இன்றோ திருவாடிப்பூரம்!

2

ஷைலஜா

இன்றோ திருவாடிப் பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் – குன்றாத
வாழ்வான, வைகுந்த வான்போகம் தன்னை இகழ்ந்து,
ஆழ்வார் திருமகளா ராய்!

உபதேச ரத்தின மாலையில் மணவாள மாமுனிகள் இப்படிக் கொண்டாடுகிறார்

திருமால் தனது  ஒரு அவதாரத்தின் போது யாரைத் தன் தகப்பனாராக வரிக்கலாம் என யோசித்தாராம். தான் வணங்கும்படியாக உயர்ந்தவர்  யாரென்று கண்டுபிடித்துத் தசரதனைப் பிடித்தாராம். அதுமாதிரி பூமிதேவி அவதரிக்கு முன்பாக யாரைத் தன் தந்தையாக ஏற்கலாம் என யோசித்து  அதற்குச் சகல விதத்திலும் சரியானவர் பெரியாழ்வாரே எனத் தீர்மானித்து அவர் கண்டெடுக்கும் இடத்தில் தோன்றினாள்.

ஆடி மாதம் பூர நட்சத்திரம், ஆண்டாள் அவதரித்த புண்ணிய தினம். ஸ்ரீவில்லிபுத்தூரிலே அவள் அவதரிக்கக் காரணம் இருக்கிறது. 108 திவ்ய தேசத்தில் எந்தப் பெருமானாவது தெற்கு பார்த்து சயனித்துக்கொண்டு இருக்கிறாரா? அரங்கன் மட்டும் தெற்கே ஸ்ரீவில்லிபுத்தூரைப் பார்த்து படுத்துக் கிடக்கிறார்! அவன் பார்வை படும் இடத்தில் எழில்பாவை தன்னைக் கிடத்திக்கொண்டாள்!

மன்னுடைய விபீடணற்கா மதிளிலங்கை
திசை நோக்கி மலர் கண்வைத்த
என்னுடைய திருவரங்கற்கன்றியும்
மற்றிருவர்க்காளாவரே

என்கிறார் பெரியாழ்வார்.

இலங்கையை நோக்கி அவர் தூங்குவதாகச் சொல்லப்பட்டாலும் உண்மையில் அவர் ஸ்ரீவில்லிபுத்தூரைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறாராம்! உறங்குவது போல நடித்தபடி நடக்க இருக்கும் நிகழ்வுகளை அசை போடுகிறாராம்!

மெய்யடியாரான விஷ்ணுசித்தராகிய பெரியாழ்வார், ஸ்ரீவில்லிபுத்தூரில் திருநந்தவனத்தில் திருத்துழாயைப் பயிரிடுவதற்காக மண்ணைக் கொத்திக் கொண்டிருந்தபோது, பூமிப் பிராட்டியின் அம்சமாகத் திருவாடிப்பூர நட்சத்திரத்திலே ஆண்டாள் அவதரித்தாள். பெரியாழ்வார் கண்டெடுத்த குழந்தைக்கு “சுரும்பார்க் குழற்கோதை” என்று திருநாமம் சாற்றி திருமகள் போலே வளர்த்து வந்தார்.

பூமிதேவியின் அவதாரமானதால் அசாத்திய அழகாம்! கிருஷ்ணாவதாரத்தைப் பற்றித் தந்தை சொல்லக் கேட்டுக் கேட்டு, அந்தத் தெய்வத்தின் மீது எல்லையில்லாப் பற்று வந்துவிடுகிறது ஆண்டாளுக்கு.

மானிடர்வர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் என்று கூறுமளவு மன உரம் பெறுகிறது. கண்ணனின் பேரழகுக்குத் தான் ஏற்றவளா என்று நினைத்தபடி, காறை பூணும் கண்ணாடி காணும் தன்கையில் வளை குலுக்கும். அவனுக்கு அணிவிக்க வேண்டிய பூமாலைகளைத் தான் சூடி அழகு பார்க்கும்!

வளர வளர ஆண்டாளுக்குக் கண்ணன் மீதான பக்தியின் வேட்கை பெருகுகிறது. கண்ணன் என்னும் கரும் தெய்வம் காட்சி கொடுக்குமா எனப் பரிதவிக்கும் ஆண்டாளுக்கு, கனவிலே வந்து அந்தக் கார்மேக வண்ணன் முதலில் ஆறுதல் அளிக்கிறான். வாரணமாயிரம் சூழ வலம் செய்து கல்யாண மாப்பிள்ளையாகக் காட்சியளிக்கிறான் நாராயண நம்பி.

ஸ்ரீவில்லிபுத்தூரையே பிருந்தாவனமாகவும் அங்கு உள்ள பெண்களையே கோபிகைகளாகவும் திருமுக்குளம் என்னும் கங்கா யமுனா சரஸ்வதி  ஒன்றுசேர்ந்த அந்தக் குளத்தையே யமுனையாகவும் கொண்டு மார்கழி நோன்பிருந்தாள். திருப்பாவை பாடினாள். முப்பது பாடல்களிலே 29ஆவது பாசுரம் பாடும்போது கண்ணன் சேவை சாதிக்கிறான். ஆண்டாள் உனக்கே நாம் ஆட்செய்தோம் என்று சரணாகதி செய்தாள். மங்களம் பாடி மனநிறைவு பெற்றாள்.

108 திவ்ய தேசப் பெருமான்களில் அவளுக்கு அரங்கனின் அழகு மட்டுமே நெஞ்சைக் கவர்கிறது.

எழிலுடைய வம்மனைமீர்! என்னரங்கத் தின்னமுதர்
குழலழகர் வாயழகர் கண்ணழகர் கொப்பூழில்
எழுகமலப் பூவழக ரெம்மானார் என்னுடைய
கழல்வளையத் தாமும் கழல்வளையே யாக்கினரே

என்று பாடுகிறாள்.

ஆண்டாளுக்குத் திருமண வயது வருகிறது. பெரியாழ்வார் அவளிடம் “யாரை நீ மணம் செய்துகொள்ள விரும்புகிறாய்?” என்று வினவியதற்கு, திருவரங்கத்துள் ஓங்கும் ஒளியுளாரான அரங்கத்தம்மானுக்கே தான் அற்றுத் தீர்ந்தவளாகக் கூறிட, அவரும் தன்னுடைய சிஷ்யனான வல்லபதேவனிடம் தெரிவித்தார்.

பெரியாழ்வாரின் சிஷ்யனான வல்லபதேவன், கோதைப் பிராட்டிக்கு மணச்சீராக அநேக ஆபரணங்களையும், பொற்குவியல்களையும் கொடுத்துத் திருப்பல்லக்கிலே சூடிக் கொடுத்த நாய்ச்சியாரை எழுந்தருளப் பண்ணிக்கொண்டு, திருவரங்கத்தைச் சென்றடைந்தான்.

தென்திருக்காவிரி வடகரையிலே இறங்கி நீராட்டம் கண்டபிறகு, அலங்காரங்களைப் பண்ணிக்கொண்டு கோயில் பரிஜனங்கள் எதிர்கொள்ளத் திருப்பல்லக்குடனே கோயிலிலே புகுந்தாள் ஆண்டாள்.

திருவரங்கன் சூடிக் கொடுத்த நாச்சியாரை ஏற்றுக்கொண்ட வைபவத்தை ஆறாயிரப்படி குரு பரம்பரை (பின்பழகராம் பெருமாள் ஜீயர் அருளிச் செய்தது) கீழ்க்கண்டவாறு விவரிக்கிறது:

”ஆண்டாள் வந்தாள், சூடிக் கொடுத்தாள் வந்தாள், சுரும்பார்க் குழற்கோதை வந்தாள், திருப்பாவை பாடிய செல்வி வந்தாள், தென்னரங்கந் தொழுந் தேசியள் வந்தாள்” என்று பல சின்னங்கள் பணிமாற வந்து, அழகியமணவாளன் திருமண்டபத்தே சென்று, பல்லக்கின் தட்டுப் பாயை நீக்கினார் பெரியாழ்வார்.

சூடிக் கொடுத்த நாச்சியாரும், அகிலருங் காணும்படி உதறியுடுத்த பட்டுச் சேலையும், சுற்றிய செங்கழுநீர் மாலையும், திருநுதலில் கஸ்தூரித் திலகமும், காதளவும் ஓடிக் கயல்போல் மிளிருங் கடைக் கண்விழியும், கொடிபோன்ற இடையும் பெண்ணின் அழகு அம்சங்களும் நிறைந்திருக்க  சீரார் வளையொலிப்ப அன்னமென நடைகொண்டு அழகியமணவாளன் திருமுன்பே சென்று உள்ளே புகுந்து கண்களாரக் கண்டு, கேசவ நம்பியைக் கால் பிடிப்பாளென்னும் பேறு பெற்று, திருவரங்கரைச் சேர்ந்து, திருவரங்கன் திருவடி வருடும்படி ஜோதிர்மயமாகிக் கலந்தாள். இதனைக் கண்ட ஆழ்வார் சிஷ்யரான வல்லபதேவன் உள்ளிட்டோர் அகிலரும் திகைத்து நிற்க, திருவரங்கச் செல்வனார் ஆழ்வாருக்கு அருள் பாலித்தருளி, ”திருப்பாற்கடல் அரசனைப் போல நீரும் நமக்கு மாமனார் ஆகிவிட்டீர்!” என்று மிகவும் உவகையுடன் அருளினார்.

ஆண்டாள் ஸ்ரீரங்கத்தில் பெரியாழ்வாருடனும், சகல பரிஜனங்களுடன் வந்து இறங்கிய இடம் இன்றும் மேல அடையவளைஞ்சான் தெருவில் கோவிலுக்கு இரண்டு சுற்றுகள் முன்பாக உள்ள வீதியில் ‘வெளி ஆண்டாள்’ ஸந்நிதியாக உள்ளது. இங்கு ஆண்டாள் மூலவர் விக்ரஹம் கம்பீரமாக அமர்ந்த கோலம்.

இவள் வரப்பிரஸாதி. ஸ்ரீரங்கம் வரும்போது அவசியம் இங்கும் வந்து தரிசித்துவிட்டுச் செல்லுங்கள். அரங்கனும் சரி ஆண்டாளும் சரி! இருவரும் ஒருவர் மேல் ஒருவர் கொண்ட அன்பு அலாதியானது. ஸ்ரீரெங்கநாயகித் தாயாருடனும் உறையூர் கமலவல்லியிடனும் அவரவர் சேர்த்தி தினத்தில் வருடத்திற்கொரு முறைதான் மாலை மாற்றிக்கொள்கிறார். ஆனால் ஆண்டாளுடன் அவள் ஸந்நிதி வழியே செல்லும் போதெல்லாம் மாலை மாற்றிக்கொள்கின்றார்.

ஆடிப் பூரத்தன்று பெரிய பெருமாளுக்குத் தினந்தோறும் காலையில் காவேரியிலிருந்து வரும் திருமஞ்சனத்தைவிட விசேஷ விமரிசையுடன் பெரிய கோயில் கைங்கரியபரர்கள் யானை மேல் கொண்டுவரும் தீர்த்தத்தால் ஆண்டாளுக்குத் திருமஞ்சனம் நடைபெறும். பிறகு பெரிய பெருமாள் ஸந்நிதியிலிருந்து சேலையும் அலங்காரமும் வந்து, அலங்காரம் அமுது செய்ததும் கோஷ்டி. முதலில் வெளியாண்டாளுக்குத் திருமஞ்சனம் வந்த பிறகு உள்ளாண்டாளுக்கு வரும்.

பெரிய பெருமாள் தம்முடைய திருமஞ்சன வேதி முதலியவற்றை (கோவிலுக்குள்  நுழைந்ததும் இருக்கும்) உள்ளாண்டாளுக்குக் கொடுத்தனுப்புவார்.

திருவாடிப்பூரத்து ஜகத்துதித்தாள் வாழியே என்று கூறி, ஆண்டாள் திருவடிகளை வணங்குவோம்!

பாதகங்கள் தீர்க்கும், பரமன் அடி காட்டும்,
வேதம் அனைத்திற்கும் வித்தாகும் – கோதைத் தமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பது வம்பு

பெருமான் கீதையில் விரித்து விரித்துக் கஷ்டப்பட்டுச் சொன்னதை எல்லாம் இவள், முப்பதே பாட்டில் நமக்குக் காட்டிக் கொடுத்துவிட்டாளே! அதுவும் எளிய, இனிய, புரியும் தமிழில்! அதனால்தான் அது கோதைத் தமிழ் என்றானது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளுக்குச் சார்த்தப்படும் மாலையோடு, ஒரு பொம்மைக் கிளியும் சார்த்தப்படுகிறது. இந்தக் கிளி தினமும் புதிதாகச் செய்யப்படுகிறது. இதைச்செய்வதற்கு என்றே ஒரு பரம்பரையினர் உண்டு.

கிளி மூக்கு = மாதுளம் பூ;
கிளியின் உடல் = மரவல்லிக் கிழங்கின் இலை;
இறக்கைகள் = நந்தியாவட்டை இலை, பனை ஓலை;
கிளியின் வால் = வெள்ளை அரளி, செவ்வரளி மொட்டுகள்;
கிளியின் கண் = காக்காய்ப் பொன்.
கட்டுவதற்கு வாழை நார்;
இப்படித் தினமும் தயாராகிறது ஆண்டாளின் கிளி!

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “இன்றோ திருவாடிப்பூரம்!

  1. அக்கா, அருமையான பதிவு அக்கா… ஆடிப்பூரமன்று அரங்கனைப் பற்றித் தெரிந்து கொண்டது மகிழ்ச்சியான விஷயம்… பகிர்தலுக்கு நன்றி அக்கா…

  2. இந்த நல்ல நாளில் அன்பினால் ஆண்டவனை ஆட்கொள்ள முடியும் என்பதனை அழகாக சொல்லி இருக்கிறிர்கள் அக்கா.

    நன்றி

Leave a Reply to பிரசாத்

Your email address will not be published. Required fields are marked *