வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 27-ஆம் ஆண்டு விழா – ஒரு பார்வை

0
-மேகலா இராமமூர்த்தி
வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 27-ஆம் ஆண்டு விழா – ஒரு பார்வை
(செயின்ட் லூயி, மிசௌரி)
பகுதி – 2

ஜூலை 5-ஆம் தேதி காலையும் (முந்தைய நாளைப் போலவே) 8:30 மணியளவில் ’மறை ஓதுதல்’ நிகழ்ச்சியோடு அன்றைய நிகழ்ச்சிகள் ஆரம்பித்தன.

IMG_0285தமிழ் விழாக்கள் எவற்றிலுமே இதுவரை நிகழ்த்தப்பட்டிராத ஒன்றான குறும்படங்கள் இயக்கும் போட்டியை இவ்விழாவையொட்டிப் பேரவை நடத்தியிருந்தது. அதில் சுமார் 30 குறும்படங்கள் கலந்துகொண்டன. அவற்றில் சிறந்தவையாகத் தேர்வான 10 படங்களுக்கு விழா மேடையில் பரிசுகள் வழங்கப்பட்டன.

அடுத்த நிகழ்ச்சியாக, குழந்தைகள் பங்கேற்ற தமிழ்த்தேனீ – பன்முகத்திறன்(Jeopardy)போட்டி அரங்கேறியது. பாரதியார் அணி, பாரதிதாசன் அணி, கம்பர் அணி, கண்ணதாசன் அணி என்ற நான்கு அணிகள்IMG_0304 இதில் பங்குபெற்றிருந்தன. கொடுக்கப்படும் படங்களுக்குப் பொருத்தமான திருக்குறளைச் சொல்லுதல், சொல்லப்படும் தலைப்புக்களில் பேசுதல், திரைப்படப் பாடல்களில் கேள்விகள் என்று பல்வேறு துறைசார் வினாக்கள் குழந்தைகளின் அறிவுத்திறனைச் சோதிக்கும் வகையில் இப்போட்டியில் கேட்கப்பட்டன; அவர்களும் சளைக்காமல் எல்லாவற்றிற்கும் பதில்களை உடனுக்குடன் அளித்தனர். பாரதியார் மற்றும் பாரதிதாசன் அணிகளுக்கிடையே கடும்போட்டி நிலவியது பார்வையாளர்கள் மத்தியில் யார் வெல்லப்போகிறார்கள் என்னும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இறுதியில் இவ்வணியினரிடையே சமநிலை (tie) ஏற்பட்டு ‘tie-breaker’ மூலம் பாரதிதாசன் அணியினர் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டுக் கோப்பையைத் தட்டிச் சென்றனர்.

திருமதி. வைதேகி ஹெர்பர்ட் அவர்கள் நிகழ்த்திய ‘இலக்கியம் – தமிழ் அமெரிக்கர்களுக்கு’ என்ற சுவையான சொற்பொழிவொன்று அடுத்து இடம்பெற்றது. அமெரிக்கத் தமிழர்கள் தமிழிலக்கியங்களைக் கற்றின்புற வேண்டும்; அடுத்த தலைமுறையினரிடம் அவற்றைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற வேண்டுகோளோடு அவர் தன் இனிய உரையை நிறைவு செய்தார்.

அடுத்து, பல்வேறு நடனக் குழுவினர் பங்குபெற்ற ‘FeTNA – தில்லானா போட்டி’ எனும் நடனப்போட்டி விழாமேடையில் நிகழ்ந்தது. நடனக் குழுவினரின் அதிரடி ஆட்டங்களும், வண்ண வண்ண உடைகளும் பார்வையாளர்களின் கண்களுக்கு நல்லதோர் விருந்தாக அமைந்திருந்தன என்றே சொல்லவேண்டும். இதில் ’சென்னை கேங்ஸ்டர்ஸ்’ மற்றும் ’ரகளை பாண்டியர்கள்’ என்ற புதுமைப் பெயர்களைக் கொண்ட இரு குழுக்கள் வெற்றிபெற்றவர்களாக அறிவிக்கப்பட்டு அவர்களுக்குத் தலா $500 பரிசும், $250 பரிசும் வழங்கப்பட்டன.

IMG_0321பின்பு, பேரவை விழாவைப் பொறுப்பேற்று நடத்திவந்த மிசௌரி தமிழ்ச் சங்கத்தினர் பங்குகொண்ட ’இயற்கையின் படைப்புக்கள்’ எனும் கருத்தை மையப்படுத்திய குழந்தைகளின் நடனம் ஒன்று மிகச் சிறப்பாக அரங்கேறியது. காற்று, நீர், நிலம், வானம், நெருப்பு என்ற பஞ்சபூதங்கள் மனித வாழ்க்கைக்கு எத்துணை இன்றியமையாதவை என்பதை விளக்கும் நிகழ்ச்சியாக – சமூக விழிப்புணர்வூட்டும் பயனுள்ள நிகழ்ச்சியாக இது அமைந்திருந்தது.

அதற்கடுத்து, ’சிரித்தால் பெறலாம் இதய நலம்’ எனும் பொருளில் பேசிச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தார், தமிழகத்திலிருந்து வந்திருந்த இதய நல மருத்துவர் சொக்கலிங்கம் அவர்கள்.

அமெரிக்கத் தமிழ் அகாதெமி சார்பில் நடத்தப்பட்ட ‘தமிழ்க்கல்வி நேரம்’ அடுத்து அரங்கு கண்டது. இதில், அமெரிக்கத் தமிழ்க் குழந்தைகள் தமிழ்க்கல்வி பெறவேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. அத்தோடு, தமிழ்க்கல்வி பயிலும் குழந்தைகளின் எண்ணிக்கை அமெரிக்காவில் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துவருவதாகவும் அக்கல்விக் கழகத்தினர் குறிப்பிட்டுப் பார்வையாளர்களை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தினர்.

அதனைத் தொடர்ந்து, பிரபல தமிழ்த் திரைப்பட நடிகை த்ரிஷா கலந்துகொண்டு ரசிகர்களின் வினாக்களுக்கு விடையளித்த ‘திரை நட்சத்திர நேரம்’ எனும் கேள்வி-பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.

அடுத்த நிகழ்வாகவும் அன்றைய நிகழ்வுகளின் மணிமுடியாகவும் திகழ்ந்ததுIMG_0345 வடஅமெரிக்காவைச் சேர்ந்த 15 தமிழ்ச் சங்கங்கள் தங்கள் சங்கங்களின் பதாகைகளுடன் வீரநடைபயின்ற ‘சங்கங்களின் சங்கமம்’ எனும் அற்புத நிகழ்ச்சி. ஒவ்வொரு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ்ச் சங்கத்தினரும் மேடையில் அணிவகுத்து வந்தபோது அந்தந்த மாகாணங்களிலிருந்து விழாவைக் காண வந்திருந்த மக்கள் கரவொலி எழுப்பியும், சீழ்க்கை ஒலி(விசில்) எழுப்பியும் தங்கள் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் புலப்படுத்தினர். சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மிசௌரி தமிழ்ச் சங்கத்தினர் நடத்திக்காட்டிய பறையிசையோடு கூடிய நடனம் வெகுசிறப்பாகவும், கலை நேர்த்தியுடனும் விளங்கியது. ’சங்கங்களின் சங்கமம்’ எனும் இந்நிகழ்ச்சி இவ்வாண்டுதான் முதன்முதலாக பேரவை விழாவில் இடம்பெற்றிருக்கின்றது. முதல் முயற்சியிலே முத்திரை நிகழ்ச்சியாக இது அமைந்துவிட்டது போற்றத்தக்கதே!

maruthasala adigalதொடர்ந்து வந்த நிகழ்ச்சி, தமிழகத்திலுள்ள பேரூர் மடத்தைச் சேர்ந்த குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மருதாசல அடிகளார் வழங்கிய ’எங்கும் தமிழ்’ எனும் சிறப்புச் சொற்பொழிவாகும். தமிழின் இலக்கிய இலக்கண வளங்களை அருமையாய் விளக்கிய அவர், இன்றைய காலகட்டத்தில் தமிழ் சந்தித்துவரும் பல்வேறு மாற்றங்களையும், வளரும் தலைமுறையினர் தமிழைப் பேணவேண்டியதன் முக்கியத்துவத்தையும் மிகவும் ஆழமாகவும் அழுத்தமாகவும் தன் பேச்சில் வெளியிட்டார்.  மருதாசல அடிகளாரின் பேச்சு வளரும் தலைமுறையினரின் சிந்தனையைத் தூண்டுவதாய் அமைந்திருந்தது.

அன்றைய இரவின் இறுதி நிகழ்ச்சியாக அமைந்தது, விஜய் தொலைக்காட்சி sonia divakar’சூப்பர் சிங்கர் புகழ்’ திவாகர் மற்றும் சோனியா குழுவினர் நடத்திய ’மெல்லிசை – சூப்பர் சிங்கர்ஸ்’ எனும் நிகழ்ச்சி. இதில், புகழ்பெற்ற  பல்வேறு தமிழ்த் திரைப்படப்பாடல்களைப் பாடி திரையிசை ரசிகர்களை குதூகலப்படுத்தினர் இக்குழுவினர்.

இவ்வாறு பல்சுவைகளையும் உள்ளடக்கிய முழுநாள் நிகழ்ச்சிகளை ஜூலை 4, 5-ஆம் தேதிகளில் செயின்ட் லூயி நகரில் தமிழ் மக்கள் கண்டு களித்தனர்.

ஜூலை 6-ஆம் தேதி நிகழ்ச்சிகள் அரைநாள் நிகழ்ச்சிகளாய், தமிழின் வளர்ச்சி குறித்துச் சிந்திக்கும் நிகழ்ச்சிகளாய் அமைக்கப்பட்டிருந்தன. இந்தியாவிலிருந்து அழைக்கப்பட்டிருந்த அறிஞர் பெருமக்களான ஸ்ரீலஸ்ரீ மருதாசல அடிகளார், கவிஞர் குட்டிரேவதி, மருத்துவர். எழிலன் நாகநாதன், அமெரிக்காவாழ் தமிழறிஞர் திருமதி. வைதேகி ஹெர்பர்ட் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டு தமிழிலக்கியங்களின் சிறப்புக்கள், நவீன இலக்கியங்களின் ஆளுமை, வருங்காலத்தில் தமிழ் எனப் பல்வேறு தளங்களில் தங்கள் சிந்தனைகளைப் பதிவு செய்தனர். மதியம் 12 மணியளவில் இவ்விலக்கிய நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.

ஜூலை 3-ஆம் தேதி இரவு ’ஸ்டார் நைட்’ நிகழ்ச்சியோடு தொடங்கிய பேரவையின் தமிழ்விழா ஜூலை 6-ஆம் தேதி மதியம் தமிழிலக்கியத் திறனாய்வோடு இனிதே முடிவுற்றது.

தமிழர் அடையாளம் காப்போம்! ஒன்றிணைந்து உயர்வோம்! எனும் வாசகங்களை இவ்வருடத்திய கொள்கை முழக்கமாகக் கொண்டிருந்த பேரவையின் 27-ஆம் ஆண்டு விழா, தமிழரின் பல்வேறு பாரம்பரியக் கலைநிகழ்ச்சிகளையும், சொற்பொழிவுகளையும் நிகழ்த்திக் காட்டியதன் வாயிலாகத் தங்கள் கொள்கை முழக்கம் வெற்று முழக்கமல்ல…வெற்றி முழக்கமே என்பதை நிரூபித்தது.

வாழ்க தமிழர் விழா!
வெல்க தமிழ்!

(முற்றும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *