனர். அதிலேயே தோய்ந்து பேரருள் நிலைக்குச் செல்லும் போது  அவர்கள் அந்தத் தெய்வத்தையே முழு முதல் கடவுளாகக் காண்கிறார்கள். அதனால் எந்தத் தெய்வத்தைப் பாடினாலும் ‘அவர் பிறக்கும்போதே முதல்வர். இவரே உலகின் மறு உரு’ என்று போற்றுகின்றனர்.

அக்னியே, நான் எந்தத் தெய்வத்தை அழைத்தாலும், நீயே அனைத்துத் தேவர்களின் தன்மையையும் அடைகிறாய் என்ற ரிக் 1.69.6,  யார் என்னை எப்படி வழிபட்டாலும் நான் அவர்களுக்கு அவ்விதமே அருள் செய்கிறேன் என்ற பகவத் கீதை 4.11இன் அடிப்படையாக உள்ளது.

பரம்பொருளின் தன்மைகள் யாவை?

ரிக் 10.54 மற்றும் 10.55 பரம்பொருளுக்கு இந்திரன் என்ற பெயர் அளித்து அவருடைய நான்கு மாவலிமைகளைக் குறிப்பிடுகிறது.
1 கடந்த காலம் வருங்காலம் யாவற்றிலும் வியாபித்துக் காலம் கடந்து நிற்றல்,
2 விண் மண் எல்லாவற்றிலும் வியாபித்து இடம் கடந்து நிற்றல்,
3 சூரியன் முதலான எல்லாப் பொருளையும் படைத்தல்,
4 புரிந்து கொள்ளப்படாத செயல்பாடுகள் கொண்டிருத்தல்.

இந்தக் கடைசி வலிமைக்கு எடுத்துக் காட்டாக, முதியவன் இருக்க  இளைஞன் சாகிறான், நேற்று இருந்தார் இன்று இல்லை என்று ரிஷி கூறுகிறார்.  பரம்பொருளை இந்திரன், அக்னி, வருணன் என்று எந்தப் பெயரில் வேண்டுமானாலும் அழைக்கலாம் என்பது வேதம் தரும் சுதந்திரம். இந்தக் கருத்தைப் பூதக் கண்ணாடியால் பார்த்த நம் முன்னோர்கள் அதில் விநாயகன், சிவன், வேலன், பார்வதி, திருமால் என்ற பெயர்களைக் கண்டனர். பாரதி இன்னும் பெரிய பூதக் கண்ணாடியால் பார்க்கிறார். அங்கு அவருக்கு காளி, சாத்தன், மாடன், அல்லா, யெஹோவா என்ற பெயர்களும் தெரிகின்றன.

விநாயக தேவனாய் வேலுடைக் குமரனாய்
பிறநாட்டிருப்போர் பெயர்பலகூறி
அல்லா யெஹோவா எனத் தொழுது இன்புறும்
தேவரும் தானாய் திருமகள் பாரதி
உமை எனும் தேவியர் உகந்த வான்பொருளாய்
உலகெலாம் காக்கும் ஒருவனைப் போற்றுதல்

ஆதிமூலமே அனைத்தையும் காக்கும்
தேவதேவா சிவனே கண்ணா
வேலா சாத்தா விநாயகா மாடா
இருளா சூரியா இந்துவே சக்தியே
வாணீ காளீ மாமகளேயோ
ஆணாய்ப் பெண்ணாய் அலியாய் உள்ள
யாதுமாய் விளங்கும் இயற்கைத் தெய்வமே
வேதச்சுடரே மெய்யாங் கடவுளே

பாரதியின் சொல்லும் வேதம் அன்றோ!

 

 

 

குறிப்புகள்:
1    7.45.2.
2    1.164.46
3    10.37.2.
4    10.31.7
5    10.31.8
6    10.82.3

 

 

 

 

 

படம் உதவி: http://srismartha.org/aboutUs.html, http://srismartha.org/images/s1.jpg

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *