-எஸ். பழனிச்சாமி

Kannadasanஎன் பார்வையில் கண்ணதாசன் என்ற தலைப்பைப் பார்த்ததுமே ஓராயிரம் பாடல்கள் மனதில் வந்து போனது.

எழுபதுகளில் நான் பள்ளியில் படிக்கின்ற காலத்திலேயே, எப்படி கண்ணதாசனால் ஈர்க்கப் பட்டேன் என்று எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை என்னைக் கவர்ந்த எல்லாச் சினிமாப் பாடல்களும் கண்ணதாசன் எழுதியவை என்று செய்தித்தாள்களில் படித்துத் தெரிந்து கொண்டதனால் இருக்கலாம்.

அப்போது கிராமங்களில்கூடப் பிரபலமாக இருந்த இலங்கை வானொலி நிகழ்ச்சிகளும், அதில் தன்னுடைய குரல் வித்தையினால் பல்லாயிரம் மனிதர்களைக் கட்டிப் போட்டிருந்த கே. எஸ். ராஜா என்ற நிகழ்ச்சித் தொகுப்பாளர் கண்ணதாசனின் பாடல் வரிகளை ரசனையோடு விவரித்ததைக் கேட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

அதுமட்டும் இல்லாமல் என்னுடன் பழகிய நண்பர்கள் அனைவரும் கண்ணதாசனின் பாடல்களைச் சிலாகித்துப் பேசியதைக் கேட்க நேர்ந்ததாலும் இருக்கலாம். இவையே கண்ணதாசனிடத்திலும் அவருடைய பாடல்களிடத்திலும் எனக்கு ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தி இருக்கும் என்று தோன்றுகிறது.

அதனால்தான் பள்ளியில் மாதம் ஒருமுறை நடக்கும் இலக்கிய மன்றக்கூட்டத்தில் நான் ஒவ்வொரு முறையும் பாட்டு பாடுவதற்குப் பெயர் கொடுத்துப் பங்கெடுத்துக் கொள்வேன். அதிலும் ’சூரியகாந்தி’ படத்தில் வரும் ‘பரமசிவன் கழுத்திலிருந்து’ என்ற பாட்டையே மீண்டும் மீண்டும் பாடி இருக்கிறேன். இப்போதும் அந்தப் பாடல் நன்றாக ஞாபகம் இருக்கிறது.

பரமசிவன் கழுத்திலிருந்து
பாம்பு
கேட்டது கருடா செளக்யமா?
யாரும்
இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம்
செளக்யமே கருடன் சொன்னது
அதில்
அர்த்தம் உள்ளது

உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம்
உன்னை மதிக்கும் உன்
நிலைமை
கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும்
கூட மிதிக்கும்!

மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
மானமுள்ள
மனிதனுக்கு ஒளவை சொன்னது
அது
ஔவை சொன்னது
அதில்
அர்த்தம் உள்ளது

ண்டி ஓடச் க்கங்கள்
இர
ண்டு ட்டும் வேண்டும் – அந்த
இர
ண்டில் ஒன்று சிறியதென்றால்
எந்த
ண்டி ஓடும்?

உனைப்போலே அளவோடு உறவாட வேண்டும்
உய
ர்ந்தோரும் தாழ்ந்தோரும் உறவு கொள்வது
அது
சிறுமை என்பது அதில் அர்த்தம் உள்ளது!

நீயும் நானும் சேர்ந்திருந்தோம்
நில
வும் வானும் போலே – நான்
நில
வு போலத் தேய்ந்து வந்தேன்
நீ
ளர்ந்ததாலே

என் உள்ளம் எனைப் பார்த்துக்
கேலி
செய்யும் போது
இல்லாதான்
இல்வாழ்வில் நிம்மதி ஏது
இது
ன் சொன்னது
இதில்
அர்த்தம் உள்ளது”

இந்த ஒரு பாடலில் எவ்வளவு கருத்துக்கள் புதைந்துள்ளன என்று நினைத்தால் மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.

இந்தப் பாடலுக்கு மற்றொரு விசேஷம் என்னவென்றால், அந்தப் படத்தில் இந்தப் பாடலைக் கவிஞர் கண்ணதாசனே பாடுவதுபோல் காட்சி அமைந்திருக்கும்.

எத்தனையோ திரைப்படங்களின் வெற்றிக்குக் கவிஞரின் பாடல்களும் முக்கிய காரணமாக இருந்திருக்கின்றன. எல்லா வகையான மனிதர்களின் மனதையும் கரைத்திருக்கின்றன.

அவற்றை எல்லாம் ஒவ்வொன்றாகச் சொல்வதென்றால் எனக்கும் அதை படிக்கும் உங்களுக்கும் மகிழ்ச்சி ஏற்படும் என்றாலும், இந்தக் கட்டுரையின் நீளமும், குறிக்கோளும் மாறி ஒருவித அலுப்பை ஏற்படுத்தக்கூடும். அதனால் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல இந்த ஒரு பாடலைப் பற்றி மட்டும் விவரித்து முடித்துவிடலாம் என்றுதான் நினைத்தேன்.

ஆனால், என்னால் முடியவில்லை. அடுத்தடுத்துப் பல பாடல்களும் நினைவில் வந்து போனது. நமது கால கட்டத்தில் வாழ்ந்த அற்புதமான கவிஞர் அவர். அவருடைய அனுபவமும், சரஸ்வதியின் கடாட்சமும் நிறைந்து அற்புதமான பாடல்கள் அவர் மூலமாக வந்து கொட்டியது, தமிழுக்குக் கிடைத்த பெறும் பேறு.

மனம் என்ற ஒன்று பாடாய்ப்படுத்துவதால் மனிதன் கவலைப்பட்டு, துக்கப்பட்டு எப்படியெல்லாம் நொந்து நூலாகிறான் என்று ஒரு பாடலில் சொல்லும் போது, விலங்கு மற்றும் பறவை இனங்கள் அப்படி இல்லை என்று உவமைப்படுத்துவார்.

பெட்டைக் கோழிக்குக் கட்டுச் சேவலை
கட்டி வைத்தவன் யாரடா…
அவை எட்டுக் குஞ்சுகள் பெற்றெடுத்ததும்
சோறு போட்டவன் யாரடா…
வளர்ந்த குஞ்சுகள் பிரிந்த போதும்
வருந்தவில்லையே தாயடா…
மனித ஜாதியில் துயரம் யாவுமே
மனதினால் வந்த நோயடா…

மேலும் பணத்தைச் சுற்றிதான் உறவுகள் என்ற நிலைப்பாட்டினை இப்படிச் சொல்வார்…

அண்ணன் என்னடா தம்பி என்னடா
அவசரமான
உலகத்திலே
ஆசைகொள்வதில்
அர்த்தம் என்னடா
காசில்லாதவன்
குடும்பத்திலே…
தாயும்
பிள்ளையும் ஆனபோதிலும் வாயும்
வயிறும்
வேறடா
சந்தைக்
கூட்டத்தில் வந்த மந்தையில்
சொந்தம்
என்பதும் ஏதடா…
வாழும்
நாளிலே கூட்டம் கூட்டமாய்
வந்து
சேர்கிறார் பாரடா
கை
வறண்ட வீட்டிலே உடைந்த பானையை
மதித்து
வந்தவர் யாரடா…
பணத்தின்மீதுதான்
பக்தி என்றபின்
பந்தபாசமே
ஏனடா…

கவிஞரின் பாடல்கள் கடலைப் போன்றவை. அதில் நீங்கள் எத்தனையோ விதவிதமான முத்துக்களை த்தேடி எடுக்கலாம். அதில் மகிழ்ச்சியோடு நீந்தலாம்; வெகுதூரம் பயணிக்கலாம். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் சரியான முடிவெடுக்கவும் அந்தப் பாடல்கள் உதவலாம்.

அது மட்டுமல்லாமல், உற்சாகமான பாடலைப் பாடி மனதை நேர்மறையான சிந்தனைகளில் லயிக்க வைக்கலாம்.

மானம் பெரிதென்று வாழும் மனிதர்களை
மான்
என்று சொல்வதில்லையா – தன்னைத்
தானும்
அறிந்து கொண்டு ஊருக்குச் சொல்பவர்கள்
தலைவர்கள்
ஆவதில்லையா’

என்று உணர்த்தியவர் கவிஞர்.

‘உலகம் பிறந்தது எனக்காக’ என்று உணர்ந்து பாடினால் ஒரு நாள் உலகையே நீங்கள் சுற்றி வரலாம்.

அதனால் கவியரசு கண்ணதாசனைப் போற்றுவோம். அவருடைய பாடல்களுக்காகப் பெருமைப்படுவோம்.

’கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்’ என்று சொல்வார்கள். கவிஞரின் பாடல்கள் கடல் போன்றது என்று சிந்தித்ததாலோ என்னவோ, எனக்கும் ஒரு கவிதை தோன்றியது. அது ஒரு சிலேடைக் கவிதையாக உருவானது.

கவிஞருக்கு ஒரு ரசிகனாக இந்தச் சிலேடைக் கவிதையைச் சமர்ப்பிக்கிறேன்.

”இசைக்கும் இன்பம் கொடுக்கும்; எட்டுத்
திசைக்கும்
விரிந்து கிடக்கும் – அதிசயம்
அவிழ்க்கும்;
அழியாது இருக்கும்; ஆழமிக்க
கவியரசின்
பாடல்கள் கடலுக்கு நேர்”

சிலேடை என்பதால் அதன் விளக்கம் இங்கே:

இசைக்கும் இன்பம் கொடுக்கும்.

கடல் அலை அலையாக வந்து கரையில் மோதிச் சப்தமிட்டுக் கொண்டே இருக்கும். அதைப் பார்த்துக் கொண்டு இருப்பதே நமக்கு இன்பத்தைக் கொடுக்கும்.

கவிஞரின் பாடல்களை வாசித்தாலே அதில் ஒரு இசைலயம் இருக்கும். அது இசையோடு சேர்ந்து வரும்போது அந்த இசைக்கே அது ஒருவித இன்பத்தைக் கொடுக்கிறது.

எட்டுத் திசைக்கும் விரிந்து கிடக்கும்.

இந்த உலகில் பெரும்பாலான பகுதியைக் கடல்தான் ஆக்கிரமித்திருக்கிறது. எல்லாத் திசைகளிலும் விரிந்து கிடக்கிறது.

கவிஞரின் கவிதையில் எல்லா வகையான சுவைகளும் இருக்கும். எல்லாவிதமான கருத்துக்களும் அனுபவங்களும் இருக்கும். வாழ்வில் எந்த நிலையில் இருப்பவருக்கும் பொருந்தும்படி இருக்கும்.

அதிசயம் அவிழ்க்கும்.

கடலினுள்ளே இன்னும் மனிதர்கள் அறியாத பல ரகசியங்கள் புதைந்து கிடக்கின்றன. அது வெளிப்படும் போது ஒவ்வொன்றும் அதிசயிக்கத் தகுந்ததாக இருக்கும்.

கவிஞரின் பாடல்கள் ஒவ்வொன்றும் எளிமையாகவும் அர்த்தம் பொதிந்ததாகவும் இருப்பது அதிசயிக்க வைக்கும். உண்மைகளை நிர்வாணமாக வெளிப்படுத்தும்.

அழியாது இருக்கும்.

கடல் என்றும் அழியாதது.

அதுபோல கவிஞரின் பாடல்களும் காலத்தால் அழியாதது.

ஆழமிக்க(து)

கடல் ஆழம் அறிய முடியாதது.

கவிஞரின் பாடல்களும் ஆழமான கருத்துக்களை உடையது.

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “என் பார்வையில் கண்ணதாசன்

  1. மதிப்பிற்குரிய வல்லமை ஆசிரியர் அவர்களுக்கு,
    என்னுடைய கட்டுரையை வெளியிட்டதற்கு மிக்க நன்றி . ஒரு சிறிய திருத்தம் Tags என்ற இடத்தில் ரா. பழனிச்சாமி என்று பதிவாகி உள்ளது. அது எஸ். பழனிச்சாமி என்று இருக்க வேண்டும். தயவு செய்து திருத்தவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *