-இவள் பாரதி

அதிலும்… 

அத்தனை இறுக்கமாகக்
குழந்தையின் கையைப் பிடித்திருக்கக்கூடாது
அதிலும் அவளின் பச்சைநிற                                                  nivi-192x3001
ப்ளாஸ்டிக் வளையல் உடையும் அளவிற்கு
அதிலும் உடைந்த பின்னும்
ஒரு சிறுவருத்தம் கூடத் தெரிவிக்காமல்
ஒரு மன்னிப்பைக் கோரும் முகபாவமின்றி…
அதிலும் அழுகின்ற சின்னஞ்சிறு கையை உதறிவிட்டு
அந்த அறையை விட்டு வெளியேறி…
அதிலும் பசியுற்றிருந்தும் அந்தச் சின்னவள்
தினைப்பொங்கலைச் சாப்பிட மறுத்தபோது
பெற்றவள் அருகில் இருக்கிறாளெனத் தெரிந்தும்
இத்தனை கோபம் கொண்டிருக்கக்கூடாது
அதிலும் அன்பைச் சிரிப்பிலும்
அசெளகரியத்தை அழுகையிலும் மட்டுமே
வெளிப்படுத்தத் தெரிந்த பச்சை மண்ணிடம்! 

காக்காத் தூக்கிட்டுப் போயிருச்சு!

எப்போது ஒரு பொருளைக் கேட்டுக்
குழந்தை அடம்பிடித்தாலும்
பெரியவர்கள் காக்கைத் தூக்கிப் போய்விட்டதாகக் கூறினர்!
ஒருநாள் உண்மையாகவே
காக்கை வந்து குழந்தையிடமிருந்து
அந்தப் பொருளைத் தூக்கிச் செல்ல,
குழந்தை காக்கை தூக்கிப்போய்விட்டதாகக்
கூறிய உண்மையை
எல்லோரும் பொய்யென்றே நம்பினர்!
குழந்தை புரிந்துகொண்டது
முன்னர்ப் பெரியவர்கள் சொன்ன பொய்யெல்லாம்
உண்மைதான் என்று!!

அடையாளம்

உடல் உறுப்புகளில்
சிலவற்றை அடையாளம் காட்டும் அம்மாகுட்டி
அம்மா எங்கே என்றாலும்
அப்பா எங்கே என்றாலும்
தன்னையே அடையாளம் காட்டுகிறாள்!
அம்மாவின் அடையாளமும்
அப்பாவின் அடையாளமும்
ஒருங்கே கொண்டிருந்த
அவள் சொல்வதும் உண்மைதான்!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *