கே.ரவி

1968-ல் என்று நினைக்கிறேன், பங்களூரிலிருந்து என் குடும்ப நண்பர் கரியப்பா என்பவர் சொன்ன யோசனையின்படிச் சிந்தனைக் கோட்டத்தில் கூட்டு வழிபாடு என்ற வாராந்திர பிரார்த்தனைக் கூட்டம் நடத்தும் வழக்கம் தொடங்கியது. அதை, அதன் ஆங்கிலப் பெயரில் ‘மாஸ் ப்ரேயர்’ என்றே அழைத்து வந்தோம். சனிக்கிழமை தோறும் மாலை 6-30 மணிக்கு என் தந்தை விஸ்வம் நடத்தி வந்த வித்யா ஸாகர் பள்ளியில் கூடுவதும், பலவிதமான பக்திப் பாடல்கள் பாடுவதுமாக அந்த நிகழ்ச்சி அமைந்தது.

முதலில் நான் எழுதிய ஒரு வெண்பாவுடன் தொடங்கும். பிறகு கவியோகி சுத்தானந்த பாரதியாரின் சர்வ மத சமரசப் பாடல் ஒன்றைப் பாடுவோம்:

வெண்பா

ஒற்றுமை ஓங்கிட உள்ளிருள் நீங்கிட

நற்றவம் நாளும் நனிசிறக்கக் – கற்றவர்க்

கண்வாழும் நாதனே காப்பென்று பற்றினோம்

பண்வாழும் நின்றன் பதம்

சுத்தானந்த பாரதியாரின் பாடல்

எல்லோரும் வாருங்கள் எல்லோரும் சேருங்கள்

ஈசனை அன்புசெய்வோம்

எல்லோரும் பாடுங்கள் எல்லோரும் ஆடுங்கள்

இன்பமே நமதுதெய்வம்

அல்லா பரமபிதா ஹரிஹர ப்ரும்ம மென்றும்

அம்மையப் பாவென்றும்

சொல்லில் அடங்கா ஜோதியைப் பாடிச்

சுகித்திருப் போம்வாரீர்

பிறகு “பார்த்தாய ப்ரதி போதிதாம்” என்று தொடங்கும் பகவத் கீதையின் பாராயண ஸ்லோகம் சொல்லி விட்டு அதன் பிறகு ஒவ்வொருவரும் அவரவர் கொண்டு வந்திருக்கும் பாடலைப் பாடச் சுமார் அரை மணி நேரத்தில் கூட்டு வழிபாடு நிறைவு பெறும். ஆவலுடன் அதுவரை எதிர்பார்த்துக் கொண்டிருந்த பொங்கல், சுண்டல் போன்ற எதோ ஒன்றை அருந்தி விட்டுக் கலைந்து செல்வோம்.

இந்தக் கூட்டு வழிபாட்டில் பாடப்பட்ட பல பாடல்கள் தமிழ் இலக்கிய வராற்றில் நிச்சயமாக இடம்பெறப் போகும் பாடல்கள் என்பது என் நம்பிக்கை. அது சோதிடம் இல்லை சாமி! நான் சோதித்துச் சொல்லும் உண்மை. ஏற்கனவே, இந்தக் கூட்டு வழிபாட்டில் சுகி சிவம் இயற்றிப் பாடிய பாடல்களில் இருந்து சில வரிகளை இத்தொடரின் முந்தைய பகுதிகளில் சுட்டிக் காட்டி விட்டேன். அதில் ஒரு பாட்டில் வரும் இரண்டு பத்திகளை இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும். தேவி கருமாரி மீதான பாடல் அது:

என்கண் கனிச்சாறே நெய்வேதனம் – எந்தன்

பாடல்களில் உந்தன் நீராடனம்

என்னுள்ளம் தானுந்தன் அரிவாகனம் – ம்!

ஆகட்டும் உடனேயுன் ஆரோகணம்

நகர்கின்ற போதெல்லாம் ரதவுத்ஸவம் – நீரில்

நனைகின்ற போதெல்லாம் தெப்போத்ஸவம்

பகர்கின்ற வாக்கெல்லாம் நின்பாசுரம் – உன்னைப்

பாராட்டிச் செய்கின்ற அஷ்டோத்திரம்

முதலில் இந்த வரிகளின் சொல்வளத்தில், ஓசைச்சிறப்பில் சொக்கி நிற்கும் மனோன்மணியைப் பார்க்கிறேன். அருகில் இருக்கும் புத்தி சிகாமணி புன்னகை பூக்கிறான். அவன் புன்னகையின் அர்த்தம் எனக்குப் புரிந்து விட்டது. ‘என்கிட்ட வந்து உட்கார்ந்து பாடம் கேட்க வேண்டும் ஓய்’ என்பது போல் ஒரு கர்வப் புன்னகை அது. சரி, கேட்டு வைப்போமே! அவன் சொல்கிறான்:

“முதலில், தன்னிலிருந்து வேறாகத் தனக்கு வெளியில் அன்னையைப் பார்க்கிறான் பக்தன். தன் பரவசக் கண்ணீர்த் துளிகளை எடுத்தே அவளுக்கு நெய்வேதனமாகப் படைக்கிறான். தன் பாடல்களில் அவளை நீராட்டுகிறான். தன் உள்ளத்திலேயே அவள் அரோகணித்து எழுந்தருள வேண்டும் என்று வேண்டுகிறான்”

மனோன்மணி இடைமறித்துப் பேசுகிறாள்:

“ஆனால் எவ்வளவு கம்பீரமாக வேண்டுகிறான்! அந்த ஒற்றைச் சொல், “ம்” இருக்கிறதே, அது இடம் நிரப்பும் வெற்றுச் சொல் இல்லையப்பா. மற்றைச் சொற்கள் எல்லாவற்றையும் புறந்தள்ளி விட்டு முன்னிற்கும் வெற்றிச் சொல்.”

சிகாமணி தொடர்கிறான்:

“சபாஷ் மனோன்மணி, என் சகவாசத்தால் நீயும் இப்படிப் பேசக் கற்றுக் கொண்டு விட்டாய். சரி, என்ன சொல்லிக் கொண்டிருந்தேன், ஆம், ஆரோகணம். கருமாரி அன்னை பக்தனின் உள்ளத்தில் ஆரோகணித்ததும் என்ன ஆச்சு தெரியுமோ? பக்தன் நகர்கின்ற போதெல்லாம் அவளுக்கு ரதவுத்ஸவம், அவன் நீரில் நனைகின்ற போதெல்லாம் தெப்போத்ஸவம். குளிக்கும் போதெல்லாம் என்று கொச்சைப் படுத்தாமல், நீரில் நனைகின்ற போதெல்லாம் என்று போட்டான் பாருங்காணும், அதுக்குத்தான் துட்டு! ஆம், அவன் மழையில் நனையும் போது கூடன்னு அர்த்தம் பண்ணிக் கொள்ள வேண்டும். முதலில் அன்னையை முன்னிலைப் படுத்திப் பாடிய சிவம் அவளைத் தன்னிலைப் படுத்திப் பார்க்கும் அபூர்வ தரிசனத்தை விவரிக்கும் பாடலுக்கு இலக்கிய வரலாற்றில் இடம் கிடைக்காமல் போகுமா? மனோன்மணி விட்டு விடுவாளா? எப்படியும் சங்கப் பலகையை வரவழைத்து விடுவாள்.”

மனோன்மணி உரக்கப் பாடுகிறாள்:

வேண்டுமடி உன்னுடைய பாத நீழலே – தாயே

வேண்டுமடி உன்னுடைய பாத நீழலே

என்ன, சாமி வந்தது போல் மனோன்மணி ஆவேசமாகப் பாடுகிறாள்? ஓ, அது நண்பன் சு.ரவியின் பாட்டு. அவன், அதாவது, சு.ரவி; இந்த ‘அவர், இவர்’ மரியாதையைத் தவிர்த்து விடுகிறேன். அது கருத்தோட்டத்துக்குத் தடையாகிவிடும். அவன் அப்படித்தான் பாடுவான். பாரதியின் “வேண்டுமடி எப்போதும் விடுதலை அம்மா” என்ற சந்தத்திலேயே அமைந்த அந்தப் பாடலைத் தொடர்ந்து பாடுகிறாள் மனோன்மணி:

வெய்ய காம னெஞ்சிடாது வீழ வைத்தவன்br

துய்ய மாமணிப் புறத்துச் சோதியானவன்

அஞ்சும் அமரர் நெஞ்சு குளிர

நஞ்சு கொண்ட கண்ட னங்குக்

கொஞ்சு கின்ற போதில் உன்னை

தஞ்சம் என்ற டைந்து விட்டோம்

வேண்டுமடி உன்னுடைய பாத நீழலே

சிகாமணி எதுவும் பேசவில்லை. ஒரு கனத்த மெளனம் சூழ்ந்து கொள்கிறது. அந்தச் சொற்களின் சந்தச் சுவையில், சொற்சதங்கையின் ‘கலீர் கலீர்’ நாதத்தில் லயித்து விட்ட பரவச மெளனம் அது!

வெய்ய காமன் நெஞ்சிடாது என்று படிப்பதா, இல்லை, எஞ்சிடாது என்று படிப்பதா? நஞ்சுண்டதால் சிவனின் கண்டம் சூடேறியதும், அமரர் நெஞ்சு குளிர்ந்தனர் என்ற முரண்பாட்டை ரசிப்பதா? அன்னையாக நீ தனித்திருக்கும் போது வராமல், அம்மையப்பனாக நீங்கள் சேர்ந்திருக்கும் தருணம் பார்த்துத் தஞ்சம் என்று வந்து விட்டோம், ஆட்கொள்வதைத் தவிர உமக்கு வேறு வழியில்லை என்று சொல்லாமல் சொல்லும் நயத்தை வியப்பதா?

கேள்விகள் சிகாமணியின் தொண்டை வரை வந்துன. மனோன்மணி ஒரு பிடிபிடித்ததால் அவை அங்கேயே தங்கி விட, விடம் உண்ட கண்டனைப் போல் சிகாமணி, கேள்விக் கணைகள் தொன்டையிலேயே சிக்குண்ட கண்டனாகப் பேச்சிழந்து நின்றிருக்கிறான். பாவம்!

சிந்தனைக் கோட்டம் செயலிழந்த பிறகும் மாஸ் ப்ரேயர் தொடர்ந்து சில ஆண்டுகள் நடந்தது. நடக்கும் இடங்கள் அவ்வப்போது மாறிக் கொண்டிருந்தன. அது நின்று போன பிறகு இரண்டு, மூன்று முறை அதை மீண்டும் தொடர முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டும், நாளடைவில் அது நின்று விட்டது.

“மோகத்தைக் கொன்று விடு அல்லாலென்றன் மூச்சை நிறுத்தி விடு” என்ற பாரதி பாடல் நண்பன் அ.பாபுவின் குரலில் ஒலித்ததையும், நண்பன் ரமணன், சிவகுமார் போன்றவர்கள் பாடிய பாடல்களையும் நினைத்துப் பார்க்கும் போதெல்லாம், ‘ஓ அந்த இனிய நாட்கள்!’ என்றுதான் பெருமூச்சு விடத் தோன்றுகிறது.

தெய்வ பக்தியற்ற வரட்டுச் சித்தாந்த வாதியாக இருந்த என்னை மெல்ல மெல்லப் பக்குவப் படுத்தி, உருகச் செய்து, பக்தி மார்கத்தின் மகோன்னதத்தை உணரச் செய்த கூட்டு வழிபாட்டுப் பாடல்கள் என்றும் என் நெஞ்சை விட்டகலாதவை. நானும் உருகி, உருகிப் பாடத் தொடங்கினேன்:

ராம மணி மந்த்ரம் ஶ்ரீ ராகவ முகுந்தம்

ரட்சகம் அளிக்கின்ற தேவாம்ருதம்

விழிகள் அரவிந்தம் அதில் கருணை மகரந்தம்

விதிகதி கலங்க வரும் கோதண்டம் – கொடும்

விதிகதி கலங்க வரும் கோதண்டம்

எழில்மிகு வசந்தம் என் கவிதை ப்ரபந்தம் – நீ

எழுந்தருளி வைகுமொரு வைகுந்தம்

ராம மணி மந்த்ரம் ஶ்ரீ ராகவ முகுந்தம்

தோளழகு கண்டு விழி தோற்ற கதையுண்டு – உன்

தோளழகு கண்டு விழி தோற்ற கதையுண்டு – நீ

தொட்டவுடனே சிவன்வில் இற்றதன்று – உன்

காலடியிலே கல்லும் உயிர்த்ததென்றால் – கண்

நீர்த்துளிகளும் கவிதை யாவதுண்டு – என்கண்

ணீர்த்துளிகளும் கவிதை யாவதுண்டு

ராம மணி மந்த்ரம் ஶ்ரீ ராகவ முகுந்தம்

“ஏம்பா, உன் கவிதையே வைகுந்தமா, உன் கண்ணீர்த் துளிகளும் கவிதை ஆகணுமா? என்னப்பா, காதல்னாலும் கவிதை, கடவுள்னாலும் கவிதை, உனக்கு எல்லாமே கவிதைதானா?” கேட்டானே ஒரு கேள்வி, புத்தி சிகாமணி.

வாயடைத்துப்போய் நின்று விட்டேன். மனோன்மணி மட்டும் மெல்லச் சிணுங்குகிறாள் . . . .!

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *