http://seventhfairy.deviantart.com/art/WaitiNG-FOr-yOu-336571481

 

 

 

 

 

 

 

 

 

 

கவிநயா

காவல் இருக்கின்றேன்,
காத்துக் கிடக்கின்றேன்,
வேண்டாத விருந்துகள் வந்து விடக் கூடாதென…
வேண்டி விரும்பும் நீ என்று வருவாயென!

நீண்டு கிடக்கும்
காலமெனும் பாதையில்
விழிகள் பதித்து –
முரண்டு பிடிக்கும்
புத்திக்குள் வித்தாக
உன்னை விதைத்து –
துவண்டு கிடக்கும்
மனக் குடிலின் வாயிலில்
மலர்கள் விரித்து –
வண்டு குடிக்கும்
மதுவாக உன்
அன்பை நினைத்து –

மண்ணூடே ஓடி
நீர் தேடும் வேர் போல –
மரம் தேடி ஓடி
கிளை சுற்றும் கொடி போல –
மடி தேடி ஓடும்
பாலுக் கழும் கன்றாக –
கடல் தேடி ஓடும்
காதல் மிகு நதியாக –

உனைத் தேடி நானும்என்
உயிர் களைத்துப் போன பின்னே…

இன்று,
என் மனக் கதவின்
ஒரு ஓரத்தில்…

காவல் இருக்கின்றேன்,
காத்துக் கிடக்கின்றேன்,
வேண்டாத விருந்துகள் வந்து விடக் கூடாதென…
வேண்டி விரும்பும் நீ என்று வருவாயென!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “என்று வருவாயென…

  1. காத்திருப்பு ஒரு மன வேதனை
    காரிகைக்கு அதுவோர் சோதனை 
    காத்திருப்பது மாதுக்கோர் சாதனை
    கதவருகில் நில் என்பது போதனை. 

    காத்திருப்பை இத்தனைக் கனிவு வரிகளில் சொல்வதோர் அற்புதக் கலை. பாராட்டுகள் கவிநயா

    சி. ஜெயபாரதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *