சரித்திரம்தன்னில் வாழுகின்ற மக்கள் தலைவன்..

0

–கவிஞர் காவிரிமைந்தன்.

சரித்திரம்தன்னில் வாழுகின்ற மக்கள் தலைவன்..

கர்மவீரர் காமராசர்!

 

kamarasar
சுதந்திரதாகம் தன்னில் தேசம் சுழன்றுகொண்டிருந்தநேரம்.
இளைஞர்கள்தாமே அந்த விடுதலைப் போருக்கு வந்தார்!
சத்தியமூர்த்தி போன்ற தியாகிகள் தலைமைதாங்க..
இந்தியா முழுவதுமே அண்ணல்காந்தியின்வழியே நின்றார்!

சுயநலம்துளியும் இல்லா மனிதர்கள் மண்ணிலுண்டு..
அவர்களில்ஒருவராக அடையாளம் காணப்பட்டார்!
எளிமையும்இவரும் ஒன்று இரண்டிற்கும் பேதமில்லை..
தமிழக காங்கிரஸ் இயக்கம் கண்டிட்ட மாபெரும்தலைவர்!

பொதுநலம் ஒன்றே தனது கொள்கையாய் மூச்சாய்கொண்டு
திகழ்ந்தவர் இவரே என்று மாற்றாரும் போற்றுகின்றார்!
இல்லறவாழ்வும்கூட இடைமறிக்கக்கூடாதென்று..
தன்னந் தனியாகவே வாழ்ந்தவர் காமராசர்!!

மக்களுக்காக வாழ்ந்த மகோன்னதத் தலைவரிவர்போல்
மண்ணிலே காண்பதரிது என்பதை மறுக்கவே முடியாது!
கல்விக் கண்ணைத் திறந்துவைத்த கர்மவீரரை.. காலம்
என்றுமே நினைந்திடும்! போற்றிடும்!  புகழ்ச்சியில்லை!!

படிப்பிற்காக இவர்ஒதுக்கிய அரசுநிலங்கள்.. அவைதான்
பல்கலைக்கழகங்களாக இன்றும்கூட விளங்குகின்றன!
தொழில்புரட்சியைக்கூட அமைதியாய் நடத்தி ஆண்டவரிவர்
அம்பத்தூர்முதல் கிண்டிவரையிலும் தொழிற்கூடங்கள்!!

கடமையைப்புரிவதில் கண்ணும்கருத்துமாய் இவரிருந்தார்! – கல்வி
கற்றவரில்லை.. எனினும் கற்றவர்க்கெல்லாம் காரணமாயிருந்தார்!
ஏழ்மைநிலையில் இருந்தாலும் படிக்க வாருங்கள் என்றே
ஆயிரமாயிரம் பள்ளிகள் திறந்தார்! மதிய உணவும்தந்தார்!!

சரித்திரம்தன்னில் வாழுகின்ற மக்கள் தலைவன்.. என்னும்
நித்திலப்புகழுடன் வாழுகின்றார் சிவகாமியின் புதல்வன்!
இந்தப்பிறவியில் இவரின்சாதனை இமயத்தைக்காட்டிலும்..
இவரைப்பற்றி எண்ணவும்பேசவும் என்றும்பெருமைகொள்வோம்!
kamarasar1

 

 

 

 

 

 

காவிரிமைந்தன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *