மேகலா இராமமூர்த்தி

PoetKannadasan

கண்ணதாசன் என்ற பெயரைக் கேட்டதுமே காலத்தால் அழியாத அவருடைய காவியப் பாடல்களும், அவற்றின் இலக்கிய நயமும், கலங்கரை விளக்காகத் திகழ்ந்துவரும் அவருடைய தத்துவப் பாடல்களுமே பலருடைய நினைவிற்கும், கவனத்திற்கும் வருபவை. ஆயினும் பன்முகத் திறனும், பரந்துபட்ட ஆற்றலும் கொண்ட அம்மாமேதை திரைப்படத்துறை அன்றியும் வேறுபல் தளங்களிலும், களங்களிலும் செயலாற்றி வெற்றி கண்டவர்; தனி முத்திரை பதித்தவர்.

அவ்வகையில், இன்றைய தலைமுறையினர் அதிகம் அறிந்திராத அவருடைய பத்திரிகைத்துறை அனுபவங்கள், அரசியல் அனுபவங்கள், பத்திரிகைவழி அவராற்றிய தமிழ்த்தொண்டு ஆகியவை குறித்துப் பகிர்ந்துகொள்ள விழைந்ததன் விளைவே இக்கட்டுரை.

’சிறுகூடல்பட்டி’ முத்தையா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து ‘கண்ணதாசன்’ ஆனார். அவர் கழகத்தில் சேர்ந்த காலத்தில் தி.மு.க.வின் முன்னணித் தலைவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பத்திரிகையை நடத்திக் கொண்டிருந்தனர். ’விடுதலை’ என்ற இதழை நடத்திவந்த பெரியாரிடமிருந்து பிரிந்த பேரறிஞர் அண்ணா ’திராவிட நாடு’ கண்டார். அஃது அண்ணாவின் அரிய கருத்துக்களைத் தாங்கி வார இதழாக வெளிவந்தது. நாவலர் நெடுஞ்செழியன் ‘மன்றம்’ என்ற இதழை இலக்கிய இதழாக நடத்திவந்தார்; கலைஞர் கருணாநிதியோ ‘முரசொலி’க்கச் செய்தார்.

அத்தருணத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்பாதம் பதித்த கவியரசு கண்ணதாசன், ’தென்றல்’ எனும் அழகிய பெயரில் இதழ் ஒன்றைத் தொடங்கினார். அவ்விதழ் இலக்கிய இதழாகவும், அரசியல் இதழாகவும் விளங்கியது. உள்நாட்டு, கழகச் செய்திகளோடு பிறநாட்டுச் செய்திகளும் அதில் சுருங்கிய அளவில் இடம்பெற்றிருந்தன.

நல்ல தமிழில் அந்த (கவிதைத்) தென்றல் வீசியது. கழக இளைஞரும், தமிழார்வலர் பிறரும் தென்றலை மிக விரும்பி வாங்கினர்; படித்தனர்; சுவைத்தனர்.

கல்லூரி மாணவர்களிடையே ’தென்றல்’ நல்ல வரவேற்பைப் பெற்றது. அறிஞர் கா. அப்பாதுரையாரின் துணையோடு கண்ணதாசன் ’வெண்பாப் போட்டி’யைத் தென்றல் பத்திரிகையில் நடத்திப் பரிசுகள் வழங்கினார். வெண்பாப் போட்டியாலும், தென்றலின் சுவைமிகுந்த பிற பகுதிகளாலும் தமிழ் இளைஞர்களிடத்துத் தமிழ்ப்பற்றும், தமிழின உணர்வும் மிக்கோங்கின. ஈழத் தமிழர் பற்றிய செய்திகளும் தென்றலில் தவறாது இடம்பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தென்றலையொட்டி ’முல்லை’ என்ற இலக்கியத் திங்களிதழும் கண்ணதாசனால் தொடங்கப்பெற்றது. இவ்விதழ் அளவிற் சிறியதேனும் இலக்கிய வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியது என்பதை யாரும் மறுக்கவியலாது. வரலாற்றுச் சிறுகதைகளும், புனைகதைகளும் முல்லைக்கு மேலும் மணங்கூட்டின.

தி.மு.க.வில் இணைந்திருந்த கவிஞரின் (கழக) அரசியல்வாழ்வு நீண்டநாள் நீடித்திருக்கவில்லை. சூழ்நிலை அவரைக் கழகத்தினின்றும் பிரித்தது. எனினும், அவருடைய கலை, இலக்கியப் பணிகள் தென்றலிலும், முல்லையிலும் தொடர்ந்தவண்ணம் இருந்தன. ஊழின் பெருவலியோ அல்லது காலத்தின் கோலமோ யாமறியோம்…..தென்றலையும், முல்லையையும் அவரால் தொடர்ந்து நடத்த இயலவில்லை; அதனால் தென்றல் ஓய்ந்தது; முல்லையும் காய்ந்தது.

ஆயினும், கவிஞரின் இலக்கிய நெஞ்சமும், கவிதை ஈடுபாடும் அவரை விடாமல் துரத்தின. அதன் விளைவே சில ஆண்டுகளுக்குப் பின் மலர்ந்த ’கண்ணதாசன்’ எனும் இலக்கியத் திங்களிதழ். போற்றுதலுக்கும், திறனாய்வுக்கும் உரிய சிறுகதைகள் பல அவ்விதழில் வெளிவந்தன. தரமான பிறர் படைப்புக்களோடு கவியரசரின் கருத்தோவியங்களும் இதழுக்கு எழில்கூட்டின.

கண்ணதாசன் இதழில் இடம்பெற்ற பல சிறுகதைகள், கருத்தரங்குகள் பலவற்றில் மீள்வாசிப்பிற்கும், திறனாய்விற்கும் எடுத்துக்கொள்ளப்பட்டன. ’வனவாசமும், மனவாசமும்’ கவிஞரின் உண்மை வாழ்வைப் புனைவின்றி வாசகர்களுக்குப் புகன்றன எனில் மிகையில்லை. ஆம்…கவியரசு கண்ணதாசன் என்றுமே உண்மைகளை எடுத்துரைக்கத் தயங்கியதில்லை. அவற்றின் வெளிப்பாடே அவரெழுதிய வனவாசமும், மனவாசமும்!

கவியரசரின் வாழ்வில் தொடர்ந்து பல சங்கடங்கள் ஏற்பட்டன. அரசியலிலிருந்து முற்றிலும் விலகாவிட்டாலும்கூட ஒதுங்கியிருக்கலானார். உண்மைகளையும், நன்மைகளையும் மட்டுமே ஆதரிப்பவரானார். அவர் பெரிதும் நம்பியிருந்த திரையுலகிலும் அவருக்குச் சிக்கல்கள் ஏற்படத் தொடங்கின. எனினும் அவரது கவித்துவம், அனைத்து எதிர்ப்புக்களையும் வென்று அவரை வாழவைத்தது. பொருளாதாரச் சிக்கல்களினால் ’கண்ணதாசன்’ இதழும் இடையிடையே தடைப்பட்டு வெளிவந்து, இறுதியில் முற்றிலும் நின்றே போனது. அந்தோ!

இக்காலகட்டத்தில் கவிஞரோடு நட்புப் பாராட்டிய எழுத்தாளர்களாக விளங்கிய ஜெயகாந்தனையும், தீபம் ஆசிரியர் நா. பார்த்தசாரதியையும் தமிழிலக்கிய உலகம் என்றும் மறவாது போற்றும். இவர்கள் மூவரும் அன்று எழுத்துலகில் மும்மணிகளாக – திரிரத்தினங்களாகத் திகழ்ந்தனர் எனலாம்.

’கண்ணதாசன்’ திங்களிதழ் நின்றபின்பும் கவியரசரின் எழுத்துப்பணி தொய்வின்றித் தொடர்ந்தது. கல்கியில் அவர் எழுதிவந்த ’சேரமான் காதலி’ என்ற வரலாற்றுப் புதினம், அவருக்குச் சாகித்ய அகாதெமியின் விருதினைப் பெற்றுத் தந்தது. பின்னர் அவர் எழுத்தின் – சிந்தனையின் திசைமாறியது. ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ என்ற பெயரில் பல தொகுதிகள் இந்து சமயத்தை எளிதாக விளக்கும் முறையில் வெளியாயின. வாசகர்களிடம் பேராதரவினை இந்நூல்கள் அவருக்குப் பெற்றுத்தந்தன. கண்ணனைப் பற்றிய பல சிறு நூல்களை எழுதி வெளியிட்டார். ஆதிசங்கரரின் ‘கனகதாரா தோத்திரம்’ ’பொன்மழை’யாகப் புத்துருப் பெற்றது.

கவியரசரின் இலக்கியப் படைப்புக்களின் முடிமணியாக இன்றும் திகழ்ந்துவருவது கிறித்தவப் பேரிலக்கியமான ‘இயேசு காவியம்’ என்றால் அதனை இலக்கிய ஆய்வாளர் யாரே மறுப்பர்?

’கன்னியின் காதலி’ என்ற படத்தில் ‘கலங்காதிரு மனமே; உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே’ என்ற பாடல்மூலம் தன் திரையுலக வாழ்வைத் தொடங்கிய கண்ணதாசன், பாடல்கள் எழுதியதோடல்லாமல் சொந்தத் தயாரிப்பாகவும் திரைப்படங்கள் பல எடுத்தார். கழகக் கருத்துக்களும், தேசியக் கருத்துக்களும் அவருடைய திரைப்படங்களில் இடம்பெற்றிருந்தன. ‘சிவகங்கைச் சீமையும்’, ’இரத்தத் திலகமும்’ அவரது சிறந்த தயாரிப்புக்களாகும்.

நிழலுலகத்தாரால் மட்டுமன்றி, நிஜவுலகத்தாராலும் போற்றுதலுக்கும், தூற்றுதலுக்கும் ஆளானவர் கவியரசர். ஆயினும்,

”போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரித்
தூற்றுவார் தூற்றட்டும் தொடர்ந்து சொல்வேன்
ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால்
எடுத்துரைப்பேன் எவர்வரினும் நில்லேன், அஞ்சேன்!” என்ற கருத்தில் சற்றும் பின்வாங்காது வாழ்ந்தவர் அவர்.

கண்ணதாசன், தன் தனிவாழ்வில் பெருவெற்றி பெற்றவர் அல்லர்; ஆனால் பலருடைய வெற்றிக்கு வழிகாட்டியவர்; உழைத்தவர்; உதவியவர். குறைகண்டவிடத்து ஏசிய கவிஞர்; நிறைகண்டவிடத்து யாரையும் போற்றவும் தயங்கினாரில்லை. ‘குரல் கெட்ட குயிலே கேள்!’ எனப் பாவேந்தரை ஏசிய கண்ணதாசன்,

”புரட்சிப் பாவல வணக்கம்………
”ஏடெடுத்துக் கவியெழுத நினைக்கும் போதில்
என்னெதிரே நின்னுருவம் ஏறு போன்று
பாடுதமிழ்என்றுரைக்கக் கேட்பேன்! அந்தப்
பத்தியிலே பன்னூறு கவிதை யாப்பேன்
கூடலிறை பாண்டியன்போல் நிமிர்ந்து நிற்கும்
குலத்தலைவா
! யான்கற்ற கல்வி கொஞ்சம்,
நாடெனையும் நோக்கும்வகை நான் வளர்ந்தேன்
யாவுமுனைக் கற்றதனால் பெற்ற பேறு
!
………………………………………………………….
இருபதுடன் பதினான்கு வயது சென்றும்
இயல்பினில்யான் குழந்தையென
அறிவாயன்றோ!

எனப் பாவேந்தர் புகழ்பாடுகின்றார். அவருடைய குழந்தை உள்ளத்திற்கு இதனினும் விஞ்சிய சான்றுண்டோ?

திரைப்படப் பாடல்கள் அன்றித் தன் தனிப்பாடல்களாலும் பெரும்புகழ்பெற்றவர் கண்ணதாசன். சான்றாக ஒன்று…

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து
பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச்
சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப்
பாரென இறைவன் பணித்தான்!
அறிவெனச்
சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து
பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப்
படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப்
பாரென இறைவன் பணித்தான்!
…………………………………………………………
முதுமை
என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து
பாரென இறைவன் பணித்தான்!
வறுமை
என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப்
பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின்
பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து
பாரென இறைவன் பணித்தான்!
அனுபவித்தேதான்
அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே
நீ ஏன் எனக் கேட்டேன்!
ஆண்டவன்
சற்றே அருகில் நெருங்கி
’அனுபவம்
என்பதே நான்தான்என்றான்!

இக்கவிதையில், ’ஆண்டவன் என்றொருவன் வெளியில் இல்லை; நம் அனுபவங்களில்தான் அவன் வாழ்கிறான்’ என்றுரைக்கும் கவியரசரின் தீர்க்க தரிசனம் நம்மை வியப்பிலும், பிரமிப்பிலும் ஆழ்த்துகிறது அல்லவா?

அகவை ஐம்பதைத் தாண்டிய சில ஆண்டுகளில் மிக அவசரமாகத் தன் பூவுலக வாழ்வைக் கவிவேந்தர் நீத்தாலும்,

”மன்னா வுலகத்து மன்னுதல் குறித்தோர்
தம்புகழ் நிறீஇத் தாமாய்ந் தனரே”
என்ற புறப்பாடலுக்குச் சான்றாய்த் தன் அழியாப் புகழை நிறுவி என்றும் வாழ்கிறார் அவர்!

காவியத் தாயின் இளைய மகன் என்று தன்னை உரிமையோடு அழைத்துக்கொண்ட கண்ணதாசன், இன்று தானே ஒரு காவியமாகித் தமிழர்கள் அனைவர் நெஞ்சிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றார். பைந்தமிழ் வளர்த்த கண்ணதாசனின் புகழ் வையமுள்ளவரை நிலைத்திடும் என்பதில் ஐயமில்லை.

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “என் பார்வையில் கண்ணதாசன்

  1. 1957 ஆண்டுகளில் கண்ணதாசன் நடத்திய “தென்றல்” வெண்பா போட்டியில் கலந்து கொண்டவன் நான்.  அப்போது வெளிவந்த என் வெண்பாக்கள் இவை:

    “தென்றலே ஏன் வந்தாய் செப்பு”  என்பது ஈற்றடி.

    தினத்தந்தி போல திரித்திடவந் தாயா ? 
    மனக்கருத்தைக் கூறவந் தாயா ?  –  இனமொன்றிற்(கு)
    என்றே எழுந்தாயா ? எந்தமிழை ஊட்டிடவா ?
    தென்றலே ஏன்வந்தாய் செப்பு ?

    சோலையில் நித்தம்நீ சூழ எதிர்பார்ப்போம்
    காலன் கணவரைத் தான்கடத்த – மாலையில் நீ
    கொன்றிடுகின் றாயே, குலாவ அவரிலையே
    தென்றலே ஏன்வந்தாய் செப்பு ?

    “வேண்டாம் வரதட் சணை”  என்பது ஈற்றடி

    ஈழத்தில் இட்டதீ சீதைக்(கு) ! எழில்மதுரை
    சூழத்தீ இட்டது கண்ணகிக்கு ! – வாழாது 
    மீண்டும் நகைச்சண்டை ! மேனியில்தீ தங்கைக்கு 
    வேண்டாம் வரதட் சணை !

    கண்ணதாசன் இலக்கியப் பங்கைக் காட்டியதற்குப் பாராட்டுகள் மேகலா.

    சி. ஜெயபாரதன்

  2. //1957 ஆண்டுகளில் கண்ணதாசன் நடத்திய “தென்றல்” வெண்பா போட்டியில் கலந்து கொண்டவன் நான். //
    கண்ணதாசன் நடத்திய ‘தென்றல்’ வெண்பாப் போட்டியில் நீங்களும் கலந்துகொண்டதனை அறிந்து மிக மகிழ்ந்தேன் ஜெயபாரதன் ஐயா. உங்கள் வெண்பாக்களும் மிகச் சிறப்பாக உள்ளன. பாராட்டுக்கள்.
    என் கட்டுரையைப் படித்துப் பாராட்டியமைக்கும் என் நன்றிகள்!

    அன்புடன்,
    மேகலா

Leave a Reply to மேகலா இராமமூர்த்தி

Your email address will not be published. Required fields are marked *