கிரேசி மோகன்

தக்காளி ரசத்தில் கடுகைத் தாளித்துக் கொட்டினா மாதிரி, பகலை இரவு சந்தித்துக் கை குலுக்கும் சாயங்கால நேரத்து வானைப் பார்த்தபடி….ஸாரி பார்க்காதபடி கண்களை
துணியால் கட்டிக்கொண்டு அண்ணாந்து பார்த்தபடி ” சரியா!….தப்பா!….சரியா!….தப்பா!” சொல்லிக் கொண்டே அந்த சிறுமி நொண்டியபடி பாண்டி ஆட்டம் ஆடிக்
கொண்டிருந்தாள்….சக சிறுமிகளின் சத்தம் வராது போகவே, அவள் கண்கட்டை அவிழ்க்க….எதிரே தாடகை ராட்சஸி போல அவள் தாயார் சாமி ஆடிக் கொண்டிருந்தாள்….
” சரியில்லடி….தப்பு….நான் உன்னை பெத்தது தப்பு….உன்னை ஒங்கப்பன் வளத்த விதம் தப்பு” என்று தப்புக்களை அடுக்கியபடி, நிழலை உருவம் இழுத்துக் கொண்டு
போல….தாய் மகளை அடித்தபடி தரதரவென்று இழுத்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள்….

” ஏண்டி பொண்ணை போட்டு இந்த அடி அடிக்குற….”காதை மயிலிறகால் குடைந்தபடி கட்டிலில் கரிசன நைனா….
” அடிக்காம….மடில போட்டு கொஞ்சவா சொல்றீங்க….அவ செஞ்ச….இல்ல செய்யாத காரியத்துக்கு கொன்னே போட்ருக்கணும்….பால்காரம்மா வூட்டுக்கு போய் தாம்பு
கயிறு வாங்கிகினு வான்னு காலீலயே சொல்லியாச்சு….இந்த சிறுக்கி இன்னும் வாங்கிகிட்டு வரா…”
”ஆத்தா சொன்னத கேக்க வேண்டியதுதானே….ஏம்மா ழாழாத்தி…” குடைச்சல் சிலிர்ப்பில் ”ராசாத்தியை” ழாழாத்தி என்று நைனா….!
” அது என்ன எப்பப்பாரு ராசாத்தி ராசாத்தினு கொஞ்சல்….சிறுக்கிக்கு பேர் வச்சிருக்கீங்க இல்ல….அத சொல்லி கூப்பிடறது….”
”நாம என்ன பேர் வச்சாலும் அவ என்னிக்குமே ராசாத்திதாண்டி…. போன வருசம் ராமாயணக் கூத்துல எம் பொண்ணுதானே ராசாத்தி….
ராமன் வில் ஒடைக்க வர சொல்ல ஒரு பாட்டு பாடுவியே…”ஈன்றாத போதும் பெரிதுவந்தார் நைனா….
”நீல வண்ண ராமா நில் நில்….நீ ஒடைக்க தோ பார் வில் வில்” கீச்சு மழலையில் சிறுமி கூவினாள்….!
”நிறுத்துரி ஒன் ஒப்பாரியை….நீல வண்ணமாம் நீல வண்ணம்….ராமன் கருப்புடி…”
” நைனா நைனா ராமனை எனக்கு கட்டி வை நைனா….எனக்கு இந்த சேப்பு புடிக்கல….அவனை கட்டிக்கிட்டு நானும் நீலமாயிடுவேன்” குடையும் மயிலிறகு மறுகாது
வழியாக வரும் அளவுக்கு சிறுமி தன் தகப்பனை உலுக்கி ஆட்டுகிறாள்….
”நீயே நீலம் பாரிச்சுதாண்டி பொறந்த….நல்லவேளை ஒன் சினேகிதி நப்பின்னையோட ஆத்தா உன்னை தலகீளா தொங்கவிட்டு காப்பாத்தினா….எப்பபாரு நீல
ஆலாபனைதான்….ராமனை கட்டிக்கிட்டா காட்டுக்குத்தான் போவனும்….”
”ராமன் இருக்க சொல்ல நான் தெகிரியமா காட்டுக்கு போவேன்….”
”காட்டுக்கு அப்பால போவலாம்….இப்ப பால்காரம்மா வூட்டுக்கு போய் தாம்பு கயிறு வாங்கியா…”
”தாம்பு கயிறு வாங்கிட்டு வந்தா ராமனை கட்டி வப்பியா….?”
” தாம்பு கயிறை வாங்கியா….ஆத்தாளும்,பொண்ணும் தூக்குல தொங்குவோம்….ஏங்க இவ சிறுக்கியா இல்ல கிறுக்கியா….”
”அவ ராசாத்திடி….ராமன் மாதிரி அவளுக்குனு ஒத்தன் பொறக்கத்தான் போறான் பாரு….!”என்றார் கிழிஞ்ச கட்டில் சனக மவராசா….!
”எப்ப பொறந்து….எப்ப வளந்து….எப்ப கல்யாணம்…. அய்யோ அப்பன் பொண்ணு ரெண்டு பேரும் இப்படி கனாலயே காலத்தை தள்ளறீங்களே….
பெத்த வயிறு பத்திகிட்டு எரியுது….”
”ஏண்டி என்னையும் நீயா பெத்தே….?”
”கேலில ஒண்ணும் கொறைச்சலில்ல….தோ பாருங்க நீங்க ஒங்க பொண்ணுக்கு ரொம்ப செல்லம் கொடுத்து குட்டிச்சுவராக்கிட்டீங்க….படிப்பு கிடிப்பு ஒண்ணும்
கிடையாது….எப்பப்பாரு ஆகாசத்தை பாக்கறா….அன்னிக்கு வான வில்ல பாத்துட்டு ”ஆத்தா ராமன் இத ஒடக்க வருவானா” கேக்கறா….பட்டாம் பூச்சிக்கு
பாட்டு சொல்லித் தரா….மல்லிப் பூவுக்கு, நீல கனகாம்பரத்தை கல்யாணம் பண்ணி வக்கறா….இது எங்க போய் முடியப் போவுதோ…!உங்களுக்கே கண்ணுல
ஜலம் வருது பாருங்க….”
”தோ பார் சொகமா காது குடஞ்சா அப்படித்தான் கண்ணுல ஜலம் வரும், வாய்ல ஜொள்ளு ஒழுகும்….அது ஒரு புல்லரிப்புடி….”சனக மவராசா காது குடைஞ்சு
குடைஞ்சு கைலாசத்துக்கெ போயிடுவார் போல கிறக்கத்துல இருந்தார்….பிறகு பெண்ணைப் பார்த்து” உங்காத்தா எதான உளறுவா….நீகாதுல போட்டுக்காதே….
போய் சாப்டு தூங்கு….”
”நீங்க காதுல மயிலிறகை போடறதை மொதல்ல நிப்பாட்டுங்க” என்ற தாயார்காரி, சிறுமி உள்ளே செல்வதைப் பார்த்து ” எங்கடி நழுவுற…உன்னை
வளக்கற விதத்துல வளத்தாத்தான் உருப்புடுவ….மயிலே மயிலேன்னா இறகு போடாது….அப்படியே போட்டாலும் உங்கப்பன் அதுல காது குடைய ஆரம்பிச்சுடுவார்….”
சிறுமி தாயைப் பார்க்க ”என்னடி பாக்கற….கேட்டா பதில் சொல்ல மாட்டேங்கறே….அடிச்சா அழ மாட்டேங்கறே….மனசுல என்ன மாகாளின்னு நெனப்பா…
போயி பால்காரம்மா வுட்டுலேந்து தாம்பு கயிறு வாங்கிகினு வா….அத்தாலா தயிரு கடையறது முன்னாடி உன்னை விளாசறேன்….அப்பத்தான் உனக்குப் புரியும்….”
”இருட்டிடுச்சு ஆத்தா….நாளைக்கு காலீல….”என்று சிறுமி இழுத்தாள்….”இருட்டினா என்ன….அதான் ஒனக்கு துணைக்கு அந்த நீலப் பய இருக்கானே…போடி”
என்று மகளை தள்ளி கதவை சாத்துகிறாள்….” என்னம்மா இப்படி கல்நெஞ்சுக்காரியா கீறே….காத்து கருப்பு உலாவுற வேளைல….பச்சை புள்ளையைப் போய்”
காது சொகம் அலுத்து மயிலிறகால் முதுகை சொரிந்தபடி நைனா செய்த சிபாரிசு எடுபடவில்லை….”உங்க பொண்ணுக்கு காத்தும் புடிக்கும்….கருப்பும் புடிக்கும்…. இவ வயசுல நான் உங்களை கட்டிகிட்டாச்சு….பச்சை புள்ளையாம் பச்ச புள்ள….மொதல்ல அந்த நீலப் புள்ளையை மறக்க சொல்லுங்க….”உள்ளே போகிறாள்….

அன்று பார்த்து பிரளய கால இருட்டு….இரவு ஆரம்பமே அர்த்த ஜாமம் போல் இருண்டது….வரப்போகும் மழைக்கு பராக் பராக் சொல்வது போல சிலு சிலுவென
காத்து…..வானத்தில் யாரோ தக்கிளி நூற்பது போல மின்னல் தோன்றி பூமியைத் தொட்டது….இடிச் சத்தம் சிறுமியின் காதில் ராமர் வில்லை உடைத்த சத்தமாகக்
கேட்டது….சிறுமி பயத்தைப் போக்கிக் கொள்ள ”லட்சுமணா லட்சுமணா” என்று மனசுக்குள் சொல்லியபடி ஆத்தோரமாக பால்காரம்மா வீட்டுக்கு பயணித்தாள்….
”வானத்திலிருந்து மழை பெய்கிறதா இல்லை ஆத்துத் தண்ணீர் வானத்துக்குச் செல்கிறதா” என்று குழம்பும் அளவுக்கு வானத்துக்கும் ,பூமிக்கும் தண்ணீரால்
தறி போட்டது போல மழை பத்தினி சொல்லாமலேயே பெய்யெனப் பெய்தது….துணைக்கு ”ராமனோ,லட்சுமணனோ” வில்லை ஏந்தி வரவில்லை….சிறுமிக்கு
பயம் பிடித்துக் கொண்டது….

ஆத்தோரமாக இருந்த அய்யனார் மண்டபத்திற்குள் ஒதுங்கினாள்….அந்த மண்டபத்தில் ஒருவர் படுக்கலாம் ,இருவர் அமரலாம் ,மூவர் நிற்கலாம்….வெளியே
பேய் இருட்டு ,பொய்கை மழை ,பூதக் காத்து….அச்சத்திலும் , அசதியிலும் சிறுமி மண்டபத்தில் படுக்கிறாள்….அப்போது ஆத்துப் படிதுறையிலிருந்து ஒரு
மாமா தலையில் துணி மூட்டையோடு மண்டபத்தை நோக்கி வருகிறார்….அவர் உள்ளே நுழைந்தவுடன் ”உஸ்” என்ற சத்தம் ஓய்கிறது….பெருமூச்சு விடுகிறார்
பெரியவர் என்று சிறுமி நினைத்த வண்ணம், எழுந்து அமர்ந்து அந்த மாமாவுக்கு உட்கார இடம் அளிக்கிறாள்….பெரியவர் தலையிலிருந்த துணி மூட்டையை
இறக்கி வைக்க இடம் இல்லாததால் சிறுமி எழுந்து நிற்கிறாள்….இப்போது மாமா, சிறுமி இருவரும் நிற்க காலி இடத்தில் துணி மூட்டை….

”அந்த மூட்டைல என்ன மாமா ?”….சிறுமிதான் மெளனத்தைக் கலைத்தாள்….!
” நான் செஞ்ச புண்ணியத்தை மூட்டையா கட்டிண்டு எடுத்துண்டு போறேன்” மாமா முகத்தில் கலவரம் நிரந்தர நிலவரமாகப் படர்ந்து இருந்தது….
” பாவ மூட்டை கேள்விபட்டுருக்கேன்….அது என்ன புண்ணிய மூட்டை ?” சிறுமி விடவில்லை….
கையை நீட்டி மழை பெய்கிறதா என்று பார்ப்பது போல பெரியவர் சிறுமியின் கேள்வியைத் தவிர்த்தார்….
சிறுமி விடுவதாக இல்லை ”உங்க பேர் என்ன மாமா ?”
”பேர்ல என்னம்மா இருக்கு….பேர் சொல்ல பிள்ளை இருந்தா போறாதா….?”பெரியவர் முகத்தில் பெருமிதம் கொப்பளித்தது…அது சரி உம் பேர் என்ன….?”
பெரியவர் பேச்சை மாற்றினார்….!
”எங்காத்தாக்கு ஒரு அண்ணாத்த இருக்கார்….எனக்கு அவர் மாமா முற….அவுரு பேரையே உங்களுக்கு வக்கறேன்….சர்தானா….”
”உன் சவுகரியம் எப்படியோ அப்படியே கூப்பிடுமா….”பெரியவர் நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்குள்….” வாசு மாமா” என்று சிறுமி கூப்பிட
”என்ன சொன்ன ?” என்று திகைத்தார்….”என் மாமன் பேரு வாசு மாமா….உங்களுக்கும் என்ன மாதிரி அவரு பேர கேட்டாலே பயமா….?”
இருவரும் சம்பாஷணையில் திருப்தி இல்லாததால் சிறிது நேரம் மெளனம் காத்தார்கள்….” எம் பேர் ராமி” என்றாள் சிறுமி….
” ராமியா….! கேள்விபடாத பேரா இருக்கே….!”
”ராமன் சம்சாரம் ராமிதானே….நான் ராமனைத்தான் கட்டிக்கப் போறேன்….ஏன்னு கேளுங்க….”
வெளி மழையை விட இவள் கேள்வி மழையைத் தாங்க முடியாத பெரியவர் ” ஏன்?” என்று ஏனோ கேட்டு வைத்தார்….!
” எனக்கு நீலம் புடிக்கும்….ராமன் நீலமா இருப்பான்” பெரியவர் மூட்டையைப் பார்த்து விட்டு சிறுமியை மோகினிப் பிசாசைப் பார்ப்பது போல பார்த்தார்….
”அப்ப நான் கிளம்பறேன் தாயி” என்று பயபக்தியோடு அவளிடம் சொல்லிவிட்டு மூட்டையை எடுக்கக் குனிந்தார்….
”துணைக்கு வருவீங்கன்னு பாத்தா இப்படி தனியா வுட்டுட்டு போறீங்களே….பால்காரம்மா வூடு வர கூட வாங்க வாசு மாமா” என்றதும், பெரியவர்
ஆச்சரியமா , அதிர்ச்சியா தெரியாத பாவத்தைக் காட்டியபடி ”என்ன….நீயும் பால்காரி வீட்டுக்குத்தான் போயிண்டுருக்கியா….?” என்று அவசரமாகக் கேட்டார்….
”ஆமாம்….நீங்க….?”
”நானும் அங்கதான்….!”
”உங்கம்மாவும் தாம்புக் கயிறு வாங்கிக்கிட்டு வர சொன்னாங்களா….?”
” நான் அங்க போறது தாம்புக்காக இல்ல தாயி….நோம்புக்காக….!”பெரியவர் பழையபடி தலையில் மூட்டையை சுமந்தபடி செல்ல ,அவர் தலைக்கு மேல்
”உஸ் உஸ்” என்ற சத்தம் வருவதைக் கேட்டபடி சிறுமி அவரைத் தொடர்ந்தாள்….” மாமா நீங்களும் எங்க நைனா மாதிரி மயிலிறகால காது குடைவீங்களா….?”
” ஏன் கேக்கற….?” என்று அவர் வெலவெலக்க, சிறுமி ”இந்தாங்க உங்க தலைல இருக்குற புண்ணிய மூட்டைலேந்து விழுந்துடிச்சு….” என்று ஒரு மயிலிறகை
அவரிடம் தந்தாள்….மூட்டை மட்டும் நனையாமல், இருவரும் சொட்ட சொட்ட நனைந்தபடி பால்காரம்மா வீடு நோக்கி செல்ல ஆரம்பித்தனர்….!

பால்கார அம்மா வசதியானவள்….வீடு தோப்பும் துரவுமாக பிரும்மாண்டமாக இருந்தது….சுற்றிலும் கோட்டை போல மதில் சுவர்….வந்த திருடன்
வேறு வழியில்லாமல் மனம் திருந்தி நல்லவனாகும் அளவுக்கு வாசல் கதவு வீட்டையே மறைத்தது…..நாதாங்கியில் தொங்கும் பூட்டைத் திறந்து
விட்டாலும் அதைக் கழட்டுவதற்குள் பொழுது விடிந்து விடும்….”எப்படி உள்ளே நுழைவது ” என்ற கவலையில் கதவையும், பூட்டையும் கவனித்த
வாசு மாமாவின் முகம் மலர்ந்தது….கதவில் சிறுவர்,சிறுமியர்கள் மட்டும் போய் வருவதற்கு தோதாக ஒரு பொந்து இருந்தது….ஆஜானுபாகுவான
வாசு மாமா அந்த பொந்தின் வழியாக மானசீகமாக நுழைய முயன்று பாதியில் மாட்டிக் கொண்டு பிதுங்கினார்….

”மாமா என்ன இது….உங்க கைல தாம்புக் கவுறு கட்டியிருக்கு….?” சிறுமி சொன்னதும்தான் பெரியவரே தன் பிழையை உணர்ந்தார்….
அவசரமாகக் கிளம்பியதில் கை,கால்களில் கட்டப்பட்ட தாம்புக் கயிறுகளை அவிழ்க்க மறந்ததை எண்ணி அசடு வழிந்தார்….
”பால்காரம்மா தூங்கியிருப்பாங்க….அவங்கள எளுப்பி இந்நேரத்துல கவுறு கேட்டா என்ன கொன்னே போட்ருவாங்க….தாம்பு கவுறு
இல்லாம போனா எங்காத்தா என்ன அடிச்சே கொன்னுருவா….தயிரு கடைய இந்த அளவு கவுறு போதும்….” என்றவள், அவர் சம்மதத்துக்கு
காத்திராமல் அவர் கையில் அரைகுறையாக கட்டித் தொங்கிக் கொண்டிருந்த தாம்புக் கயிறை உருவிக் கொண்டாள்….”அப்பால நான்
வரேன்….பொழுது விடியறதுக்குள்ளே ஊரு போய் சேரணும்” என்று கிளம்பியவளை பெரியவர் பிடித்து நிறுத்தி….” தோ பார்….உனக்கு நான்
தாம்புக் கயிறு தந்தேன் இல்லையா….பதிலுக்கு நீ எனக்கு ஒரு உபகாரம் செய்யணும்” என்றார்….”என்ன?” என்பது போல பார்த்த சிறுமியடம்
”உள்ளே பால்காரம்மா தூங்கிகிடுருப்பாங்கா….அவங்க பக்கத்துல ஒரு பாப்பா தூங்கிகிட்டுருக்கும்” என்றவர் நாக்கைக் கடித்தபடி” அது தூங்கற
குழந்தையா….!” என்று தனக்குள் முனகிக் கொண்டார்….தொடர்ந்து ”நீ என்ன பண்ணனும்….நான் இந்த மூட்டைல ஒரு பொருள் வச்சிருக்கேன்” என்றவர்
மறுபடி நாக்கைக் கடித்தபடி….”வெறும் பொருளா அது” என்று முணுமுணுத்துவிட்டு….”நீ அந்த கதுவுல இருக்கற பொந்து வழியா வீட்டுக்குள்ள நுழைஞ்சு
நான் கொடுக்கற இந்த பொருளை அங்க வச்சிட்டு, அங்க பால்காரம்மா பக்கத்துல தூங்கற பாப்பாவை நைஸா எடுத்திட்டு வந்து என் கைல
கொடுக்கணும்….புரிஞ்சுதா….”புரியாவிட்டாலும் தாம்பு கயிறு கிடைத்த சந்தோஷத்தில் சிறுமி பலமாக தலையாட்டினாள்….

பெரியவர் மூட்டையைப் பிரிக்க, உள்ளே எட்டி அந்தப் பொருளைப் பார்த்த சிறுமியின் கண்கள் ஆச்சரியத்தில் ஆகாசமாக விரிந்தது….ஆனந்தத்தில்
ஆழ்கடலாக கொந்தளித்தது….” இப்ப புரிஞ்சு போச்சு….நீங்க தசரத மகாராசாதானே….?” என்றவள் பெரியவரைப் பேச விடாமல்,மூட்டைக்குள் மறுபடி
பார்த்து ”அப்பா என்ன ஒரு நீலம்….கைகேசிக்கு பயந்துகினு நீல ராமனை காட்டுல வுட வந்தீங்க….மனசு கேக்கல….பத்திரமா வூட்டுல வுட்டுட்டு அதுக்கு
பதிலா பால்காரம்மா பாப்பாவை….” என்று ஆரம்பித்தவள் நிறுத்தி….”ஆமாம் பால்காரம்மா பாப்பா உங்களுக்கு எதுக்கு….?”…..இனியும் இவளை பேசவிட்டால்
ஊரையே எழுப்பிவிடுவாள் என்று பயந்த பெரியவர்….” மொதல்ல நான் சொன்னத செய்….அப்பத்தான் தாம்புக் கயிறு ”என்று அவளை அவசரப்படுத்தினார்….

”கஷ்க் முஷ்க் ” என்று கன்னங்கரேல் உருண்டையாய்(சிறுமி காதில் விழுந்தால் கோபிப்பாள்….நீல உருண்டையாய்) இருந்த அந்தப் பொருள் விளங்கா
உருண்டையை கைகளில் பிரேமையாக ஏந்தியபடி பால்காரம்மா வூட்டுக் கதவை நோக்கி சென்றவள், திடீரென்று திரும்பி வந்து பெரியவரிடம்….”நீங்க எனக்கு ஒரு சத்தியம் செஞ்சு தரணும்….” என்ற அந்த சிறுமி….” இந்த நீல பாப்பா பெரியவன் ஆனப்பாடு இவன எனக்கு நீங்க கட்டி வக்கணும்….என்ன பதில்
சொல்லாம முளிக்கறீங்க….” சூழ்நிலையின் தீராத விளையாட்டை எண்ணி தனக்குள் வேதாந்தமாக சிரித்துக் கொண்ட அந்தப் பெரியவர்….
” தாயி….உனக்கு என்ன வயசாகுது…?” ”மார்கழி பொறந்தா ஆறு….ஏன்….?” என்றவளை பரிவுடன் பார்த்து….”இது இப்பத்தான் பொறந்த பாப்பா….
இவன் என்னதான் பெரிவனா ஆனாலும் உன்ன விட ஆறு வயசு சின்னவனாச்சே….எப்படி இவன கல்யாணம் பண்ணிப்பே….”என்று கூறி முடிப்பதற்குள்
அந்த சிறுமி பாய்ந்து….” கவலையே படாதீங்க, இவன் பெரியவனா ஆறவரைக்கும் நான் ஆறுக்கு மேல என் வயசு ஆவாம பாத்துக்கறேன்” என்று சொல்லிவிட்டு பதிலுக்குக் கூட காத்திராமல் அந்த சிறுமி பால்காரம்மா வீட்டுக் கதவை நோக்கி நகர்ந்தாள்….

தாயிடம் தாம்புக் கயிறை தந்து விட்டு, சிறுமி நடந்ததையெல்லாம் மூச்சு வாங்க சொல்லி முடித்து….” ஆத்தா….நீல பையன எனக்கு கட்டி வக்கறதா
அவனோட நைனா எனக்கு வாக்கு கொடுத்துட்டார் ”…..மகளை ஏற இறங்கப் பார்த்த தாயார்….” அய்யோ பெருமாளே….ஏன் எனக்கு இப்படி ஒரு
பைத்தியத்தை மவளா கொடுத்தே….” என்று ஒரு பாடு புலம்பிவிட்டு, அதே தாம்புக் கயிறால் நீலப் பிரேமையில் கட்டுண்ட மகளை தூணில் கட்டிப்
போட்டு….” இனிமே இப்படீலாம் பேசுவியா….பேசுவியா….” என்று அழுதபடி கேட்டுக்கொண்டே அடிக்க ஆரம்பித்தாள்….அப்போது கட்டிலிலிருந்து
தாவிக் குதித்து வந்து மனைவியைத் தடுத்த சிறுமியின் நைனா” உனக்கு என்ன புத்தி கித்தி கெட்டுப் போச்சா….எப்பப்பாரு ஏன் இப்படி போட்டு
அடிச்சே கொல்ற….ராதைய….”என்றார்…..
——————————————————————————————————————————————————-

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “தாம்புக் கட்டு

  1. வல்லமையாளர் விருதுக்கு வாழ்த்துகள். கதை அருமை. அந்தச் சிறுமிதான் ‘ராதை’ என்று என்னால் ஊகிக்க முடியவில்லை. முடிவு நல்ல திருப்பம்.

  2. முதலிலேயே புரிஞ்சு போச்சு ராதையைத் தான் சொல்லிட்டு இருக்கார்னு. 🙂  ஆகவே முடிவு என்னமோ நான் எதிர்பார்த்தது தான்.  வாசு மாமா தான் புதுசு.  வசு மாமானு வந்திருக்கணுமோ? 🙂

    வல்லமையாளர் விருது மடலைப் பார்த்துத் தான் இங்கே வந்தேன்.  அதிலேயே ராதையைத் தான் சொல்கிறார்னு புரிஞ்சது.  ஒரிஜினலா ராதைக்குச் சிற்றன்னை தானே கொடுமைப்படுத்தி இருப்பா? பெற்றன்னை இல்லைனு நினைக்கிறேன். 

  3. அன்பு கீதாசாம்பசிவம், அது ஒரு கற்பனைக் கதை….கண்ணன் வருகையில் என்னைக் கவர்ந்த ராதைக்கு ஒரு முக்கியத்துவம் கொடுக்க….கோரக்பூர் ப்ரஸ்ஸில் வெளியான சுகமுனிவரின் பரிட்ஷித்துக்கு சொன்ன பாகவதத்தில் ராதையைப் பற்றி பேச்சே இல்லை….பிறகு கிருபாளு மகராஜாவின் உபன்யாசத்தில் அவர் ஒரு கவித்துவமான காரணம் இதற்கு சொன்னார்….கிருஷ்ணா கான்ஷியன்ஸை விட ராதா கான்ஷியஸ்னஸ் ரொம்ப உசத்தியாம்….பாண்டிச்சேரி அன்னையும் ‘’சங்கு புஷ்பத்தை’’ பக்திக்கு அடையாளமான ‘’ராதா கான்ஷியஸ்னஸ் என்று கூறுகிறார்….ஆக ராதா என்ற பெயரைக் கூறினாலே சுகப்ப்ரம்ம ரிஷி சமாதியில் ஆழ்ந்து விடுவாராம்….அப்புறம் பரிட்ஷித்திற்கு 7 நாட்களில் எப்படி பாகவதம் சொல்வது….அதனாலேயே சுகர் ராதா என்பதை சொல்லக் கூட துணியவில்லை….ஆராய வேண்டாம்….அனுபவிப்போம்….இதுதான் எனக்குத் தெரிந்த ராதை….வேறு ஏதாவது உங்களுக்கு தெரியுமென்றால் தயவு செய்து கூறவும் ப்ளீஸ்….வசு மாமாவை வாசுமாமா என்று எழுதியது வாசகர்களை முடிவு கண்டு பிடிக்காமல் இருக்க கையாளப்பட்ட உத்தி….அவ்வளவே….கிரேசி மோகன்….

  4. திரு . கிரேசி மோகன் அவர்களுக்கு ,
    விருது பெற்றமைக்கு எனது வாழ்த்துக்கள்
    இதிகாச கதைகளை உருமாற்றி கொடுப்பது என்பது சாதாரண காரியமல்ல என்பது எழுதினால்தான் தெரியும். அருமையாக செய்த்திருக்கிறீர். . கற்பனை அருமை .
    **எதிரே தாடகை ராட்சஸி
    **சனக மவராசா **மயிலிறகு
    ** நீலப் பய இருக்கானே
    **உங்க பொண்ணுக்கு காத்தும் புடிக்கும்….கருப்பும் புடிக்கும் —என்ற
    சொல்லாடல்களால் கதையை சற்று நேரத்தில் ஊகிக்க முடிந்தது . ஆனால், ”ஆத்தோரமாக இருந்த அய்யனார் மண்டபத்தை ”–சொல்லி திசை திருப்பி விட்டீர் . ”அந்த காலத்தில் அய்யனார் மண்டபம்” என்பதை இந்த கதைகளத்தில் பொருத்த மனம் மறுத்துவிட்டது. அதனால் , மீண்டும் கதைக்குள் நுழைந்து படித்தேன்.
    இதிகாச சூழ்நிலையை ஏற்படுத்த ( சந்திக்க ) இரவு நேரத்தில் தயிர் கடைய திட்டமிட்டீரே …! இதுதான் கதையின் உத்தி . அடுத்தவர் சிந்தனையை செயல்படவிடாமல் அந்த தாம்பு கயிற்றில் கட்டி இழுத்து போன விதம் சுவாரஸ்யத்தை கொடுத்தது.
    யசோதா -வை பால்காரம்மா என்று காரணப்பெயர் சொல்லி கதையை நகர்த்தியது கலக்கல். இந்த இடத்தில ” இல்லேன்னு சொல்வியா பின்னே …அதெப்படி முடியும் ” என்று வசூல்ராஜா -வை ஞாபகப்படுத்தியது .
    சுருக்கமாக சொன்னால் காவிரியை கமண்டலத்தில் அடக்கியது போல் இருந்தது இந்த கதைத் திறமை. ரசித்தேன் மிக .
    அன்புடன் ,
    கவிஞர் . மாதுகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *