கே.ரவி

IMG00131-20110425-1932

தந்தையினும் களிகூரத் தழுவி எங்களைத் தமிழிலக்கியத்தின்பால் ஆற்றுப்படுத்திய டாக்டர் ஒளவை நடராஜன் போலவே என்னிடமும், சிவத்திடமும் பாசத்தோடு பழகிய இன்னுமோர் இலக்கிய அன்பர், தீபம் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த நா.பார்த்தசாரதி.

514-229x300

1960-70 களில், ஓரளவு தமிழ் இலக்கிய ஈடுபாடும், லட்சிய தாகமும் கொண்ட இளைஞர்களிடம் நா.பா.வை ப் போலத் தாக்கம் ஏற்படுத்திய எழுத்தாளர் வேறு எவரும் இருந்திருக்க முடியாது. யதார்த்தத்தின் பக்கம் ஈர்க்கப்பட்ட இளைஞர்களுக்கு ஜெயகாந்தன் என்றால், இலட்சியத்தின் பக்கம் ஈர்க்கப்பட்ட இளைஞர்களுக்கு நா.பா.! அவருடைய குறிஞ்சி மலர், பொன்விலங்கு, மணிபல்லவம் ஆகிய நாவல்களால் பாதிக்கப் படாத இளைஞர்கள் அப்போது வெகு குறைவு.

suki---siv1

சிவமும், நானும் நா.பா.விடம் நெருக்கமாகப் பழகித் தமிழ் இலக்கியத்தின் பல நுட்பங்களை அவரிடமிருந்து தெரிந்து கொண்டோம் என்பது மறுக்க முடியாத உண்மை. பல பட்டிமன்ற மேடைகளில் அவரோடு கலந்து கொண்டு வாதாடியிருக்கிறோம்.

1971-ல் என்று நினைக்கிறேன், நா.பா. அவர்களுடன் பூனேவுக்கு, (அப்போதைய பூனா) ஓர் இலக்கியக் கூட்டத்தில் உரையாற்ற சிவமும், நானும் சென்றிருந்தோம். பாரதி இளைஞர் சங்கத் தலைவர், பாரதி காவலர் கே.ராமமூர்த்திதான் ஏற்பாடு செய்து எங்களை அனுப்பியிருந்தார். அந்தக் கூட்டத்தில் நா.பா.அவர்கள் ஆற்றிய உரை எங்களுக்கு ஒரு பிரமிப்பை ஏற்படுத்தியதுடன், கவிதை ரசனையின் புதிய கோணம் ஒன்றைக் கற்றுத் தந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. அந்தக் கூட்டத்தில் பாரதியின் கவிச்சொல்லாளுமை பற்றிக் குறிப்பிட்ட நா.பா., பாரதியின் கவிச்சொற்கள் முப்பரிமாணச் சொற்கள் என்று சொல்லி விளக்கினார். ‘வெள்ளிப்பனிமலை’, ‘சுட்டும்விழிச்சுடர்’, ‘சோலைமலரொளி’, இப்படிப் பல எடுத்துக்காட்டுகளை அடுக்கி வைத்தார். மலை, பனிமலை, வெள்ளிப்பனிமலை, என்று மூன்று அடுக்குகளாகக் காட்சி விரியும் அழகை அவர் விளக்கிய விதம் இன்னும் என் நினைவில் பசுமையாக உள்ளது.

நா.பா.விடம் நல்ல கவிதை ரசனையும் இருந்தது, கவியூக்கமும் இருந்தது. அது என்ன கவியூக்கம்?

உரைநடையில் ஏதாவது எழுதிக் கொண்டே வரும்போது, திடீரென்று ஓர் உந்து சக்தியால் ஊக்கப் பெற்றுச் சிந்தனையின் முயற்சி இல்லாமலேயே சொற்கள் ஜிவ்வென்று சிறகடித்துப் பறக்கத் தொடங்கிவிடும். ஆங்கிலத்தில் இதை ‘flight’ என்றே குறிப்பிடுவார்கள்.

உரைநடையில் நான் அதிகம் எழுதியிராத போது, 1980-ல் என்று நினைக்கிறேன், சென்னைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவதற்காக பாரதியின் மீது ‘கானப் பறவை’ என்ற தலைப்பில் ஓர் ஒலி-ஒளிச் சித்திரம் எழுதினேன். உரைநடையாக எழுதிக் கொண்டே வந்த போது, என்னையறியாமல் பல இடங்களில் மேற்சொன்னவாறு சொற்கள் சிறகடித்துப் பறந்ததை நான் அனுபவித்தேன். அதைப் படித்துப் பாராட்டித் தேர்வு செய்த தொலைக்காட்சி அதிகாரி, திரு எம்.எஸ்.பெருமாள் (நம்ம சுகி சிவத்தின் மூத்த சகோதரர்), தம் பரிந்துரையில் பல இடங்களைக் குறிப்பிட்டிருந்தார். அதில் ஒன்று: “கவிதை வெறும் ஆற்றல் இல்லை, அதுவோர் ஆற்றாமை”.

நா.பா.வின் புதினங்களில் இப்படிப்பட்ட இடங்கள் விரவியிருக்கும். “தின்பதற்காக மட்டுமன்றித் தின்னப் படுவதற்காகவே அமைந்த பற்கள்” போல பல உதாரணங்கள் சொல்லலாம். அதையும் தாண்டி, அவருடைய உரைநடைப் புதினத்தில் திடீரென்று செய்யுள் நடையில் ஓரிரண்டு வரிக் கவிதைகளே வந்து விழுவதும் உண்டு. “முத்துநகை பூத்த முகம்” என்ற ஈற்றடியோடு மணிபல்லவத்தில் கனஜோராக வந்து குந்தியிருக்கும் வெண்பாவைச் சொல்வேனா? இல்லை, “சொல்லிவிட்ட பழமையெல்லாம் சீர்திருத்த முன்வந்தான், புல்லரித்து மனம்வாடிப் போகின்றான் போகின்றான்” என்று பொன்விலங்கில் இடம்பெற்ற உணர்ச்சி வரிகளைச் சொல்வேனா? இல்லை, “நிலவைப் பிடித்துச் சில கரைகள் துடைத்துக் குறு முறுவல் பதித்த முகம், தரளம் மிடைந்து ஒளி தவழக் குடைந்து இரு பவளம் பதித்த இதழ்” என்று குறிஞ்சி மலரில் சந்தம் மிடைந்து சுவை யூறிக் கலந்து மணி யாகத் தெறித்த வரி வந்த அழகைச் சொல்வேனா?

கல்கி தொடங்கிய இந்த உத்தியை நா.பா. மிக அழகாகத் தம் புதினங்களில் பயன்படுத்தியிருந்தார்; புதினம் என்ற பூங்காவில் புதுவெள்ளம் போல் பொங்கிவந்த கவிதைப் பெருக்கு, வாசகர்களைத் திக்கிமுக்காடச் செய்தது.

ஆனால், புதினங்களில் இடம்பெற்ற உன்னதக் கவிதை வரிகளைத் தொடக்கமாகக் கொண்டு அவற்றையெல்லாம் நீட்டி முழுக் கவிதைகளாக்கி அவர் ஒரு கவிதைத் தொகுப்பு வெளியிட்டார். அந்தக் கவிதை நீட்டல்களில் ஆரம்ப வரிகளின் ஜீவன் இல்லை. அந்த உணர்ச்சி வேகம் இல்லை. வெறும் சிந்தனை முயற்சியாகவே அந்தக் கவிதைகள் இருந்தன. படித்துவிட்டுச் சலித்துக் கொண்டேன்.

அவரைச் சந்தித்துப் பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், ஒருநாள் அவர் இல்லத்திலேயே நடந்த கவியரங்கத்தில் நான் கலந்து கொண்டேன். கவிஞர்கள் சொன்ன கவிதைகளை ரசித்துக் கேட்டுவிட்டு அவர் ஒரு சிற்றுரையாற்றினாரே தவிர ஏதும் கவிதை படிக்கவில்லை. கவியரங்கம் முடிந்த பிறகு மெல்ல அவர் அருகில் சென்று ‘நீங்கள் ஏன் கவிதை படிக்கவில்லை’ என்று கேட்டேன். அவர் சொன்ன பதிலில் அதிர்ந்து போனேன்.

‘நீதான் என் கவிதைத் தொகுப்பைப் படித்துவிட்டு வெறும் சிந்தனை முயற்சி கவிதையாகுமா என்று விமர்சனம் செய்தாயே. அது என் மனத்துக்குச் சரியென்று பட்டது. இன்ஸ்பிரேஷன் வராமல் கவிதை எழுதுவது இல்லை என்று முடிவெடுத்தேன். அதற்குப் பிறகு உள்ளூக்கமே வரவில்லை, கவிதையும் எழுதவில்லை’ என்று சிரித்துக் கொண்டே சொன்னார். நான் எப்பொழுது அந்த விமர்சனத்தை அவர் செவிபடச் சொன்னேன் என்று இன்றுவரை ஞாபகம் வரவில்லலை. ஆனால், அவருடைய பெருந்தன்மையால் வாயடைத்துப் போய் அப்போது ஒன்றும் சொல்லத் தோன்றாமல் வந்து விட்டேன். அதற்குப் பிறகு அவரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டவே இல்லை.

என்ன சிகாமணி! கவனித்தாயா, கவிதையின் கதை எங்கே போகிறது? நீ ரொம்ப அலட்டிக் கொண்டால் கவிதை வராதுங்காணும். நான் மட்டுமா சொல்கிறேன். காலேஜ் பிரின்ஸிபலே சொல்லிவிட்டார் அப்பா.

ஆம், வ.வே.சுவும் மிக அழகாகக் கவிதையிலேயே இதைச் சொல்லிவிட்டார். அந்த வரிகளை நான் வேத வாக்காகவே மதிக்கிறேன்.

“—— ——- ——– —- —– ——– வெறும்
புத்தியைக் கொண்டு புனைகின்ற கவிதைகள்
பூஜைக்குச் சேர்வதில்லை — கவி
ஒத்திகையில் கொஞ்சம் பக்தி சேராவிடில்
உள்ளம் தொடுவதில்லை.”

சிகா ஏதோ சொல்ல வாயெடுத்தான். நான் குறுக்கிட்டு, ‘மனோன்மணி எங்கே?’ என்றேன்.

‘என்ன ஓய், விவரம் புரியாத வைதிகமாயிருக்கிறீர், எப்பப் பார்த்தாலும் நான் வேறு, மனோன்மணி வேறு என்றே நினைக்கிறீர்! என் பெயரென்ன?’ என்று கேட்டான்.

‘சிகாமணி; புத்தி சி கா ம ணி’ என்று அழுத்தம் திருத்தமாகப் பதில் சொல்லிவிட்டு அவனை உற்றுப் பார்த்தேன். அடாடா! ஒரே கணத்தில் என் நோக்கு விரிவு பெற்றது. கண்டறியாதன கண்டேன். ஆம், சிகாவும், மனோன்மணியும் கலந்த அர்த்தநாரியாக, மாதொருபாகனாக, சிகா-மணியாக என்னெதிரே அவன் விஸ்வரூப தரிசனம் காட்டி மறைந்தான். தரிசனத்துக்குப் பிறகு உடனே எதுவும் சொல்ல வார்த்தை வருமா? பிறகு சந்திக்கிறேன்.

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “காற்று வாங்கப் போனேன் – பகுதி 10

  1. கவிதை வெறும் ஆற்றல் இல்லை, அதுவோர் ஆற்றாமை”.  என்ற ரவியின் வரிகள் எனக்கு மிகப் பழக்கப் பட்டவை. இந்த ஆற்றாமைதான் எல்லாக் கலைகளுக்கும் களமும் தளமும் அமைத்துக் கொடுக்கின்றது என்பதை காலம் செல்லச் செல்லப் புரிந்து கொண்டேன். Therefore I consider it to be a comprehensive statement of appreciation of all creative art forms.

  2. குறிஞ்சிமலர், பொன்விலங்கு, மணிபல்லவம் போன்ற இலக்கியங்களைப் படைத்த திரு.நா.பா. அவர்களைப் பற்றிய பகிர்வு மிக அருமை

    …………………………..
    “செல்லரித்த பழமையெலாம் சீர்திருத்த முன்வந்தான்”

    என்று நினைவு…

    சு.ரவி

  3. ஐயா! இந்தக் கட்டுரை படித்த தருணம் என் வாழ்வில் மறக்க முடியாத தருணமாக இருக்கப்போகிறது. அருமை. நா.பா. பற்றி நினைத்தாலே பக்தியும் வியப்பும் பணிவும் கூடிவிடுகிறது. நா.பா.வின்  காலத்தில் வாழாத அபாக்கியசாலியான நான் அவரோடு பழகிய உங்கள் கட்டுரையின் ஒவ்வொரு எழுத்திலும் நா.பா. அவர்களை தரிசித்தேன். உங்களுடன் பேச பேராவலாக உள்ளேன். முடிந்த சமயத்தில் அழையுங்கள் என் லைப்பேசிக்கு அழையுங்கள். 7845751366

  4. I admit. Su. Ravi is right. It must be “selaritha” instead of “solli vitta” in the lines quoted from Na Pa’s Ponvilangu.. Thanks for the correction. K.Ravi

Leave a Reply to சு.ரவி

Your email address will not be published. Required fields are marked *