–ப.கண்ணன்சேகர்.

 “கவியரசர் பார்வையில் மகளிர்”

Kannadasan  பாரதிக்கு பின் வந்த பார்போற்றும் கவிஞர் நமது கவியரசு கண்ணதாசன்தான். இவர் எழுத்து வடிவில் தமிழ் சமுதயாத்திற்கு எண்ணற்ற காவியங்களையும் கவிதைகளையும் படைத்திருக்கிறார். இவை அனைத்தும் தலைமுறைகளைத் தாண்டி தமிழ்ச்சமுதாயத்திற்கு  பயன்படும் கல்வெட்டுக்களாக திகழ்கின்றன. இவர் பேனா தொடாத துறைகளே இல்லை என்று கூறும் அளவிற்கு எழுத்துலகில் கோலோச்சியுள்ளார்.

குடும்பத்தில் ஒவ்வொரு உறவுக்கும் இவரின் வழிகாட்டுதல்கள் எல்லாத் தலைமுறையும் ஏற்றுக்கொள்ளும் முறையாக அமைந்துள்ளது. குறிப்பாக  மகளிர்காக இவரின் படைப்புக்கள் சிறப்பாகவே இருப்பதை அறிய முடிகிறது.பெண்மை, பக்தி, ஆளுமை, குடும்பம், உறவுகள் என பல வடிவங்களில் மகளிர் சிறப்பை குறிப்பிட்டுள்ளார். பெண்ணாக பிறந்து விட்டால் பக்தி என்பது இயல்பாய் வரக்கூடியது எனவும், நாத்திகனாக கணவன் இருந்தாலும் அந்த வீட்டில் இறை உணர்வுடன் மனைவி இருப்பது பல குடும்பங்களில் கண் கூடு. பட்டணத்தில் பூதம் திரைப்படத்தில் இடம் பெற்ற அந்த சிவகாமி மகனிடம் பாடலில்,

பெண்ணென பூமியில் பிறந்த பின்னாலே
வேலை வணங்காமல் வேறேன்ன வேலை?

அதே போல “அவன் பித்தனா”  படத்தில் “இறைவன் இருக்கின்றானா..” பாடலில்,

“மனிதன் இருக்கின்றானா..
இறைவன் கேட்கின்றான்
…………………………..
ஒன்றையே நினைத்திருந்தும்
ஒன்றாக வாழ்ந்திருந்தும்
பெண்ணாக பிறந்தவரை
கண்ணாக யார் மதித்தார்.. ”

ஒரு பெண் கற்புடையவளாக தனது கணவன், குடும்பம் என வாழ்தாலும், அவளை மதிக்காத சமூகமே நிறைந்து காணப்படுவதை தமது வரிகளால் கவியரசர் குறிப்பிடுவது பெண்ணுக்கு வாதாடும் வக்கீலாகவே காணப்படுகிறார். அதே போல் மாதராண்டு வரவேற்போம் என தமது கவிதையில்,

பாவையர் வாழ்க்கை என்றும்
வீடு காப்பது – எங்கள்
பாரதத்துப் பெண்மை
இன்று நாடுகாப்பது
சேவை செய்யும் பெண்மை
இன்று அதிகமானது..

(கண்ணதாசன் கவிதைகள் -6 பக்:164)

மகளீரின் நாட்டுப்பற்றை குறிப்பிட்டு, இன்று எல்லாத்துறையிலும் பெண்களின் வளர்ச்சி கண்டிருப்பதை எழுதியுள்ளார். ஆணுக்கு பெண் சமம் என்ற பாரதியின் சமதர்ம சிந்தனைகளை கவியரசர் பாடல்களிலும் பல இடங்களில் காண முடிகிறது.  நல்லபெண்மணி இருக்கும் ஒரு வீடு கோவிலுக்கு இணையாகும் என்பதை,  ஒரு பாடலில் மகளிரின் பெருமையை உயர்த்திக் காட்டுகிறார். பச்சைவிளக்கு திரைப்படத்தில் “கேள்வி பிறந்தது அன்று…”  பாடலில்,

குலமகள் வாழும் இனியகுடும்பம்
கோயிலுக்கிணையாகும்
குறை தெரியாமல் உறவு கொண்டாலே
வாழ்வும் சுவையாகும்..

இப்படி ஒரு பெண்ணிடம் சிறு குறை இருந்தாலும் அவற்றை பெரிது படுத்தாமல் இருக்கும் உறவுகள் நிறைந்த குடும்ப வாழ்க்கை சுவையானது என சுவைபட வார்த்தைகளை வகைப்படுத்தி எழுதும் பக்குவம் கவியரசரைத் தவிர வேறு யாருக்கு வரும்?

இதை விட மிகச்சிறப்பாக தனது மனைவி பொன்னம்மாளுக்கு காது கேட்காது என்றாலும் அதை பக்குவமாக ஏற்றுக் கொண்டு, அந்த சீமாட்டியை சிறப்பிக்கும் கவியரசரின் குணம் குன்றின் மேல் வைத்த விளக்காய் ஒளிர்கிறது.

                                                  செவிகள்பழு தானாலும்
                                                                    சேவைச் சிறப்பால்என்
                                                 கவிகள்பழு தாகாமல்
                                                                 காத்துவந்த ராஜாத்தி!  
                                                குடிக்க துணிந்ததற்கோ
                                                                     குத்துகின்ற ஊசிகட்கோ
                                               கண்ணான என்மனைவி
                                                                     காரணமாய் இருந்ததில்லை!

(“பொன்னம்மா என் மனைவி” கவிதை நூல்)

இந்த வைரவரிகள் கவியரசரின் மனைவியை குறிப்பிடுவதாய் இருந்தாலும் ஊனமுற்ற மகளீருக்கும் இவரின் எழுத்துக்கள் பெருமை சேர்ப்பதாகவே இருக்கிறது. இப்படி பெண்ணின் பெருமைப் பற்றி கவியரசர் எழுதியுள்ளதை பல மேற்கோள்களுடன் பல பக்கங்களுக்கு எழுதலாம்.

பெண்களை ஆடையில்லாமல் வர்ணிக்கும் ஆபாச உலகில் “ஆடைக் கட்டிய ரதமே ரதமே.. அருகில் அருகில் நான் வரவா… என்று பெண்மையை போற்றி புகழ்ந்தவன் நமது கவியரசு கண்ணதாசன். பெண்மையின் புகழை பெருமையாய் பாடிய அந்த கவிஞனை என்றும் போற்றுவோம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *