வல்லமையாளர் விருது!

இந்த வார வல்லமையாளர்!

இந்த வார வல்லமையாளர்!

ஜூன் 16, 2014

சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலகட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு செய்யப்பட்டவர்

இவ்வார வல்லமையாளர்

வல்லமைமிகு  பெனோ செபீன்  அவர்கள்

BENO
இவ்வார வல்லமையாளர் விருதிற்காக ஐவரிடம் (விருது அறிவிப்பாளராகிய என்னையும் சேர்த்து) இருந்து  ஐந்து சாதனையாளர்களின் பெயர் முகநூல், மின்னஞ்சல்கள் வழியாகப்  பரிந்துரைக்கப்பட்டது.  அந்த சாதனையாளர்களில், வல்லமை இதழின்  வாசகர் திரு. ரவி சுப்பிரமணியன் அவர்கள் பரிந்துரைத்தவர்களில் ஒருவரான  ‘பெனோ செபீன்’ (Beno Zephine) அவர்களை இவ்வார வல்லமையாளராகத் தேர்வு செய்து அறிவிப்பதில் வல்லமை குழுவினர் மழ்கிழ்சி அடைகிறோம்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,)  நடத்திய 2013 ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில்,   அகில இந்திய அளவில் 1,122 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 109 பேர்.  இவர்களில் சென்னையை சேர்ந்த, பிறவிலேயே பார்வையற்ற மாற்றுத்திறனாளியான பெனோ  செபீனும் ஒருவர்.  ஐ.ஏ.எஸ். படிக்க  வேண்டும் அதன்மூலம் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற உணர்வுடன் படித்து, தேர்வில் வெற்றி பெற்று (343 வது இடம்) சாதனை படைத்துள்ளார்.

Beno Zephine3

ரயில்வேயில் ஊழியராகப் பணியாற்றி வரும் இவரது தந்தை சார்லஸ் மற்றும்  இல்லத்தரசியான தாய் மேரிபத்மஜா ஆகியோரின் மகளான 24 வயது பெனோ  நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்தவர். விழியற்றோருக்கான லிட்டில் பிளவர் கான்வென்ட்டில்  பள்ளிப்படிப்பையும், ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரியில் பி.ஏ.(ஆங்கில இலக்கியம்),  லயோலா கல்லூரியில் எம்.ஏ படித்தவர். ஸ்மார்ட் லீடர்ஸ் ஐஏஎஸ் அகாடமியில் வார இறுதி ஐஏஎஸ் பயிற்சி வகுப்பில் படித்தவர்.  தகுதிநிர்ணயநிலையில் தற்போது இவர்  திருவள்ளூரில் ஸ்டேட் வங்கியில் பணிபுரிந்து கொண்டே பாரதியார் பல்கலைக் கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் பிஎச்டியும் படித்து வருகிறார்.

இவரது சிறப்புத் தேவைகளை கருதி இவருக்கான பாடத்திட்டங்களை சிடியாக தயாரித்து பயிற்சி நிறுவனம் வழங்க, அதை பெனோ பிரெய்லி முறையில் மாற்றிப் படித்துள்ளார். இவருக்கு கல்லூரியில் வகுப்பு இருக்கும் நாட்களில் இவரது தந்தை பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பாடங்களை ஒலிப்பதிவு செய்து எடுத்துச் செல்வாராம். அதை கேட்டு பெனோவும் பயிற்சி பெற்றிருக்கிறார்.  சிறு வயதிலிருந்தே இவரது முன்னேற்றத்தை முதல்  கடமையாகக் கொண்ட பெற்றோர்கள் தொடர்ந்து இவருக்காகப் பாடங்களையும், செய்தித்தாள்களையும் படித்துக் காட்டி உதவி செய்திருக்கிறார்கள்.

Beno Zephine2
விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கு ஒப்பாக பள்ளி நாட்களிலும், கல்லூரி நாட்களிலும் பற்பல  போட்டிகளில், குறிப்பாக பேச்சுப் போட்டிகளில்  பரிசு பெற்றவர் பெனோ.  இவரது துடிப்பான ஆற்றல், இவரது பள்ளி நாட்களில் அவரது பள்ளிக்கு வருகை தந்த அந்நாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களைக் கவர்ந்திருகிறது.   துணை முதல்வர் ஸ்டாலினிடம் தனது பிறந்தநாள் பற்றி கூற அவரும் பெனோவின் இல்லத்திற்கு தவறாது வந்து பிறந்தநாள் கேக் ஊட்டி வாழ்த்தும் தெரிவித்திருக்கிறார்.

Beno Zephine
மாநில அளவில் முதல் மதிப்பெண்கள் பெரும் மாணவர்களுக்கு விருதுகள் வழங்கும் பொழுது, மாற்றுத் திறனாளிகளில், விழியிழந்தோரில் முதலிடம் பெறுபவர்களுக்கு ஏன் மாநில அளவில் பாராட்டுகள் வழங்கப்படுவதில்லை என்ற கேள்வியை எழுப்பி, அந்நாள் முதல்வர் கருணாநிதியிடம் பெனோ கோரிக்கையை  வைக்க, முதல்வரும் கோரிக்கையை ஏற்று  பரிசீலனை செய்து அரசாணையும்  பிறப்பித்துள்ளார்.  பொதுவாழ்விலும், சேவையிலும், தலைமைப் பண்பிலும் இதுபோன்ற இவரது தொடக்கமே வியப்பூட்டுவதாக அமைந்திருக்கிறது.

Beno Zephine5

இவரது கல்லூரி நாட்களில், 2008  ஆம் ஆண்டு, அமெரிக்காவில் நடைபெற்ற உலக இளம் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள பெனோவிற்கு அழைப்பு வந்தபோது, தனது குடும்பத்தினரால் தன்னை அமெரிக்காவுக்கு அனுப்ப முடியாது என்பதை உணர்ந்த பெனோ,  மு.க.ஸ்டாலின் அவர்களை அணுகி தனது கோரிக்கையை வைத்துள்ளார். துணை முதலவராக இருந்த மு.க.ஸ்டாலின் அவர்களும் அரசு சார்பில் ரூபாய் ஐந்து  லட்சம் வழங்கி அமெரிக்காவுக்கு இவரை அனுப்ப  உதவியதுடன், அவரது நண்பர் இல்லத்திலேயே பெனோவைத் தங்க வைத்து, பெனோவிற்குத் தேவையான உதவிகளை வழங்கவும்  ஏற்பாடு செய்துள்ளார்.  பெனோவின் உரை மாநாட்டில் அனைவரையும் கவருமாறு அமைய பெனோ நல்ல பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

Beno Zephine6

இதனை அவரே விவரிப்பதை இந்தக் காணொளியில் காணலாம்: -http://youtu.be/aGq9d9q2YBs

சிறுவயதில் இருந்தே, மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்கவேண்டும் என்ற கொள்கை கொண்ட  பெனோ,

“எது இல்லையோ அதை நினைத்து வருத்தப்படுவதை விட எது இருக்கிறதோ அதை நினைத்து சந்தோஷப்பட்டால் வாழ்க்கையில் முன்னேறலாம்”

என்று நமக்கு அறிவுரையும்  கூறுகிறார்.

வல்லமையாளரை பா எழுதி பாராட்டுகிறார் கவிஞர் காவிரி மைந்தன்

முழுமை பெற்ற மாந்தரிலே மூடர் பலர் இருக்கையிலே…
புலன்குறைவாயிருந்தாலும் புரட்சிதான் புரிகிறாரே…
இதை இவரால் செய்துவிட முடியுமா என்னும் கேள்விக்கு
கதை முடித்து முதல் நபராய் வெற்றி பெற்று திகழ்கிறாரே!!

இவர்தம் வளர்ச்சிக்காய் இதயங்கள் இரண்டிணைந்து இயங்குவதை..
ஈரமுள்ள விழிமலரால் காணத்தான் முடிகிறதே…
திறமைக்கு கண்ணில்லை.. முயற்சிதான் முக்கியம் என்பதை
அருமையாய் உணர்த்திட்ட பெனோ செபீன் வாழியவே…

 

தனது பிறவிக்குறையை ஒரு குறை என்று எண்ணி துவண்டுவிடாமல் சாதனை புரிந்து, அனைவருக்கும் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வது என்று வாழ்ந்து காட்டிவரும் இளம்பெண்மணி பெனோ செபீன் அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

 

 

 

படம், தகவல்கள்  செய்தித்தாள்கள் மற்றும் இணையத்திலிருந்து.

Print Friendly, PDF & Email
Download PDF
Share

Comments (4)

 1. Avatar

  இந்த வார வல்லமையாளர் பெனோ ஸெபீன் அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுகளும் நல்வாழ்த்துக்களும். மாற்றுத்திறனாளியான அவருடைய வெற்றிக்குப் பின்னாலிருக்கும் உழைப்பும் தன்னம்பிக்கையும் துணிவும் வியக்கவைக்கின்றன.

  என்னால் என்ன செய்யமுடியும் என்று தொய்ந்து துவண்டு நில்லாமல் என்னாலும் எல்லோரையும் போல்… ஏன், எல்லோரையும் விட ஒருபடி மேலாகவும் வாழ்ந்துகாட்டமுடியும் என்று சாதித்துக் காட்டிய அரும்பெண். அவருக்கு மேலும் மேலும் வாழ்வில் வெற்றிகள் குவிய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  இவரைப் பரிந்துரைத்த திரு. ரவி சுப்பிரமணியன் அவர்களுக்கும் தேர்ந்தெடுத்து அறிவித்த வல்லமை நிர்வாகக் குழுவினருக்கும் மனமார்ந்த நன்றி. 

 2. Avatar

  இவர் உலக வல்லமையாளர்.  21 ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் Helen Keller.

  http://en.wikipedia.org/wiki/Helen_Keller

  http://www.biography.com/people/helen-keller-9361967#awesm=~oHmkbm0ma95lZu.

  இவரை வல்லமைக் குழுவுக்கு அறிமுகம் செய்த தேமொழிக்கு முதல் பாராட்டு.

  சி. ஜெயபாரதன் 

 3. Avatar

  சகோதரி பெனோ செபீன் அவர்களுக்கு இனிய நல்வாழ்த்துகள்.

  இவரை அறிமுகம் செய்த சகோதரி தேமொழி அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுதல்களும்.

 4. Avatar

  இந்த வார வல்லமையாளர் சகோதரி பெனோ செபீன் அவர்களுக்கு என் பாராட்டுக்கள். மக்கள் பணியில் அவர் மென்மேலும் பல சாதனைகள் புரிய வாழ்த்துகிறேன்.

Leave a Reply to சி. ஜெயபாரதன் Cancel reply